தியாகிகளைப் பிரசவிக்கும் வளர்ச்சி!

எந்த ஒரு அரசுத் திட்டமும் செயல்படுத்தப் படும்போதும் அதற்கான தேவைகள் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. அரசியல் பொருளாதாரம் மற்றும் அறிவியல் ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெறும் திட்டங்கள் பெரும்பாலும் அத்திட்டங்களால் பாதிப்புக்குள்ளாகும் மனிதர்களைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. உணர்வுப்பூர்வமாக இந்தப் பிரச்சினையை அணுகு வோமானால் ஒரு திட்டத்தின் மூலம் தன் வாழிடத்தையும் மரபையும் இழந்து தவிக்கும் மக்களின் நிலையும் அவர்களுக்கு நிவாரணம் என வழங்கப்படும் சலுகைகளும் எந்தளவுக்கு அநிவாரணமாக அமைகிறது என்பது புரியும். இது தவிர்க்க முடியாதது என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு இது அத்தியாவசியம் என வாதிடுவோரும் அம்மக்கள் எப்படிப்பட்ட உளவியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை சிறிதளவேனும் புரிந்துகொள்ள இக்கட்டுரை முயல்கிறது. தம் சொந்த நிலத்தையும் வாழ்ந்த ஊரையும் விட்டு அரசு திட்டங்களுக்காக வெளியேற்றப்படும் மக்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்படும் வேறு இடங்களில் குடியமர்த்தப்படுகிறார்கள் அல்லது இழப்பீடு பெறுகிறார்கள். பொதுவாக அணைகள், தொழிற்சாலைகள், மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பது சாலை மற்றும் இரயில் பாதைகள் அமைப்பது என இத்திட்டங்களின் பட்டியல் நீள்கிறது. இதில் பிரதானமாக அணைகள் கட்டுவதே அதிக அளவில் கிராமங்களை மூழ்கடித்து மக்களை உள்நாட்டு அகதிகளாக்குகிறது. மேலும் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வரும் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது ஆயிரக்கணக்கான அணைகள் மற்றும் புதிய கால்வாய்களை அமைப்பதே. இத்திட்டத்திற்காக ஆறு லட்சம் மக்கள் வெளியேற்றப்படுவதாக சொல்கிறது ஒரு அரசு புள்ளிவிபரம். அபாயகரமான திட்டங்களில் ஒருபுறம் வெளிப்படையான மறுகுடியமர்த்தல் நடத்தப்பட மறுபுறம் சத்த மில்லாமல் பெருமளவில் ஒருவித மறைமுக வெளியேற்றல் நிகழ்கிறது. அணு மின் நிலையங் களுக்கும் அனல் மின் நிலையங்களுக்கும் அருகில் வாழும் தொடர் இன்னல்களுக்கும் கொடிய மாசுபாட்டுக்கும் உள்ளாகும் மக்கள் பெரும்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக தாமாய் இடம்பெயர்ந்து விடுகிறார்கள். இடம்பெயர வாய்ப்புகள் அற்ற மக்கள் மிகவும் மோசமான சூழல் சீர்கேட்டில் வாழ நேர்கிறது. வளர்ச்சியை அனுபவிப்பதும் வளர்ச்சி என்று கூப்பாடு போடும் மக்கள் ஒருபுறமும் வளர்ச்சிக்காக பலி ஆடுகள் ஆக்கப்படுவோர் மற்றொரு புறமுமாக இருப்பதற்கு சென்னையே ஆகச்சிறந்த உதாரணம். வடசென்னை எண்ணூர் மற்றும் மீஞ்சூர் பகுதிகள் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இராட்சத அனல் மின்நிலையங்களையும், துறைமுகத்தையும் வரிசையாக கொண்டிருந்தும் இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசு ஒரு சிறந்த மருத்துவமனையோ கல்லூரியோ பொருளாதார மண்டலங்களையோ ஏற்படுத்தவில்லை. மாறாக நச்சுப்புகை கக்கும் தொழிற்சாலைகளும் சாலைமுழுதும் கண்டெய்னர் லாரிகளாக ஓடும் அவலமே உள்ளது. இதன் காரணமாக மக்கள் சிறிது சிறிதாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மையப்படுத்தப்பட்ட பெருந்திட்டங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆனால் அப்பகுதியின் பாதிக்கப்படும் மனிதர்களை தியாகிகளாக்கிவிட்டு ஒதுங்கி விடுவதிலேயே நம் அரசியல் பீடம் குறியாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசிய பா.ஜ.க தலைவர் இல. கணேசன் “ஒரு நாட்டுக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்வதில் தவறில்லை” எனக் குறிப்பிட்டது மட்டுமின்றி அதுகுறித்து அக்கட்சியின் தலைமை எந்த கண்டனமும் வருத்தமும் தெரிவிக்காதது கட்சியின் கருத்தும் அதுதானோ என்ற முடிவுக்கு வரத் தூண்டுகிறது. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு குற்றவாளி தண்டிக்கப் படக்கூடாது” என்று சட்டம் சொல்லும் நாட்டில் இங்கு ஒரு மாநிலமே தண்டிக்கப்படலாம் என்று எளிதாகச் சொல்ல முடிவது ஆச்சரியம்தான். சென்னைக்கு மின்சாரம் தர கூடங்குளத்தில் ஒரு குழந்தை ஊனமாகப் பிறக்க வேண்டுமென்றால் அது தியாகம் இல்லை கொடூர தண்டனைதானே? இந்த மனநிலை தற்போதைய ஆளும் கட்சிக்கு மட்டும் உரித்தானதல்ல. சுதந்திர காலம் தொட்டே ஆளும் வர்க்க நிலைப்பாடு இப்படித்தான் இருந்திருக்கிறது. “நீங்கள் துன்பப்படப் போகிறீர்கள் என்றால் அதை தேசத்தின் நலன் கருதி நீங்கள் ஏற்க வேண்டும்” என முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ஹிராகுட் அணையால் இடம்பெயர்ந்த மக்களிடம் கூறுகிறார். தந்தையின் வழியில் “வளர்ச்சித்திட்டங்களால் பழங்குடி மக்கள் தங்கள் பூர்வீகத்தை இழப்பதை நினைத்து வருந்துகிறேன். அதுவும் அதிகாரிகள் இம்மக்களை மறுகுடியமர்த்தலில் போதிய அக்கறை செலுத்தாத நிலையில் மிகவும் வருந்துகிறேன். ஆனால் சில சமயங்களில் தேச நலன் கருதி வேறு வழியில்லை.” என்று பாபா ஆம்தேக்கு எழுதிய கடிதத்தில் சொல்கிறார் மகள் இந்திராகாந்தி. “உங்களை உங்கள் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்வோம். நீங்கள் வெளியேறினால் நல்லது. இல்லை தண்ணீரைத் திறந்து உங்களை மூழ்கடித்து விடுவோம்” என்று போங் அணையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மிரட்டல் விடுக்கிறார் மொரார்ஜி தேசாய். இந்தியாவில் வெறும் 8% ஆதிவாசிகளும் 15% தலித் மக்களும் வாழ்கின்றனர். ஆனால் வளர்ச்சித் திட்டங்களில் பெரும்பாலும் பாதிக்கப் படுபவர்கள் இவர்களே. (காண்க பெட்டிச்செய்தி). மேலும் காடுகளை மட்டுமே நம்பி காடுபடு பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தியவர்களை வேறு பகுதிகளில் குடியமர்த்துவது எவ்வளவு பெரிய தண்டனை?

திட்டம் மாநிலம் மறுகுடியமர்வை எதிர்நோக்கிய மக்கள் ஆதிவாசிகள் (%)

கர்ஜான் குஜராத் 11,66 100

சர்தார் சரோவர் குஜராத் 2,00,000 57.6

மஹேஷ்வர் மத்திய பிரேதசம் 20,000 60

இச்சா பீஹார் 30,800 80

பாக்ரா ஹிமாச்சல் 36,000 34.7

இடம்பெயரச் செய்யப்படும் மக்களுக்கு தகவல்கள் மிகவும் தாமதமாகவே கிடைக்கிறது அல்லது கிடைக்காமலே போகிறது. பெரும்பாலும் கடைசி நேரத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தியே வெளியேற்றப்படுகிறார்கள். பொறுப்பான முறையில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு தகவல்கள் எங்குமே முன்னரே அறிவிக்கப்படுவதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை சந்தை மதிப்பும் அரசு மதிப்பீடும் எந்த நிலத்துக்கும் பொருந்துவதில்லை. இதனால் மக்கள் எப்போதும் மிகக் குறைந்த நிவாரணத் தொகையையே பெறுகின்றனர். மேலும் பணமாக பெறப்படும் நிவாரணத்தை பெரும்பாலும் பின்தங்கிய நிலையிலுள்ள இம்மக்கள் தாங்கள் ஏற்கெனவே பெற்றிருந்த கடன்களை அடைக்கவே பயன்படுத்துகின்றனர். கடன் கொடுத்தவர்கள் இதுதான் சமயம் என்று பிடுங்கிக்கொள்கின்றனர். இதனால் வேறு நிலம் வாங்கவோ இல்லை புதியதொழில் தொடங்கவோ முடிவதில்லை. மேலும் ஓரிடத்தில் புதிதாகக் குடியமரும் மக்களை பெரும்பாலும் அப்பகுதியின் முன்பே இருக்கும் மக்கள் அங்கீகரிப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய விளிம்புநிலை மக்கள் என்பதோடு நம் நாட்டில் குறிப்பாகக் கிராமங்களில் வேர்கொண்டிருக்கும் இருக்கும் சாதிக் கொடுமைகளைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நிவாரணங்களின்போது கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் குடும்பத் தலைவரை“சார்ந்திருப்பவர்”களாக கருதப் படுகின்றனர். 1990 இல் குஜராத்தில் மட்டும் கணவரை இழந்த பெண்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு தனியாக சலுகை பெறுகின்றனர். மற்றபடி பெண்களுக்குத் தனியாக நிவாரணம் கொடுக்கப்படுவதில்லை. பெரும்பாலான குடிநோய்க்கு ஆளான குடும்பத் தலைவர்களிடமிருந்து பெண்கள் தாம் சுயமாய் ஈட்டும் வருவாயையே காத்துக் கொள்ளப் போராடும் நிலையில் இவர்கள் நிலை அதோகதிதான். இதில் கொடுமை என்ன வென்றால் “மகன்” குடும்பத்தலைவனாக சலுகைக்கு உரியவனாவதும் “தாய்” சார்ந்திருப் போர் பட்டியலில் வருவதும்தான். இறுதியாக இது “மக்களால் மக்களுக்காக” ஆளப்படும் அரசானால் முதலில் அது தன் குடிகளுக்கு ஒரு சிறிய அளவேனும்கூட பாதிப்புதரும் திட்டங்களை விட்டொழிக்க முன்வரவேண்டும். அடுத்து நீண்டகால அளவில் மனிதருக்கு நன்மை தரும் சூழலுக்கு பெரிய பாதிப்பற்ற திட்டங்களை பரிசீலிக்கும்போது மக்களிடம் முறையான வெளிப்படையான நேர்மையான கருத்துக் கணிப்புகள் நடத்தி அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நிச்சயம் மறு குடியமர்த்தல் தேவைப்படும் திட்டங்களில் கீழே குறிப்பிடப்படும் முறைகள் கையாளப்படுதல் வேண்டும்.

நிலத்துக்கு நிலம் என்ற விதத்தில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

மக்களுக்கு வெளிப்படையான நேர்மையான தகவல்களைக் தெரிவிக்க 24ஜ்7 தகவல் மையம் திட்டம் செயல் படுத்தப்படும் இடத்தில் நிறுவ வேண்டும்

மறு குடியமர்த்தல் இடங்கள் பாதிக்கப் படும் மக்களின் விருப்பத்தோடு தேர்வு செய்யப்பட வேண்டும்.

அவசர கதியில் வெளியேற்றப்படாமல் போதிய அவகாசத்துடன் அவர்களை உளவியல் ரீதியாகச் சோர்வடையாமல் வெளியேற்ற வேண்டும்.

வளர்ச்சித்திட்டங்களில் அந்தப்பகுதி மக்களுக்கு பொருளாதார ரீதியான மேம்பாடடைய உதவிகள் செய்யவேண்டும். உதாரணமான சர்தார் சரோவர் திட்டத்தில் மேதாபட்கர் தலைமையிலான போராட்டத்திற்குப் பிறகே அப்பகுதி மக்கள் அங்கே மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மறுகுடியமர்த்தப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறைவில்லாமல் ஏற்படுத்தப்பட வேண்டும்

பெண்களுக்கெனத் தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி ஆண்களுக்கு நிகரான நிவாரணத்தைச் சுயமாகப் பெறச்செய்ய வழிவகை செய்யவேண்டும்.

இவை அனைத்தும் மிக அடிப்படையான சில கோரிக்கைகளே. இந்த அடிப்படைகளே இதுவரை சரியாக கிடைக்கப்பெறாத நம் நாட்டில் நாசகாரத் திட்டங்களுக்கு எதிரான சாமானிய மக்கள் தூக்கும் போர்க்கொடி என்றும் நியாயப்படுத்தக் கூடியதே. மக்களின் வாழ்வுரிமையை காக்கும் அவ்வறப் போராட்டங்களை எந்த சட்டங்களாலும் அடக்குமுறைகளாலும் நசுக்கிவிட முடியாது. காலங்காலமாய் ஓரிடத்தில் வசிக்கும் மக்களை அவர்கள் நிலத்தில்ருந்து அப்புறப்படுத்தி தெருவில் நிறுத்தி ஆதாரும் ஆவணங்களும் கேட்டு கொடுமைப்படுத்தி இறுதியில் தியாகி பட்டம் கொடுக்க அரசு இன்னும் முனையுமானால் விரைவில் அந்த அரசின் மகுடங்கள் மக்களால் தூக்கியெறியப்படும்.

அஷ்வினி அசோக்குமார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments