பட்டாம்பூச்சிகள்: வண்ணங்கள்

வேதிவால் குருவி போன்று நீண்டவால் கொண்ட பட்டான் – Fluffy Tit

2019ல் கேரள வனத்துறை நடத்தும் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்று பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்தேன். நான்கு நாட்களுக்குப் பெரிதும் மனிதர்களின் கால்தடம் படாத அந்த அடர் கானகம் தான் எங்கள் வாழிடம். அரிய பல பறவை இனங்களைக் கண்டாலும், அந்தச் சில நாட்களில் என்னை மிகவும் கவர்ந்தது பட்டாம்பூச்சிகள்! அதுவரை அவ்வளவாகப் பட்டாம்பூச்சி காணலில் ஆர்வம் காட்டாமல் இருந்த எனக்கு, வண்ண வண்ணமாய், வித்தியாசமான உடல் அமைப்புகளால் என்னைக் கட்டிப்போட்டன நாங்கள் தங்கியிருந்த கேம்புக்கு அருகிலிருந்த பட்டான்கள்! அதிலும் ஒரு பட்டானுக்குப் பறவைகளில் வேதிவால் குருவிக்கு இருப்பது போன்ற நீண்டவால்! ஆற்றுக்கு அருகே ஒரே இடத்தில் கிட்டத்தட்ட 10 வகை வண்ணத்துப் பூச்சிகளைக் கண்ட எனக்கு, இவைகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

உலகில் விலங்குகள், பறவைகளுக்கு அடுத்து அதிகம் படம் பிடிக்கப்படும், அறியப்படும் உயிரினம் என்றால் அது பட்டான் தான். பூக்கும் தாவரங்கள் இருக்கும் இடங்களெல்லாம் இவற்றைக் காணலாம்; கண்ணுக்கு அழகாய் வண்ணங்கள் கொண்டிருக்கும் என்பதெல்லாம் தான் இவற்றின் popularity க்கு காரணம். இனி, பட்டாம்பூச்சிகளின் உலகில் உலாவருவோம்!

செதில் இறகிகள்  (Lepidoptera) என்னும் உயிரியல் வரிசையில் பட்டாம்பூச்சிகளும் அந்துப் பூச்சிகளும் (moths)  வகைப்படுத்தப் படுகின்றன. கிட்டத்தட்ட 1.8 லட்சம் இனங்களைக் கொண்டது இவ்வரிசை; உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் சுமார் 10 விழுக்காட்டுக்குச் சமம் இது! முக்கால் வாசிக்கும் மேல் அந்துபூச்சிகளைக் கொண்ட இவ்வரிசையில் 6 குடும்பங்கள் மட்டுமே பட்டாம்பூச்சிகள்!

பட்டானும் அந்துப் பூச்சியும்:

பட்டாம் பூச்சிகளின் வண்ணமிகு சிறகைத் தொட்டுப் பார்த்தால், அதன் வண்ணம் நம் விரல்களில் ஒட்டும் அல்லவா? அதன் காரணம் என்ன தெரியுமா? அதன் சிறகே மிக நுண்ணிய செதில்களால் வேயப்பட்டது தான்! அதனால்தான்இவற்றின்அறிவியல்வரிசை ‘செதிலிறகிகள்’ என்று அறியப்படுகிறது.

பொதுவாக அந்துப்பூச்சி இரவாடி என்றும் பட்டாம்பூச்சி பகல் நேரத்தில் பார்க்கவியலும் பூச்சி என்பதான புரிதல் ஒன்றுண்டு. உண்மையில் விதிவிலக்குகளும் ஏராளமாய் உள்ளன. உருவ அளவில் அந்துப்பூச்சிக்கும், பட்டானுக்கும் உள்ள வேறுபாடுகள் இது.

பட்டான் நுனியில் தடித்த அமைப்புடைய உணர்கொம்புகள் கொண்டிருக்கும் (club shaped antennae). அந்துப்பூச்சிக்கு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட உணர்கொம்புகள் இருக்கும்.

இடது பக்கம் இருப்பது பட்டானின் உணர்கொம்பு
வலது பக்கம் அந்துப்பூச்சிகளின் உணர்கொம்பு வகைகள்

இப்போது பட்டானின் வண்ணங்கள் குறித்துக் காண்போம்! இயற்கையில் வண்ணங்களின் பங்கு  மற்றும் அவ்வண்ணம் உருவாகும் காரணிகள் எவை என்று ஆராய்வது சூழலைக் குறித்து அறிய உதவும். இயல்பிலேயே இலைக்குள்ள பச்சை வண்ணம், அதன் chlorophyll  என்னும் நிறமியால் உருவானது; அதுபோலவே இயற்கையாக அமைந்த சில மூலக்கூறுகளால் (molecules) ஆனதுதான் பட்டானின் வண்ணங்களும்! இது தவிர ஒளிப்பிரதிபலிப்பால் உண்டாகும் வண்ணங்களும் உண்டு; structural color என்றழைக்கப்படும் இவ்வகை நிறங்கள், நானோ அளவுள்ள செதில்களின் பிரத்தியேக அமைப்புக்குள் ஒளி சென்று பிரதிபலிப்பதால் உருவாகும். சோப் நுரையில் ஒளிபட்டு பல்வேறு நிறங்களாகத் தெறிக்குமே, அந்த விளைவு (effect) தான் இது. பல்வேறு பட்டான்களில் காணப்படும் பளபளக்கும்  மயில் பச்சை நிறம், நீல வண்ணம் ஆகியவை  structural colors  தான்!

Paris peacock பட்டானின் பளபளக்கும் பச்சை வண்ணம்!

கண்ணைக் கவரும் வண்ணங்கள் ஏன் பட்டானுக்கு உண்டானது என்னும் கேள்வி, நம்மைப் பரிணாம வளர்ச்சியின் மிகச் சுவாரசியமான அங்கத்துக்குள் அழைத்துச் செல்கிறது. பொதுவாகத் தன் இணையைக் கவர இத்தகைய வண்ணங்கள் உதவும்; அது தவிர இலை போன்ற பச்சைநிறம், மண்ணின் பழுப்பு போன்றவை வேட்டையாடிகளிடம் இருந்து தப்ப உதவும். இது தவிரவும் சில நிறங்கள் ‘அபாயம்: என்னைத் தின்னாதே’ என்று வேட்டையாடிகளிடம் எச்சரிக்கும் வகையில் உண்டானது! நம் ஊர்களில் இயல்பாகக் காணப்படும் common rose என்னும் பட்டான், கருப்பு நிறத்தில் சிவப்பு வண்ணங்கள் கொண்ட உடலமைப்பைக் கொண்டது. இதன் புழுப் பருவத்தில் ஆடுதின்னாபாலை போன்ற நச்சுள்ள தாவரங்களைத் தின்று வளர்ந்ததால், முதிர்ந்த பட்டானும் நச்சுடையது ஆகும். இதனால் வேட்டையாடி விலங்குகள் இந்தப் பட்டானை உண்பதில்லை. இவ்வகை எச்சரிக்கை நிறங்கள் கொண்ட அமைப்பு, வேட்டையாடிகளை நச்சு இரைகளிடமிருந்து தப்புவிப்பதோடு, அதே காரணத்தால் இரையான பூச்சியும் பிழைக்கிறது. Aposematic display என்று அழைக்கபடும் இவ்வமைப்புப் பாம்புகள், தவளைகள் போன்றவற்றிலும் காணலாம்.

பட்டான்களில் வண்ணங்களின் விளையாட்டு இதோடு முடிவதில்லை. பரிணாமத்தில் உருவப்போலிகள் என்கிற, ஒத்த உருவம்/ வண்ணங்கள் கொண்ட உயிரினங்கள் உருவாகும் சாத்தியங்கள் ஏற்படுகின்றன. உயிர்ப்பிழைத்து இருப்பதற்கான ஒரு யுக்தியாகவும், வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பவுமே இது போன்ற உருவப்போலி அமைப்புகள் உதவுகின்றன. பட்டான்களில் இருவகை உருவப்போலிகளைக் காணலாம்:

  1. பேடேசியன் வகை (Batesian mimicry)
  2. முல்லரியன் வகை (Müllerian mimicry)

முதல் வகையானது, நஞ்சில்லாப் பட்டான்கள், நஞ்சுள்ளப் பட்டானில் உள்ள வண்ணங்கள் போன்று பரிணமித்து வருவதாகும். Common Mormon பட்டான்,  வேட்டையாடிக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சைக் கொண்டிருக்காது. எனினும், அவை common rose பட்டானில் உள்ள சிவப்பு வண்ணங்களைக் கொண்டிருப்பதால், அவற்றை எச்சரிக்கையாகக் கொண்டு பெரும்பாலும் வேட்டையாடி விலங்குகள், இவற்றை உண்பதில்லை. Common Mormon மட்டுமல்லாது பல்வேறுப் பட்டான் இனங்களில் பொதுவாகக் காணப்படக்கூடிய உருவப்போலிவகை இது!

A. வேட்டையாடிகள்உண்ணத்தகாத Common Rose பட்டான்
B. உருவப்போலியாக Common Mormon பெண்பட்டான்
C. Common Rose பட்டானைப்போல் அல்லாத Common Mormon ஆண்பட்டான்

 

இரண்டாம் வகையான முல்லரியன் என்பது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆனால் நச்சுடைய உயிரினங்களில் ஒரே மாதிரி  எச்சரிக்கை வண்ணங்கள் இருப்பது. இவ்வகையும்  பேடேசியன் போலிகள் தான் என்று நம்பியிருந்த அறிவியல் உலகுக்கு, பின்னாட்களில் தான் இவை வேறுவகை என்று தெரிந்தது. முல்லரியன் வகையில் போலிகளும் வேட்டையாடி விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ, மோசமான சுவையிலோ இருப்பதைக் கண்டறிந்த  பிறகே அறிவியலாளர்கள் இதைத் தனிவகையாகப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினர். குவி பரிணாம வளர்ச்சியின் ஒரு கிளையாகவும் இவ்வகைப் போலிகளைக் காணலாம்!

மேற்சொன்ன உருவப்போலி அமைப்புகள் என்பது பட்டானுக்கோ, வேறு உயிரினங்களுக்கோ உடனே உருவானதல்ல. பலகோடி ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியும், இயற்கைத் தெரிவையும் (natural selection) தாண்டியே இப்போதிருக்கும் உயிரினங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இரைக்கும், வேட்டையாடிக்கும் நடக்கும் போராட்டமே பரிணாமத்தை நகர்த்தும் காரணி. பூச்சிகள் போன்ற சிறு உயிர்களில் இத்தகையத் தகவமைப்பு உத்திகளைப் பெரியவிலங்குகள் / பறவைகளைக் காட்டிலும் இயல்பாகக் காணலாம்.

பட்டான்களின் வாழ்வியல் என்னைப் போன்ற இயற்கையியலாளர்களுக்கு எப்போதும் ஆச்சர்யம் அளிக்கும் ஒன்று. புழுவாக ஒரு குறிப்பிட்ட வகைத் தாவரங்களில் மட்டுமே இருந்து, பின் கூட்டுப்புழுவாக ஒரே இடத்தில், உணவின்றிச் சிலகாலம் இருந்து சட்டென்று ஒரு நாளில் கூட்டை உடைத்துச் சிறகடித்துப் பறக்கும்! பின்னர் இணைசேர்ந்து, எந்தத் தாவரத்தில் புழுவாக இருந்ததோ அதே தாவரத்தில் முட்டையிடும். இத்தகையத் தாவரம் மற்றும் பட்டானுக்கு இருக்கும் தொடர்பை ஆய்வு செய்தல், அந்தந்தச் சூழல் குறித்து மேலும் அறிய உதவும்.

  • அமர பாரதி
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments