தூய்மையின் பெயரில் ஒழித்துக்கட்டப்படுகிறதா நம் பல்லுயிரியம்?

என் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தால் பக்கத்து காலிமனையில் ஒரு பெரிய எருக்கம் செடி தெரியும். சுமார் ஆறேழு அடி உயரத்துடன் ஆறுக்கு ஆறடி பரப்பை ஆக்கிரமித்து வளர்ந்திருக்கிறது அப்புதர்ச்செடி. செழித்து வளர்ந்திருக்கும் அதை நான் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உற்றுப் பார்த்து வருகிறேன். அந்த செடியின் ஒருபக்கக் கிளைகள் எங்கள் தெருவின் கான்கிரீட் சாலை மீது படர்ந்து சாய்ந்திருக்கும். அவ்வப்போது “திடீர்” சமூக சேவகர்களின் கத்திக்கு அதன் வளர்ந்து சாய்ந்த கிளைகள் பலியாகி எரிக்கப்படும். எப்போதேனும் பெய்யும் மழையைத் தவிர ஒரு துளிகூட நீர் கிடைக்க அதற்கு வாய்ப்பில்லை. மேலும் அது வேர்பிடித்து நிற்கும் மண்கூட பார்ப்பதற்கு எந்த சத்துக்களோ கரிமங்களோ அற்ற மண்ணாகவே தோன்றும். ஒரு செடி செழித்து வளர்வதற்கான நாமறிந்த எல்லா அறிவியல் காரணங்களையும் தாண்டி அங்கு ஏதோ ஒன்று இருப்பதாகவே எனக்கு எப்போதும் தோன்றும். சென்னையின் சமீபத்திய கடும் வறட்சியில்கூட அதன் இலைகளும் தண்டுகளும் எப்படி பசுமையாக பிழைத்திருக்கின்றன என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். புகாகோவின் “ஒற்றை வைக்கோல் புரட்சி”யில் சொல்லப்படும் “எதுவும் செய்யாத விவசாயம்” (Do Nothing Farming) என்ற தத்துவத்தை அந்த செழிப்பான எருக்கம் செடி வழியாகத்தான் நான் புரிந்துகொண்டேன்.

என் மகனுக்கும் எனக்கும் அச்செடியின் மீது ஒரு தீராத காதல் இருந்தது. பக்கத்து வீட்டு மனிதர்களின் ஏளனப் பார்வை சில நேரங்களில் சங்கடத்தைத் தந்தாலும் நாங்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. வீட்டின் ஜன்னல் வழியே பைனாகுலர் மூலமும் செடியின் அருகில் சென்று உருப்பெருக்கி வழியாகவும் செடி முழுவதையும் மேலும் கீழும் இடமும் வலமுமாய் நோட்டமிட்டுக் கொண்டிருப்போம். விதவிதமான தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், தட்டான்கள், வண்டுகள், சிலந்திகள், நத்தைகள், அட்டப்பூச்சிகள், ஓணான்கள், குருவிகள் என அங்கு இருந்த எண்ணற்ற விருந்தினர்கள்தான் எங்கள் பேரார்வத்திற்குக் காரணம். பெரும்பாலான பூச்சிகளுக்கும் ஓணான் போன்ற விலங்குகளுக்கும் அவற்றின் மொத்த வாழ்க்கையும் அந்த எருக்கம் செடியும் அதன் நிழலும்தான். அவை அங்கேயே பிறந்தவை அங்கேயே மடிபவை. பல பறவைகளுக்கோ அது அவ்வப்போது முகாமிட்டுச் செல்லும் விருந்தினர் மாளிகைபோல. எப்போதும் பூத்துக் குலுங்கும் அதன் பூக்களில் தேனருந்த விதவிதமான வடிவங்கள் அளவுகளில் வருகைதரும் வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தேனீக்களைக் காணக் கண்கோடி வேண்டும். மேலும் பல வண்ணத்துப்பூச்சிகளின் லார்வாக்களையும் கூட்டுப்புழுக்களையும் அவ்வப்போது அதன் கிளைகளில் காண முடியும். உருவத்தில் பெரிய தச்சர் ஈக்கள் (Carpenter Bee) பூவுக்கு பூ தாவி ரீங்காரமிட்டபடி தேனருந்துவதை காலையிலும் மாலையிலும் காணலாம். அது மட்டுமின்றி அதன் பூக்களிலும் இலைகளிலும் விதவிதமான வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்க, பலவித எறும்புகள் செடிக்கும் தரைக்குமாய் சுறுசுறுப்பாய் எப்போதும் ஊர்ந்து கொண்டிருக்கும். அச்செடியின் காய்ந்த கிளைகளின் நுனியில் அமர்ந்தபடி சிறு பூச்சிகளை வேட்டையாட தட்டான் பூச்சிகள் நோட்டமிட்டுக் கொண்டிருக்கும். ஆங்காங்கே வலைவிரிக்கும் சிலந்திகளும் வலைவிரிக்கா சிலந்திகளும் இரைக்காய்த் தவமிருக்கும். தன் வருங்கால சந்ததிக்காய் தன் கூடுகளில் அடைத்துவைக்க வண்ணத்துப் பூச்சிகளின் லார்வாக்களைத் தேடி அபகரித்துச்செல்ல குயவன் குளவிகள்  (Potter Wasp) செடியை அவ்வப்போது சுற்றிக்கொண்டிருக்கும். இவற்றை ஒட்டுமொத்தமாய் உணவாக்கவல்ல ஒன்றிரண்டு ஓணான்களும் அச்செடியில் இருந்தன.

காலையில் ஒரே நேரத்தில் ஒன்றிரண்டு தேன் சிட்டுக்களும் தவிட்டுக்குருவிகளும் (Yellow billed Babler) அப்புறம் ஒரு சில மைனாக்களும் அங்கே வருவதுண்டு. தவிட்டுக்குருவிகளுக்கு புழுப் பூச்சிகளே உணவாதலால் தேன்சிட்டுகளோடு எப்போதும் சண்டையிடுவதில்லை. அதே நேரத்தில் மைனாக்கள் பூச்சிகளை உண்டாலும் அவற்றிற்கு விருந்து எப்போதும் தரையில்தான். ஆம், மைனாக்கள் பெரும்பாலும் செடியின் தரைப்பகுதியில் மெத்தென்று இருக்கும் புற்கள், இலைதழைகளிலிருந்தே உணவு சேகரித்து திரும்பிவிடும். ஒரு சிலநேரங்களில் சாலைக்கு அந்தப்பக்கத்திலிருந்த புதரிலிருந்து ஒரு செண்பகமும் ( Greater Coucal) அங்கு வருவதுண்டு. சற்றேறக்குறைய காகத்தின் அளவிலிருக்கும் செண்பகம் எப்போதும் சுத்த அசைவம்தான். ஆனால் அதற்கு மிகவும் கூச்ச சுபாவம். நம்மை தூரத்தில் பார்த்தால்கூட ஓடிப் பறந்துவிடும். ஒருமுறை ஒரு வல்லூறு (Shikra) செடியிலிருந்த ஒரு பெரிய ஓணானை தூக்கிக்கொண்டு பறந்ததை கூடப் பார்த்திருக்கிறேன். என் மகனுக்கு மிகவும் அற்புதமான அனுபவமாக அமைந்தது அவன் முதல் முதலாய் அந்தச் செடியில் பார்த்த கும்பிடு பூச்சிதான் (Praying Mantis). கடந்தமுறை குட்டி ஈன்ற ஒரு நாய் கூட தன்குட்டிகளை அச்செடியின் நிழலில்தான் சில நாட்கள் பாதுகாத்து வந்தது. ஒவ்வொரு மழைக்காலம் முடியும்போதும் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அப்புறம் கோடைக்காலத்தில் எங்கே சென்றதோ என நான் தேடிக் கொண்டிருந்த நத்தைகள் அந்தச் செடியின் இலைகளின் அடிப்புறத்தில்தான் ஒட்டிக்கொண்டு வெதுவெதுப்பாக நீண்ட துயிலில் இருந்தன. எருக்கம் செடியின் நிழலிலேயே முடக்கத்தான் செடியன்றும் இன்னும் பெயர்தெரியாத பல புற்களும் சிறு செடிகளும் இருந்தன. அவற்றிற்கிடையே அட்டைப்பூச்சிகளும் (Millipede), பூரான்களும் தேரைகளும் வாழ்ந்து வந்தன. துப்புரவுப்பணியை கறையான்கள் கவனித்துக்கொண்டன. இத்தனை உயிர்களால் மொய்க்கப்பட்டும் அந்த செடி எதுவும் இழந்திடவில்லை. கொஞ்சம் உன்னிப்பாய் உற்றுப்பார்த்தால் மலைப்பாய் இருக்கிறது. ஒரு ஒற்றைச் செடிக்குள் எத்தனை எத்தனை உயிர்கள். எப்படி ஒரு சாதாரண எருக்கம் செடியால் இத்தனை உயிர்களுக்கும் உணவும் உறைவிடமும் கொடுக்க முடிகிறது? இது ஒரு ஒற்றை உயிரல்ல என்பதை நான் உணரத் தொடங்கியபோது அதன் ஒவ்வொரு உயிர்களையும் பெயரறிந்து வரிசைப்படுத்தி அவை ஒவ்வொன்றுக்கும் செடியோடு உள்ள தொடர்பையும் அதன் மற்ற உயிர்களோடு உள்ள தொடர்பையும் பதிவு செய்யும் பேராவல் பிறந்தது. நானும் என் மகனும் அந்த செடிக்குப் பக்கத்தில் செல்லும்போதெல்லாம் பக்கத்து வீட்டுப் பையனும் ஆர்வமாய் ஓடி வருவான். அப்போது அந்த வீட்டினுள்ளிருந்து “டேய் உங்கிட்ட அங்க போகாதண்ணு எத்தன தடவ சொல்றது? வீட்டுக்குள்ள வாடா” என்ற அதட்டல் குரல் கேட்கும். என்னவோ எனக்குள்ளிருந்த ஒரு “நவீன நாகரீகம்” என் தொடர் கண்காணிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. ஒரு காலத்தில் ஒளிப்படக்கருவி வாங்கிய புதிதில் செழித்து வளர்ந்த வாழைத்தோப்புகளிலும் வயல்களிலும் ஏதோ ஒருவித வெறியோடு பூச்சிப் புழுக்களை படமாக்க சுற்றிச்சுற்றி இறுதியில் வெறுமையோடு திரும்பியிருக்கிறேன். அங்கெதிலும் நான் காணாத உயிர்கள் இங்கெப்படி வந்தன? மொட்டைமாடியில் நின்றபடி சுற்றுமுற்றும் வெறித்துப் பார்க்கிறேன். இது ஒரு ஒற்றைச் செடியல்ல. ஆங்காங்கே கண்ணுக்கெட்டிய தூரமட்டும் இதுபோன்று தெருவுக்குத் தெரு பல்லாயிரம் விதவிதமான செடிகொடிகளில் இருக்கும் பலலட்சம் உயிர்களால் நுட்பமாய் கோர்க்கப்பட்டிருக்கிறது நாம் வாழும் சூழல் மண்டலம் என்பது புலப்பட்டது. இவ்வளவு அற்புதமான ஒரு பல்லுயிரியச் சூழலை நிச்சயம் ஒரு மனிதனால் அமைக்கமுடியாது. இதன் ஒவ்வொரு அணுவும் நாம் பாதுகாக்க வேண்டியவையே. பல்லுயிரின வளம் என்பது அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் மட்டுமல்ல. நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் நம்மைச்சுற்றியிருக்கும் ஒவ்வொன்றிலும் இயற்கையின் அற்புதங்கள் பொதிந்துள்ளது. இன்று தூய்மையான பாரதம் படைக்க புறப் பட்டிருக்கும் ஆர்வலர்களுக்கு இப்பல்லுயிரின பொக்கிஷங்கள் குப்பையாய்த் தோன்றுகின்றன. பெரும்பாலானோருக்கு தம் முதல் சமூகக் கடமையே தம் தெருவில் புதர்களை தீவைப்பத்து அழிப்பதாகத்தான் இருக்கிறது. இதில் மிகப்பெரிய அவலம் என்னவென்றால் இ ன் று கி ர £ ம ங் க ளி ல் கூ ட நூ று ந £ ள் வேலைத்திட்டத்தின் மூலமாக சாலையோரம் மற்றும் கால்வாய்கள், குளங்களின் வரப்புகளில் வளர்ந்திருக்கும் அத்தனைப் புதர்களும் அழிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்படுகின்றன. பெரும் பொருட்செலவிலும் மனித உழைப்பிலும் ஒரு சூழல் தீமை சட்டப் பூர்வமாக அரங் கேற்றப்படுகிறது. தலையாய வேலைகள் எத்தனையோ இருக்க மனித உழைப்பும் இங்கே வீணடிக்கப் படுகிறது. கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டதில்கூட சரியான திட்டமின்றி இப்படியான ஒரு பல்லுயிரின சூழல் சிதைக்கப் பட்டதாக சூழியலாளர் இரவீந்திரன் நடராஜன் தெரிவிக்கின்றார்.

பலரும் கொசுக்கள் செடிகொடிகளில் உற்பத்தியாவதாகத் தவறாக எண்ணுகிறார்கள். செடிகளில் ஏராளமான கொசுக்கள் இருப்பது உண்மை. உண்மையில் அவை அனைத்தும் தாவரச்சாற்றை மட்டுமே உட்கொள்ளும் ஆண் கொசுக்கள். பெண்கொசுக்கள் மட்டுமே தம் முட்டை உற்பத்திக்கு புரதம் தேவைப்படுவதால் விலங்கு/மனிர்களைக் கடிக்கின்றன. செடி கொடிகளை அழிப்பது எவ்விதத்திலும் கொசுக்களை கட்டுப்படுத்தும் தீர்வாகாது. பிராணவாயுவை உற்பத்தி செய்யவைக்க மரங்களை நடும் அதே சமூகம்தான் மரங்கள் உற்பத்தி செய்யும் அதே பிராணவாயுவை தீவைத்து அழிக்கிறது. ஆம், கொழுந்துவிட்டு எரியும் தீயில் எரிவது நமது மூச்சுக்காற்றான ஆக்சிஜனேதான். தொலக்காட்சிகளில் தோன்றும் சமூக ஆர்வலர்கள் போல அவ்வப்போது வீதிகளில் தோன்றும் சமூக ஆர்வலர்களால் நம் பல்லுயிரின வளத்துக்கு ஆபத்து வந்துள்ளது. அதிரவைக்கும் வாணவேடிக்கைகளால் நரகாசுரனை வருடாவருடம் பழிவாங்கும் வீரர்கள்(?) போல தம் தெருக்களில் நிற்கும் அத்தனைச் செடிகொடிகளையும் புதர்களையும் வெட்டி வீழ்த்தி தீக்கிரையாக்கிவிட்டு ஏதோ சமூகத்தீமை அத்தனையும் பொசுக்கியது போல இறுமாந்து நிற்கும் அந்த நாயகர்களை, மின்கம்பத்தில் அமர்ந்தபடி பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றன மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும்.

நம்மைச் சுற்றி பல்லுயிரின வளம்!

ஜீயோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments