குட்டையைக் குழப்புகிறதா சென்னை மாநகராட்சி?

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் என்ற பெயரில் ஏரிகளையும் குளங்களையும் பாழ்படுத்த மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குடியிருப்பு வாசிகளும் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களின் குற்றச்சாட்டு என்ன என்பதை அறிய களத்தில் இறங்கினோம். கடந்தாண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த நினைவுகள் நம்மைவிட்டு நீங்காத நிலையில் அடுத்த பருவ மழைக் காலத்திற்குத் தயாராகிக்கொண்டுள்ளது சென்னை மாநகரம். சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். அதில் மிக முக்கியமான பணி மழைநீர் வடிகால்வாய்களை அமைப்பது. இந்தப் பணிதான் தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசினார் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திருநாவுக்கரசு: “அக்டோபர் 10 ஆம் தேதியிட்ட இந்து ஆங்கில நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது. சென்னையில் உள்ள 145 ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளோடு மழைநீர் வடிகால்வாய்களை இனைக்க மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுதான் எங்களின் அச்சத்திற்குக் காரணமாக உள்ளது. அப்படி அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏரி குளங்கள் எல்லாம் கழிவுநீர்க் குட்டைகளாக மாறிவிடும் சூழல் ஏற்படும்” என அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார் அவர்.

திருநாவுக்கரசு தெரிவித்த தகவல் தொடர் பான விவரங்களைப் பெற சென்னை மாநக ராட்சியின் மழைநீர் வடிகால்வாய் பிரிவில் பணியாற்றும் இளநிலை பொறியாளர் ஒருவரை சந்தித்துப் பேசினோம். அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் வடசென்னைப் பகுதியில் 55 நீர்நிலைகள் மற்றும் தென் சென்னைப் பகுதியில் 95 நீர்நிலைகளுடன் மழை நீர் வடிகால்வாய்களை இணைக்க பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த பணிகளுக்காக ஜெர்மன் வங்கியான KFW (KreditanstaltfürWiederaufbau) வங்கி மற்றும் JICA (Japan International Cooperation Agency) உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிளிடம் 2500 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே 1000கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூவம், அடையாறு, பங்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளோடு மத்திய சென்னையின் பெரும்பாலான மழைநீர் வடிகால்வாய்கள் இணைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டே ஜப்பான் மற்றும் ஜெர்மன் வங்கிகளிடம் விண்ணப்பிக்கப்பட்டது. திட்டத்தில் இருந்த சில குறைபாடுகளின் காரணமாக அப்போது அது நிராகரிக்கப்பட்டது. அதே திட்டத்தில் இப்போது சில மாறுதல்கள் செய்து மழைநீர் வடிகால்வாய்களை ஏரிகளுடன் இணைக்கும் இந்தத் திட்டத்தைத் தயாரித்து வங்கிகளை அணுகியபோது இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் தேங்குவது தவிர்க்கப்படும் எனவும். அதே வேளையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் அந்த இளநிலை பொறியாளர் தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட பகுதியின் மழைநீர், வடிகால்வாய்கள் மூலமாக அந்தப்பகுதியில் உள்ள நீர்நிலைக்கு கொண்டுசெல்லப்படும். அந்த நீர் நிலை ஒரு வேளை முழுக் கொள்ளளவை எட்டிவிட்டால், அருகே உள்ள மற்றொரு நீர்நிலைக்கு நீர் செல்லும்படி இணைப்புக் கால்வாய்கள் அமைக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு நீர் நீலையும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னை நகரில், வெள்ள நீர் அதிகம் தேங்கும் பகுதிகள் என மொத்தம் 800 இடங்கள் கண்டறியப்பட்டள்ளது. அந்த பகுதிகளுக்கு முன்னுரிமை தந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த மழைக்கு முன்பே முழு பணிகளை முடிப்பது இயலாத காரியம்தான் எனவும் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திருநாவுக்கரசு, “மழை நீர் வடிகால்வாயில் மழைநீர் மட்டும் ஓடினால் மாநகராட்சி சொல்வது நல்ல யோசனைதான். ஆனால் இங்கு மழைநீர் வடிகாலில் சாக்கடைதானே ஓடுகிறது. இதை ஏரிகளில் இணைத்துவிட்டால் ஏரிகள் பாழாவதோடு நிலத்தடி நீரும் சேர்ந்தல்லவா பாதிக்கப்படும்” என்று கேள்வி எழுப்புகிறார்.

“மேலும் இந்த வடிகால்வாய்கள் அடித்து வரும் குப்பைகளும் அவை சேரும் நீர் நிலையின் ஆழத்தை குறைத்துவிடும். பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றும் கழிவு நீரை மழைநீர் வடிகால்வாய்களில்தான் இணைத்துவிடுகிறார்கள் அப்படியிருக்க, மழைநீர் என்ற பெயரில் சாக்கடை நீரை ஏரிகளில் நிரப்பத் திட்டமிடுகிறது மாநகராட்சி. மழைக் காலம் நெருங்கும் வேளையில் இப்படி குறுக்கு வழியில் தீர்வுகாணத் திட்டமிடும் மாநகராட்சியின் செயலைத் தடுத்து நிறுத்த ஏரிகள் பாதுகாப்பு அமைப்புகளிடம் பேசி வருகிறோம் எனவும் தெரிவித்தார். தென்சென்னை ஏரிகள் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்த கா. ஜெயச்சந்திரனிடம் பேசும்போது “ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் ஏரிகளும் குளங்களும் சுருங்கியுள்ள நீலையில் ஒட்டுமொத்த மழைநீரையும் கொண்டுவந்து இங்கு விடுவது வெள்ளத்திற்குதான் வழி வகுக்கும். ஒவ்வொரு ஏரிக்குமான இணைப்புக் கால்வாய்களும் இருக்கும் இடம் தெரியாத வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரையில் உள்ள ரேடியல் சாலையில் இருபுறமும்
8 ஏரிகள் உள்ளன இந்த ஏரிகள் நிறைந்து மடிப்பாக்கம் வழியாக பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கலந்து இங்கிருந்து கடலுக்குள் செல்லும். ஆனால் இந்த 8 ஏரிகளும் தற்போது எந்த இணைப்பும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் மழைநீர் வடிகால்வாய்களை ஏரிகளோடு கொண்டுவந்துவிட்டால்,அவை நிறைந்து குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துவிடும் அபாயம் அதில் உள்ளது. எந்த ஏரியும் கடந்த பத்தாண்டுகளில் ஆழப்படுத்தியோ தூர்வாரப்பட்டதாகவோ (Desilting) நாங்கள் பார்த்ததில்லை. முதலில் மாநகராட்சி இந்த பணிகளை செய்துமுடித்தபின் அடுத்த திட்டத்தைப் பற்றி யோசிக்கட்டும்” என்றார்.

மாநகராட்சியின் இந்தத் திட்டம் ஏரிகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த பல்லுயிர் தன்மையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்கிறார் பறவைகள் ஆர்வலர் கே.வி.ஆர்.கே திருநாராயணன். “சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளின் ஆற்றலுக்கு உதாரணமாக பல வலசைப் பறவைகள் (Migration birds) வருகை தருகின்றன. இந்த சூழ்நிலையில் மழைநீர் என்ற பெயரில் கழிவுநீரை ஏரிகளில் கலந்தால் இந்த ஏரிகள் அதன் தன்மையை இழக்கும். முழுமையாக கழிவுநீர் வடிகால்வாய்களை அமைத்துவிட்டு பின் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார்அவர். மாநகராட்சியின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பில்லை. ஆனால் சென்னை என்னதான் மாசுபட்ட ஒரு பெருநகராக இருந்தாலும் இன்னும் அவற்றின் மிஞ்சியிருக்கும் நீர்நிலைகள் மிகுந்த பல்லுயிரின வளமும் உயிர்த்துடிப்பும் மிக்கவை. இத்திட்டத்தை செயல்படுத்துமுன் அதன் ஒவ்வொரு நீர்நிலைகளிலும் இருக்கும் உயிர்ச்சமநிலை அவற்றை வடிகால்கள் வழியே இணைக்கும்போது எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்பது உறுதிசெய்யப்படவேண்டும். ஒருவேளை வடிகால்களுடன் கழிவுநீரும் கலக்கும்பட்சத்தில் இது இந்நீர்நிலைகளின் உயிர்ச்சமநிலையைக் கடுமையாகப் பாதிக்கும் எனவே, முறையான கழிவுநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு, மழைநீர் வடிகால்வாய்களில் மழை நீர் மட்டுமே ஓடுகிறது என்பதை உறுதிசெய்தபின் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆனந்த்குமார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments