இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கைக்கு எதிரான வழக்கு!

நடந்தது என்ன?

வழக்கறிஞர் பி. சுந்தரராஜன்

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந் தத்தை மீறும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்ஷல் தீவுகள் தொடுத்த வழக்கை பன்னாட்டு நீதிமன்றம் (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ சிஷீuக்ஷீt ஷீயீ யிustவீநீமீ) அண்மையில் தள்ளுபடி செய்தது. இந்த செய்தி உங்களுக்குள் ஏற்படுத்தும் உணர்வு என்ன? ஒரு நல்ல தேசபக்தராக மகிழ்ச்சி அடைகிறீர்களா? உங்கள் பதில், “ஆம்!” என்றால் நாம் பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள் ஏராளமாக இருக்கின்றன.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது மார்ஷல் தீவுகளுக்கு என்ன பகை? ஏன் இந்த வழக்கு?

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந் துள்ள ஒரு சிறிய தீவுக்கூட்டம்தான் மார்ஷல்
தீவுகள். சுமார் 3,000 ஆண்டுகள் வரலாறைக் கொண்ட இந்தத் தீவுகள் பல வல்லாதிக்க நாடுகளால் ஆளப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் ஆதரவில் உள்ளது. அமெரிக்காவுக்கு மிகவும் பிடித்தமான அணு ஆயுத பரிசோதனைக்களம் இந்த மார்ஷல் தீவுகள். 1947 – 1958 சிறிதும், பெரிதுமாக 67 அணு ஆயுத பரிசோதனைகளை இந்தப் பகுதியில் அமெரிக்கா நடத்தி இருக்கிறது. அதற்கு வசதியாக இந்தத் தீவுகளில் வசித்த மக்களை 1946ம் ஆண்டில் வேறு இடங்களுக்குத் துரத்தி அடித்திருக்கிறது அமெரிக்கா. இந்தப் பகுதியில் உள்ள பிகினி தீவில் கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1954ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி அமெரிக்கா “பிராவோ” என்ற பெயரில் ஒரு ஹைட்ரஜன் பாம் சோதனையை நடத்தியது. அதிகமில்லை நண்பர்களே! சுமார் 15 டன் அணு ஆயுதத்தை இப்பகுதியில் வெடித்து சோதனை செய்தது. இது 1945ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் ஏவப்பட்ட அணு ஆயுதத்தைப்போல 1000 மடங்கு அதிகமானது. அவ்வளவுதான். இந்த அணு ஆயுதச் சோதனை நடந்து சுமார் 15 ஆண்டுகள் முடிந்த பின் இந்தத் தீவுகளில் மனிதர்கள் மீண்டும் குடியேறலாம் என்று அமெரிக்க அறிவியல் துறையினர் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து தமது தாயகம் திரும்பிய மக்களை மீண்டும் துரத்தி அடித்தது, அமெரிக்கா. அதற்கு சொல்லப்பட்ட காரணம், அப்பகுதியில் இன்னமும் எஞ்சி இருக்கும் கதிரியக்கப் பாதிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகளை சரி செய்ய இயலாது – இப் பகுதியில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு எதிர்காலத்திலும் ஏற்படாது என்று ஐக்கிய நாடுகள் அவை 2012ம் ஆண்டில் அறிவித்துள்ளது. பிகினித் தீவில் நடந்த மிகப்பெரிய அணுஆயுதச் சோதனையின் 60வது நினைவு நாளை நினைவுகூறும் வகையில் மார்ஷல் தீவுகள் குடியரசு இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு எதிரான இந்த வழக்கை பன்னாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்தது.

பன்னாட்டு நீதிமன்றம்  (International Court of Justice) என்றால் என்ன? 

பன்னாட்டு நீதிமன்றம் 1945ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானம் இயற்றி உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் நெதர்லாந்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக இருக்கும் 193 நாடுகளும் இந்த நீதிமன்றத்தை அங்கீகரித்துள்ளன. ஒரு நாட்டுக்குள் இயங்கும் உள்நாட்டு நீதிமன்றத்திற்கும், பன்னாட்டு நீதிமன்றத் திற்கும் பல முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. உள்நாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு முறையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தனி நபர்களும், செயல்படும் அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் குறிப்பிட்ட உள்நாட்டு நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இந்த நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டால் எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் கட்டாயமாக தங்கள் பதிலை கூற வேண்டும். ஆனால் பன்னாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு என்பது, வழக்கில் ஈடுபடும் நாடுகளின் ஒப்புதலை பொறுத்தே அமையும். இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்காமல் இருக்கும் உரிமை நாடுகளுக்கு – அரசுகளுக்கு உள்ளது. எனவே உள்நாட்டு நீதிமன்றங்களைப் போல் இந்த பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க இயலாது. நாடுகளுக்கு இடையே உள்ள பிணக்குகளை இணக்கமாக தீர்ப்பதற்காகவே இந்த பன்னாட்டு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்ற புரிதலுடன் இந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும். இந்த பன்னாட்டு நீதிமன்றத்தில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 நீதிபதிகள் நிரந்தரப் பணியில் இருப்பார்கள். இந்தியாவின் சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தல்வீர் பண்டாரி என்பவர் இந்த பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக தற்போது பணியாற்றி வருகிறார். குறிப்பிட்ட வழக்கின் தன்மைக்கேற்ப, தேவைக்கேற்ற எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்படும்.

மார்ஷல் தீவுகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

மார்ஷல் தீவுகள் குடியரசு இந்த வழக்கில் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, பாகிஸ் தான், இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா, கொரியா, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய 9 நாடுகளின் மீதும் தொடுத்திருந்தது. அணு ஆயுத பரவல் ஒப்பந் தத்தில் கையப்பம் இட்டுள்ள நாடுகள் அந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறுகின்றன என்பதே மார்ஷல் தீவுகள் முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டு. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்  (Treaty on the Non-Proliferation of Nuclear Weapons) 1970ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அணு ஆயுதப் பெருக்கத்தை தடை செய்தல், அணு ஆயுதங்களை கைவிடுதல், அணுசக்தியை அமைதி(ஆக்க) வழியில் பயன்படுத்துதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மேலும் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லாதிக்க நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை தயாரிக்கவும் வைத்திருக்கவும் முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உட்பட 190 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையப்பம் இட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், தெற்கு சூடான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையப்பம் இடவில்லை. வடகொரியா இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் கையப்பம் இட்டிருந்தாலும் பிற்காலத்தில் ஒப்பந்த விதிகளை மீறி வெளியேறி விட்டது. உலகில் எந்த மூலையில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டாலும் அது மனித குலத்தின் தலையின் மீது தொங்கும் வாளைப் போன்று ஆபத்தானது. இதனால் புவி வெப்பநிலை மிகவும் பாதிக்கப்படுவதுடன் பூவுலகின் பாதுகாப்பு
அரணாக இருக்கும் ஓஸோன் படலத்தையும் சீரழிக்கும். இத்தகைய அணுஆயுதத் தாக்குதல் உலகின் அரசியல், சட்டம், பொருளாதாரம் ஆகிய அம்சங்களை மிகவும் பாதிக்கும். இந்தியா அணு ஆயுதங்களை தங்கள் தேசப்பாதுகாப்பின் முக்கியமான அம்சமாக அறிவித்துள்ளது. உலகில் மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை கைவிடும்வரை இந்தியாவில் அணு ஆயுதத் தயாரிப்பும் சோதனைகளும் தொடரும் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த 2003 ஆண்டு இந்தியாவின் கேபினட் கமிட்டி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இந்தியா மீதோ, இந்தியப் படைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால் பதில் தாக்குதலாக பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணுஆயுதத் தாக்குதலை தொடுக்க இந்தியா தயங்காது என்று கூறப் பட்டுள்ளது. இந்தியா மீதோ, இந்தியப் படைகள் மீதோ உயிரியல் ஆயுதங்களோ, வேதிப்பொருளால் ஆன ஆயுதங்களோ ஏவப்பட்டாலும் பதிலுக்கு இந்தியா அணு ஆயுதங்களே ஏவும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அணு ஆயுதங்கள் தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்களின் அளவு குறித்தோ, அதன் முதலீட்டுத் தொகை குறித்தோ அதிகாரபூர்வமான தகவல்கள் கிடைப்பதில்லை. ஆனால் இந்தியா தரை வழியாகவும், கடல் வழியாகவும், கடலுக்கடியிலும், வான் வழியிலும் அணு ஆயுதங்களை செலுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளுடன் அணுசக்தி தொடர்பான பல்வேறு வணிக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கோடிக் கணக்கான மக்களைக் கொண்ட நகரங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த இருநாடுகளும் அணு ஆயுதப்போரில் ஈடுபட்டால் அந்தப் போர் காரணமாக கோடிக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு முடிவதில்லை. இந்த அணு ஆயுதப்போரின் காரணமாக ஏற்படும் கரும்புகை அண்ட வெளியில் பரவி இந்த பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மரண அபாயத்தை ஏற்படுத்தும். இந்த கரும்புகை சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும். இதனால் புவியின் வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும். ஓஸோன் படலத்தில் வெப்பம் அதிகமாகி பழுதடையும். இதைத் தொடர்ந்து சூரியனிலிருந்து வெளியாகும் ஆபத்தான அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாக புவியை வந்தடையும். இதனால் கடலிலும், நிலத்திலும் வாழும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல்வேறு நோய்கள் உருவாவதுடன், கடும் உணவுப் பஞ் சமும் ஏற்படும்.

இதனால் மார்ஷல் தீவின் மக்களுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்படும். இத்தீவுகளில் விளைநிலங்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. அந்த நிலமும் அமெரிக்கா நடத்திய அணுஆயுத சோதனைகளால் அணுக்கதிரியக்க பாதிப்பு அடைந்துள்ளது. எனவே மார்ஷல் தீவு மக்கள் உணவுத் தேவைக்காக கடலையும், அண்டை நாடுகளையுமே நம்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த பூவுலகில் எங்கு அணு ஆயுதப்போர் நடந் தாலும் அது மார்ஷல் தீவு மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே அணு ஆயுத சோதனைகளின் விளைவுகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கும் மார்ஷல் தீவு குடிமக்களின் சார்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையப்பம் இடாவிட்டாலும், அந்த ஒப்பந்தக் கூறுகளை நடைமுறைப்படுத்த தொடர்ந்து தவறி வருகிறது என்று அறிவிக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அழிக்குமாறு உத்தரவிட வேண்டும்  என்று மார்ஷல் தீவு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கூறப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர் தரப்பினராக குறிப்பிடப் பட்டுள்ள ஒன்பது நாடுகளும் தங்கள் பதிலை அளிக்குமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கவில்லை. பன்னாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு தொடர்புடைய நாடுகளின் ஒப்புதலின் பேரில் மட்டுமே உறுதி செய்யப்படுவதால் இந்த நாடுகளுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாது. சீனா இந்த வழக்கின் விசாரணைக்கு உட்பட முடியாது என்று அறிவித்து விட்டது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பதில் மனு தாக்கல் செய்தன. இந்த நாடுகள் கூறிய  பதிலுரையிலும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு பன்னாட்டு நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தியே பதில் மனு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக இந்தியா அளித்துள்ள பதிலுரையில், “அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த”த்தில் இந்தியா கையெழுத்து இடாத நிலையில் அதன் கூறுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அணு ஆயுதத்தை தாம் முதலில் பயன்படுத்துவதில்லை என்ற சுயக்கட்டுப்பாட்டுடன் இந்தியா இருப்பதால் இந்தியாவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப் பிக்கப்பட வேண்டியதில்லை என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டது. மேலும் இந்த வழக்கில் எதிர் தரப்பினராக குறிப்பிடப்பட்டுள்ள ஆறு நாடுகள் வழக்கின் விசாரணைக்கு உட்படாத நிலையில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் தடை உத்தரவு பிறப்பிப்பது நீதிக்கு எதிரானதும், நடைமுறைப்படுத்த முடியாததாகவும் அமைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இறுதியாக இந்தியாவுக்கும், மார்ஷல் தீவுக்கும் இடையே சச்சரவுகள் இல்லாத நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என்று இந்தியா தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பன்னாட்டு நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட ஆயம், இந்தியா தரப்பில் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு மார்ஷல் தீவுகள் தொடுத்த வழக்கை விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

நம் முன் உள்ள கேள்விகள்?

மார்ஷல் தீவு தொடுத்த வழக்கில் இந்தியா முன் வைத்த சட்டரீதியான அம்சங்கள் நீதிமன்றத்தை திருப்தி அடைய வைத் திருக்கலாம். ஆனால் இந்த வழக்கில் மார்ஷல் தீவு தொடுத்த கேள்விகள் அனைத்தும் விடை அளிக்கப்படாமலேயே உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு அணு ஆயுதங்களைப் பெருக்கி வருகின்றன. இருநாடுகளிடமும் நூறுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களுக்காகவே அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் பல கோடி டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மனதில் கொண்டு இந்த ஆபத்தான போட்டியை ஆதரித்து வருகின்றன. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையில் எந்த நேரத்தில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந் தாலும் பாதிக்கப்படப்போவது நாம்தான். நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசு அமைப் புகள் நமது கருத்தை எந்த விதத்திலும் பொருட் படுத்தாது நமது தலையின் மீது அணு ஆயுதம் என்ற ஆபத்தான கூரிய வாளைத் தொங்க விடுகின்றன. முதல் அணு ஆயுத தாக்குதலை யார் தொடுத் தாலும் உடனடியாக அணு ஆயுதப்போர் மூளும் என்பதில் ஐயமில்லை. இதில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடை வார்கள் என்று உடனடியாக முடிவு செய்ய இயலாது. ஆனால் இப்போரின் விளைவாக உடனடி யாகவும், நிரந்தரமாகவும் பாதிக்கப்படப் போவது குறிப்பிட்ட நாடுகளின் மக்கள் மட்டுமல்ல. உலகின் பல பகுதிகளிலும் உள்ள தாவரங்கள், விலங்குகள் ஆகியவையும் பாதிக்கப்படும். ஏனெனில் அணு ஆயுதம் பயன் படுத்தப்பட்டால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் நச்சுத் தன்மையை பெற்றுவிடும். புவியின் சில பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். சில பகுதி களில் குளிர் அதிகரிக்கும். சூரியனிலிருந்து வெளியாகும் ஆபத்தான அணுக்கதிரியக்கம் பூமியை நேரடியாக தாக்கும். பல விதமான நோய்களும், மரணமும், கடுமையான உணவுப் பஞ்சமும் உருவாகும். இந்நிலையில் நமக்கு அணு ஆயுதங்கள் தேவையா? என்ற கேள்வி எழுப்பப்படவேண்டும்.

தேசபக்தி அல்லது தேசப்பாதுகாப்பை ஆயுதக் குவிப்பு என்ற அளவுகோலால் அளக்கக் கூடாது. குடிமக்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமே
ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவுகோலாக இருக்கமுடியும். நல்ல வாழ்க்கைத் தரம் அமையப்பெற்ற குடிமக்கள் மட்டுமே நாட்டுப்பற்றுடன் வாழமுடியும். ஆனால் தேசப் பாதுகாப்பு, தேசபக்தி என்ற சொற்றொடர்களின் அர்த்தமற்ற ஆதிக்கத்தில் நமது நியாயமான கேள்விகளும், அச்சங்களும் புறந்தள்ளப்படுகின்றன. மேற்கூறிய வழக்கில் கூறப்பட்டுள்ளவாறு மார்ஷல் தீவுகளுக்கும், இந்தியாவுக்கும் எந்த சச்சரவும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் அணு ஆயுதச் சோதனைச் சாலையில் இன்றளவும் தொடரும் துன்பங்களுடன் வாழ்ந்து வரும் அத்தீவுவாசிகள் உலகில் உள்ள அனைத்து மனிதர்கள் சார்பாகவும் குரல் கொடுப்பது தவறா? இந்தப் பூவுலகில் மனிதர்கள் வாழ்ந்தால் மட்டுமே நாடுகளும், அரசுகளும் இயங்க முடியும். மனிதர்களே இல்லாத நிலையில் நாடுகளும் அரசுகளும் இருக்க முடியாது. எனவே மக்களுக்காகவே நாடும், அரசும் இயங்க வேண்டும். ஆனால் தற்போது நாடு, அரசு இவற்றின் பெயரால் மக்களின் உயிரை, வாழ்க்கையை, பாதுகாப்பை பணயம் வைக்கும் செயல் நடைபெற்று வருகிறது. நாட்டுப் பற்றோடு இந்திய ஆட்சியாளர்களை ஆதரிக்கப் போகிறோமா? அல்லது மனித நேயத்துடன் மார்ஷல் தீவுவாசிகளை ஆதரிக்கப் போகிறோமா?

பருவநிலை மாறுபாடு  விளைவுகளைக் காட்டும் ஆவணப்படம்

சா.ஜெ.முகில் தங்கம்

பருவநிலை மாறுபாடு! இந்த சொல்லை நாம் பல வருடங்களாக கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் அதனைப் பற்றிய தெளிவான பார்வையோ அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகளைப் பற்றியோ நாம் இதுவரை அறியவில்லை. இது ஏதோ உலக அரசியல் சார்ந்ததாகவும், நமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இதனால் உடனடியாக பாதிக்கப்படுவது உலகம் முழுவதிலும் உள்ள நடுத்தர, மற்றும் ஏழை மக்களே. இத்தகைய பிரிவு மக்களே பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கும் இந்திய நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இத்தகைய பருவநிலை மாறுபாடு குறித்து பிஃபோர் த ஃப்ளட்  (Before The Flood)  எனும் ஆவணப்படத்தினை உருவாக்கியுள்ளார் ஹாலிவுட் நடிகரான லியார்னடோ டிகாப்ரியோ. இதற்குமுன் பருவநிலை மாறுபாடு குறித்து பல்வேறு ஆவணப்படங்கள் வந்திருந்தாலும் டிகாப்ரியோவின் இந்த ஆவணப்படமானது உலகம் முழுவதிலும் பருவநிலை மாறுபாட்டைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பருவநிலை மாறுபாட்டினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விளைவுகள் என்ன?, பருவநிலை மாறுபாட்டிற்கான காரணங்களாக இருப்பவை எவை? என பலவற்றை அலசுகிறது. டைட்டானிக் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஹாலிவுட் நடிகரான லியார்னடோ டிகாப்ரியோ அப்போது முதலே சுற்றுச்சூழல் குறித்து பேசி வருபவர். 2000-களில் எர்த் ஃபேர் (Earth Fair) போன்ற சுற்றுச்சூழல்
அமைப்புகளில் முக்கிய பங்காற்றிய டிகாப்ரியோ, தனது அறக்கட்டளையான லியார்னடோ டிகாப்ரியோ அறக்கட்டளை (LDF)  மூலமாக பருவநிலை மாற்றம் குறித்தும் சூழ்நிலை குறித்தும் நடவடிக்கைகளைச் செய்து வருபவர். இத்தகைய நபரை 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக அமைதிக்கான தூதராக, குறிப்பாக பருவநிலை மாறுபாட்டிற்கென முக்கியத்துவம் கொடுக்க்க் கூடிய பணிகளுக்காக நியமித்த்து ஐக்கிய நாடுகள் சபை. அதன்பின் டிகாப்ரியோவின் பருவநிலை மாறுபாடு குறித்த பயணமே இந்த ஆவணப்படமாக உருவாகியுள்ளது. பருவநிலை மாறுபாட்டில் முக்கியப் பங்காற்றுபவை நிலக்கரி, கச்சா எண்ணெய், மற்றும் இயற்கை வாயு போன்றவை. இவை அனைத்தும் பல்வேறு காரணங்களுக்காக மனிதர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரியும் இயற்கை வாயுவும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. உலகின் பெரும் பாலான மின்சார தயாரிப்பு இவற்றை அடிப் படையாகக் கொண்டே செயல்படுகின்றன. அடுத்ததாக கச்சா எண்ணெய் இதிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலும் டீசலும்தான் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய மான எரிபொருள்கள். இவற்றின் மூலம் வெளி யேறும் கார்பன் டை ஆக்ஸைடுதான் பருவநிலை மாற்றத்தின் முக்கிய காரணி. அதிகளவில் கச்சா எண்ணெய் எடுக்கப்படும் கனடாவில் உள்ள சன்கர் எண்ணெய் மணற் பரப்பின் மேல் பயணிக்கிறார் டிகாப்ரியோ.

இந்த ஆவணப்படமானது உலகம் முழுவதிலும் பருவநிலை மாறுபாட்டைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பருவநிலை மாறுபாட்டினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விளைவுகள் என்ன?, பருவநிலை மாறுபாட்டிற்கான காரணங்களாக இருப்பவை எவை? எனப் பலவற்றை அலசுகிறது. 

1960களில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த எண்ணேய் மணற்பரப்பு, தற்போது 350,000 பேரல்கள் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றது. அப்பகுதியின் பெரும்பாலான காட்டை அழித்தே இது நடைபெறுகிறது என்று டிகாப்ரியோவிடம் சொல்லும்போது புரியாத விபரீதம் அவர் பஃப்ஃபின் தீவிற்கும்  (Baffin Island)  கிரின்லாந்தின் பனிப்பிரதேசத்திற்கும் செல்லும்போது கண்கூடப் பார்க்க முடிகிறது. அந்த அதிர்ச்சியை இன்னும் அதிகப்படுத்துகிறது மியாமி கடற்கரை நகரத்தின் (விவீணீனீவீ ஙிமீணீநீலீ) நிலை. பருவநிலை மாறுபாட்டால் கடல்மட்டம் உய்ர்ந்து மியாமி நகரத்தினுள் கடல்நீர் புகுந்து விட்டது. அதனை சரிசெய்ய அவ்வரசு 400 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளதாக கூறுகிறார் அந்நகரத்தின் மேயர். அதுகூட 50 வருடங்களுக்குத்தான் தாக்குப் பிடிக்குமாம். மீண்டும் கடல்நீர் புகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பருவநிலை மாறுபாட்டால் புவி வெப்பமாதல் உயருகிறது என கணக்கீடுகள் மூலம் சொன்ன ஜெர்மன் பேராசிரியரான மைக்கேல் மானை அமெரிக்க உளவுத்துறை மிரட்டியதோடு ஊடகங்கள் அவரைக் கேலிக்கூத்தாக்கியதையும் ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர். புவியானது வெப்பமடையவில்லை என சொல்வதற்கே மிகப்பெரிய லாபி நடக்கிறது என்று சொல்கிறார் மைக்கேல் மான். இதற்கு பின் கார்பரேட்டுகளும் தொழிலதிபர்களும் இருக்கின்றனர். அமெரிக்கக் காங்கிரஸிலேயே இதற்கான லாபி நடைபெறுகிறது என மேலும் அதிச்சியாக்குகிறார் மான். அமெரிக்க நாடாளுமன்றத்தில் பருவநிலை மாறுபாட்டு மறுப்பாளர்களே அதிகமாக உள்ளனர் என்ற
புள்ளிவிவரமும் கூறப்படுகிறது. சீனாவில் சுற்றுச்சூழலைப் பலிகொடுத்துதான் வளர்ந்த நாடாக மாறியுள்ளனர். இத்தனை ஆண்டு வளர்ச்சிக்குப் பின் சூழல் குறித்த அக்கறையில் இறங்கியுள்ளனர். ஆனால் இது மிக தாமதம் என ஆவணப்படம் காட்டும் காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பருவநிலை மாறுபாட்டிற்கான முன்னெடுப்புக்காக டிகாப்ரியோ பேசும்போது அவருக்கு முன்வைக்கப்படும் கேள்விகள், அமெரிக்கா இதனை முன்னெடுக்கிறதா என்பதுதான், நாட்டின் 300 மில்லியன் மக்கள் மின்சாரமே பெறாத போது மாற்றுசக்தியை பற்றி யோசிப்பது சிரமம்தான். அதே நேரத்தில் உலகத்திலேயே அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் அமெரிக்கா இத்தகைய மாற்று எரிபொருள் சக்தியை முன்னெடுக்க வேண்டும் என்பதே டிகாப்ரியோவிற்கு பதிலாக கிடைத்தது. பருவநிலை மாறுபாட்டால் அதிகம் பாதிப் பிற்குள்ளுவது இங்கிருக்கும் மின்சாரம் கூட பயன்படுத்தாத விவசாயிகள்தான், இதனை ஆரம்பித்துவைத்த வல்லரசு நாடுகள் என்ன செய்கின்றன என்ற மிகப்பெரிய கேள்வியானது ஆவணப்படத்தில் டிகாப்ரியோ முன் வைக்கப் படுகிறது. வளரும் நாடுகளின் நிலைதான் இப்படி யென்றால் அங்காங்கே இருக்கக்கூடிய குட்டித்தீவு நாடுகளின் நிலை இன்னும் பரிதாபமாக இருக் கின்றன. பருவநிலை மாறுபாட்டின் நேரடியான தாக்கம் அந்நாடுகளின் மீதுதான் விழுகின்றன. ஆவணப் படத்தில் டிகாப்ரியோ கிரிபாடி
(ரிக்ஷீவீதீணீtவீ), பலாவ் (றிணீறீணீu) என்ற இரு தீவுநாடுகளுக்கு செல்கிறார். கடல்மட்ட உயர்வால் நாடுகளின் பாதி நகரங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. போமிக்கு மேல்தான் இப்படியென்றால் கடலுக்குள்ளும் இதன் விளைவுகள் அதிகமாகவே இருக்கின்றன. பருவநிலை மாறுபாட்டின் காரணமாக கடந்த 30 வருடங்களில் 50% பவழங்கள் அழிந்துவிட்டன என்கிறார் கடல் சூழலியலாளர் ஜெர்மி ஜாக்சன். வெறுமனே வாயல் இதனை அவர் சொல்லவில்லை. கடலின் ஆழத்தினுள்ளே டிகாப்ரியாவும் கூட்டிச் செல்கிறார். அங்கே அவர் காட்டுகின்ற சூழல் இதுவரை தந்த அதிர்ச்சிகளை மேலும் உறுதிபடுத்துகின்றன. இப்படி புவி வெப்பமாதல் நிகழ்ந்துகொண்டே இருந்தால் அதற்கான தீர்வுகள்தான் என்ன? மழைக்காடுகளைத் தீர்வாகச் சொல்கின்றனர். அவைதான் கார்பன் டை ஆக்சைடை அதிகமாக உள்ளிழுக்கக் கூடியவை. ஆனால் மழைக்காடுகள் தீவிபத்திற்குள்ளானால் அவை உள்ளிழுத்ததை விட அதிகமான கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் என்றும் சொல்லப்படுகிறது. புவியின் முக்கியமான மழைக்காடுகள் அமேசான் மழைக்காடுகள், காங்கோ மழைக்காடுகள் மற்றும் இந்தோனேசியாவின் மழைக்காடுகள். இவற்றில் இந்தோனேசியாவின் மழைக்காடுகள் அரசின் அனுமதியுடனே தீயிட்டு அழிக்கப்படுகின்றன. அதற்கு பனை எண்ணெய் வியாபாரம், இந்தோனேசியாவில் இலாபம் தரக்கூடிய முக்கியமான தொழிலாக இருப்பதால் தொழிலதிபர்களும் ஊழல் செய்து காட்டை அழித்து பனை எண்ணெய் தயாரிக்கின்றனர். யானைகளும், காண்டாமிருகங்களும், உராங் குட்டான் குரங்குகளும் பூமியில் சேர்ந்து வாழும் கடைசி நிலப்பரப்பு இந்தோனேசியாவின் மழைக்காடுகள்தான். அவற்றுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது எனபதை மறக்காமல் பதிவு செய்கிறது ஆவணப்படம். இவற்றுக்கெல்லாம் தீர்வாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் மீதான வரியை அதிகப்படுத்தலாம் என யோசனைத் தருகிறார் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் முக்கிய பொருளாதார நிபுணர் கிரிகோரி மன்கிவ். வரியை அதிகப்படுத்தும்போது ப ய ன் ப டு த் த ப் ப டு ம் அ ள வு எ ன் ப து கண்டிப்பாய் குறையும் என்கிறார் அவர். மேலும் இவை மாற்று எரிபொருள் சக்தியை பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார். மாற்றுசக்தியைப் பற்றி பல்வேறு வாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்த், ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகள் தங்களது மின்தேவை முழுதையும் மாற்றுசக்தியின் மூலமே பூர்த்தி செய்துகொள்கின்றன என்பதை ஆவணப் படம் நமக்குக் கூறுகிறது. உலக அமைதிக்கான தூதராக டிகாப்ரியோ போப் ஆண்டவரையும் சந்திக்கிறார். பருவநிலை மாறுபாட்டிற்காக அவரது குரலும் ஆவணப்படத்தில் ஒலிக்கிறது. இதுவரை எந்த மதத்தலைவரும் செய்யாதது. இறுதியாய் ஒபாமாவைச் சந்திக்கும் டிகாப்ரியோ பருவநிலை மாறுபாட்டில் வல்லரசு நாடாக நாம் என்ன செய்ய முடியும்? என்பதை தெரிந்துகொள்கின்றார். பருவநிலை மாறுபாட்டின் தாக்கம் நேரடியாக கண்களுக்கு புலப்படாத காரணத்தாலேயே இத்னை நாம் பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் நாம் அனுபவித்த பூமியை அப்படியே நமது சந்ததிக்கு கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று கூறுகிறார் ஒபாமா.

‘‘பாரீஸ் ஒப்பந்தம் பருவநிலை மாறுபாட்டில் பெரிய நகர்வு என்று சோல்ல முடியாது. ஆனால் இது ஒரு சின்ன திறப்பு, இதனை சரியாக பயன்படுத்திக்கொள்வோம். பருவ நிலை மாறுபாட்டின் தடுப்பை நம்மில் இருந்து தொடங்குங்கள். நாம் வாங்குகிற, பயன்படுத்துகிற எல்லாவற்றிலும் சூழலைப் பற்றி யோசியுங்கள், சூழலைப் பற்றிப் பேசுகிற தலைவர்களுக்கு வாக்களியுங்கள்”, இவைதான் பருவநிலை மாறுபாட்டிற்கான பாரிஸ் மாநாட்டில் டிகாப்ரியோ பேசியவை. இவைதான் ஆவணப்பட்த்தின் இறுதியும் கூட.. நம்மில் இருந்து தொடங்குங்கள். 95 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படமானது கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இதன் தயாரிப்பாளர்களில் டிகாப்ரியோவும் ஒருவர். ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநரான ஃபிஷெர் ஸ்டிவென்ஸ் இதனை இயக்கியுள்ளார். ஆண்டனியோ ரோஸ்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக திரையிடப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான லியானர்டோ டி காப்ரியோ இதனை முன்னெடுத்துள்ளது பரவலான மக்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. பருவநிலை மாறுபாட்டில் நம்மாலான நடவடிக்கைகளை எடுக்கவும் அதனைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆவணப் படத்தின் பெயரிலேயே ஒரு இணையதளத்தை (before the flood.com)தொடங்கியுள்ளனர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments