நாய்கூட அப்படிப் பண்ணாதா?

உருளைக்கிழங்கு முதன்முதலாக உணவுத்தட்டுக்கு வந்த காலகட்டம் அது.  அப்போது உருளைக்கிழங்கு சாப்பிடுவதை பலரும் அருவெறுப்பாக பார்த்தார்களாம். அந்நாளில், தன்னுடைய தோட்டத்தில் உருளைக்கிழங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த அறிஞர் ஒருவர் தனது தட்டிலிருந்த வேகவைத்த உருளைக்கிழங்கை தனது நாய்க்கு வீசினாராம். அதனருகில் ஓடிச்சென்ற நாயானது உருளைக்கிழங்கை முகர்ந்தபின் முகத்தைத் திருப்பிவிட்டு சென்று படுத்துக்கொண்டது. இதை கவனித்த உருளைக்கிழங்கை வெறுத்த அறிஞரின் நண்பர், “பார்த்தீர்களா! உருளைக்கிழங்கை நாய்கூட சாப்பிடவில்லை” என்றாராம். சற்றும் தாமதிக்காத அந்த அறிஞர், “ஆம்! ‘நாய்கள்’ உருளைக்கிழங்கு சாப்பிடுவதில்லை” என்று பதிலளித்தாராம்.

ஒரு மனிதனை இழிவுபடுத்த, அவனது செயல்பாடுகளை விலங்கோடு அதுவும் குறிப்பாக நாயோடு ஒப்பிடுவது நம்மிடையே ஒரு பழக்கமாக இருக்கிறது. “ஒரு நாய் கூட உன்னை மதிக்காது”, “அவனுக்கு இதைக் குடுக்குறதுக்கு ஒரு நாய்க்கு குடுக்கலாம்”, “இவங்கிட்ட கேக்குறதுக்கு ஒரு நாய்கிட்டபோய் கேட்கலாம்”, “நாய்ப் பொழைப்பு” இப்படியான பல சொல்லாடல்கள் நம்மிடையே ஊறிப்போனவை. பொதுவாகவே தமிழ் சமூகத்தில் நாய்கள் நன்றியுணர்வுமிக்க விலங்குகளாய் கருதப்பட்டாலும் இன்னொருபுறம் ஒருவருடைய குணநலன்களின் பொருட்டு அவரை இழிவுபடுத்த அவரை நாயோடு ஒப்பிடுவது நகைமுரணாகவே இருக்கிறது.  பொதுச்சமூகத்தின் ஒழுக்க விதிகளுக்கு வெளியேயான பாலுறவுகளில் ஈடுபடுபவர்களையும், ஏதேனும் சூழல்களில் தம் பிள்ளைகளைக் கொல்லும் பெற்றோரையும்கூட நாம் நாயோடு ஒப்பிடுவதுண்டு.

இங்கு இரண்டு கேள்விகளுக்கு நான் விடைதேட முயல்கிறேன். ஒன்று, நாய்கள் அல்லது பொதுவாக பிற விலங்குகள் ‘அப்படி’ச் செய்வதில்லையா? அதாவது மனித ஒழுக்கவிதிகளை மீறுவதில்லையா? அடுத்து, அப்படி மீறுவதையோ அல்லது அவை மீறாதிருப்பதையோவைத்து நம்முடைய விழுமியங்களை மதிப்பிட முடியுமா?

உண்மையில், நாய்கள் தம் குட்டிகளைக் கொல்வதில்லை என்றாலும் பல்வேறு விலங்குகளிடையே ‘சிசுக்கொலை’ பழக்கம் (infanticide) இருக்கிறது. 260 இனங்களைச் சார்ந்த பாலூட்டிகளிடையே செய்யப்பட்ட ஆய்வில், அவற்றில் 119 இனங்களைச் சார்ந்த ஆண் விலங்குகள் தம் இனத்துக் குட்டிகளைக் கொல்லும் பழக்கம் கொண்டவையாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது விலங்குகளின் இயல்பான பண்பா அல்லது நோய்க்குறியா என்பது குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவினாலும்கூட பல்வேறு விலங்குகளிடையே மிகச்சாதாரணமாகவும் மிகப்பரவலாகவும் சிசுக்கொலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பறவைகளைப் போலன்றி பாலூட்டிகளின் இனச்சேர்க்கையானது அதிக கவனத்தையும் நேரத்தையும் கோரு. இனச்சேர்க்கையில் ஈடுபடும் ஒரு பெண்விலங்கின் குட்டி ஆபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமிருப்பதால் குட்டிகளை பராமரிக்கும் பெண் விலங்குகள் இனச்சேர்க்கை செய்வதில்லை. இச்சூழலில் பெண்விலங்கோடு இணைய ஆண் விலங்குக்கு குட்டியைக் கொல்வது அவசியமாக இருக்கிறது. சிங்கங்கள், சில வகைக் குரங்குகளில் பெண்ணோடு இணைசேர்வதற்கு ஆண் விலங்குகள் குட்டிகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. மனித இனத்திலும்கூட பாலுறவுக்கு இடையூறாக இருக்கும் குழந்தைகள் அரிதான சந்தர்ப்பங்களில் கொல்லப்படுவது நாம் அறிந்ததே.

பெண்விலங்குகளும்கூட தம் குட்டிகளையோ அல்லது தம் இனத்தைச் சேர்ந்த மற்ற விலங்குகளின் குட்டிகளையோ கொல்கின்றன. உதாரணமாக, பெண் கரடிகள் மற்றும் சிலவகை நாரைகள் தம் குட்டிகள் / குஞ்சுகளை உண்பது தெரியவந்திருக்கிறது. இவை அபூர்வமான சந்தரப்பங்கள்தான் என்றாலும் இவற்றின் தாயின் பிழைத்திருத்தலுக்கு இது உதவுகின்றது. கரடிகள் நோய்வாய்ப்பட்ட தம் குட்டிகள் இறந்துபோவதற்கு முன்பு அவற்றிய உண்டு தம் குட்டிகளின் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் ஊட்டத்தை தமதாக்கிக்கொள்கின்றன. நாரைகளோ வறட்சி காலத்தில் தாமும் இறந்து தம் குஞ்சுகளும் இறப்பதற்குப் பதிலாக தம் குஞ்சுகளைக் கொன்று உணவாக்கி வறட்சியைத் தாக்குப்பிடிக்கின்றன. ஒருவேளை, தம் குஞ்சுகளை அவை காப்பாற்ற நினைத்து அவை உயிர்விட்டால் குஞ்சுகளும் சேர்ந்தே மடிந்துபோகும்.

குட்டிகளைக் கொல்வதுபோல தன் காதலனை இனச்சேர்கை முடிந்ததும் கொன்று தின்றுவிடும் விலங்குகளும் உண்டு. உயிரியல் ரீதியில் பெண் கருவுற்றபின் ஆண் பயனற்றவன் ஆகிவிடுகிறான். ஆம்! விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலான விலங்குகளில் குழந்தை வளர்ப்பில் ஆணுக்கு எந்த பங்குமிருப்பதில்லை. ஆகவே அவனுடைய இருத்தலுமேகூட அவசியமற்றது. சிலவகை சிலந்திகள், கும்பிடு பூச்சி (Stick insect) போன்றவை கலவிக்குப்பின் காதலனை உண்டு தம் கருவுக்கு ஊட்டமளிக்கின்றன. ஆண் மைய மனித சமூகத்தில் இதற்கான சாத்தியங்கள் வெகு அரிதே.

மீண்டும் நாய்ப் பஞ்சாயத்துக்கே வருவோம்.

நம் சமூகத்தில் தன்பாலீர்ப்பாளர்களை இழிவுபடுத்த “சீச்சீ… நாய்கூட இப்படிப் பண்ணாது” என்று  சொல்வதையும் குறிப்பாக சமூக வலைதள பக்கங்களில் தன்பாலீர்ப்பாளர்கள் குறித்தப் பதிவுகளின் கீழே மேற்கண்ட ‘பொன்மொழி’யைப் பலரும் பின்னூட்டமிடுவதையும் நாம் அதிகமாய் பார்க்க முடியும்.  உண்மையில், எந்த நாயும்கூட அப்படிப் பண்ணாதா? இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மனிதன் உள்ளிட்ட சில விலங்குகள் ஆண்டின் எந்த காலத்திலும் இனச்சேர்க்கை செய்யக்கூடியவை. உதாரணமாக, சேவல் கோழிகள் எப்போதெல்லாம் வாய்ப்புகிடைக்கிறதோ அப்போதெல்லாம் இனச்சேர்க்கையின் ஈடுபடுவதைப் பார்க்க முடியும். இவற்றின் ஈர்ப்பும் கலவியும் சில நொடிகளே நீடிப்பது. மாறாக, பல விலங்குகள் ஆண்டின் குறிப்பிட்ட ஒரு பருவத்தில் (அல்லது சில பருவங்களில்) மட்டுமே இனச்சேர்க்கை செய்யக்கூடியவை. குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் இனச்சேர்க்கை செய்யும் விலங்குகளின் குட்டிகள் பிறக்கும் பருவமானது செழிப்பானதாகவும் சாதகமானதாகவும் அமையுமாறு அவற்றின் இனச்சேர்க்கை காலத்தைத் தேர்ந்துகொள்கின்றன.

உதாரணமாகத் தவளைகள் பருவமழை தொடங்கும் முதல் நாள் இரவில் கலவிக்காய் குரல் எழுப்புகின்றன. ஆண் தவளையானது பெண்ணின் முதுகை இறுகத் தழுவ முட்டைகளும் விந்துக்களும் மழைநீர்க்குட்டையில் பீச்சப்படுகின்றன. இந்த வெளிப்புறக் கருவுறுதலுக்கு மழைநீர்க் குட்டையும் தலைப்பிறைட்டைகள் பிழைத்துக்கொள்ள குட்டைகளில் தண்ணீர் ஓரிரு வாரங்கள் வற்றாதிருப்பதும் அவசியம். ஆகவே, குட்டைகள் வற்றிப்போவதற்கு முன்பு பிழைத்துக்கொள்ள மழையின் தொடக்கத்தில் கலவிகொள்வது தேவையாய் இருக்கிறது. இங்கே, காலநிலை மாற்றத்தால் நிகழும் பருவம் தவறிய ஒரு நாள் மழை, வறட்சி போன்றவை  இத்தகைய விலங்குகளின் இருத்தலில் எத்தனைத் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமென்பதை இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடியும்.

நாய்களும்கூட பருவமழையின் தொடக்க நாட்களின் இனச்சேர்க்க செய்கின்றன. மழை பெய்த முதல் நாள் காலையில் அதற்கு முன்புவரை தனித்துத்திரிந்த நாய்கள் தொடர்வண்டிபோல ஒன்றன்பின் ஒன்றாக ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். இங்கே, பருவமழையால் சூழலில் ஏற்படும் மாற்றம் நாய்களின் கலவியின்பத்தைத் தூண்டியிருப்பதை நாம் உணரமுடியும். இந்த ‘மழைச் சூழல்’ மனிதரிடையேயும்கூட சற்று வேலைசெய்வதை இங்கு விவரிக்க வேண்டியதில்லை.

நாய்களின் கலவி விளையாட்டு குறித்து விரிவாகப் புரிந்துகொண்டு எழுத வேண்டுமென்பது என் நீண்டநாள் ஆர்வங்களில் ஒன்று. ஆனால் மிகை ஒழுக்கமும் கலாச்சாரக் கட்டுப்பாடும் கொண்ட இந்த சமூகத்துக்குப் பயந்து அந்த ஆய்வில் நான் பெரிதாய் ஈடுபட்டதில்லை. எனினும் அவற்றின் அழகானக் காதல் சம்பிரதாயங்களை ஓரக்கண்ணால் இரசித்தபடியே “சீச்… சீ” என்று முணுமுணுத்தபடி யோக்கியனாகக் கடந்து செல்லும் அந்த நாலுபேரடங்கிய சமூகத்தில் நான் இல்லை. மாறாக நின்று நிதானித்துப் அவதானித்தபடியேக் கடப்பவன் நான்.

அன்று காலை 6 மணிக்கே மொட்டை மாடியிலிருந்து பைனாகுலரால் தெளிவாகப் பார்க்கும் தூரத்தில் எட்டு நாய்கள் குழுமியிருந்தன. இணை சேரவிருக்கும் இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று முட்டி மோதியபடி முதல் கட்ட காதல் சம்பிரதாயங்களில் ஈடுபட்டிருந்தன. நாய்களின் இணைத்தேர்வு கடும் போட்டியும் மூர்க்கமும் நிறைந்தது. இந்த முதல் கட்டத்தில் தனது வாய்ப்புக்காக ஒவ்வொரு ஆண் நாயும் கடுமையாகப் போட்டியிடுவது வழக்கம். கெடுவாய்ப்பாக, எல்லா ஆண் நாய்களோடும் பெண்ணுக்கு “கெமிஸ்டிரி” வேலை செய்வதில்லை. மற்ற ஆண் நாய்களை வெற்றிகொண்டு முன்னேறி பெண்ணை நெருங்கும் வெற்றி பெற்ற நாயைக்கூட சில நேரங்களில் பெண் விலங்குகள் தம் கோபக்குரைத்தலால் விலக்குவதைப் பார்க்க முடியும். சில நேரங்களில் பெண் “நோ” சொன்னவுடன் ஆண் விலகிவிடுவதில்லை. தொடர் உரசல் அணைத்தல் முயற்சிகளில் பெண்ணைப் படியவைத்துவிடுவதுண்டு. இதனிடையே தோல்வியுற்ற பிற ஆண் நாய்களும்கூட ஏதேனும் ஒரு சாத்தியத்துக்காய் கெஞ்சுவதும் மிஞ்சுவதுமாய் இணைக்கிடையே புகுந்து தம் முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட ஆண் நாயின் முழுமையான ஆக்கிரமிப்பில் பெண் நாய் வந்ததும் இரண்டாம் கட்டம் தொடங்கும். பொதுவாக இரண்டாம் கட்டம் தொடங்கியதும் பிறநாய்கள் ஏமாற்றத்துடன் கொஞ்சம் விலகி நிற்கும். ஒரு பெண் நாயுடன் இணைசேரச் சில நேரங்களில் பத்துக்கும் மேற்பட்ட ஆண் நாய்கள் வரை போட்டியில் பங்கேற்கும். மரண பீதிதரும் கடும் கோபமும் ஆற்றாமையும் வெளிப்படுத்தும் ஆண் நாய்களின் உறுமலை இந்நேரத்தில் கேட்க முடியும். விலங்குலகத்தில் போட்டியில் வெல்ல முடியாத பெரும்பாலான விலங்குகளுக்கு தம் வாழ்நாளில் இனச்சேர்க்கைக்கான வாய்ப்பே கிட்டுவதில்லை.

ஆனால், இந்த வழக்கங்களுக்கு மாறாக நான் பார்த்த காட்சியில் ஒரு பேரமைதி நிலவியது. முதல் கட்ட நெருக்கத்தில் இருந்த இரண்டு நாய்களுக்குமிடையே ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும் அன்பும் படர்வதைக் காணமுடிந்தது. அவை ஒன்றுக்கொன்று முகத்தைத் தேய்த்துக்கொண்டும், இடித்து உரசிக்கொண்டும், மல்லாந்து படுத்தும், நளினமானக் காதல் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. எனினும், சுற்றியிருந்த மற்ற நாய்கள் எவையும் வழக்கமானத் தீவிரத்துடன் தமக்கான வாய்ப்புக்காய் முயற்சிக்கவில்லை. காதலர்களின் அருகே அவை ஆர்வமாய் நெருங்குவதும் எதோ காரணத்துக்காய்ப் பின்னர் விலகிச் செல்வதுமாய் இருந்தன.

விநோதமான இந்தக் காட்சி என் ஆர்வத்தை அதிகரிக்க கண்களைக் கூர்மையாக்கினேன். காதலில் ஈடுபட்டிருந்த நாய்கள் பரஸ்பர ஒத்துழைப்புடனும் ஆழமானக் காதலுடனும் ஒன்றையொன்றுத் தழுவியபடி முட்டி மோதிக் கொண்டாலும் அடுத்தகட்ட சம்பிரதாயங்களில் அவை நுழையவில்லை. உற்றுநோக்கியபின்தான் தெரிந்தது அவையிரண்டும் ஆண் நாய்கள் என்று!

மனிதர்கள் மட்டுமல்ல நாய்களும் ஏனையபிற விலங்குகளும்கூட இயல்பாகவே அப்படிச் செய்கின்றன. நல்வாய்ப்பாக, இதை எதிர்கொள்வதில் மனித சமூகத்தைவிட நாய் சமூகத்துக்கு ஒரு முதிர்ச்சி இருந்ததை உணர முடிந்தது.

அந்த அழகிய இணையர் தம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்த ஆறுபேர் அடங்கியச் சமூகத்துக்காகத் தம் உணர்வுகளையும் தேவைகளையும் புதைத்துக் கொள்ளவில்லை. அங்குக் குழுமியிருந்த சமூகமும்கூட இயற்கையான இந்த நிகழ்வைக் கண்டிக்கவோ கல்லெறியவோ இல்லை. “டேய் மச்சி உனக்கு ஒண்ணு தெரியுமா?” என்று தன் நண்பர்களுக்குத் தொலைபேசவில்லை. தமக்குள் பல்லை இளித்தபடியேக் காதோடு காதாய்க் கிசுகிசுக்கவுமில்லை. ஆட்டத்தைக் கலைத்துவிடவும் முயலவில்லை. மாறாக அந்த இளம் காதலர்களை மனிதப் பதர்களிடமிருந்து பாதுகாக்கும் கோட்டைச்சுவர் போலச் சுற்றிலும் நின்றுகொண்டிருப்பது போலத் தோன்றியது எனக்கு.

நாய்களின் இயற்கையானப் பாலியல் தேவைக்குக் ‘காயடித்து’ அவற்றைச் சங்கிலியில் கட்டி காம்பவுண்டு சுவருக்கு உள்ளே அடைத்து வைத்து வெளியே நடக்கும் இந்த சுதந்திரக் காதலை ஏக்கத்தோடுப் பார்க்கச் செய்யும் சல்லிப்பகள் அடங்கிய இச்சமூகம் நிச்சயம் நாய்கள் போல இல்லைதான். நாய்கள் மட்டுமல்ல பெருவாரியான விலங்குகளிடையே தன்பாலீர்ப்பு இயல்பானது. அதாவது இயற்கையானது. அவை எந்தவொரு பிற விலங்கால் உந்தப்பட்டோ அல்லது பாலியல் தளங்களில் காணொளிகளைப் பார்த்துவிட்டோ இவற்றில் ஈடுபடுவதில்லை.

எதிர்பாலின ஈர்ப்புக்கு வெளியே தன்பாலீர்ப்பு உட்பட பல்வேறுபட்டு பாலியல் விருப்புகள் அதிகபட்சமாக 75 விழுக்காடு வரைகூட விலங்குலகத்தில் காணப்படுகின்றன என்கின்றன ஆய்வுகள். ஒவ்வொரு 20 ஆண்விலங்கிலும் ஒரு ஆண் தன்பாலீர்ப்பு கொண்டதாக இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. எனினும் பெண்களில் இத்தன்மை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இங்கும் பெண்கள் தம்மை வெளிப்படுத்த ஒருவேளை அஞ்சுகிறார்களோ?

தன்பாலீர்ப்பு மட்டுமல்ல, சுய இன்பம்கூட விலங்குகளிடையே மிகவும் சாதாரணமானது. கிண்டி சிறுவர் பூங்காவில் ஒரே சிறையில் (ஆம் சிறையேதான்) அடைக்கப்பட்ட இரு ஆண் குரங்குகளில் ஒன்று சுய இன்பம் செய்வதை நான் (அதற்கு எந்த சங்கடமும் கொடுக்காத தொலைவிலிருந்து) பார்த்திருக்கிறேன். வக்கிரம் பிடித்த மனிதர்களுக்கு மட்டுமேயன்றி சிறுவர்களுக்கு இக்காட்சிகள் எத்தகைய அசூசையையும் ஏற்படுத்தாது என்று நான் நம்புகிறேன். இது கூண்டுக்குள் இயற்கைக்கு மாறாக எதிர்பாலுடன் இருக்கும்படியாக அடைத்துவைக்கப்பட்ட குரங்குதானே என்று நீங்கள் நினைக்கலாம். காடுகளில் வாழும் சுதந்திரமான ஆண் லங்கூர் குரங்கு சுய இன்பத்தில் ஈடுபடுவதை நேரடியாகக்கண்டு ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் ‘Wildlife and Conservation Biology Research Lab’ ஐ சார்ந்த ஆய்வாளர்கள். ஏராளம் விலங்குகளில், ஆண் மற்றும் பெண் விலங்குகள் இரண்டுமே சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் மிகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் பாடகி வாணி ஜெயராம் மறைவையொட்டி முகநூலில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில், வயதான காலத்தில் மனிதர்கள் மட்டுமே கைவிடப்பட்டு தனிமையில் உழல்வதுபோலவும் பூனை, நாய், காகங்கள் போன்றவை “எங்கோ போய் மறைந்துவிடும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், முதுமையில் பரிதாபகரமான மரணத்தை எதிர்கொள்வது மனிதர்களல்ல; விலங்குகளே.

ஒரு இனத்தின் பிழைத்திருத்தலில் தம்மைத்தாமே பராமரித்துக்கொள்ள இயலாத வயதான விலங்குகளுக்கு எந்த அவசியமும் இருப்பதில்லை. ஆகவே பரிணாம வளர்ச்சியில், முதிய விலங்குகளின்மீது எந்த கருணையும் காட்டப்படுவதில்லை. இயல்பிலேயே எந்த உயிரினத்தின் இருத்தலிலும் முதிய விலங்குகள் ஒரு சுமையாகவே இருக்கின்றன. ஆகவே, இயல்பூக்கத்தினால் உந்தப்பட்ட அன்பென்று எதுவும் அவற்றிமீது பொழியப்படுவதில்லை. எப்போது ஒரு விலங்கு தானே உணவு தேட முடியாத நிலைக்குச் செல்கிறதோ அப்போதே அது பசியால் இறந்துவிடும். அபூர்வமான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து எந்த சூழலிலும் விலங்குகள் வலுவிழந்த உயிரியல்ரீதியாக பயனற்ற தம் தாய் தந்தையையோ அல்லது சகவயதான விலங்குகளையோ பராமரிப்பதில்லை. மாறாக, மனித விலங்குகளில் பேரப்பிள்ளைகளுக்கு தம் அனுபவத்தைக் கடத்துவதுபோன்ற சில முக்கியத்துவமிக்க பொறுப்புகள் முதியவர்களுக்கு இருப்பதால் இயல்பூக்கத்தின்பாற்பட்ட ஒரு பாசப்பிணைப்பு வயதானோர்மீது இருப்பதுபோலத் தோன்றுகிறது. எனினும், இது பெற்றோர் பிள்ளைகளுக்கும் இணையர்கள் ஒருவருக்கொருவரும் பொழியும் பாசத்தைவிட மிகவும் வலுக்குறைந்ததுதான்.

சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்!

இயற்கை என்பதை ஒரு புனிதமான அப்பழுக்கற்ற ஆன்மாவாக பார்க்க முனையும் நமது குறைவுபட்டப் பார்வையே அதற்குள் நீதி, நேர்மை, நியாயம் போன்ற விழுமியங்களைத் தேட முயல்கிறது. விலங்கு உலகத்திலும்கூட (உணவுத்) திருட்டு, சிசுக்கொலை, பாலியல் வல்லுறவு, முதியோரைக் கைவிடுதல், மனித அர்த்தத்திலான பலதார மணம் போன்ற பண்புகள் உண்டு. ஒரு நாய் ஒரு பருவத்திலேயே பல நாய்களுடனும், ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பல நாய்களுடனும்கூட உறவுகொள்ளக்கூடியது. இவையெல்லாமே விலங்குலகத்தில் இயல்பானது. அப்படியானால் இவற்றை மனிதர்களுக்கு நாம் எப்படிப் பொருத்துவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

ஏன் பொருத்த வேண்டும்?

தான்தோன்றித்தனமான பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு விலங்கும் தான் பிழைத்திருக்க அனுகூலமான ஒரு நடத்தையைத் தக்கவைத்து இங்கே நிலைத்திருக்கின்றன. பாலியல் வல்லுறவில் ஈடுபடும் ஒரு ஆண் குரங்கை நாம் நமது நீதி நியாயத் தராசில் வைத்து மதிப்பிட முடியாது. அது அபத்தமானது. அதே நேரத்தில் இந்த இயல்பின் தொடர்ச்சியாக இத்தகைய செயல்களில் ஈடுபடும் மனிதர்களின் நடத்தையை நியாப்படுத்த முயல்வதும் ஆபத்தானது. மனிதனுடைய சிந்தனை வளர்ச்சியும்கூட ஒரு பரிணாம வளர்ச்சியே. அந்த அளவில் நாம் எட்டியிருக்கும் நம்முடைய பகுத்தறிவும் அதனால் விளைந்த நீதி நியாய உணர்வுகளையும்கூட நம் பரிணாமத்தின் நீட்சியாகவே நான் கருதுகிறேன். அதனடிப்படையில் வார்த்தையிலேயே வக்கிரமிக்க சகமனிதனின் விருப்பத்துக்கு மாறான ‘வல்லுறவு’ என்ற மனிதத்தன்மையற்ற ஊறுவிளைவிக்கும் செயல்பாட்டை நாம் மனிதர்களுக்கு ஏற்க இயலாது.

பாலியல் வல்லுறவில் விலங்குலக நடத்தையை நாம் நிராகரிக்கிறோம் என்றால் தன்பாலீர்ப்பை இப்பின்னணியில் எப்படி நாம் அங்கீகரிப்பது என்றொரு கேள்வி அடுத்து எழுகிறது. இங்கே ஒரு ஆண் இன்னொரு ஆணையும், ஒரு பெண் இன்னொரு பெண்ணையும் விரும்புவதைத்தாண்டி, தன்பாலீர்ப்பு என்பதை நான் மிகவிரிந்த பொருளிலேயே (LGBTQA+ அதாவது Lesbian + Gay + Bisexual + Trans + Queer + Asexual) பயன்படுத்துகிறேன். அதாவது பாலீர்ப்பு அற்றவர்கள் உள்ளிட்ட எதிர்பாலீர்ப்புக்கு வெளியேயான எல்லா உறவுகளையும் உள்ளடக்கியே குறிப்பிடுகிறேன். மேற்கண்ட கேள்வியே எதிர்பாலீர்ப்பு மட்டுமே இயற்கையானது என்ற புரிதலிலிருந்தே வருகிறது.

இந்த பார்வையிலேயே அடிப்படையான தவறு இருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். பரிணாமம் தான்தோன்றித்தனமானது. அதற்கு எந்த நோக்கமும் இல்லை. எந்த உன்னதமான திட்டத்தோடும் அது இயங்கவில்லை. பலகோடி வருடங்களில் விலங்குகளிடையே ஏற்பட்ட ஏதேச்சையான உடலியல் மாற்றங்களில் சூழலுக்கு பொருந்திப்போவவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன; அவ்வளவே. எதிர்பாலீர்ப்பு மட்டுமே அடுத்தத் தலைமுறையை உருவாக்கவல்லது என்பதும் சுய இன்பமோ அல்லது தன்பாலீர்ப்போ அடுத்தத் தலைமுறையை உருவாக்க எவ்விதத்திலும்  பயன்படாது என்பதும் உண்மைதான்.

ஆனால், தன்பாலீர்ப்போ அல்லது எதிர்பாலீர்ப்போ அல்லது பாலீர்ப்பு அற்ற நிலையோ எதுவாக இருப்பினும் அது வலிந்து திணிக்கப்பட்டதாயன்றி இயல்பானதாகவும் பரிணாமத் தொடர்ச்சி கொண்டதாகவும் இருக்கும்போது

இவற்றில் ஒன்றை சரியானது என்றும் இன்னொன்றைத் தவறானதென்றும் அல்லது இயற்கைக்கு முரணானதென்றும் எப்படிச் சொல்ல முடியும்? இந்த அடிப்படையில் சக மனிதனின்மீதான தூய அன்பினால் விளையும் எதுவும் அப்பழுக்கற்றது என்றும் இயல்பானது என்றுமே நான் கருதுகிறேன். பொதுவாகவும் பெருவாரியானதாகவும் இருப்பது மட்டுமே ஒன்றுக்கு நியாத்தைத் தந்துவிடுமா என்ன?

ஒருவன் அல்லது ஒருத்தி தன் எதிர்பாலினத்தால் ஈர்க்கப்படுவதை மட்டுமே இயல்பென்று ஏற்கும் இச்சமூகம், எவரிடத்திலும் எந்தவிதமான பாலீர்ப்புமற்ற (Asexual) மனிதர்களின்மீது அத்தகைய வன்மத்தை வெளிப்படுத்துவதில்லை. பல நேரங்களில் எள்ளல்  பார்வையோ அல்லது சில நேரங்களில் பரிதாபப் பார்வையோ அல்லது (அவன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் ஒரு அயோக்கிய சாமியாராக இருந்தால்) பக்திப் பரவசத்தையோ வெளிப்படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். அதாவது நீ என்னைப்போல எதிர்பாலீர்ப்புகொண்டவனாக இருக்கலாம்; அல்லது, பாலீர்ப்பே இல்லாதவனாகக்கூட இருக்கலாம். ஆனால், உன் பாலைச் சார்ந்த ஒருவரின்மீது ஈர்ப்பு உனக்கு ஏற்பட்டால் நான் வெகுண்டெழுந்து உன்னை இழிவுபடுத்துவேன் என்கிறது இந்தப் பொதுப்புத்தி.

ஒருவேளை நாய்கூட அப்படிப் பண்ணாவிட்டாலும் என்ன?

இயற்கையான – எவருக்கும் ஊறுவிளைவிக்காத – பாலினம் தாண்டிய – இருமனங்களின் இணைவை, நாய்களைப் போலவே இயல்பாய் கடப்பதே பெரியமனிதர்களுக்கு அழகு! விலங்குகள் விலங்குகளாகவே இருக்கட்டும்; நாம் பெரிய மனிதர்களாய் நடந்துகொள்வோம்!

  • ஜீயோ டாமின். ம
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments