நாம் வசிக்கும் இந்த உலகம் ஏழு கண்டங்களும், ஐந்து பெருங்கடல்களால் சூழப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்தானே? மூன்றாம் வகுப்பு படிக்கும் போது கண்டங்கள் மற்றும் கடல்களின் பெயர்களை வரிசையாகக் கூறி ஆசிரியரிடம் மிட்டாய் வாங்கிய நினைவுகள் இன்றும் உள்ளது. அப்போது இருந்த மிட்டாய்கள் போல இப்போது இல்லை. மிட்டாய்களில் பல வித்தியாசங்களும், பல ரகங்களும் வந்துவிட்டன. வெறும் 15-2௦ ஆண்டுகளில் மிட்டாய்களில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றால், சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தப் பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கும்?
ஒரு உருவத்தைத் துண்டுகளாக்கிக் கலைத்துப்போட்டுப் பின் ஒன்றிணைக்கும் புதிர் விளையாட்டைப் பெரும்பாலானோர் விளையாடி இருப்போம். அந்த விளையாட்டின் ஆர்வத்தோடு உலக வரைப்படத்தை நாம் அனைவரும் கண்டால் நமக்குள் ஒரு கேள்வி எழக்கூடும். சிறுவயதில் உலக வரைபடத்தைப் பார்க்கையில் எனக்கும் அந்தச் சந்தேகம் எழுந்தது. பெரும்பாலும் அக்கேள்வி, பூமி தோன்றுகையில் இத்தனை கண்டங்களும், கடல்களும் மட்டும் தான் இருந்ததா? என்பதாகவே அது இருக்கும். அதற்குமுன், உங்களுக்கு ஒருவரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
அல்பர்ட் வேக்னேர் (Alfered Wegner), நம் ஊர் வானிலை புகழ் ரமணன் போல் 1900 களில் வாழ்ந்த ஓர் ஜெர்மானிய வானிலை ஆராய்சியாளர். இவருக்கும் அந்தப் புதிர் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம் போல. தனக்கு எழுந்த சந்தேகத்தைத் தீர்க்கப் பல அடிகளை அவர் எடுத்து வைத்திருக்கிறார். உலக வரைபடத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, எழுந்த சந்தேகம் அவரின் வாழ்க்கையையே மாற்றியது. பல ஆய்வுகளுக்குப் பின்னர், அவர் கண்டங்களின் அமைப்பும், அதன் நகர்வும் பற்றிய கோட்பாட்டை முன்வைக்கிறார். முதலில் அவர் கேலிக்கு உட்பட்டாலும், வேக்னேர் தனது முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இந்தப் பூமி தோன்றும் போது ஒரே நிலப்பரப்பாய் தான் இருந்துள்ளது எனும் முடிவிற்கு வந்தார்.
450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பூமியில் ‘பேன்ஜியா’ (Pangea) என்கிற ஒற்றை நிலப்பரப்பும், ‘பேன்தலசா’ (Panthalasa) என்கிற கடல் பரப்பும் மட்டுமே இருந்துள்ளது. பின், 250 கோடி ஆண்டுகள் கழித்து ஒவ்வொரு கண்டமாக நகரத் தொடங்குகியுள்ளது.
எப்படிக் கண்டங்கள் நகரத் தொடங்குகிறது?
நாம் வசிக்கும் இந்தப் பூமியை ஆழத்தின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம். புவி ஓடு (earth crust), புவி மூடகம் (Earth mantle), புவிக் கருவம் (core). இதில் புவி மூடகம் ஏறத்தாழ 2900கி.மீ. தடிமன் உடையது. பூமிக்கு அடியில் செல்லச் செல்ல வெப்பம் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே. இப்பெரிய புவி மூடகத்தில் நிலவும் சமமற்ற வெப்பமானது சில மாறுதலை உண்டாக்க வழிவகுக்கிறது. அடிப்பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தினால் அடர்த்திக் குறைந்த தீக்குழம்பு மேலே சென்று அடர்த்தி அதிகமாக மாறுவதும், மேலுள்ள அடர்த்தியான தீக்குழம்பு கீழிறங்கி அடர்த்திக் குறைந்து, எனத் தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கும். இந்தச் செயல் முறையை conventional current என்று அழைப்பார்கள். இந்தச் செயல்முறை நடந்து கொண்டே இருப்பதால் கண்டத் தட்டுகள் (plate tectonics) நகரத் தொடங்குகின்றன. இந்தக் கண்ட தட்டுகள் தான் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறக் காரணியாக இருக்கிறது.
அவ்வாறு நகருகையில் பெரும் நிலப்பரப்பாய் இருந்த ‘பேன்ஜியா’ (Pangea), இரு துண்டுகளாய்ப் பிரிந்து வடக்கு பகுதி ‘லவ்ரேசியா’ (Lauraisa) என்றும் தென் பகுதி ‘கோண்டுவானா’ (Gondwana) என்றும் பிரிந்து சென்றது. தற்போது இருக்கும் வடஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா வடப்பகுதியில் இருந்த லவ்ரேசியா நிலப்பரப்பிலும், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்டிகா மற்றும் இந்தியா தெற்குப்பகுதியில் இருந்த கோண்டுவானாவிலும் இருந்தது. இரு நிலப்பரப்புகளுக்கு இடையில் ‘தெத்தியன்’ எனும் கடல் இருந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு கண்டமாய் நகர்ந்து, பல துண்டுகளாகப் பிரிந்து இன்று நாம் காணும் இந்தத் தோற்றத்தில் காட்சி அளிக்கின்றது. இன்றளவும் கண்டங்கள் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறன. இதைக் கேட்கும் போது நம்மில் பலருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் இந்திய கண்டத்தட்டு (Indian Plate) வடகிழக்குத் திசையில் இன்றும் நகர்ந்து கொண்டுத்தான் இருக்கிறது.
வேக்னேர் இந்தக் கூற்றைப் பல ஆதாரங்களுடன் முன் வைக்கிறார். முதலில் அவர், கண்டங்களின் நில அமைப்பை ஓர் ஆதாரமாகச் சொல்கிறார். தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி மற்றும் ஆப்ரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதி ஆகியவற்றின் விளிம்பைப் பார்த்தால் ஒரு அப்பளத்தை இரண்டாக உடைத்தால் எப்படி அதன் துண்டுகள் ஒன்றுக்கு ஒன்று பொருந்துவது போல இருக்குமோ அதுபோல ஒரு சேர பொருந்துவதுபோல அமைந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் அவை ஒன்றாக இருந்து பின்னர் உடைந்து பிரிந்திருக்கின்றன என்ற முடிவிற்கு இதன்மூலம் வர முடியும்.
வெறும் நில அமைப்பை மட்டுமே கொண்டு வேக்னேர் இந்த முடிவிற்கு வரவில்லை. அந்த இரண்டு கடற்கரைகளில் மட்டும் கிடைக்கும் தொல்படிமங்களை ஆராய்ந்தார். மீசொசொரஸ் (Mesosorus) எனப்படும் ஊர்வன விலங்கின் படிமங்கள் அவை. இந்த விலங்கின் தன்மையை எடுத்துக்கொண்டால் அது ஆழம் குறைவான நன்னீர் பகுதியில் மட்டும் வாழக்கூடிய விலங்காகும். உலகில் வேறெங்கும் கிடைக்காத இவ்விலங்கின் படிமங்கள் இந்த இரு கண்ட்த்துண்டுகளின் விளிம்பில் மட்டும் கிடைத்து இருக்கிறன. மீசொசொரஸ் ஒரு கரையில் இருந்து பறந்து மற்றொரு கரைக்குப் போக வாய்ப்புகள் இல்லை. மேலும் நீரில் நீந்தும் தன்மையும் இவ்விலங்கிற்குக் கிடையாது. எனவே, இந்த இரு நிலப்பரப்பும் சேர்ந்து இருக்கும் போது அவை இங்கு வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார்.
அடுத்துப் பாறைகளின் தன்மையும் அது தோன்றிய காலமும் ஒன்றாக இருந்ததைப் பற்றிய ஆய்வுகளை முன் வைக்கிறார். அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மலைத்தொடரும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள மலைத் தொடரும் தோன்றிய காலமும், பாறைகளின் அமைப்பும், தன்மையும் ஒன்றாக இருந்த்தை அவர் பதிவு செய்கிறார். பிற்காலங்களில், கண்ட நகர்வின் காரணத்தினால் இந்த மலைத் தொடர் இரண்டாகப் பிரிந்து சென்று இருக்கிறது. கடைசியாக வேக்னேர், தனது துறை சார்ந்த ஆதாரத்தை முன் வைக்கிறார். பனிப்பாறைகள் என்றால் நம் அனைவரின் எண்ணமும் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் தான் செல்லும். வேக்னேரோ, பனிப்பாறைகளின் தடயங்களைப் பூமத்திய ரேகை மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளான ஆப்ரிக்கா பகுதி மற்றும் தென் அமெரிக்கப் பகுதியிலும் கிடைக்கும் தடயங்களை ஆதாரமாகக் கொடுத்து இருக்கிறார்.
நாம் நிலக்கரியை பற்றி அறிந்து இருப்போம். நமக்கு அன்றாடம் தேவைப்படும் மின்சாரத்தைப் பெரும்பாலும் தயாரிக்கப் பயன்படும் இந்த நிலக்கரி நான்கு வகைகளாக அதன் தரத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் கிடைக்கப்படும் பழுப்பு நிலக்கரியோ மூன்றாம் தரம் ஆகும். பெரும்பாலும் பூமியில் இரண்டாம் தர நிலக்கரி தான் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த நிலக்கரிகள் பூமிக்கடியில் நெடுங்காலம் புதைந்து உருமாறிய மரச்செடிகளின் எச்சங்களே ஆகும். அதிக நிலப்பரப்பிலான காடுகள், பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகள் நிலக்கரிகளாக மாறியுள்ளது. பொதுவாக வெப்பமண்டல காடுகள் பூமத்திய ரேகை மற்றும் அதன் அருகாமை பகுதியில் தான் இப்போது வெப்பமண்டல காடுகளை நாம் காணுகிறோம். ஆனால் நமக்குக் கிடைக்கும் இந்த நிலக்கரிகள் வடதுருவம், தென் துருவம், ஆப்ரிக்காவின் விளிம்பு பகுதி, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதியல் கிடைக்கிறது. கடைசி ஆதாரங்களை எடுத்துக்கொண்டால் இன்றைய நிலைக்கு முரணாக உள்ளது. இரு துருவங்களில் இருக்க வேண்டிய தன்மைகள் பூமிக்கு மத்தியிலும், பூமிக்கு மத்தியில் இருக்க வேண்டிய தன்மைகள் துருவங்களில் இருப்பதும் வேக்னருக்கு தன் கூற்றை நிரூபிக்கப் பெரிதும் உதவியாக இருந்தது.
அவர் கூறிய ஆதாரங்களைத் தவிர்த்து வேறு ஆதாரங்களைப் பார்த்தோமானால் ஒடிசா மாநிலத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பழமையான கனிமம் ஜிர்கான் ஆகும். இதற்கு நிகரான ஜிர்கான் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாம் மலைத்துக் காணும் இமய மலை உலகின் இளம் மடிப்பு மலைத்தொடர் ஆகும். கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்த இந்தியா நகர்ந்து ஆசிய கண்ட தட்டில் மோதியதன் விளைவாக உருவானதே இமயமலை. அதுமட்டுமின்றித் தொடர்ந்து இந்தியத்தட்டு நகர்ந்துகொண்டிருப்பதால் இமயமலை உயரம் மிகச்சிறிய அளவில் தொடர்ந்து உயர்ந்துகொண்டேயிருக்கிறது.
மேலும் பல ஆதாரங்களைச் சேகரிக்க அண்டார்டிகா சென்ற வேக்னர், அங்குப் பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். புவியைப் பற்றிய நம் அறிவில் பெரும் தாக்கத்தைக் கொடுத்த வேக்னரின் சடலத்தை மீட்க இயலவில்லை. இன்னொருபுறம் புவியின் வரலாறு குறித்து இவ்வளவு அறிவியல் ஆதாரங்கள் இருந்தும் நாம், பூமாதேவி பூமியை தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்றும், கிருஷ்ணன் பாயை சுருட்டுவது போல் பூமியை சுருட்டினார் என்றும், மயில் மூலம் பூமியை சுற்றிவந்தார் எனும் புராண கதைகளைப் பேசித்திரிகிறோம். வரலாற்றுக்கும் அறிவியலுக்கும் முரணானக் கதைகளைத் தூக்கி எறிந்து அறிவியல் ரீதியில் சிந்தித்துப் பயணிப்போம்.
- லோகேஷ் பார்த்திபன்