இந்தியா, குறிப்பாக அதன் இமயமலை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பருவமழைக் காலத்தில் மேக வெடிப்புகளால் பல மடங்கு சேதாரங்களை சந்தித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் மேக வெடிப்பினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது, 2004 சுனாமிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, காலநிலை மாற்றம் மேகவெடிப்பு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரத்தன்மையை அதிகரிக்கிறது. 2021 ஆம் ஆண்டில், இமாச்சலப் பிரதேசத்தில் சுமார் 30 மேக வெடிப்பு நிகழ்வுகளும், உத்தரகாண்டில் 50 நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன என்று SANDRP அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டும் அந்த கதை தொடர்கிறது. ஜம்மு & காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைகளுக்கு அருகே ஜூலை 8, 2022 அன்று ஏற்பட்ட மேக வெடிப்பைத் தொடர்ந்து உண்டான திடீர் வெள்ளத்தில் 17 பேர் இறந்தனர் மற்றும் ஜூலை 16 வரை சுமார் 40 பேர் காயமடைந்தனர் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் அறிவித்தனர். அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 60 க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை.
இந்த சம்பவங்களுக்கு முன்னர், இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் ஆறு சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளத்தால் சில நாட்களுக்கு முன்னர் தெலங்கானா மாநிலம் தத்தளித்தது. இந்த வெள்ளம் அம்மாநிலத்தின் பல பகுதிகளை பாதித்திருந்தாலும் அதிகமான பாதிப்பு பத்திராச்சலம் பகுதியில் ஏற்பட்டது. வெள்ளத்தால் இதுவரை 15பேர் உயிரிழிந்துள்ளதாகவும், ஆயிரம் கோடிகளில் இழப்பு மற்றும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 1,000 கோடியை ஒன்றிய அரசு வழங்கவேண்டும் என்று அம்மாநில அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் சந்திரசேகர ராவ், “வெளிநாடுகள் இந்தியாவில் மேகவெடிப்புகளை ஏற்படுத்துவதாலும், காலநிலை மாற்றத்தாலும்” வெள்ளம் ஏற்படுவதாக குற்றம் சாட்டினார். “இப்போது பெய்தது சாதாரண மழைதான், மேகவெடிப்பு அல்ல”, என்று பதிலுக்குச் சொன்னார் அம்மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
.
அயல்நாட்டு சதி என்கிற வாதங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டு, மேக வெடிப்பு என்றால் என்ன, காலநிலை மாற்றத்திற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பது பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு மணிநேரத்திற்குள் 100மிமீ (10செமீ) மழைப் பொழிவு ஏற்பட்டால் அதை மேக வெடிப்பு என்கிறது இந்திய வானிலை மையம். இந்த அளவிற்கான மழைப்பொழிவு திடீர் பெருவெள்ளத்தை ஏற்படுத்தி பொருட் சேதத்தையும் உயிர் சேதத்தையும் உண்டாக்குக்கிறது. மேகவெடிப்புகள், பருவமழை காலமான மே-செப்டம்பர் மாதங்களில் அதிகரிக்கின்றன.
குறுகிய காலஅவகாசத்தில் பெரிய அளவிலான மழைப்பொழிவுக்கு காரணமான நிகழ்வு ‘ஓரோகிராஃபிக் லிப்ட்’ (Orographic lift) ஆகும். அந்த பகுதியில் ஏற்கனவே உள்ள “மழை மேகங்களை” வெப்பக்காற்று அலைகள் மேலே தள்ளும், அப்போது அவை அதிக உயரத்தை அடையும் போது, மேகங்களுக்குள் இருக்கும் நீர்த்துளிகள் பெரியதாகும் மேலும் புதியவையும் உருவாகும். இந்த மேகங்களுக்குள் ஏற்படும் மின்னல், மழைப்பொழிவை தாமதப்படுத்தும்.
இறுதியில் அடர்ந்த இந்த மேகங்கள் அதிக அளவு ஈரப்பதத்தைத் தக்கவைக்க முடியாமல் வெடிக்கின்றன. இதன் விளைவாக கீழே உள்ள புவியியல் பகுதியில் பெருமழை பெய்து, மிகக் குறுகிய காலத்தில் நீர்நிலைகள் நிரம்பி வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மலைப்பகுதிகளில் பொதுவாக மேகவெடிப்பு நிகழ்வுகள் அதிகமாக நடைபெறும், ஏனெனில் ஈரப்பதம் நிறைந்த காற்று விரைவாக மேலே உயரும் வகையில் மலைச் சரிவுகள் வாகையாக அமைந்துள்ளன.
இவ்வகை மேகவெடிப்புகளை கணிப்பதற்கு டாப்ளர்-ரேடார் கட்டமைப்புகள் உதவும், அவற்றை இமயமலை பகுதிகளிலும் இன்னும் பிற பகுதிகளிலும் அமைத்து கண்காணிப்பதன் மூலம் மேகவெடிப்புகள் குறித்து முன்னரே அறிந்துகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
காலநிலை மாற்றம் இயற்கை சீற்றங்களை அதிகரிக்கவும், தீவிரமாக்கவும், கணிக்கமுடியாமலும் செய்கிறது, அதனை எதிர்கொண்டு நம்மை தகவமைத்துக்கொள்ள தயாராகவேண்டும்.
- கோ.சுந்தர்ராஜன்