காலநிலை மாற்றம் குறித்து தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

காலநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு அரசாங்கங்களின் குழு வெளியிட்டுள்ள அறிக்கைகள் தமிழ்நாட்டிற்கு சொல்ல வருவது என்ன? தமிழகத்தை காலநிலை மாற்ற பாதிப்பிலிருந்து காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 20.4.2022 அன்று மாலை நடைபெற்றது.

பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஒருங்கிணைப்பட்டிருந்த இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், எழிலன் நாகநாதன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, அப்துல் சமது, ராஜா, சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, டி.ஆர்.பி ராஜா, வெங்கடேஷ்வரன், அருள் உள்ளிட்ட பலரும் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் நர்த்தகி நடராஜன், சிவராமன், சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனும், பேராசிரியர் ஜனகராஜனும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மை குறித்தும், தமிழ்நாட்டை காலநிலை மாற்ற பாதிப்பிலிருந்து தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்துப் பேசினர். பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஈஷவரன் “ நாடுகள், அரசாங்கங்கள் மாறுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல தனிநபர் மனமாற்றமும் முக்கியம். எல்லாக் கட்சிகளும் எல்லாத் தளங்களிலும் மக்களிடம் இந்த விழிப்புணர்வு சென்றடையும் வகையில் இதைப் பேச வேண்டும். பேரிடர்கள் நடக்கும் என சொன்னால் மக்கள் நம்ப மறுக்கின்றனர். அவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். பாடத்திட்டங்களிலும் காலநிலை மாற்றத்தை சேர்த்து குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களை தயார்படுத்த வேண்டும்” என்றார்.

கால நிலை மாற்றத்தின் தாக்கம் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றிப் பேசுகையில் மக்கள்தொகை உயர்வு என்கிற முக்கியமான விஷயத்தை சேர்த்துபேச வேண்டியது அவசியம் என சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. தெரிவித்தார்.

”காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்வைப்பவர்கள் அனைவரும் உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தகவமைப்புத் திட்டங்களை வகுப்பது அவசியம்”  என திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் கூறினார்.

“எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டே முன்னெடுத்து வரும் அரசாக திமுக விளங்குகிறது. போக்குவரத்து, உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி என எல்லாத்துறைகளிலும் காலநிலைக்கு இசைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்” என சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

“காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்கள்தான. கஜா புயலின்போது அந்த பாதிப்புகளை நான் நேரில் உணர்ந்தேன். காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுவோம்” என தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் பேசினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசுகையில் “அன்றாடம் என்னுடைய தொகுதியில் கடலரிப்பால் மீனவ மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வருவதை நான் பார்க்கிறேன்.  காலநிலை மாற்றம் இப்போது அவசரநிலையாக மாறிவிட்டது. புவி வெப்பமயமாதலுக்கு காரணமான மேற்குலக நாடுகள் முதலில் நடவடிக்கை எடுக்கட்டும் என  காத்திருந்தால் நாம் நிச்சயமாக  பாதிக்கப்படுவோம் என்கிற புரிதல் வேண்டும். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பேசுகையில் அந்தப் புரிதலோடு பேசினார். பல விஷயங்களில் நாம் இந்தியாவிற்கு முன்மாதிரியாக இருந்துள்ளோம். இதிலும் நாம் முன்ன்னோடியாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசிடம் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தடுப்பற்கான தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. இந்தியாவிற்கே இதில் முன்னோடியாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டிய அவசியமுள்ளது. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. திரும்பி சென்று வாழ மக்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. நம் பிள்ளைகளுக்கு வாழத்தகுந்த ஒரு உலகத்தை விட்டுச்செல்ல வேண்டும்” எனக் கூறினார்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments