தலித் கழிவெளி மீனவர்கள் சந்திக்கும் வாழ்வியல் மாறுதல்கள்.

புதுப்பட்டினம் காப்புக்காடுகள் பகுதியில் இறால் சேகரிக்கும் கோமதி

கடலோரப்பகுதகளில் வாழும் தலித்துகள் மற்றும் பழங்குடி மக்கள் பெருமளவில் மீன்பிடிச் சார்ந்த தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். கடலோரங்களில் ஆறுகளால் கொண்டு சேர்க்கப்படும் படிவுகளால் விவசாயம் செழித்திருந்த காலங்களில் விவசாயத்தை முதன்மையாகவும், விவசாய வேலை இல்லாத நாட்களில்  மீன்பிடி சார்ந்த பிற தொழில்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடலோரப்பகுதிகளில் இறால் பண்ணைகள், பிற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தடுப்பணைகளால் நன்னீர் ஆதாரங்களில் ஏற்பட்டுள்ள தாக்கமும், நிலப்பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள கணிசமான மாற்றங்களும் விவசாயம் சார்ந்த தொழில்களைப் பெருமளவில் பாதித்துள்ளது. இது நிலமற்ற(பெரும்பாலும்) தலித் மற்றும் பழங்குடி மக்கள் விவசாயம் அல்லாத பிற வேலைகளை நம்பியிருக்க வேண்டிய சூழலை உண்டாக்கியுள்ளது.

மயிலாடுதுறை உட்பட நிலப்பயன்பாடு குறித்து தொலைநுண்ணுணர்வு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், கடந்த 2௦18 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தின் 1990 – 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில்   விவசாய நிலம் 26.22% குறைந்துள்ளது. இதேவேளையில், இறால் பண்ணைகள் அல்லது உப்பளங்கள் 7.55% உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் மீனவமக்களுக்குத் தேவையான அன்றாட வேலைகளில் ஈடுபடுவது தொடங்கி, மீன்களை  கருவாடாக்கி உலர்த்துவதில் உடலுழைப்புத் தொழிலாளராக ஈடுபடுவது வரை, மீன்பிடி சார்ந்த பலதரப்பட்ட பணிகளில் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் தலித் மற்றும் பழங்குடி மக்கள் ஈடுபட்டு  வருகின்றனர்.  குறிப்பாக, கடல் மீன்பிடியில் ஈடுபடும் குடும்பங்களில் 5% தலித் மற்றும் பழங்குடி குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர் என CMFRI-யின் மீனவ மக்கள் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.

கடலோரப்பகுதியில் வாழும் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீன்பிடிச் சார்ந்த தொழில்களில் மட்டுமல்லாது, பல தலைமுறைகளாக பாரம்பரியமாக கழிவெளிகளில் மீனும், இறாலும் பிடித்து வரும் கழிவெளி மீனவர்களாகவும் உள்ளனர். நிலவுடமை அற்ற கழிவெளி மீனவர்களின் ஆரோக்கியமான உணவுக்கும், வாழ்வியலுக்கும் இந்த கழிவெளிகள் சுதந்திரமான வெளிகளாக விளங்கியுள்ளன. ஆனால், இப்போது பாரம்பரியமாக கழிவெளிகளைச் சார்ந்து வாழும் மக்கள் கட்டிடத்தொழில் போன்ற பிற தொழில்களை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கழிவெளிகள் மீதான இறால் பண்ணைகளின் தாக்கமும், கழிவெளிகளில் மீன்பிடிக்கும் தலித் மற்றும் பழங்குடிகள் குறித்து மீன்வளத்துறையின் கொள்கைகள் கவனம் செலுத்தாதும், காலநிலை மாற்றத்தின் தாக்கமுமே காரணங்களாக உள்ளது.

புதுப்பட்டினம் காப்புக்காடுகள் பகுதியில் இறால் சேகரிக்கும் கோமதி

1986-ஆம் ஆண்டுக்கு முன்புவரை, கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் பழையாறை சுற்றியுள்ள தலித் குடியிருப்புகளைச் சார்ந்த மக்கள் அருகில் உள்ள கொட்டாய்மேடு, மடவாமேடு, கூழையார், பழையார் ஆகிய மீனவ கிராமங்களில் மீன்பிடி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 1986 ஆம் ஆண்டுக்கு பழையார் கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டப் பிறகு அதிகளவில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மற்றும் பிற சமூகத்தினர் பணிபுரியும் பகுதியாக மாறியுள்ளது.

பழையார் மீன்பிடித்துறைமுகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வரும்  (வயது 48), பழையாரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாண்டவன்குளம் கிராமத்தின் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். கோமதி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.  இவரைப் போன்று  இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாண்டவன்குளம் மட்டுமல்லாமது, பழையார் சுற்றுவட்டாரத்தில் உள்ள மகேந்திரபள்ளி, அளக்குடி, காட்டூர், புளியந்துறை, நல்லூர், தற்காஸ், சல்லிக்குளம், அண்ணா நகர், புதுத்தெரு, சுந்தரம்பிள்ளைத் தெரு,  வ.வூ.சி நகர், சுந்தரம் நகர், சித்திநாதபுரம், பழைய பாளையம்,  வாடி ஆகிய ஊர்களைச் சேர்ந்தப் பெண்கள், குறிப்பாக தலித் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் காயவைத்தல் மற்றும் மீன்பிடி சார்ந்த பிற பணியிலும் இத்துறைமுகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களின் வாழ்வு பழையார் துறைமுகத்தோடு ஒன்றியுள்ளது குறித்து கூறிய கோமதி, “பழையார் நம்பித்தான் குழு எடுக்கிறோம்,  பழையார் நம்பித்தான் கல்யாணம் பண்ணுகிறோம், பழையார் நம்பித்தான் வாழ்க்கையே வாழ்கிறோம். நான் இந்த ஊரில் பிறந்து, இங்கேயே தான் திருமணம் செய்து கொண்டேன். அப்போதெல்லாம் நடவு, மல்லாகொட்டை , பயிறு , உளுந்து விதைப்பது என எதாவது வேலை செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால், இப்போது அந்த பேச்சுகே  இடமில்லை.  ஒன்று மழை அதிகமாகப் பெய்யும், இல்லாவிட்டால் மழை இல்லாது பயிர் கருகி விடும்”. என்கிறார்.

கோமதியைப் போன்று தாண்டவன்குளம், புளியந்துறை, தற்காஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து மீன்காய வைக்கும் பணியில் ஈடுபடும் பலரும் கொள்ளிடம் ஆற்றின் பின்னங்கழி ஆறுகள் மற்றும் கழிவெளிகளிலும் (புதுப்பட்டினம் காப்புக்காடுகள்) பலதலைமுறைகளாக  இறால், நண்டு மற்றும் மீன்களை பிடித்துவரும்  பாரம்பரிய சூழியல் சார் சமூகத்தைச் சார்ந்த கழிவெளி மீனவர்கள் ஆகும். இவர்கள் தலித் மற்றும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆவார்.

கோமதி கூறுகையில், ”நான் 15 வயது முதலே ஆற்றில் இறால் தடவி வருகிறேன். என் தாயார், மாமியார் என அனைவருமே ஆற்றில் இறால் தடவி வந்தனர்.  முன்பு 70-80 என்பது வயது வரை இறால் தடவிய பலரும் தற்போது உயிருடன் இல்லை. கன்னியம்மா, குப்பம்மாள், சின்னாச்சி, ஆச்சம்மா, கோசியம்மா என அந்த பட்டியல் நீளும். கர்ப்பமாக இருக்கையில் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு கூட இறால் தடவி இருக்கிறேன். என் பிள்ளைகளை இந்த வருவாயைக் கொண்டுதான் படிக்க வைத்தேன். உயிருள்ளவரை இறால் ஆகவேண்டும்”.  என்கிறார் அவர்.

கோமதி வசிக்கும் அண்ணா நகர்ப் பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்கள் முழுநேரமாக  இறால், மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, (மழைக்காலங்களில்)கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிகளவில் கிடைக்கும் இறால் மற்றும் மீன்களை பிடிக்கவும் ,வேறு எந்த பணிவாய்ப்புகளும் கிடைக்காததன் காரணமாகவும் (பஞ்சம் என்று குறிப்பிடுகின்றனர்) சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இறால் பிடிப்பில் ஈடுபடுகின்றனர். இவர்களில் பலரும் இன்று நிலையான வருவாயைத் தேடி மீன் காயவைத்தல் போன்ற பிற வேலைகளுக்கு நகர்ந்துள்ளனர்.

கைகளால் இறால், மீன் மற்றும் நண்டு என்பது பாரம்பரிய சூழியல் அறிவையும், கடின உழைப்பையும் கோருகிற வேலையாகும்.  இந்த இறால் பிடிப்பில் ஈடுபடுகிற பலரும் நிலவின் சுழற்சி ,உயரலை/தாழ்வலையின் தாக்கம், ஆற்றுப்படுகையின் உயரம் மற்றும் அலையின் தாக்கம் அடையும் பகுதிகள் ஆகியவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளனர். குறிப்பாக, பௌர்ணமி/ அமாவாசை முன்பு மற்றும் பின்பு மூன்று நாட்கள் என மொத்தம் 6 நாட்கள் உயரலையின் தாக்கத்தின் காரணமாக பெரும்பாலும் இறால் பிடிப்பில் அவர்கள் ஈடுபடுவதில்லை.  இதேபோல, முழுநிலவு/பௌர்ணமி காலத்தை “பருவம்” என்றும் அழைக்கின்றனர். அதாவது இந்தக்காலத்தில் தான் ஆற்றினை நோக்கி கடலிலிருந்து உயிர்கள் இடம்பெயருகின்றன.  இந்த மொத்த சூழியல் அறிவையும் மக்கள் தலைமுறை தலைமுறையாக உணர்ந்து வைத்துள்ளனர். ஆனால், சமீப ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வாழ்வியல் மாற்றம் காரணமாக இந்த பாரம்பரிய அறிவின் தொடர்ச்சி அறுபடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாழ்வியல் மாற்றத்திற்கான காரணி குறித்து கூறும் கோமதி, “சுனாமி முன்பு வரை அந்த ஆற்றில் இறால், மீன், நண்டு  இருந்து கொண்டே இருந்தது. அப்போது நம் ஜனங்கள் கலயம்  நிறைய இறால்களைப் பிடிப்பது, நண்டு, மீன்களைக் கலயத்தில் போட்டுக் கொள்வார்கள். ஆனால், சுனாமிக்குப் பிறகு மீனவமக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று குடியிருப்புகள் கடற்கரையில் உள்ள பாரம்பரிய குடியிருப்புகளில் இருந்து (5௦௦மீ தொலைவில்) ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் குடியிருப்பு வழங்கப்பட்ட பிறகு, மீனவர்கள் அதிகளவில் மீன்பிடிக்கத் தொடங்கினர். (காலநிலை மாற்றத்தினால் மீன்கள் கிடைக்கும் நாட்கள் ஏற்பட்டுள்ள தாக்கம், இந்த ஆறுகளை மீனவர்கள் அதிகளவில் நாடவேண்டிய சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது.) இரவு நேரங்களில் மீனவர்கள் வலைபோட்டு இறால்களை அரித்து விடுகின்றனர். எங்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. இரவெல்லாம் வலைபோட்டுப் பிடித்து விடுகின்றனர்.  பழையார், மடவாமேடு, கொட்டாய்மேடு, ஒலைகொட்டைமேடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த நான்கு பகுதிகள் மிக அருகில் இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் வலைபோட்டு இறால்களைப் பிடித்து விடுகின்றனர்.  இரவில் அலையின் தாக்கத்தின்போது அதிகளவில் பெரும் இறால்கள் கிடைக்கின்றன. இதனால் பகலில் நாங்கள் செல்லும்போது இறால்கள் கிடைப்பதில்லை” என்கிறார்.

எவ்வாறாயினும், இதுமட்டுமே செழிப்புமிக்க கழிவெளிகளில் மீன்பெருக்கம் குறைவதற்கான காரணியாக இப்பகுதி பெண்களுக்கு தெரிந்தாலும், ஆற்றின் கரைகளில் சதுப்பு நில கண்டல் காடுகளுக்கு அருகிலேயே அதிகரிக்கும் இறால் குட்டையும், polychaete உயிர்களின் சட்டவிரோத கடத்தலும் இந்த ஆற்றின் வளத்தினை சிதைத்துள்ளது. இப்பகுதி என்பது ஆழம் குறைவான சேறு பகுதிகளையும், சேற்று அடுக்குகளையும் (MUDFLATS), அலையாத்திக் காடுகளையும் கொண்டுள்ளது.

இதேவேளையில், சுனாமிக்குப் பிறகு ஆற்றில் படிந்துள்ள படிவுகளால் அலையின் தாக்கம் குறைந்துள்ளதும்,  காலநிலை மாற்றத்தினால் கடலில் ஏற்பட்டுள்ள சூழியல் மாற்றங்களும், அதிகரிக்கும் தீவிர காலநிலை பேரிடர்களாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் இன்று மீனவ மக்ககளும் கழிமுகங்கள் மற்றும் பின்னங்கழி ஆறுகளை தங்களின் அன்றாட வாழ்வியலுக்காக நாட வேண்டிய சூழலை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில், இவ்வாறான வாழ்வியல் மாற்றம் என்பது கோமதி போன்று திறமைமிக்க பாரம்பரிய கழிமுக மீனவர்களையும்,  பெண்களிடமிருந்து இறால்களை மொத்தமாக  வாங்கி விற்பனை செய்யும் ஆற்றல்மிக்க தலித்பெண்களையும் இழக்கச் செய்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இறால்  வியாபாரியாக திகழ்ந்த 57 வயதான தண்டவன்குளம் பகுதியைச் சார்ந்த  வில்லம்பு, , தற்போது பழையார் துறைமுகத்தில் மீன்காய வைக்கும் தொழிலாளாராக  வேலை செய்கிறார். தனக்கு திருமணம் ஆனதிலிருந்து இந்தப் பணியில் அவர் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

கடும் வெயிலுக்கு மத்தியில் உழைத்த களைப்பில் நீர் அருந்தும் வில்லம்பு

 

“சனம் இறால் தடவும், அவர்கள் கரையேறும் நேரமாக சென்று அதனை பழையாற்றில் கொண்டு சென்று விற்போம். விற்றுவிட்டு மக்களுக்கு பணத்தினை வழங்குவோம். அப்போதெல்லாம் கடன் காரங்க வீட்டுக்கு வர நிலைமைல இல்ல. 1000, 2000 கிடைக்கும். இப்ப சம்பாரிக்கிறது காணாது நாலு எடத்துல கடன் வாங்கி செலவு பண்ணிக்கிட்டு, கடன் வாங்கி அந்த கடனையும் குடுத்திட்டு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கோம்.  பொங்கல், தீபாவளி என்றால் சனங்களுக்கு காசு கொடுப்போம். துணி, மணி வாங்கி கொடுப்போம். மேற்காரில் இருந்து நான்கு ஆட்கள் இறாலை தூக்கிக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்போம். வாழ்க்கை நன்றாகப் போனது” என்கிறார் வில்லம்பு.

இந்நிலையில், கணவரின் இழப்பு அதற்கு பிறகான மகளின் இழப்பு என அடுத்தடுத்த இழப்பிற்கு  பிறகு அவரது ஒரே மகள் மற்றும் 90 வயதான மாமியாரை காப்பாற்றக் கடன் வாங்கி அதனை முதலாகக் கொண்டு ஈடுபட்டு வந்த இறால் வியாபார வேலையை விட்டுவிட்டு, பழையாறில் கூலித்தொழிலாளராக மீன்காய வைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அதுநாள் வரை சுதந்திரமாக செய்த வேலையை விட்டு கூலித்தொழிலாளியாக சுருங்கியது அவரது மன அழுத்தத்தை கூடுதலாக்கியது என்றே குறிப்பிடுகிறார்.

காலை  எட்டு மணிக்கு சீர்காழி முதல் வரை செல்லும் பேருந்தில் தன் ஊர் பெண்களுடன் புறப்படும் வில்லம்பு, 15 நிமிட பயணத்திற்குப் பிறகு பழையாறில் உள்ள சிங்காரவேலர் மீன்பிடித் துறைமுகத்தை அடைகிறார். அப்போதிலிருந்து இரவு எட்டு மணிநேரம் வரை மீன்களை இறக்குவது, மீன்களைச் சுத்தம் செய்து காயவைப்பது, உப்பு போடுவது, வெயிலில் உலர்த்துவது, அதனை மூட்டைகளில் கட்டுவது என பலதரப்பட்ட  வேலைகளில் ஈடுபடுகின்றனர். “கசார் தூக்குவோம்,சந்த பொடி வேல செய்வோம் சாப்பாட்டு பொடி வேல செய்வோம் ,மீனு கீரனும், மீனு  தூக்கிட்டு வரது எரக்குறது, மீனு அலசுவோம், காயவைப்போம், இப்டி எல்லா வேலையும் செய்வோம்”. என குறிப்பிடுகிறார் வில்லம்பு.

இந்நிலையில், காலையில் எட்டு மணிக்குத் தொடங்கி இரவு எட்டு மணிநேரம் வரை சுமார் பன்னிரெண்டாம் மேல் சுட்டெரிக்கும் வெயிலில் கடுமையாக உழைக்கிறார். இந்த 12 மணிநேர உழைப்புக்கு அதிகபட்சமாக ரூ.400 வரை கிடைக்கிறது. சிலசமயம் அதிகமாக மீன் படும் பட்சத்தில் தான் வாங்கிக் குவிக்கும் மொத்த மீன்களையும்  சுத்தம் செய்துவிட்டு 9 அல்லது 10 மணிக்கு வீடுதிரும்ப வேண்டிய நிலையும் உள்ளது.  இவ்வாறான சூழலில் கூடுதலாக ரூ. 100 அல்லது ரூ.50 கிடைக்கிறது.

2023-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் சுட்டெரிக்கும் வெயில் பொழுதில் மீன் காயவைத்துக் கொண்டிருந்த பெண்களில் ஒருவராக வில்லம்புவைச் சந்தித்தேன். வெயில் சுட்டெரிக்கும் பொழுதுகளிலேயே சில சமயங்களில் திடீரென பொழியும் மழை அவரது சுமையை மேலும் இரட்டிப்பாக்கி விடுகிறது. மழை தூறல்களிலிடம் இருந்து நன்கு காய்ந்த கருவாடுகளை காக்கத் தவறி விட்டால் தன் முதலாளி 70 வயதான மீனவ பெண்மணி அஞ்சம்மாவிடம் விழும் கடும் சொற்களை எண்ணியே அவர் அதிகம் பயப்படுகிறார். எனினும், விரைவாகச் செயல்பட்டு கருவாட்டுத் தளத்தில் காய்ந்த மொத்த கருவாடுகளையும் காப்பாற்றிய பிறகும்கூட அஞ்சம்மாவின் வார்த்தைகளில் இருந்து அவரால் தப்பமுடியவில்லை.

மழைத்தூறல்களில் இருந்து கருவாட்டைப் பாதுகாக்க ஓடும் வில்லம்பு

“கருவாடு காயவக்கிறது ரொம்ப கஷ்டம்.  வெய்யில கருவாடு காயட்டும்னு  செத்த உக்காந்தாலும், அந்த அம்மா அவ்ளோ கேள்வி கேப்பாங்க ,செத்த காயட்டும்னு  நாம உக்கந்துருபோம் அவ்ளோ கேள்வி கேப்பாங்க. வெயில் ரொம்ப கஷ்டமாதா இருக்கும் .அதை விட மழை வந்தா ரொம்ப கஷ்டமா இருக்கும். அள்ளனும் தண்ணி ஊத்த ஊத்த, கொண்டுபோய் மூடனும் , ஐஸ் போடணும், உப்பு போடணும் எப்பா எவ்ளோ கஷ்டம்! இந்த சம்பளத்துக்கு இதுவும் இல்லனாலும், எங்களுக்கு ஒரு வழியும் இல்ல” என்கிறார் வில்லம்பு.

பன்னாட்டுத்  தொழிலாளர் அமைப்பின் (INTERNATIONAL LABOUR ORGANIATION)  “Working on a warmer Plant: The impact of heat stress on labour productivity and decent work” ன் அறிக்கை காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் ஏற்படும் வெப்ப அழுத்தத்தின் காரணமாக உலக அளவில் தொழிலாளர்களின் மொத்த உழைப்பு நேரம் 2.2 சதவீதம் குறையுமென்றும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறது.

மீன் காயவைக்கும் எல்லோரையும் போன்று வில்லம்பு தன் குடும்பச்சூழலை எண்ணி எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார். இதேவேளையில் பழையார் துறைமுகத்தில் குடிநீர், கழிவறை என  எந்த அடிப்படை கட்டமைப்புகளும் பயன்படுத்தும் நிலையில்  இல்லாதது, மீன் காயவைக்கும் பெண்களின் சுமையை அதிகரிக்கிறது. குறிப்பாக, ஆண்களின் கூட்டம் நிரம்பி வழியும் துறைமுகத்தில் பெண்கள் சிறுநீர் கழிக்க மறைவான இடத்தைத் தேடுவது அசாத்தியமானதாக அமைகிறது. இதன் காரணமாக இங்கு பணிபுரியும் பலரும் உடல்ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இதேவேளையில், காலநிலை மாற்றத்தால் கடல் அமிலமாகிறது, மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இதுபோன்ற காரணங்களால் மீன்களின் வலசைப் பாதையில் ஏற்படும் மாற்றம், மீன்பிடி நாட்கள் குறைந்து வருவது, வில்லம்பு போன்று மீனவர்களையும், மீன்பிடியையும் சார்ந்து வாழ்பவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்குகிறது. மேலும், மீன்களின் உற்பத்திக்காக  ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் பின்பற்றப்படும்  மீன்பிடித் தடைக்காலத்திலும் எவ்வித உதவிகளுமின்றி இவர்கள் தவிக்கின்றனர். மீனவர்களையும், மீன்பிடியையும் பல தலைமுறைகளாக சார்ந்து வாழும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ஒன்றிய/மாநில அரசுகளிடமிருந்து எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. இதேபோன்று, புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி கடல் கொந்தளிப்போடு காணப்படும் காலங்களிலும் பெரும்பாலான பெண்கள் வேலைவாய்ப்பின்றி, உதவிகளுமின்றித் தவிக்கின்றனர்.

மீன் காயவைக்கும் பணியில் ஈடுபடும் பெண்கள் பலரும் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர்.  சராசரியாக மாதத்திற்கு 500 முதல் 2000 கடனுக்கான தொகை செலுத்துகின்றனர். இந்நிலையில், வேலையற்ற நாட்களில் இவை மிகப்பெரும் அழுத்தத்தை உண்டாக்குகிறது.  ”இன்னும் ரெண்டு வருஷத்துக்கு குழு இருக்கு .வார குழு அரனூருபா கட்டனும் ,மாச குழு ஒன்னு 2500, இன்னொன்னு 2600 ரூபாய் கட்டனும். இந்த குழு கட்றதுக்கே நான் வேலைக்கு வரணும். சாப்புட்றதா என்னனே தெரில, ஏன் குழு எடுத்தனு தெரில“ என்கிறார் வில்லம்பு.

வில்லம்பு தான் கட்டிவரும் வீட்டின் முன்பு நிற்கிறார், பின்புறம் அவரது மகள் நின்று கொண்டிருக்கிறார்.

 

இதுபோன்ற காலங்களில் உவர்நீர் ஆறுகளே இவர்களின் ஆதாரமாகவும், ஆரோக்கியமான உணவின் அங்கமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், பாரம்பரிமாக உவர் நீர் வெளிகளுடன் இவர்களுக்கு உள்ள சமூக உரிமை ரீதியிலான பிணைப்பு அரசின் கொள்கைகளிலும் திட்டங்களாலும் கண்டுக்கொள்ளப்படாதது சூழியல் அழிவைத் தீவிரப்படுத்துவதோடு விளிம்புநிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதை அதிகரிக்கிறது.

கோமதியை முதல் முறையாக சந்தித்தபோது தன் கைகளில் இறால் சேகரித்தே உருவான வடுக்களைக் காண்பித்தார். அது கைகளெங்கும் இறாலே ரேகைகளாக மாறி இருப்பதைப் போன்று தெரிந்தது.  “நண்டு கடிக்கும். மீனின் இறக்கைகள் கிழித்துவிடும். என் கைகள் முழுவதும் காயம் தான். இறால் குத்துவது, மீன் குத்துவது, முந்தாநாள் கூட கெளுத்தி மீன் குத்தியது. எப்பா, என் விரல்களில் ரேகை வைத்தால் விழுவாது, என் கைகள் கால்கள் முழுவதுமே புண்புண்ணாக இருக்கும்” தன் ஒவ்வொரு விரலாக சுட்டிக்காட்டி, கைரேகைக்காக பாதுகாத்து வரும் ஒரு விரலை காட்டுகிறார். ரேகை விழாத அவரின் விரல் பல தலித் மற்றும் பழங்குடி கழிவெளி மீனவ மக்களின் ரேகைகளற்ற உரிமைகளின் சாட்சியாக நினைவில் வந்து போகிறது.

தரவுகள்:

  1. https://mkuniversity.ac.in/research/SYNOPSIS/anusuya-syno.pdf
  2. CMFRI Marine fisher Census- 2௦16
  3. Working on a warmer Plant: The impact of heat stress on labour productivity and decent work_Report

 

படங்கள்:

பரிமளா, தாண்டவன்குளம், பிரதீப் இளங்கோவன்

 

 

 

 

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments