வாங்கு…தூக்கியெறி…மீண்டும் வாங்கு!

தற்செயலாய் ஒரு காணொளியை எனது அலைபேசியில் காண நேரிட்டது. அது ஒரு பெரிய கடலாமை. அதன் மூக்கில் ஏதோ ஒரு பொருள் விரல் நுனியளவிற்கு துருத்திக்கொண்டிருக்கிறது. அதனை குரடு போன்ற கருவியால் ஒருவர் பற்றி இழுக்கிறார். ஆனால் அது கொஞ் சமும் அசைந்து கொடுக்கவில்லை. வலியால் புழுவாய் நெளிகிறது அந்த ஆமை. மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாய் அதை அசைத்து அசைத்து தன் முழுப்பலத்தையும் பயன்படுத்தி இழுக்கிறார் அந்த நபர். அதன் மூக்குவழியே பீறிட்டு வழிகிறது இரத்தம். ஆனால் அந்தப் பொருள் மட்டும் அசைந்து கொடுக்கவில்லை. பிள்ளையைப் பெற்றெடுக்க முக்கி முனகும் தாயைப்போலத் துடிதுடிக்கிறது ஆமை. அதன் முகபாவனைகளில் வெளிப்படும் வேதனை, எந்த மனிதனையும் கசக்கிப் பிழியக்கூடியது. ஆனால் அந்தக் காட்சி அதோடு முடிந்துவிடவில்லை. தொடர்ந்து இன்னும் தன் முழு உடல் பலத்தையும் கைகளில் கொண்டுவந்து துருத்திக்கொண்டிருக்கும் பொருளை இழுக்கிறார் அந்த நபர். வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான உச்சகட்ட வேதனையின் முடிவில் அந்தப் பொருளைப் பெற்றெடுக்கிறது ஆமை. மிகவும்
சிதைவடைந்திருந்த அது ஒரு பிளாஸ்டிக் பேனா அல்லது ஸ்ட்ராவாக இருக்கக்கூடும். யாரோ ஒருவர் அதை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமாலோ தூக்கியெறிந்திருக்க வேண்டும். அது நமது பலஅடுக்கு பாரம்பரிய குப்பை மேலாண்மை(!) நிலைகளைக் கடந்து கடலையும் பின் ஆமையின் சுவாச மண்டலத்தையும் அடைந்திருக்க வேண்டும். பார்க்க சகிக்கவில்லை அதன் வலி. அப்படியே தலைசாய்ந்து என் சட்டைப் பையைப் பார்க்கிறேன். நான் “கெத்து”க்காய் வாங்கிச் சொருகியிருக்கும் பேனா இப்போது எனக்கு அருவருப்பாய்த் தெரிகிறது.

கொஞ்சம் பின்னோக்கி சிந்திக்கிறேன்.

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை. அது மை நிரப்பும் பேனாக்களின் காலம். எனக்கோ அல்லது என்னுடன் பயின்ற யாருக்கும் ஒரே நேரத்தில் ஒரு பேனாவிற்குமேல் இருந்ததில்லை (இதற்கும் அவர்களின் பெற்றோரின் வருமானத்துக்கும் படித்த பள்ளிக்கும் அக்காலத்தில் தொடர்பில்லை). அப்போதெல்லாம் ஒரு பேனாவை எழுதி முடித்துவிட்டு தூக்கியெறிய வேண்டியதில்லை. திரும்பத்திரும்ப மைநிரப்பி பலநூறு முறை பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதிலும் சில மாணவர்கள் தம் பெற்றோரோ அல்லது அண்ணனோ அக்காவோ முன்பு பயன்படுத்திய பேனாக்களைக்கூட பொக்கிஷமாய் எடுத்து வருவதுண்டு. எவ்வளவு பழசோ அவ்வளவு மதிப்பு அப்பேனாக்களுக்கு இருந்தது.

“மேட் இன் சைனா”வாக இருந்தாலும் இம்மண்ணில் ஒரு சூழல் தாக்கத்தை தணித்த பெருமை அப்போதைய “ஹீரோப் பென்”களுக்கு உண்டு. தம் உரிமையாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் தொடர்ந்து தம்மை பயன்படுத்துபவர்களுக்காய் ஓயாமல் பல்லாண்டுகள் உழைத்தவை அவை. உடைந்து போனாலும் அவற்றைச் சரிசெய்து கொள்ள ஊரெங்கும் பழுதுபார்க்கும் கடைகள் இருந்தன. ஒரு கையடக்க கண்ணாடி பாட்டிலில் கிடைக்கும் மையை வாங்கி வைத்துக்கொண்டால் பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை வரும். ஒரு பேனாவைத் தூக்கி எறிவது அத்தனை எளிதான ஒன்றாக அப்போது இருக்கவில்லை. இந்த அனுபவம் உங்களில் பலருக்கும் இருக்கக்கூடும்.
நான் சொன்ன “அப்போதுக்கும் – இப்போதுக்குமாய்” ஒரு 20 வருட இடைவெளி இருக்கும். இப்போது எங்கள் வீட்டை முழுவதும் சோதனையிட்டால் என் இரு மகன்களிடம் இருக்கும் 24 வண்ணப் பேனாக்கள் உட்பட சுமார் 100 “பயன்படுத்தி தூக்கியெறியும்” பேனாக்கள் கிடைக்கக்கூடும். தினமும் எங்கள் வீட்டுக் குப்பையில் சில தலையோ அல்லது குடலோ இல்லாத பேனாக்கள் தூக்கி வீசப்பட்டிருக்கும். இன்னும் சில வருடங்களில் அவர்கள் தங்கள் கல்வியை முடிக்கும்போது சில ஆயிரம் பேனாக்களை அவர்கள் குப்பையில் வீசியிருக்கக்கூடும்.
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் ஆயுளைக்கூட்டியதோ இல்லையோ ஆனால் நாம் வாங்கும் பொருட்களின் ஆயுளை வெகு சொற்பமாய் குறைத்து விட்டது. அதே நேரத்தில், நுகர்வுக் கலாச்சார யுகத்தின் விளம்பர உக்திகள் ஒவ்வொரு நுகர்வோரையும் “அது எவ்வளவு நாள் வரும்ண்ணு கணக்குப்போடாதடா மச்சி ஸ்டைலா இருக்காண்ணு மட்டும் பாரு” என சிலாகிக்க பழக்கியுள்ளது.

நான் குறிப்பிட்டது வெறும் ஒரு பேனாவின் கதையல்ல. வாங்கு -தூக்கியெறி – மீண்டும் வாங்கு என மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு நவீன வாழ்க்கை முறையின் கதை. தனக்கு என்ன தேவையென்ற சிந்தனைத் தெளிவற்ற முடமாக்கப்பட்ட, நுகர்வு வெறியூட்டப்பட்ட ஒரு சமூகத்தின், அதன் மனிதர்களின் கதை. பல நேரங்களில் நாம் வாங்கும் பொருட்களுக்கு நாம் கற்பிக்கும் நியாயம், அந்த பொருட்களின் விலை நம் வாங்கும் திறனைவிட மிக மலிவு என்பதுதான். உதாரணமாக மாநகரத்தின் மின்சார இரயிலில் ஒரு ரூபாய்க்கு விற்கும் பேனாவை ஒரு டஜன் வாங்கும் ஒருவரிடம் “உங்களுக்கு இப்போ ஒரு டஜன் பேனா அவசியமா?” என்றால் அதற்கு அவரின் பதில் “ஆம் எனக்குத் தேவை” என்பதாக இல்லாமல் “12 ரூபாயில இப்போ என்ன கொறஞ் சிடப்போகிறது” என்ற தொனியில்தான் இருக்கக்கூடும். ஆனால் உண்மையில் அத்தனை மலிவானவையா நாம் வாங்கிக்குவிக்கும் பொருட்கள்?

கையில் 500 ரூபாயுடன் ஒரு டீ சர்ட் வாங்க கடைக்குப்போகும் ஒருவர் “500 ரூபாய் டீசர்ட் ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்” என்ற விளம் பரத்தைப் பார்த்து இரண்டு டீ சர்ட்களோடு வெளியேறுகின்றார். நம் தேவை ஒன்றாக இருக்க இலவசங்களும் வியாபார விளம்பர உக்திகளும் நம்மை “ஷாப்பிங் மேனியா”வில் தொபுக்கடீர் என குதிக்க வைக்கின்றன. நம் தேவைகளின் அளவிற்கும், நாம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் தள்ளிச்செல்லும் டிராலிகளின் அளவுக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது? இதை எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? இந்த இடைவெளி நம் சூழலை எப்படிச் சிதைக்கிறது என்றும், இப்பெரும் இடைவெளியால் நம் பூமியின் வளங்கள் எப்படி ஸ்டிரா போட்டு உறிஞ்சப்படுகின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்களா?

ஒரு டீ சர்ட்டின் விலையும் இரண்டு டீ சர்ட்களின் விலையும் எப்போதாவது ஒன்றாக இருக்க முடியுமா?

ஒரு ஒற்றைப் பருத்தி டீ சர்ட்டைத் தயாரிக்க பருத்திப் பயிரை விளைவிப்பதிலிருந்து அதை சாயமேற்றுவது வரை 2700 லிட்டர் தண்ணீர் செலவாகிறது (இந்த தண்ணீர் ஒரு மனிதன் 900 நாட்கள் குடித்து உயிர்வாழ போதுமானது). இந்த தண்ணீரில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு பருத்தி விளைச்சலுக்குப் பயன்படுத்தப்படும் கொடிய பூச்சிக்கொல்லி மருந்துகள் (உலகின் மொத்த பூச்சிக்கொல்லி பயன்பாட்டில் 25% பருத்திப் பயிருக்கு செலவிடப்படுகிறது) மற்றும் டீ சர்ட்டுக்கு கறைநீக்கம் செய்யவும் பின்னர் சாயமேற்றவும் பயன்படுத்தப்படும் கொடிய நச்சுக்களுடன் பக்கத்து நீர்நிலைகளிலேயோ அல்லது நிலத்தடி நீருடனோ கலக்கப்படுகிறது. அதன்பிறகு பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் மட்காத நச்சு நெகிழியால் பொதியப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இப்போது இந்த படிநிலைவரை ஒரு டீ சர்ட் வெளியிட்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவு சுமார் 2.2 கிலோ கிராம். இதன் பிறகு ஒவ்வொரு சலவைக்கும் இஸ்திரிக்கும் அது உட்கொள்ளும் நீரும் மின்சாரமும் இந்த 2700 லிட்டர் நீரையும் 2.2 கிலோகிராம் கார்பன்டை ஆக்ஸைடையும் இன்னும் பலமடங்காக்கும். இதை உற்பத்திச் செய்ய பலவிதமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் கொடிய வேதிப்பொருட்களைக் கையாளும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு நமக்கு ஒருவேளை மலிவானதாகத் தெரிந்தாலும் “இந்த வருஷம் போனவருஷத்தவிட வெயில் அதிகமாயிடிச்சு”ண்ணு நீங்க சொன்னாலோ அல்லது “எங்க போர்ல தண்ணி ஒவ்வொரு வருஷமும் கொறஞ்சிட்டே வருது”ண்ணு சொன்னாலோ அதுக்கு உங்க டீ சர்ட்டும் ஒரு காரணம். இப்போது சொல்லுங்கள் ஒரு டீ சர்ட்டின் விலையும் இரண்டு டீ சர்ட்களின் விலையும் ஒன்றாகுமா?

நாம் துடைத்துத் தூக்கியெறியும் டிஷ்யூ பேப்பர்கள், ஆன்லைன் ஷாப்பிங்கில் அள்ளிக்குவிக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் அவற்றின் விதவிதமான தெர்மாகோல் மற்றும் நெகிழி பேக்கிங்கள், குழந்தைகளுக்காக நாம் வாங்கிக் குவிக்கும் நச்சு பிளாஸ்டிக் பொம்மைகள், “புட் கிரேட்” என்று நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்ளும் பிளாஸ்டிக் சிற்றுண்டி டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், ஹோட்டலில் பார்சல் செய்யும் சாம்பார் கெட்டிச் சட்டினி கவர்கள், காதைக்குடையவோ அல்லது பல்லைக்குத்தவோ வைத்திருக்கும் வஸ்துக்களும், விதவிதமான கிரீம்கள், ஜெல்கள் லோஷன்களும், இரண்டு அல்லது மூன்று சலவைக்குக்கூட வராத டீஷர்ட்டுகள் மற்ற ஆடைகள், அவற்றிற்கு பொருத்தமாய் காலணிகள், வாட்ச்கள், பெல்ட்கள், ஆபரணங்கள், மேலும் கடையில் புதிது புதிதாய் மாடல் மாறமாற நாம் மாற்றிக்கொண்டிருக்கும் செல்ஃப்போன்கள் முதல் டிவிக்கள், கார்கள், நாம் உறிஞ்சு உறிஞ்சு என உறிஞ்சும் மின்சாரம், பெட்ரோல், டீசல், எரிவாயு, மேலும் பாதி தின்று தூக்கியெறியும் பழங்கள், வீணடிக்கும் உணவுப்பொருட்கள் வெற்று கவுரவத்துக்கான கட்டுமானங்கள், அவற்றின் உள் வெளி அலங்காரங்கள், அதற்குச் செலவிடப்படும் பொருட்கள், வீட்டின் தேவையற்ற பாத்திரங்கள் பர்னிச்சர்கள், மற்ற பொருட்கள் அவற்றை பத்திரப்படுத்துவதற்கான அறைகள் பீரோக்கள் என நாம் சேர்த்து வைத்திருக்கும் அத்தனையும் உண்மையில் மலிவானவைதானா?

வெள்ளையும் சொள்ளையுமாய் நாம் உடை உடுத்த சாயப்பட்டறைகளுக்காய் ஒரு நதி படுகொலை செய்யப்பட்டதே, அதையே வாழ்வாதாரமாய் நம்பியிருந்த விவசாயம் மரணித்துப்போனதே அப்போது நாம் வாங்கும் டீசர்ட்டில் அதற்கு விலை கொடுத்தோமா?

நமது ஏர் கண்டிஷனர்கள் உறிஞ்சு உறிஞ்சு என மின்சாரத்தை உறிஞ்ச அனல் அணுமின் நிலையங்களைச் சுற்றிவாழும் மக்கள் தம் மூச்சுக்காற்றுகூட விஷமாகித் திணறுகிறார்களே அவர்களுக்கு நாம் கட்டும் மின்கட்டணத்தில் விலை கொடுத்தோமா? நாம் ஒய்யாரமாய் நடைபோட லெதர் ஷ¨க்களையும் கைப்பைகளையும் உருவாக்கி கொடுக்கும் அந்த மாவட்டத்தின் நஞ்சான நீருக்கு நாம் விலைகொடுத்தோமா? நாம் நுகரும் பெட்ரோலுக்காய் கூட்டம் கூட்டமாய் அழித்தொழிக்கப்பட்ட பூர்வகுடிகளின் உயிரின் விலை உங்களுக்குத் தெரியுமா? நம் கழுத்தில் ஜொலிக்கும் தங்க வைர ஆபரணங்களுக்காய் விலைகொடுத்த சுரங்கத் தொழிலாளர்களைத் தெரியுமா? நம் நாகரீகக் குப்பைகளைக் கையாளும் தொழிலாளர்கள் அதற்குக் கொடுக்கும் விலை என்ன? பெப்சி, கோக் என்ற பெயர்களில் நாம் உறிஞ்சும் விவசாயிகளின் இரத்தம் அத்தனை மலிவா? குளிர் சாதனப்பெட்டியில் 10 நாள் வைத்துவிட்டு “கெட்டுப் போச்சி” என நாம் தூக்கியெறியும் உணவுப்பொருட்கள் விலையற்றவையா? அவற்றின் உற்பத்திக்காய் செலவிடப்பட்ட மனித உழைப்பு, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள் அவற்றின் உற்பத்திச் செலவுகள் அதனால் ஏற்பட்ட மாசுபாடு அவற்றிற்கு நாம் விலைகொடுத்தோமா? நாம் கழிவறைககளில் துடைத்து எறியும் காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்கள் அவ்வளவு மலிவா? தம் நச்சு மூலப்பொருட்களால் உருவாக்கம் பெறும்போதே எண்ணெற்ற சுவாசக் கோளாறுகளையும் தோல் நோய்களையும் தன்னை தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு கொடுத்துவிட்டு நம் கைகளை வந்தடையும் பொருட்கள் அத்தனை மலிவானவையா? தூக்கியெறியப்பட்டு பாதாளச் சாக்கடைகளையும் கால்வாய்களையும் அடைத்துக்கொண்டு பெரும் அழிவுகளுக்குத் துணைபோகும் பாலிதீன் பைகள் அத்தனை மலிவா? ஆங்காங்கே குப்பைகளோடு குப்பைகளாய் எரிக்கப்பட்டு சாதாரண ஒவ்வாமை முதல் கொடிய புற்றுநோய்கள் வரை உருவாக்கவல்ல நச்சு வாயுக்களை வெளியிடும் எலெக்ட்ரானிக் பொருட்கள், பேட்டரிகள் அத்தனை மலிவா?

இல்லை இல்லவே இல்லை!

அவற்றின் விலை நம்மால் கொடுக்க இயலாதது! அது நம் கற்பனைகளுக்கு அப்பாற் பட்டது! அதை நம்மால் ஈடுசெய்யவே இயலாது.

ஆனால் அந்த விலையை நம்மால் கொடுக்க முடியாது போனால், நம் பிள்ளைகள் கொடுப் பார்கள். அப்போது அந்த கடலாமையின் மரண ஓலத்தைப்போல் நிராதரவான பலகோடி உயிர்களின் கதறலுக்கு நீதி கிடைக்கக்கூடும்.

ஆனால் அதற்காய் நாம் கற்காலத்திற்கு சென்று சிக்கிமுக்கிக் கற்களை உரசவேண்டியதில்லை. நம் வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச்சின்ன மாற்றங்கள் இப்பிரபஞ்சத்தின் ஒரு குட்டி கோளத்தில் வாழும் அரிய ஓரிட வாழ்வியான நம் தலைமுறையின் நீளத்தைக் கொஞ்சம் அதிகரிக்கக்கூடும். நம் அடுத்த தலைமுறையின் மீதான சூழல் அழுத்தத்தைக் கொஞ்சம் குறைக்கும். அவ்வளவுதான்.

ஒவ்வொரு மனிதரும் தம் வீட்டுக் குப்பைகளைக் கிளற வேண்டிய தருணமிது. நாம் வாங்கிக்குவிக்கும் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன. அவை எப்படி உற்பத்தியாகின்றன. தூக்கியெறியப்பட்டபின் அவை எங்கே செல்கின்றன. செல்லும் வழியிலும் சேரும் இடத்திலும் அவை தாம் அழியும் வரை நமக்கும் நம் மண்ணுக்கும் என்ன செய்யப்போகின்றன என்பதை ஒவ்வொரு முறை ஒரு பொருளை வாங்க முடிவு செய்யும்போதும் சிந்தித்துப்பார்க்க்க வேண்டும்.

நம் வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச்சின்ன மாற்றங்கள் இப்பிரபஞ்சத்தின் ஒரு குட்டி கோளத்தில் வாழும் அரிய ஓரிட வாழ்வியான நம் தலைமுறையின் நீளத்தைக் கொஞ்சம் அதிகரிக்கக்கூடும். நம் அடுத்த தலைமுறையின் மீதான சூழல் அழுத்தத்தைக் கொஞ்சம் குறைக்கும்.

ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் மாற்றத்தை அரசால்தான் செய்ய முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதுவரை நாம் என்ன செய்துகொண்டிருக்கப் போகிறோம்? “மொதல்ல அவங்கள மூடச்சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு ஆசுவாசமாய் ஷாப்பிங் பண்ணிக்கொண்டிருக்க இது செவ்வாய் கிரக வாசிகளின் வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயமல்ல. நம் அன்புக்குரியவர்களுக்கு நாம் எப்படிப்பட்ட பூமியை விட்டுச் செல்லப் போகிறோம். சுத்தமான தேசம் விளக்குமாறைக் கையில் பிடித்து ரோட்டில் நின்றுகொண்டு செல்பி எடுக்கும் மனிதர்களால் கட்டப்படுவதில்லை. தூய்மை குப்பை மேலாண்மையிலல்ல குப்பை யில்லாமையில் பிறக்கிறது. டிஷ்யூ பேப்பர் இல்லாமல் நம்மால் துடைக்க முடியும். தண்ணீர் தெளிக்காது வாசல் பெருக்க முடியும். கேரி பேக் இல்லாமல் சாமான் வாங்க முடியும். தெர்மாகோல் தட்டு இல்லாமல் விருந்து நடத்த முடியும். கிழிந்த ஆடைகளைத் தைக்க முடியும். அறுந்த செருப்புகளைச் சரி செய்துகொள்ள முடியும். சில இன்ச் கம்மியானாலும்கூட எல்லா டிவியிலும் படம் பார்க்கமுடியும். தண்ணீர் பாட்டில் வாங்காமல் பயணம் செய்ய முடியும். ஒரு ஆப்ஷன் கம்மியானாலும் எல்லா போனிலும் பேசமுடியும். ஒரு வெள்ளைக் காகிதத்தில் இரு புறமும் எழுத முடியும். டீக்கடையில் பேப்பர் கப் இல்லையென்றாலும் டீ குடிக்க முடியும். பெப்சி இல்லாமல் பிரியாணி சாப்பிட முடியும். ஸ்டிரா இல்லாமல் ஜூஸ் குடிக்க முடியும், நான்ஸ்டிக் தவா இல்லாமல் தோசை சுட முடியும். டயபர் இல்லாமலே குழந்தை வளர்க்க முடியும். சில நேரங்களில் நம் கால்களால் நடந்துகூட பல இடங்களுக்குச் செல்ல முடியும். நுகர்வைக் குறைப்போம்! ஆய்ந்து அறிந்து நுகர்ந்த பொருட்களைப் நீண்ட நாட்களுக்குப் பராமரித்துப் பாதுகாப்போம். நிச்சயம் நம்மால் இது முடியும்.

ஜீயோ டாமின். ம

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments