உடன்குடி அனல்மின் நிலையத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தயாரித்த ‘இருளைக் கொண்டு வரும் மின்சாரம்’ எனும் ஆவணப்படம் சமூகப் போராளி மேதா பட்கர் அவர்களால் உடன்குடியில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் சமூகப் போராளி மேதா பட்கர், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் மற்றும் வழக்கறிஞர் ராஜிவ் ரூபஸ், குணசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடன்குடியில் மூன்று கட்டங்களாக 3960 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் தயாரித்துள்ள ஆவணப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சுப.உதயகுமாரன் சுப.உதயகுமார் “உடன்குடியில் அமைக்கப்படவுள்ள அனல்மின் நிலையத்தின் நீண்டகால பாதிப்புகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. உடன்குடி ஊர்மக்கள் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்” எனக் கூறினார்.
பின்னர் பேசிய மேதா பட்கர் ” இந்த அனல்மின் நிலையத்தால் ஏற்படும் மக்கள் இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் சீரழிவு போன்றவற்றின் பாதிப்புகளை அறிந்ததால் நாங்கள் இங்கு வந்துள்ளோம். மக்களின் எண்ணங்களை, தேவைகளை அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பிரதிபலிப்பதில்லை. இந்தியா முழுவதும் இந்த நிலை தொடர்கிறது. இயற்கை வளங்களைச் சார்ந்து வாழும் மக்களுக்கும் இந்த வளர்ச்சித் திட்டங்களால் பாதிப்படைகின்றனர். வணிகர்கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள், மீனவர்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படுவார்கள். பணம், மின்சாரம் இருந்தால் மட்டும் நம்மால் உயிர் பிழைத்திருக்க முடியாது என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது. 100க்கும் மேற்பட்ட காலநிலை அறிஞர்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்காவிட்டால் உலகம் தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும் என எச்சரித்துள்ளனர். அதனால் நாம் அனல்மின் நிலையங்களை கைவிட வேண்டும். இதுபோன்ற அனல்மின் நிலையங்கள் கடலிலும். நிலத்திலும், நிலத்தடி நீரிலும் மாசை ஏற்படுத்துகின்றன. மாசோடு இவை புவியை வேகமாக வெப்பமடையச் செய்கின்றன. இந்த அனல்மின் நிலையம் இப்போதுதான் கட்டப்பட்டு வருகிறது. அதன் உண்மையான பாதிப்புகளை அது இயங்கும்போது நீங்கள் சந்திப்பீர்கள். அப்போது அதை நிறுத்துவது கடினம். இந்த அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கும்போது உங்கள் நிலம் பாழடையும், நிலத்தடி நீர் மாசடையும். நமக்கு சுத்தமான காற்று, உணவு வேண்டும். இந்த அனல்மின் நிலையம் இவை எல்லாத்தையும் அழிக்கும். இன்று ஆட்சியில் இருக்கும் முதலமைச்சரை சில மாதங்கள் முன்பு நாங்கள் சந்தித்தோம். கூடங்குளம் அணுக்கழிவு குறித்து பேசினோம். உடனடியாக அதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார் முதல்வர் ஸ்டாலின். உடங்குடியிலும் அப்படியொரு நிலைப்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேதா பட்கர் ” உடன்குடி அனல்மின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால் சுற்று வட்டார கிராமங்களின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படையும். இத்திட்டத்தின் கட்டுமானத்திற்காக சட்டவிரோத மணற்கொள்ளை நடக்கிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தடுக்க அனல்மின் நிலையங்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நோக்கி நகர வேண்டும். விவசாயிகள், மீனவர்கள் நலன் கருதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
சுப.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் “காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற நிலையில் உடன்குடியில் அனல்மின் நிலையம் அவசியமற்றது. கூடங்குளம் அணுவுலை, தேனி நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றில் திமுக அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டைப் போன்றே உடன்குடி அனல்மின் நிலையத்திலும் ஒரு நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்த நிகழ்வில் உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரவி , மனித நேய மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஆசாத் , விசிக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன், SDPI கட்சி மாவட்ட துணைத் தலைவர் உமர், தாங்கை குளம் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயக்குமார் , குலசை மாயாண்டி , சிறுநாடார் குடியிருப்பு பஞ்சாயத்து தலைவர் கமலம் ஆகியோர் கலந்து கொண்டனர்
முன்னதாக உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானத்தையும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்த மேதா பட்கர் அங்குள்ள மக்களின் கருத்தைக் கேட்டறிந்தார்.
ஆவணப்படம்: https://www.youtube.com/watch?v=qswQzUrq3YQ