ராமாயண நிலத்தில் நடக்கும் கார்ப்பரேட் யுத்தம்!

விவேக் கணநாதன்

(யாருக்காக பாதுக்காக்கப்படுகின்றன புலிகள்?  என்கிற கட்டுரையின் இரண்டாம் பாகம் இந்த கட்டுரை)

இந்தியக்காடுகளில் புலிப்பாதுகாப்பு என்கிற பெயரில் நடப்பது புலி ‘பாதுகாப்பு’ மட்டுமே அல்ல. இந்த ஒவ்வொரு செயலுக்கு பின்பும் மிகப்பெரும் அரசியல் இருக்கிறது. இந்த புலி பாதுகாப்புக்கு பின்னால் மிகப்பெரிய பெருநிறுவனங்களின் கைகளும், லாப வெறியும் இருக்கிறது. வனம் என்பதே மக்கள் இருக்கக்கூடாத பகுதி, அங்கு விலங்குகள் மட்டும் தான் வாழவேண்டும் என்கிற லாபகரமான பிரச்சாரம் உள்ளது. அந்த பிரச்சாரத்திற்கு வலுசேர்ப்பதற்காக பல ஆய்வுகள் செய்யப்பட்டு ஆவணம் என்கிற பெயரில் வெளியிடப்படுகிறது. இந்திய நினைவுகளில் புலிக்கு இருக்கும் முக்கியத்துவத்தின் மீது கட்டமைக்கப்படும் புனிதத்தின் வழியாக இந்திய வனங்களில் பெரும்கொள்ளைகள் நடைபெற்றுள்ளன; நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்திருக்கும் சில செயல்கள் அவற்றை உறுதி செய்கின்றன. கடந்த மார்ச் மாதம் பெருநிறுவனங்களின் திட்டங்களுக்கான அனுமதியை ‘விரைந்து’ செய்துகொடுக்குமாறு பிரதமர் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார். அதே மார்ச் மாதத்தின் இறுதியில் 28ம் தேதி, மாநிலங்களில் உள்ள புலிகள் சரகங்களுக்கு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமானது கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் இந்த புலி சரகங்களில் நில பட்டா கோரி விண்ணப்பிக்கும் பழங்குடிகளுக்கு பட்டா வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ‘பல நூறு ஆண்டுகளாக இந்திய அரசுகள் பழங்குடிகளுக்கு செய்த பாவத்திற்கான பதிலீடு’ என்ற பெயரில் முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த வன உரிமைச்சட்டம் 2006 ன் உரிமையை பறிக்கிறது என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. எதற்கு இந்த உத்தரவு? பழங்குடி இன மக்களை வனத்திலிருந்து பிரிப்பதன் மூலமே புலிகளை பாதுகாக்க முடியும் என்று அரசு நம்புகிறதா? அல்லது பழங்குடியின மக்களுக்கு அவர்களுக்கு உரிமை உள்ள நிலத்தை பட்டா கொடுத்து அங்கீகரித்துவிட்டால் பெருநிறுவனங்களுக்கு நிலத்தைக் கொடுத்து வளங்களை திறந்துவிடும் போது பழங்குடியின மக்களின் நியாயமான எதிர்ப்பு வரும் என்பதற்காகவா? இதில் முதல் கேள்விக்கான பதில் பல ஆய்வாளர்களால் வெவ்வேறு வடிவத்தில் பேசப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் வாழ்வியல் முறையே புலிகளை அழிக்கிறது என பக்கம் பக்கமாய் இங்கே எழுதிக்குவிக்கப்படுகின்றன. இந்தக் கருத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆவணப்படங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு சிறப்பு காட்சிகளாக போட்டுக்காட்டப்படுகின்றன. இந்திய அரசாங்கம் அத்தகைய ஆவணப் படங்களுக்கு அரசு விருது அளித்து கௌரவிக்கிறது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த இந்திய தலைமைக் கணக்காளரின் (சி.ஏ.ஜி) அறிக்கை இந்திய வனங்களில் நடக்கும் அத்துமீறல்களை தோலுரித்துக் காட்டியுள்ளது. அறிக்கையின்
படி, 45 நாட்கள் மட்டுமே செய்த ஆய்வில் சுமார் 1380 வன உயிர்கள் சாலை விபத்தில் இறந்திருக்கின்றன. சி.ஏ.ஜி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 6 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மட்டும் 51 வன உல்லாச விடுதிகள் / நட்சத்திர உணவக விடுதிகள், 50 வனவீடுகள் உள்ளன. இவற்றில் 44 உல்லாச விடுதிகள், 15 வனவீடுகள் அனுமதி இல்லாமல் வனச்சட்டங்களை மீறி கட்டப்பட்டுள்ளன. மேலும், வனப்பகுதிக்குள் ஆய்வு செய்வதற்காக 129 அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 9 ஆய்வுகளுக்கு மட்டுமே முடிவு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள எந்த ஆய்வுக்கும் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஒருபக்கம் இப்படி வனப்பகுதிகளுக்குள் உல்லாச விடுதிகள் பெருகுகின்றன. மறுபக்கம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் அளவை அதிகரித்துக் கொண்டே செல்லும் அரசு, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை. தமிழகத்தின் சத்தியமங்கலம் காடுகள் ஒரு சிறந்த உதாரணம். மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் சத்தியமங்கலம் வனக்கோட்டம் தமிழகத்திலேயே மிகப்பெரியது. 2008-ம் ஆண்டு இது வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்படுகிறது. பின்னர் 2011-ல் சரணாலயப்பகுதியாக விரிவுபடுத்தப்பட்டு அது முழுவதும் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காப்பகத்தின் மொத்த பரப்பு 1,40,840.541 ஹெக்டேர் நிலம் ஆகும். இதில் புலிகள் வாழும் மையப்பகுதியாக 79,349.331 ஹெக்டேர் நிலமும், புலிகளின் வெளிநடமாட்டத்திற்காக 61,491.21 ஹெக்டேர் எனவும் பிரித்துள்ளனர். காப்பகத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் கர்நாடக மாநில எல்லை அதாவது பந்திப்பூர், பிளிகிரி ரங்கசாமி மலையும் நகர்ஹோலே புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. தெற்கே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது . சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குறித்த அறிவிப்பானது, 2006- ல் திருத்தப்பட்ட வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகள் நிபுணர்குழுவை அமைத்தல், அதன் பணிகளை வரையறுத்தல், அறிவியல் பூர்வமான தகவல்கள் சேகரித்தல், விஞ்ஞானப்பூர்வமான நிபுணர் குழுவை அமைத்து ஆராய்தல், தேவைப்படும் பட்சத்தில் மறுகுடியேற்றம் தொடர்பான விவகாரங்களை முடிவுசெய்தல், மிக மிக முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்று வரையறுக்க வேண்டிய பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் மற்றும் காட்டில் வாழும் மற்ற பிரிவு மக்களின் ஒப்புதலைப் பெறுதல் ஆகியவற்றை 2006ம் ஆண்டு வன உயிர்ச்சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், சத்தியமங்கலத்தில் இந்த நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை. 2006ம் ஆண்டு சட்டத்தின் படி, பாதிக்கப்பட வுள்ள பகுதிகளிலுள்ள மக்களின் நிலஉரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டன என்று கிராமசபைகள் தீர்மானங்கள் பெறப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், சத்தியமங்கலத்தில் உள்ள அப்பகுதியில் இருக்கும் அனைத்து பஞ் சாயத்துக்களும் இந்த புலிகள் பாதுகாப்பிற்கு எதிராக தீர்மானம் இயற்றியுள்ளன. 2012ம் ஆண்டு ஜூன் மாதம் புலிகள் பாது காப்பிற்காக புலிகளுக்கான காப்புக்காடுகளில் மையப் பகுதியைச் சுற்றி, சுற்றுப்பகுதிகளை அமைக்க வேண்டும் என்று சொன்ன உச்சநீதி மன்றம், சுற்றுலாவிற்கு தடை விதித்தது. பின்னர், 2012 அக்டோபரில் சுற்றுலாவிற்கான தடை மட்டும் நீக்கப்பட்டது. புலி காப்புக்காடுகளில் உள்ள மையப்பகுதியில் 20% வரை சுற்றுலாவை அனுமதித்தது. சுற்றுலாவுக்காக மனிதர்களை அனுமதிக்கும் போது அந்த நிலத்தின் ஆதிக்குடிகளை ஏன் விரட்ட வேண்டும்? சுற்றுலா இல்லாவிட்டால் ‘வேட்டை’ அதிகரித்துவிடும் என்று அச்சப்படுகிற அரசின் பலநூறு கோடி செலவுகளால் ஏன் வேட்டைகளைத் தடுக்க முடியவில்லை? பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் அந்த மண்ணுக்கு சொந்தமான பழங்குடிகளையே ஏன் அதற்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது? என்ற கேள்விகளுக்கு பதிலாக கள்ள மௌனம் மட்டுமே கிடைக்கும். புலிகள் பாதுகாப்பிற்காக வனங்களை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பதற்கு முக்கியமான காரணமே உயிர்ச்சூழல், நீர் ஆதாரங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காகத்தான் புலி வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. ஆனால், பழங்குடியின மக்களுக்கு பட்டா அனுமதி மறுக்கும் அரசு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் என்ன செய்கிறது? இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதை யாருக்காக பாது காக்கப்படுகின்றன புலிகள்? கட்டுரையில் பார்த்தோம். ஆனால், அந்த புலிகளில் சுமார் 35% சரணாலயங்களிலோ, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலோ இல்லை. வீடில்லாத புலிகளாக அவை திரிந்து கொண்டிருக்கின்றன. இப்படி திரிந்து அலையும் புலிகள் தான் பல சாலை விபத்துக்களில் இறந்து போகின்றன. வன அதிகாரிகள் சாலை விபத்துக்களால் நடக்கும் வன உயிர் மரணங்களைப் பற்றி மிகக்குறைவான பதிவையே காட்டுகின்றனர். ஆனால், சி.ஏ.ஜி அறிக்கை சாலை விபத்துக்களால் மிக அதிகமான வன உயிர்கள் உயிரிழப்பதை உறுதி செய்கிறது. இங்கு ராமாயண கதையிலும், இந்துக்களின் நம்பிக்கையிலும் மிக முக்கியப்பங்கு வகிக்கும் தண்டகாரண்ய காடுகளில் நடக்கும் கார்ப்பரேட் போர் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. மத்திய இந்தியாவின் காடுகள் நிறைந்த பகுதியான மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, தெலங்கானா, ஆந்திரம் பகுதிகளின் காடுகளில் உள்ள கனிம வளங்களைக் குறிவைத்து நடக்கும் யுத்தம் இயற்கை வளங்களை அழித்து, அங்கிருக்கும் மக்களையும் விரட்டியடித்து, மாவோயிஸ்ட்களையும், நக்சலைட்டுகளையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கியமான வனப் பகுதிகளுக்குள் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் போடப்படுகின்றன. ஜார்கண்டின் பலாமு காப்புக்காடு வனப்பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தில் அணைகட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் கென் – உத்திரப்பிரதேசத்தின் பெத்வா ஆகிய இரு நதிகளையும் இணைப்பதற்காக 61 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட புலி வனத்தின் மையப்பகுதி பயன்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தால் சுமார் 200 சதுர கி.மீ. புலி பாதுகாப்பு சரகப்பகுதிகள் பாதிக்கப்படும் என அச்சம் உள்ளது. பலகாலமாக அரசியல், சூழலியல் காரணங்களுக்காக முடங்கிக்கிடந்த இத்திட்டம் 2018 நடக்க இருக்கும் மத்தியப்பிரதேச தேர்தலை முன்வைத்து தற்போது உயிர் பெற்றுள்ளது. விரைவில் மோடி கொடியசைத்து திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதே காப்புக்காடுகளை மையப்படுத்தி மற்றுமொரு மாபெரும் வணிகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ரியோ டிண்டோ என்கிற பன்னாட்டு வைர உற்பத்தி நிறுவனம் மத்தியப் பிரதேசத்தின் பந்தர் பகுதியில் ’வைரம்’ இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டது. இதற்காக, 2004ம் ஆண்டே மத்தியப்பிரதேச அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையில், பன்னா – சகதாபூர் மாவட்டங்களின் புலிகள் காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள 971 ஹெக்டேர் பகுதியையும் சேர்த்து வைரம் எடுக்கத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, 5.37 கோடி கிம்பெர்லைட் தாது பல கோடி டன் மண்ணிலிருந்து வெட்டப்படும். அதிலிருந்து, 27 – 34.3 மில்லியன் கேரட் வைரம் கிடைக்கும். இந்தத்திட்டம் மூலம் 2,052 கோடி ராயல்டியாகவும், 208 கோடி வரியாகவும் கிடைக்கும். இதற்காக, 5 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு அப்பகுதி காயடிக்கப்படும். பழங்குடிகள் கிலோ கணக்கில் நெல்லிக்காய் பொறுக்குவதால் புலிகள் சாகின்றன என்று சொல்லும் அரசு, இந்த ‘அற்புதமான’ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், கடுமையான எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இறுதியாக 13 வருடங்களுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் திட்டத்தைவிட்டு வெளியேறுவதாக ரியோ டிண்டோ அறிவித்தது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான இந்த ரியோ டிண்டோ ஆப்பிரிக்காவின் கினியா நாட்டில் மோசடி செய்திருப்பதாக அதிதீவிரக்குற்றங்களுக்கான விசாரணைக் குழு விசாரணை செய்யத் துவங்கியிருக்கிறது என்பது இந்தவராம் வெளியான செய்தி! ரியோ டிண்டோ வெளியேறிவிட்ட நிலையில், இந்தத்திட்டத்தை மற்ற நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி குழுவின் தலைவர் பிரவீன்சங்கர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆக, பூதம் இன்னும் ஓயவில்லை. சரியான ஜாடியைத் தேடிச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில்தான் இந்திராவதி காப்புக்காடு உள்ளது. இந்திராவதி என்கிற நதி இங்குதான் பிறப்பெடுக்கிறது என்பதால் இப்பெயர் வந்துள்ளது. இந்தப்பகுதியில், இரும்புத்தாதுகள் உற்பத்தி செய்யும் சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களால் அங்கேயிருக்கும் நீர் ஆதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளகாக அப்பகுதி மக்கள் கடுமையான போராட்டங்களை செய்து வருகிறார்கள். தண்டேவாடாவில் உற்பத்தியாகி, பஸ்தார் பகுதி வரை நீளும் இந்திராவதி நதி சமீப வருடங்களில் சிறுத்துப்போய் சுருங்கிவிட்டது. அங்கேயிருக்கும் நீர் செந்நிறமாக இருக்கிறது. குடிக்கின்ற நீர் ஆதாரத்தைக் கெடுத்தது மட்டுமில்லாமல் அப்பகுதியின் பூர்வகுடிகளுக்கு வேலை தருவதாக உறுதியளித்துத் தொடங்கப் பட்ட சுரங்கங்கள் வேலை தராமலும் ஏமாற்றியுள்ளனர். நதி அழிந்ததற்கும், நீர் கெட்டுப்போனதற்கும் காரணம் சுரங்கத்தொழில் தான் என்று அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. சுரங்கத்தொழில் என்கிற பெயரில் நடக்கும் கொள்ளைகளுக்கு இது உதாரணம். இதே தண்டேவாடா மாவட்டத்தில் தான் புலி பாதுகாப்புத்திட்டத்தின் ஆரம்ப காலங்களில் தொடங்கப்பட்ட இந்திராவதி தேசியப் பூங்கா உள்ளது. பல கோடி ரூபாய் செலவிட்டப்பிறகும் மிக நீண்ட காலமாகவே இப்பகுதியில், புலி வளர்ச்சி குறைவாக இருப்பதாக அரசே அறிக்கை அளித்துள்ளது. சூழலியல் பிரச்சனைகளால் தான் இந்தியாவின் வளர்ச்சித் தடை படுவதாகவும், இல்லாவிட்டால் அடித்து நொறுக்கி முன்னேறலாம் என்று நாம் நம்பவைக்கப்படுகிறோம். ஆனால், இந்தியாவில் வளர்ச்சித்திட்டங்களுக்காக ஒவ்வொரு நாளும் 333 ஏக்கர் காட்டின் நிலம் இழக்கப்படுகிறது என்கிறார் சுற்றுச்சூழல் சட்டநிபுணர் ரித்விக் தத்தா. இந்தியா சுதந்திரம் அடைந்த போது மொத்த நிலப்பகுதியில் சுமார் 30% நிலம் காடுகளாக இருந்தது. இடைப்பட்ட காலத்தில் 11% சதவீதமாக குறைந்தது. தற்போது, மீண்டும் இந்தியா காட்டுப்பரப்பை அதிகரித்திருப்பதாகவும், மொத்த நிலப்பரப்பில் காட்டுப்பரப்பு 24.12 சதவீதம் காடு மற்றும் மரங்கள் சூழ் பகுதி என 2015ல் அப்போதைய பாஜக சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகர் அறிக்கை அளித்தார். ஆனால், இது தமிழ்நாடு, கேரளா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். மற்ற மாநிலங்களில் கடுமையான வீழ்ச்சி இருக்கிறது. காட்டுப்பகுதியை அதிகரித்துவிட்டோம் என்று அரசு சொல்கிறது. ஆனால், அதில் அடர்ந்த வனங்களின் அளவு 2.61 சதவீதம் மட்டுமே. 9.59% பகுதி ஓரளவு அடர்ந்த வனங்களாகாவும், 9.14% திறந்தவெளி காடுகள் ஆகவும் உள்ளன. அடந்த வனங்களின் அளவு குறைந்து, திறந்த வெளி காடுகளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த வன எல்லைப்பகுதிகள் காடுகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படி மாற்றப்படும் நிலங்களில் பல காப்புக்காடுகளாக அறிவிக்கப்படுகின்றன. பின்னர், கனிம உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகின்றன. சத்தியமங்கலம் ஒரு எளிய உதாரணம். இப்படி இந்திய வனப் பகுதியில் 2,690 வனகிராமங்களும், வனத்தை வாழ்வுக்காகப் பயன்படுத்தும் 1,70,379 கிராமங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் பலகோடி உயிர்கள் மெல்ல வதைபட்டு வருகின்றன. மொட்டைக் காடுகளை உற்பத்தி செய்வதற்காக பழங்குடிகளை விரட்டும் அரசின் எதிர்கால திட்டம் காடுகளை தனியார்மயமாக்குவது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments