இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகள் மற்றும் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மண்டல தீர்ப்பாயங்களில் இருந்த வழக்குகள் முதன்மை அமர்வுக்கு மாற்றப்படுவது சமீபத்தில் வழக்கமாகியுள்ளது. இந்த நடைமுறையானது சம அதிகாரங்களைப் பெற்று தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010ன் கீழ் செயல்படும் மண்டல தீர்ப்பாயங்களின் தன்னாட்சியைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் சரவணன் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் 11.11.2020 அன்று வெளியிட்ட ஒரு உத்தரவை ரத்து செய்யக் கோரியிருந்தார். அனல்மின் நிலையங்கள் தாங்கள் பயன்படுத்தும் நிலக்கரியில் ஏதேனும் மாற்றம் செய்யும்போது ஏற்கெனவே பெற்றிருந்த சுற்றுச்சூழல் அனுமதியில் திருத்தம் பெறத் தேவையில்லை என்பதே அந்த உத்தரவின் சாராம்சம். திருத்தம் கோரும்போது அதைப் பெறுவதற்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகிறது என்பதால் இதைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த உத்தரவானது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006 ஆகியவற்றிற்கு எதிரானது என்பதாலும் அதிகளவில் காற்று மாசுபாடு உண்டாக காரணமாகிவிடும் என்பதற்காகவும் இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று சரவணன் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 26ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சரவணனின் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதால் வழக்கு விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 3ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது தென்மண்டல அமர்விற்கு தனது அமர்வின் கீழ் இருக்கும் மாநிலங்களைத் தாண்டி வேறு மாநிலங்களோ அல்லது இந்தியா முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும் வழக்குகள் விசாரிக்க அதிகாரம் இல்லை என்பதால் இவ்வழக்கை டெல்லியில் இருக்கும் முதன்மை அமர்விற்கு மாற்றுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டப்பட்டது. முதன்மை அமர்வின் உத்தரவு வரும் இடைப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு மறு விசாரனைக்காக ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால், திடீரென இந்த வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு விசாரனைக்காக தென்மண்டல அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் சரவணன் தொடுத்த மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வுக்கு மாற்றுமாறு முதன்மை அமர்வில் இருந்து 14ஆம் தேதி உத்தரவு பெறப்பட்டதால் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இதற்கிடையில் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதன்மை அமர்வின் தலைமை பதிவாளர் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். அதில் ”இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகள் மற்றும் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மட்டுமே தாமாக முன்வந்து இனிமேல் வழக்காக எடுக்க முடியும்” என்று கூறப்பட்டிருந்தது மேற்கண்ட இந்த இரண்டு விவகாரங்களும் மண்டல தீர்ப்பாயங்களின் ஒட்டுமொத்த அதிகாரம், திறமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த செயல்பாடுகளின் மூலம் இந்தியா முழுமைக்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வழக்குகளை முதன்மை அமர்வு மட்டுமே விசாரிக்க முடியும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010ன் கீழ் தனக்கு இல்லாத ஒரு அதிகாரத்தை முதன்மை அமர்வு வெளிப்படுத்துகின்றது என்றே பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்காடி வரும் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்,
இந்தியாவில் உள்ள மண்டல தீர்ப்பாயங்களை விட முதன்மை அமர்வு அதிகாரம் பெற்றதா என்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால் 2010 ஆண்டு உருவாக்கப்பட்ட 18 பக்கம் கொண்ட அச்சட்டத்தில் “Principal Bench” என்கிற வார்த்தையே இல்லை. ஒன்றிய அரசு 2010ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின் மூலம் டெல்லியில் உள்ள அமர்வு செயல்படத் தொடங்கியது. 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியான அறிவிக்கையில் மண்டல தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் வரை அனைத்து வழக்குகளையும் டெல்லியில் உள்ள முதன்மை அமர்வில் மனுதாரர்கள் தங்கள் வழக்குகளைத் தொடுக்கலாம் என்று கூறப்பட்டது.
அதன் பின்னர், 2017ஆம் ஆண்டில்தான் அனைத்து மண்டல தீர்ப்பாயங்களின் சட்ட ஆட்சி எல்லைகள் வரையறுக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் உள்ள வடக்கு மண்டல அமர்வில் அதாவது முதன்மை அமர்வில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கோவா, டெல்லி மற்றும் சண்டிகர், டையூ டாமன் மற்றும் தாத்ரா நகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் உள்ள சூழல் சார்ந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் புனேவில் உள்ள மேற்கு மண்டல அமர்வில் மஹாராஷ்டிரா மற்றும் குஜராஜ் பகுதி வழக்குகளும், போபாலில் உள்ள மத்திய மண்டல அமர்வில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் சார்ந்த வழக்குகளும் சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, இலட்சத்தீவுகள் சார்ந்த வழக்குகளும், கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டல அமர்வில் மேற்கு வங்கம், ஒடிஷா, பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் நிக்கோபர் தீவுகள் சார்ந்த வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் டெல்லியில் செயல்படுவதும் மற்ற மண்டலங்களைப் போலதொரு அமர்வு என்றே கருத வேண்டியுள்ளது. மற்ற அனைத்து அம்ர்வுகளும் தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010 பிரிவு, மற்றும் 16ன் கீழ் பெறப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில்தான் வழக்குகளை விசாரித்து முடிவெடுக்கின்றன.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவருக்குண்டான அதிகாரங்கள்.
ஒரு வழக்கை ஒரு அமர்விலிருந்து இன்னொரு அமர்விற்கு மாற்றுவதற்காக தீர்ப்பாயத் தலைவருக்குண்டான அதிகாரங்கள் குறித்து பார்த்தோமானால் National Green Tribunal (Practices and Procedure) Rules, 2011ன் விதி 3 அதுகுறித்து கூறுகிறது. அதில் வெவ்வேறு இடங்களில் உள்ள அமர்வுகளுக்கு வழக்குகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தென் மண்டலத்தில் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கை அதிலும் குறிப்பாக அது இந்தியா முழுவதும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வழக்காக இருப்பதால் டெல்லியில் உள்ள அமர்வுக்கு மாற்றும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறுகிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
”ஒரு வழக்கை மாற்றும்போது கூட இந்த விதி 3ன் கீழ் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை டெல்லி அமர்விற்கு மாற்றும் நடைமுறை தொடர்கிறது. இது சட்டப்படி சரியானது அல்ல” என்றார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். கடந்த ஆண்டு என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தபோது அது தொடர்பாக மீனவத் தந்தை கே.ஆர்.செல்வராஜ் குமார் மீனவர் நலச் சங்கம் தென் மண்டல அமர்வில் தொடுத்த வழக்கும் டெல்லியில் உள்ள அமர்விற்கு மாற்றப்பட்டது. அதிலும் கூட விதி 3ன் கீழ் வழக்கானது டெல்லி அமர்விற்கு மாற்றப்பட்டதற்கான எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இதற்கு முன்பு இந்தியா முழுவதும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வழக்குகளை டெல்லியில் உள்ள வடக்கு மண்டல அமர்வு அல்லாத பிற மண்டலங்கள் விசாரித்து தீர்ப்பளித்திருக்கின்றனவா என்றால் அதற்கு பதில் OA No.66 of 2015 ROHIT PRAJAPAT VS UNION OF INDIA என்ற வழக்கின் தீர்ப்பில் உள்ளது. ஒரு திட்டத்தை தொடங்கிய பின்னர் அதற்கான பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை அனுமதிக்க வழி செய்த ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் சர்குலர் ஒன்றை புனேவில் உள்ள அமர்வு சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
ஆகவே, இந்தியா முழுவதும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வழக்குகளை ஏற்கெனவே மண்டல தீர்ப்பாயங்கள் திறம்பட கையாண்டுள்ளன என்பது இந்த வழக்கின் மூலம் தெளிவாகிறது. இதுகுறித்து இந்தியாவின் மூத்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர்களுள் ஒருவரான ரித்விக் தத்தாவை தொடர்பு கொண்டு கேட்டபோது “ டெல்லியில் உள்ள முதன்மை அமர்வு என்பது வடக்கு மண்டத்திற்கான அமர்வு என்பதாகவே சட்டத்தில் உள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளில் நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் இந்தியாவின் தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளாகத்தான் கருதப்பட வேண்டும். டெல்லி உட்பட அனைத்து மண்டலங்களும் ஒரே சட்டத்தின் அதிகாரங்களின் கீழ்தான் வழக்குகளை விசாரிக்க முடியும். இப்போது ஒரு பெருந்தொற்று காலம் என்பதால் டெல்லியில் நடக்கும் வழக்கு விசாரனையில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும் பங்கேற்க முடியும். ஆனால், இந்த தொற்று நீங்கிய பிறகு எல்லா வழக்கறிஞராலும், மனுதாரராலும் டெல்லிக்கு செல்ல முடியாது. இது சுற்றுச்சூழல் நீதியை இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் பெற முடியும் என்கிற அடிப்படைக் கருத்தாக்கத்தையே தோற்கடித்து விடுகிறது” என்று கூறினார்.
கடிதங்கள் வாயிலாகவும் நாளிதழ்கள் வாயிலாகவும் சூழல் பிரச்சனைகளை அறிந்து கொண்டு தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரிக்கும் அதிகாரமும் தற்போது டெல்லி அமர்விற்கே மாற்றப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவின் மூலம் மண்டல அமர்வின் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட சூழல் பிரச்சனையை வழக்காக எடுத்து விசாரிக்க விரும்பினால் அதுகுறித்து முதன்மை அமர்விடம் அனுமதி பெற்றுத்தான் வழக்காக எடுக்க வேண்டும் என்று கூறியது. கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியான உத்தரவின் மூலம் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகள் மற்றும் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மட்டுமே தாமாக முன்வந்து இனிமேல் வழக்காக எடுக்க முடியும் என்று கூறியுள்ளது.
மேகதாது அணை கட்டுமானப் பணிகள் குறித்து நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் கடந்த மே 21ஆம் தேதி ஒரு குழுவை நியமித்து நேரில் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த வழக்கு திடீரென முதன்மை அமர்விற்கு மாற்றப்பட்டு ஏற்கெனவே மேகதாது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க அவசியமில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து ஜூன் 17ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கொண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மேகதாது அணைகட்ட அனுமதி அளித்து விட்டது போல ஒரு புரிதலற்ற பேட்டியையும் கர்நாடக முதலமைச்சர் 18ஆம் தேதி அளித்திருந்தார். இப்படி பல்வேறு குழப்பங்கள் நிகழவும் நீதிக்காக தீர்ப்பாயங்களை அணுகும் உரிமை மறுக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளன டெல்லி அமர்வின் செயல்பாடுகள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் ஒன்றிய அரசின் பல்வேறு சட்டத் திருத்தங்கள் சூழல் சீர்கேடு ஏற்படுத்தும் திட்டங்கள் மீதான அரசின் கண்காணிப்பைக் குறைக்கும் நோக்கில் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் விதிமீறல்களைக் கண்டறிந்து சூழலைப் பாதுகாக்கும் பெரும் பணியில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களுக்கு தீர்ப்பாயங்கள் எளிதில் அணுகக் கூடியதாக இருக்க வேண்டுமே தவிர டெல்லி அமர்வின் அதிகாரக் குவிப்பு என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
– சதீஷ் லெட்சுமணன்