குவாரி உரிமையாளர்கள் நலனுக்காக தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை பலிகொடுக்க வேண்டாம்

தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்  துறையிலிருந்து கடந்த 14.12.2022 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணையின் வாயிலாக காப்புக் காடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை எவ்வித அகழ்வு மற்றும் சுரங்கத் (quarry and mining) தொழில் நடைபெறக்கூடாது என்கிற தடை தளர்த்தப்பட்டிருக்கிறது.

காப்புக் காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் குவாரிகள், சுரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டுதான் இதற்கான தடையே விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விலக்களிப்பது விபரீதமான முடிவாகும். தமிழ்நாட்டில் செயல்படும் குவாரிகளில் இருந்து பெருமளவிலான கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஒரு சில குவாரி முதலாளிகளின் நலனுக்காக இயற்கை பாதுகாப்பில் சமரசம் செய்வது கண்டனத்திற்குரியது. எந்தவித ஆய்வுகளும், அறிவியல்பூர்வ பார்வையுமின்றி துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார் என்பதைச் சுட்டிக்காட்டி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காப்புக்காடுகளுக்கு மட்டுமே விதி தளர்த்தப்பட்டிருப்பதாகவும் வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் (elephant corridor) ஆகியவற்றில்   ஒரு கிலோமீட்டர் வரை சுரங்கப் பணிகளுக்கு உள்ள தடை தொடரும் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.  காப்புக் காடுகளாக அறிவிக்கை செய்யப்பட்ட இடங்களைச் சுற்றியுள்ள இடங்களை பாதுகாப்பது மனித – காட்டுயிர் எதிர்கொள்ளல் நிகழ்வுகளை குறைப்பதற்கு பெருமளவில் உதவியாக இருக்கும் என்கிற அடிப்படையில் இந்த அரசாணையை ரத்து செய்வது அவசியமாகும்.

காடுகளின், பசுமைப் பரப்பின் அளவை அதிகரிக்க இந்தியாவிலே முன்னோடியாக பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கு இந்த அரசாணை பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதால் தமிழக முதல்வர் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments