காலநிலை மாற்றத்தின் தீவிரம்: சீனாவில் தேசிய வறட்சி அபாயநிலை அறிவிப்பு

Source: SCMP

சீனாவில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்ப அலை மற்றும் இயல்பை விட குறைவான மழைப்பொழிவால் உண்டான வறட்சியின் காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் முதல் முறையாக தேசிய அளவில் வறட்சி அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா உலக வல்லரசுகளில் ஒன்று. உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. வரலாற்று ரீதியாக கார்பன் உமிழ்வில் அதன் தாக்கம் குறைவு என்ற பொழுதும் தற்போதைய நிலையில் உலகிலேயே மிக அதிக அளவு கார்பனை உமிழும் நாடாக உள்ளது. உலக வல்லரசுகள் காலநிலை மாற்றம் தங்களை என்ன செய்துவிடும் என்ற அலட்சியமான  எண்ணத்தில் இத்தனை காலம் இருந்துவிட்டு வெற்று ஒப்பந்தங்களை மட்டும் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் இனி அவைகளால் அப்படி இருக்க இயலாது என்பதை அண்மையில் சீனாவில் நடக்கும் தீவிர காலநிலை நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

காலநிலை மாற்றம் வளர்ந்த நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது. உலகின் பெரிய அண்ணன் என்ற மனநிலையில் இருக்கும் அமெரிக்கா, அதனை வீழ்த்தி முதலிடம் பிடிக்க அடம்பிடிக்கும் சீனா, உலகின் வளமான செழிப்பான கண்டம் எனக் கூறப்படும் ஐரோப்பா என அனைத்தும் இந்த ஆண்டில் புவி வெப்பமயமாதலால் ஏற்பட்ட அதீத வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றன. இத்தீவிர வெப்பத்தால் உலகில் பல்வேறு நாடுகளின் கடும் வறட்சி ஏற்பட்டு அந்நாடுகளின் உணவு பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. சென்ற இதழில் ஐரோப்பிய நாடுகள் எப்படி வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டன என்பதை பார்த்தோம். தற்பொழுது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா என்ன சிக்கல்களை காலநிலை மாற்றத்தால் அண்மையில் எதிர் கொண்டது என பார்ப்போம்.

கடந்த ஜூன் மாதம் தீவிர மழைப்பொழிவால் கடும் வெள்ளத்தை சீனா எதிர்கொண்டது. இந்த வெள்ளம் சீனாவின் தென்பகுதியை  பாதித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அதன் வடக்குப் பகுதி வெட்ப அலைகளால் பாதிக்கப்பட்டு அதீத வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. ஐ.பி.சி.சியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆறாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கை இனிமேல் ஒரே நேரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட தீவிர காலநிலை  நிகழ்வுகளையும் ஒரு பேரிடர் நிகழ்ந்து அதிலிருந்து மீள்வதற்குள்ளாகவே இன்னொரு பேரிடரை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என எச்சரித்தது போலவே சீனாவில் நடந்து வருகிறது.

கடந்த பல பத்து ஆண்டுகளில் இல்லதா அளவிற்கான வெள்ளத்தை தற்பொழுது சீனா பார்த்துள்ளது. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பும்  உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சீனாவிற்கு வெள்ளம் புதிதல்ல என்ற போதிலும் இது மிகவும் கடுமையான வெள்ளம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த அளவு மோசமான நிலை வரும் என சீனா இதுவரை நினைத்துக் கூட பார்த்திருக்காது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனத்தலைநகரம் பீஜிங் உட்பட அதன் வடமேற்குப் பகுதி வெப்ப அபாயத்தில் இருக்க அதன் தென்பகுதியோ வெள்ளத்தில் தவித்தது. கடந்த ஆகஸ்ட் 15ல் ஹாம்சும் நகரில் உள்ள கட்டிடத்தில் மிகப்பெரிய பனிக்கட்டிகள் வந்து இறங்கின, அந்த இடம் உணவுப்பொருட்களை பதப்படுத்தும் இடமோ அல்லது ஐஸ்கிரீம் செய்யும் இடமோ அல்ல அது ஒரு பிரபலமான மருத்துவமனை. அங்குள்ள மருத்துவமனையைக் குளிர்விப்பதற்காக  அப்பனிக்கட்டிகள் கொண்டுவரப்பட்டன. சீனாவில் சில இடங்களில் ஆகஸ்ட் மாதம் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை தற்போது சீனா சந்தித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வறட்சியின் தாக்கத்தால் ஆறுகள் வறண்டு நீரோட்டம் முழுமையாக குறைந்துள்ளது. தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட இந்த வெப்ப அலையால் மொத்த சீனாவும் மின்சார தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சீனாவின் மின்சார உற்பத்தியில் நீர் மின்சாரம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இதுவரை சந்திக்காத அளவு மின் பற்றாக்குறையை தற்பொழுது சீனா சந்தித்து வருகிறது. எனவே அரசாங்கம் மின்சார சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மின்சாரப் பற்றாக்குறை காரணமாக அங்கு 16,000 முதல் 17,000 தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.இதனால் பல வேலைவாய்ப்பு பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய ஆறான Yangtze இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டு நீர்வரத்து குறைன் துள்ளது. ஒருபுறம் குறைந்த நீர்வரத்தால் மின்சார உற்பத்தி பாதிப்படைந்திருக்கும் வேளையில் சீனாவின் வடக்குப் பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தினால் குளிர்சாதன பயன்பாடு பெருகி அங்கு மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.

மின்னுற்பத்தி நிறுவனங்கள் இதனால் மின்சாரத் தேவையை சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றன. நாட்டின் வறட்சி காரணமாக அங்கு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி கிராமங்களுக்கு நீர் எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்கு நீர் வழங்கும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் சீன அரசாங்கம் தேசிய வறட்சி அபாய நிலையை அறிவித்துள்ளது.

சீனாவில் வறட்சிக்கான நான்கு நிலை அபாய எச்சரிக்கைகளில் மூன்றாம் நிலையான மஞ்சள் எச்சரிக்கை இப்போது விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இரண்டு மாகாணங்களில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் வறண்ட வானிலையும் வறட்சியும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை இந்த எச்சரிக்கை குறிக்கிறது. சீனாவின் வானிலை ஆய்வு மையம் கடந்த ஆகஸ்ட் 3ம் வாரத்தில் வெளியிட்ட அறிவிப்பில் நாட்டில் உள்ள 244 நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டும் எனவும் 407 நகரங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசைத் தாண்டும் எனவும் எச்சரித்திருந்தது.

ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரையில் சீனாவின் 8 6 மாகாணங்களைச் சேர்ந்த 8 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடிநீர் வழங்கல் சேவை பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது சீனாவின் விவசாயம் மிகப் பெரும் பாதிப்படைந்துள்ளது. சீன அரசாங்கம் இதன் காரணமாக இரசாயனத்தை பயன்படுத்தி செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த மேகவிதைப்பு(Cloud seeding) போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் மேக விதைப்பை அதிகம்  மேற்கொள்ளும் நாடாக சீனா உள்ளது.இந்த மேகவிதைப்பு என்பது சில இரசாயனங்களை மேகங்களின் மீது தூவுவதன் மூலமாக மழைப்பொழிவை ஏற்படுத்த முயல்வதாகும்.

உலகம் முழுவதும் அது வளர்ந்த நாடாக இருந்தாலும் வல்லரசு நாடாக இருந்தாலும் அது உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அந்நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன. எனவே உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து நம் புவியைக் காப்பதற்கான பணிகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments