ஆபத்துகளும் தகவமைப்பும்

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா உள்ளிட்ட 175 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் மூலமாக புவி வெப்பமாவதை குறைக்க ஒவ்வொரு நாடுகளும், பச்சை இல்ல வாயுகளின் (Green House Gases) வெளியேற்றத்தை குறைக்க உறுதி கொண்டுள்ளன. ஆனால் காலநிலை மாற்றத்தை தடுப்பதென்பது, முழுவதுமாக இயலாத காரியம் என்று அறிவியலாளர் ஜேம்ஸ் லவ்லாக் கூறுகிறார். பாரீஸ் ஒப்பந்தம், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை குறைக்க உதவலாமே தவிர, முழுவதுமாக தடுக்க உதவாது என்கிறார் அவர். எனவே மாறும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப நம் சமூக கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறுகிறார். உலக நாடுகள் இன்றைய தினத்தில் இருந்து, முழுவதமாக பச்சை இல்ல வாயுகளின் வெளியேற்றத்தை நிறுத்தி கொண்டாலும், ஏற்கனவே வெளியேற்றப்பட்ட வாயுக்களின் காரணமாக உண்டாகும் பாதிப்பு என்பது நிச்சயம் நிகழ்ந்தே தீரும் என்கிறார் அவர்.

பாரிஸ் ஒப்பந்தம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக உலக நாடுகள் பச்சை இல்ல வாயுகளின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய அளவை பற்றி பேசுகிறது. இந்த ஒப்பந்தத்தை 2020ம் ஆண்டில் இருந்துதான் அமல் படுத்த முடியும் என்று இந்தியா கூறிவிட்டது. உலகிலேயே மிக அதிகளவில் பச்சை இல்ல வாயுகளை வெளியேற்றும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தாலும் எப்போது இதனை முழுமையாக அமல்படுத்தும் என்று தெரியவில்லை.

இவை எல்லாவற்றையும் விட பாரீஸ் ஒப்பந்தத்தின் எந்த அம்சமும் உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தத்தை மீறாத வகையில் இருந்தால் மட்டுமே உலக நாடுகள் அதனை அமல்படுத்த முடியும். உலக வர்த்தகக் கழகத்தில் இந்திய சூரியசக்தி கொள்கைக்கு எதிராக அமெரிக்கா வழக்கு தொடுத்துள்ளதையும், அதில் இந்தியாவிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்திய சூரியசக்தி கொள்கை உலக வர்த்தக கழக கொள்கைக்கு எதிராக உள்ளதாக இந்த தீர்ப்பு கூறுகிறது. ஆக பாரிஸ் ஒப்பந்தம் எந்த அளவிற்கு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என்பது மிகப் பெரிய கேள்வியே. காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பின் ஆய்வு அறிக்கைகள், உலகெங்கும் கடலளவு அதிகரித்தல், மழைப்பொழிவின் அளவில் மாற்றம், தட்பவெப்ப அளவில் மிக மாற்றம், போன்றவை தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக குறிப்பிடுகின்றன. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, காலநிலை மாற்நத்தின் காரணமாக உலக நாடுகளில் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் வெப்பக்காற்று, சூறாவளிகள், நிலசரிவுகள், வறட்சி போன்றவை தொடர் நிகழ்வுகளாக மாறக் கூடும் என்று கூறியுள்ளது. காலநிலை மாற்றம் மனிதர்களை பெருமளவில் இடம்பெற செய்யவுள்ளது. அகதிகளாக மக்களை மாற்றப் போகிறது என்கிற எச்சரிக்கையும் அறிக்கையில் உள்ளது.

காலநிலை மாற்றம் நேரிடையாக உண்டாக்கும் பாதிப்புகளைவிட மறைமுகமாக உண்டாக்கும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனகிறார் லவ்லாக். மறைமுக பாதிப்புகளாக அவர் கூறுபவை: உணவு பற்றாக்குறை, இயற்கை வளங்களை பங்கிடுவதற்கான போட்டி, மற்றும் குழுச் சண்டை. மேற்கூறிய மூன்று அம்சங்களும் இந்திய தமிழக சூழலில் நிச்சயமாக நிகழ வாய்ப்புள்ளது. இந்திய தமிழகச் சூழலை பொருத்தவரை மாறிவரும் தட்பவெப்ப நிலை காரணமாக, பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்வது என்பது மிக பெரிய சவாலாக
இருக்கப் போகிறது. 2011ம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் உணவு உற்பத்தி குறையும் என்னும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு 2010ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காலநிலை காரணமாக தமிழகத்தில் மழைப் பொழிவின் அளவு 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என்று கூறியுள்ளது. கடலோர மாவட்டங் களில் கடலளவு அதிகரிப்பதால் மீனவர்கள் பெரும் அளவு பாதிப்படைவர். சூறாவளி, வெப்ப காற்று, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங் களின் தாக்கமும் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை யையும் தந்துள்ளது ஆய்வறிக்கை.
மேலும் பல்வேறு ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் நிகழக்கூடியவையாக கீழ்கண்டவைகளை தொகுத்துக் கொள்ளலாம்: சூறாவளி புயல், வெப்ப காற்று, நிலச்சரிவுகள், வெள்ளம், வறட்சி, கடலின் அளவு அதிகரித்தல், நிலத்தடி நீர் உப்புமயமாதல், நோய்களின் தாக்கம் அதிகரித்தல், மற்றும் பருவமழை பொய்த்தல். இந்த நிகழ்வுகள் மக்களை இடம்பெயர வைக்கும். அதாவது இவை மக்கள்தொகை அடர்த்தியை அதிகப்படுத்தும். ஒரு சதுர கிலோ மீட்டருக்குள்ளாக ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்க வேண்டிய அவல நிலையை உருவாக்கும். சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கும். மேலும், மக்களிடையே நிலம், நீர் போன்ற இயற்கை வளங்களை தம்முள் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனைகளை உருவாக்கலாம். ஏற்கனவே மாசாகிப் போன நீர்வள பகுதிகளில் மீதமுள்ள நன்னீரை கைப்பற்ற பெரும் சண்டைகள் வெடிக்கலாம். அதேபோல இயற்கை சீற்றத்தால் பாதிப்பு குறைவாக இருக்கக் கூடிய பகுதிகளை கைப்பற்றுவதிலும் முரண்பாடுகள் வெடிக்கும். அந்தப் பகுதிகளை நோக்கி மக்களின் இடப் பெயர்வு அதிகமாகும்.

இந்த புற காரணங்கள் ஏற்கனவே இந்திய சமூகத்தில் உள்ள உள்முரண்களான சாதி மத வன்மங்களை அதிகரிக்கவும் அதன் காரணமாக குழு சண்டைகள் பெருகவும் வாய்ப்புள்ளது. தனியார் உற்பத்தியையும் லாப நோக்கத்தையும் மட்டுமே முன்வைக்கும் உலகமய பொருளாதாரக் கொள்கைகள் இந்த முரண்களை அதிகப்படுத்தவே வாய்ப்பு இருக்கிறது. இப்படிபட்ட நிகழ்வுகள் நிகழ அதிக காலமில்லை. சுமார் 25 ஆண்டுக்குள்ளாக காலநிலை மாற்றத்தால், விளம்புநிலை மக்கள் அகதிகளாக உருமாறுதல் மற்றும் சண்டை சச்சரவுகள் பெருகுதல், போன்றவற்றை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள நமது அரசுகள் தயாராகிவிட்டதா என்றால் அதுவும் இல்லை. மத்திய அரசு பெயரளவுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சில கொள்கை அறிக்கைகளை தயார் செய்துள்ளது. இந்த கொள்கை அறிக்கைகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எந்தவித செயல்திட்டங்களையும், கட்டமைப்பு திட்டங்களையும் கொண்டதாக இல்லை. தமிழகத்திற்கும் பெயரளவிலான ஒரு காலநிலை மாற்ற செயல்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக பேரிடர் மேலாண்மை சட்டவிதியை கூட இயற்றாத தமிழக அரசு காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்வியே.

காலநிலை மாற்றம்

வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன்

இதையும் படிங்க.!