உயிர்ப்பன்மைய இழப்பும் தொற்றுநோய்ப் பரவலும்

உயிர்ப்பன்மைய இழப்பே, தொற்று நோய்களின் பரவலுக்கு மிகப்பெரிய சூழலியல் காரணமாக இருந்து, அவற்றை மேலும் ஆபத்தானதாகவும் பரவுதலை எளிதாகவும் மாற்றுகிறது என ஒரு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புதிய தொற்று நோய்கள் அதிகரித்து வருவதுடன், அவை பெரும்பாலும் காட்டுயிர்களில் இருந்து தோன்றுகின்றன என்பதை பல ஆய்வுகள் உறுதிபடுத்தி வருகின்றன. Nature என்கிற ஆய்விதழில் வெளியிடப்பட்ட, உலகளாவிய காரணிகள் குறித்த “மெட்டா பகுப்பாய்வில்”, உயிர்ப்பன்மைய இழப்பே நோய்களின் பரவல் அபாயத்தை அதிகரிப்பதில் மிகப்பெரிய காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. உயிர்ப்பன்மைய இழப்பு முதலாவது காரணியாகவும் அதற்கடுத்ததாக, காலநிலை மாற்றம் மற்றும் அயல் தாவரங்களின் அறிமுகம்/ பரவல் ஆகியவை காரணங்களாக உள்ளன.

உயிர்ப்பன்மைய இழப்பு, காலநிலை மாற்றம் மற்றும் அயல் தாவரங்களின் பரவல் போன்றவை தொற்று நோய்களை அதிகரிக்கின்றன, அதே சமயம் நகரமயமாக்கல் அதைக் குறைக்கின்றது என அமெரிக்காவின் Notre Dame பல்கலைக்கழகத்தில் உள்ள  முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ஜேசன் ரோர் கூறியுள்ளார். தொற்றுநோய்களுக்கான காரணங்கள் குறித்து உலகளவில் வெளியான சுமார் 1,000  ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். இந்த ஆய்வு, அண்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களையும் உள்ளடக்கியது. ஆய்வாளர்கள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை வைத்து நோய் பரவுதல் (human Host) ஆகியவற்றில் நோயின் தீவிரத்தையும் பரவலையும் ஆராய்ந்தனர்.

குறிப்பாக ஐந்து முக்கிய சூழல் மாற்ற காரணிகளை ஆராய்ந்தனர்.  உயிர்பன்மைய இழப்பு, காலநிலை மாற்றம், வேதியியல் மாசு, வெளிநாட்டு இனங்கள் பரவுதல், மற்றும் வாழிட இழப்பு. இந்த ஐந்தில் நான்கு காரணிகள் நோய்ப் பரவலை அதிகரித்தன: வாழிட இழப்பு மட்டுமில்லாமல் மற்ற அனைத்தும் நோய்களை அதிகரித்தன.

வாழிட மாற்றம் மட்டுமே அபாயத்தைக் குறைத்தது, ஏனெனில் மனிதர்கள் குறிப்பிட்ட ஒரு வகை வாழ்விடமான நகரங்களை நோக்கிச் செல்தல் பழக்கமாக இருக்கிறது. நகரப் பகுதிகள் குறைவான நோய்களைக் கொண்டிருக்கும், அதற்குக் காரணம், பொது சுகாதாரம் ஓரளவிற்கு நன்றாக இருப்பதும்,மேலும் குறைவான காட்டு விலங்குகள் நகரங்களில் இருப்பதாலும்தான். நகரப் பகுதிகளில் அதிகமான கான்கிரீட் இருப்பதால், அங்கு சிறிய எண்ணிக்கையிலான உயிரினங்கள் மட்டுமே வாழ முடியும், எல்லா வகையான உயிரினங்களும் வாழமுடியாது. மனிதர்களுக்கு நோய்கள் தொற்றும் பார்வையில் பார்த்தால், நகரப் பகுதிகளில் கிடைக்கும் சுகாதார அடிப்படை வசதிகளும் கிராமப்புறங்களில் இல்லாமல் உள்ளன என ரோர் சொல்கிறார்.

கோவிட் தொற்றுக்குப் பின்னர் மனித மற்றும் விலங்கு நோய்கள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது,  சில ஆராய்ச்சியாளர்கள் இந்த தொற்று ஒரு வௌவால் மூலம் வந்ததாக நம்புகின்றனர். தற்போது உலக சுகாதார அமைப்பை அச்சுறுத்தும் பல நோய்கள் –swine flu மற்றும் avian flu – காட்டு விலங்குகளிலிருந்து தோன்றியவை. மனிதர்களில் தோன்றும் மூன்றில் ஒரு பகுதி புதிய நோய்கள் zoonotic ஆகும், அதாவது அவை காட்டுவாழ் மற்றும் வளர்ப்பு விலங்குகளையும் தொற்றுகின்றன. அவைகள் மூலமும் தோன்றுகின்றன.

இதற்கு முன்னர் வந்த ஆய்வுகள், நோய்கள் பரவுவதற்கும் சூழலியலில் நடைபெறும் மாற்றத்தின் தொடர்பையும்  சுட்டிக்காட்டின (எடுத்துக்காட்டு: காலநிலை மாற்றத்தால் மலேரியா பரவல் அதிகரிப்பு). ஆனால், எது சூழல் காரணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது புரிபடாமல் இருந்தது. ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, பல காரணிகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. உதாரணமாக, காலநிலை மாற்றம் மற்றும் வேதியல் மாசு வாழ்விடங்களில் அழிவுகளை ஏற்படுத்தும் அதுவே உயிர்ப்பன்மைய இழப்பிற்கு காரணமாகிவிடும் எம்கிறது இந்த ஆய்வு.

மாசைக் குறைப்பது, உயிர்ப்பன்மைய இழப்பைக் குறைப்பது, அயல் படர் உயிரினங்கள் பரவுவது மற்றும் அறிமுகப்படுத்துவதை தடுப்பது நோய்ப் பரவலைக் குறைப்பதோடு  அதன் தாக்கத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். “நாங்கள் செய்யும் பகுப்பாய்வுகள் உலகளாவிய நோய் கட்டுப்பாடு, மட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணிக்கும் முயற்சிகளை எளிதாக்குமென நாங்கள் நம்புகிறோம்” என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.

– கோ.சுந்தர்ராஜன்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments