காட்சி ஊடகத்தின் மிகப்பெரிய வளர்ச்சியும் எழுச்சியும் திரைப்படம் தோன்றியபோதே நிகழத் தொடங்கிவிட்டன. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டிய ஒரு கலையாக உருப்பெற்ற காலகட்டம் மிகமிக முக்கியமானது. சரித்திரத்தின் கோப்புகளில் பச்சை நிற மையினால் அடிக்கோடிட வேண்டிய விஷயமாக அது நிகழ்ந்தது. குறிப்பாக, இந்தியச் சூழலில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் கருவியாக மேடை நாடகங்களும் திரைப்படமும் உருமாறின. சரித்திர, புராணக் கதைகளை மட்டுமே சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்த இந்தக் கலைகள் எப்போது சுதந்திர வேட்கையை உரக்கப் பேசத் தொடங்கினவோ அப்போதே திரைப்படம் மக்களின் வாழ்வோடு கலந்த, அவர்களின் பிரச்சினைகளைப் பேசுகின்ற, அவற்றுக்கான தீர்வுகளை அலசுகின்ற, மனநிலையையே மாற்றும் ஒரு தளமாக அவை பரிணாம வளர்ச்சியடைந்தன.
திரைப்படங்களுக்கு நல்ல திரைக்கதை வேண்டும். சுவாரஸ்யமான பாணியில் ஏதேனும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். படம் பார்க்க வருபவர்கள் தங்களை அதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். அந்த உணர்வுகளில் அவர்கள் விழ வேண்டும். அப்பொழுதுதான் அந்தத் திரைப்படத்தின் நோக்கம் முழுமையடையும். பொழுதுபோக்குத் திரைப்படமாக இருந்தாலும் சரி, சமூக விழிப்புணர்வுத் திரைப்படமாக இருந்தாலும் சரி, இந்த விதி மாறாது. சொல்ல வரும் கருத்து சிறப்பாக இருக்கிறது என்பதாலேயே பிரச்சாரம் செய்யும் படங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சொல்வதை சுவாரஸ்யமாக சொல். இல்லையேல் இங்கே போணியாகாது.
ஒரு சிறு உதாரணத்தோடு பேசலாம். தமிழின் முதல் சமூகப்படம் என்று அழைக்கப்படும் நாம் இருவர் மிகப்பெரும் வெற்றி பெற்றது. சுதந்திரப் போராட்டப் பாடல்கள் நிரம்பிய இந்தப்படத்தில் ஒரு காதல் கதையும் இருந்தது. அந்தப் பொழுதுபோக்குக்கு நடுவில் சொல்லப்பட்ட சமூகச் சீர்திருத்த விஷயம் ரசிக்கும்படியாக இருந்ததால் படம் ஓடியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே போன்று பத்து படங்கள் அதே வருடம் வெளிவந்தன. ஒன்றில் குடியின் தீமையைச் சாடியிருந்தார்கள். ஒன்றில் கைத்தறி ஆடையின் பெருமையைப் பறைசாற்றியிருந்தார்கள். ஒன்றில் தீண்டாமையின் கொடுமையை விளக்கியிருந்தார்கள். ஆனால் அவை எதுவுமே எடுபடவில்லை. படமும் ஓடவில்லை. காரணம், நாம் இருவரில் இருந்த சுவாரஸ்யம் எதிலும் கிட்டவில்லை.
இதேபோன்று விவசாயத்தின் பெருமையைப் பேசும் படங்கள்கூட வெளிவந்தன. ஆனால் அவை எதிலுமே நேரடியான கதையாக விவசாயம் இருக்கவில்லை. ஒரு மையக் கதையின் கிளைக் கதையாகத்தான் விவசாயம் இங்கே பேசப்பட்டது. அதன் பெருமைகள் பாடல்களில் சொல்லப்பட்டன. உண்மையில் கான்கிரீட் காடுகள் பெருகுவதற்கு முன்பு வரை விவசாயம் எப்போதும் வெற்றிகரமான தொழிலாகவே பார்க்கப்பட்டது. மிகப்பெரும் பஞ்ச காலம் ஒன்று தமிழகத்தில் நிலவியபோதுகூட, அரிசிக்கு பதிலாக மைதா மாவு மட்டுமே அரசாங்கத்தால் வழங்கப்பட்டபோதுகூட, பரோட்டா மட்டுமே மூன்று வேளை உணவு என்கிற நிலை இருந்தபோதுகூட, அவை யாவும் திரைப்படங்களில் கிண்டல் செய்யப்பட்டனவே ஒழிய, அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் கேலி செய்யப்பட்டதே அன்றி, அப்போதும் விவசாயம் படுத்துவிட்டது பார், யார் காப்பாற்றுவார் விவசாயத்தை என்கிற முழக்கமெல்லாம் எப்போதும் எழவில்லை. பசுமைப் புரட்சிக் காலகட்டங்களில்கூடத் தனி விளம்பரப்படங்கள் மட்டுமே இங்கே எடுக்கப்பட்டன.
கோவை ஒரு மிகப்பெரிய தொழில் மாநகரமாக மாறியபொழுது, அங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அந்தத் தொழிற்சாலைகள் மூலமாக ஏற்படும் மாசுபாட்டையும் பாதை தெரியுது பார் என்று ஒரு படம் வந்தது. திராவிட இயக்கங்கள் திரைப்படத்தைச் சரியான முறையில் உபயோகிப்பதைக் கண்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கிய படம் இது. மிக அழுத்தமான காட்சிகளோடு உருவாக்கப்பட்ட இந்தப் படம் முதலாளி வர்க்கத்தை மிகக்கடுமையாகச் சாடியிருந்தது. என்னதான் அழுத்தமாகத் திரைப்படம் எடுத்தாலும், அதை வெளியிடப்போவது ஒரு முதலாளிதான் என்பதைத் தோழர்கள் மறந்துவிட்டனர். பாடாவதித் திரையரங்குகளில் வெறும் மதியக் காட்சி மட்டும் வெளியிட்டு, இந்தப் படத்தைப் பெரும் தோல்விப் படமாக மாற்றினர் முதலாளிகள். இங்கே நல்லது சொல்லவும் வியாபாரம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1980களில் வேலை இல்லாத் திண்டாட்டமும் குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரித்தாட, அன்றைய படைப்பாளிகள் சிலர் இதைத் திரைப்படத்தில் சொல்ல முயன்றனர். கே. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் மிக முக்கியமான ஒரு படம் என்று சொல்லலாம். தண்ணீர்ப் பற்றாக்குறையே மூன்றாம் உலகப்போரின் முக்கியக் காரணியாக இருக்கும் என்பது பல வருடங்களாகச் சொல்லப்பட்டுவரும் ஆருடம். உண்மையில் மூன்றாம் உலகப்போர் தொடங்கி 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போது ஒரு கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்சினை அயோக்கியர்களின் குறுக்கீடால் அரசியலானதோ அப்போதே போரும் தொடங்கிவிட்டது. எளிமையான தீர்வை நோக்கி நகர வேண்டிய இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காகக் கடும் மன மற்றும் உடல் உளைச்சலை ஏற்படுத்தும் விஷயங்களாக பூதாகரமாக மாறி நிற்கிறது. இதெல்லாம் தொடக்கம்தான் என்பதுகூட உறைக்காத வண்ணம் வாழ்க்கை நசுக்குகிறது.
கோமல் சுவாமிநாதன் போன்ற படைப்பாளிகள் வெறும் கலைஞர்களாக மட்டுமே இல்லாமல் போராளிகளாகவும் இருந்ததால் மட்டுமே தண்ணீர் தண்ணீர் போன்ற படைப்புகள் சாத்தியமாயின. தொடர்ந்து தங்கள் படைப்புகள் மூலம் ஒரு அதிர்வலையை உருவாக்கிக்கொண்டே இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் பெருங்கனவைத் தொடர்ந்து சுமந்து செல்வதற்கு இங்கே ஆட்கள் மிகக்குறைவாகவே இருந்தனர், இருக்கின்றனர். அதனாலேயே அரும்பாடுபட்டு ஏற்றப்பட்ட பல தீபங்கள் எதிர்க்காற்றில் ஒளிர்ந்துகொண்டே இருக்க இயலாமல் அணைந்துபோயின. பாலச்சந்தர்கூடப் பின்னர் இதுபோன்ற படங்களை எடுக்கவில்லை.
இயக்குநர் சேரன் எடுத்த தேசிய கீதம் படத்தில் பல பிரச்சினைகள் பேசப்பட்டிருந்தாலும் தண்ணீர்ப் பிரச்சினையும் அதில் அழுத்தமாக முன்வைக்கப்பட்டிருந்தது. “மழத்தண்ணி விழும்னு வானத்தை அண்ணாந்து பாத்தா காக்கா எச்சம்தான் விழுது” போன்ற வசனங்கள் படத்தில் இருந்தன. இங்கே தமிழ்ப் படங்களில் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மண்மீது நேசம் கொண்ட மனிதர்கள், சுற்றுச்சூழலைக் காக்கப் போராடுபவர்கள் எல்லாம் ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள், இல்லையென்றால் அந்தக் கதையின் சண்டைக்காட்சிகளுக்கு உதவுவதற்காகவும், ஏதேனும் நல்லது செய்யப்போய் இறந்துபோய்விடும் கதாபாத்திரமாகவும்தான் வடிவமைக்கப்பட்டார்கள். படத்தின் நாயகனுக்கு வில்லனைப் பழிவாங்க இதுவும் ஒரு காரணமாக இருக்குமே அன்றி வேறொன்றும் இல்லை.
பின்னர் திடீரென விவசாயிகள் மீதும், இந்த பூமியின் மீதும் ஒரு பெரும் கரிசனம் நம்மூர் படைப்பாளிகளுக்குத் தோன்றியது. அதற்கு முன்னர் கதாநாயகன் விவசாயியாக நடித்தால்கூடக் கதையின் போக்கில் அதைப் பற்றி எந்த விஷயமும் வராது. ஆனால் கதாநாயகன் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்தால்கூட விவசாயத்தின் பெருமையை, விவசாயிகளின் அருமையை உரக்கப் பேச ஆரம்பித்தனர். படத்தின் இடைவேளை வரை பந்தாவாகத் திரிந்துகொண்டு, வேலைவெட்டி இல்லாமல் இருக்கும் நாயகர்கள் இரண்டாம் பாதியில் தோளில் கலப்பையை மாட்டிக்கொண்டு வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு விவசாயம் பார்க்கத் தொடங்கினர். இறுதியில் விவசாய நிலத்தை அழிக்க வரும் கார்ப்பரேட் கிரிமினலைப் பார்த்து விவசாயத்தின் அருமையைப் பேசிவிட்டு, “நானும் விவசாயிதாண்டா” என்கிற வசனமும் சொல்லிவிட்டு சுபம் போட்டு முடித்தனர்.
2000க்குப் பிறகான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கலின் காரணமாக எல்லாத் தொழில்களிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. மனிதன் கண்முன்னே இருந்த பல சாத்தியக்கூறுகள் ஒவ்வொன்றாய் நனவாகின. மிகக் குறிப்பாக வெளிப்படைத்தன்மை என்கிற விஷயம் பிரபலமானது. ஆரம்ப கால சினிமாவில் எம்ஜிஆர் புலியை அடக்கியபோது அதை எம்ஜிஆரே அடக்கியதாக இன்றுவரை நம்பும் ரசிகர்கள் உண்டு. காரணம், அது எப்படிப் படமாக்கப்பட்டது என்பதும் என்ன மாதிரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதும் ரசிகர்கள் அறிந்துகொள்ள வழி இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று எல்லாமே வெளிப்படை. அப்படித்தான் மற்ற துறைகளும் இங்கே கண்களுக்கு அகலமாகத் தெரிய ஆரம்பித்தன.
உன்னால் முடியும் தம்பி படத்தில் தன் வாழ்நாள் முழுக்க மரம் நடுவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு கதாபாத்திரம் வரும். அவர் உண்மையில் வாழ்ந்த மனிதர். அவரைப் பதிவுசெய்ய அப்போது சினிமா தேவைப்பட்டது. ஆனால் இப்போது இருக்கும் சமூக வலைத்தளங்கள் அப்போது இருந்திருந்தால் அவர் பெரிய செலிப்ரிட்டியாகக் கொண்டாடப்பட்டிருப்பார். அதற்கு முக்கிய காரணம் இயற்கையைக் காத்தல் என்பது உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்றாக இங்கே இருக்கிறது. ஏன் அது உணர்வு சம்பந்தப்பட்டதாக ஆனது என்று யோசித்தால் அதற்கு முக்கியக் காரணம், மனிதனுக்கு இருக்கும் குற்ற உணர்வு. ஏன் குற்ற உணர்வு வந்தது என்று யோசித்தால், இந்த இயற்கையைப் பாழாக்குபவனே அவன்தான். அதனாலேயே அதை யாரேனும் காக்க நினைத்தால் அவர்களை நாயகனாக்கிவிடுகிறான். இப்படித்தான் விவசாயம் செய்யும் மனிதர்கள் தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் ஆனார்கள்.
அரசாங்கம் விவசாயிகளுக்குக் கடன் தந்தது. ஆனால் பருவமழை பொய்த்தது. இல்லையெனில் பெருமழை வந்து பயிர் நாசமானது. அரசாங்கம் நஷ்ட ஈடு தந்தது. ஆனால் அது தனியாக வாங்கிய கடன்களை அடைக்கவே போதாமல் இருந்தது. தற்கொலை செய்துகொண்டான் விவசாயி. எலிக்கறி தின்றான் விவசாயி. இவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும் என்று கூறிக்கொண்டே அங்கே உருவானான் ஒரு நாயகன். இதைவிடப் பொருத்தமான மாஸ் காட்சி தமிழ் சினிமாவிற்கு கிடைக்காது, இல்லையா? ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருக்கும் ஒருவன் முன்னால், அந்த விவசாயத்தைக் காக்கும் நாயகன் தோன்றினால் அவன் கொண்டாடுவான் என்பதை உணர்ந்த படைப்பாளிகள் அத்தகைய முயற்சியில் ஈடுபடலாயினர்.
சில பெரிய பத்திரிகைகள் விவசாயத்திற்கென்று தனியாகப் பத்திரிகைகள் தொடங்க, அதில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வர, கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறித் தள்ளிவிட்டுப் பலரும் விவசாயத்திற்குப் போவதாகக் கட்டமைக்கப்பட்ட விஷயங்கள் ஏராளமாய் வரத் தொடங்கின. விவசாயம் என்பது படிக்காதவர்கள் பார்க்கும் வேலை என்கிற எண்ணம் முற்றிலும் களையப்பட்டு, அதுவும் ஒரு லாபகரமான தொழில் என்கிற எண்ணத்தை விதைத்ததில் திரைப்படங்களின் பங்கு கட்டாயம் உண்டு. முன்பெல்லாம் பரம்பரை விவசாயக் குடும்பங்களில் மட்டுமே பட்டப்படிப்பு முடித்தால்கூட விவசாயம் செய்வார்கள். அதை மாற்றி எல்லோருக்குமான தொழிலாக விவசாயம் மாறியதை நாம் இங்கே சமீப காலங்களில் பரவலாகப் பார்க்கமுடிகிறது.
ஆனால் இதை முழுக்க முழுக்கத் தவறாக புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படம் இருக்கிறது. பூமி என்கிற பெயரில் வெளிவந்த அந்தப் படத்தில் இருந்த அபத்தம் எல்லாம் கணக்கில் அடங்காதது. விவசாயிகளின் துயர் நீங்க விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்க வேண்டும் என்பதே படம் சொல்ல வரும் சேதி. படத்தின் கதைப்படி நாயகன் நாசாவில் வேலை செய்பவர். அதில் அவர் மேற்கொள்ளும் பணி ஒரு ஃபேன்டசி கதை போல இருக்கும். அதே நாயகன் விவசாயம் செய்ய வருவார். ஆனால் அவர் விவசாயத்தையும் ஒரு ஃபேன்டசி கதையாகவே அணுகுவார். இதுதான் படத்தின் பெரிய பிரச்சினை. விவசாயம் என்பது ஃபேன்டசி அல்ல. அது நிஜமானது. அதன் பிரச்சினைகள் நிஜமானவை. அதிகாரம் படைத்தவர்களால் அரசியலாக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட பல விஷயங்களில் விவசாயமும் ஒன்றுதான். ஆனால் அதை ரொமாண்டிசைஸ் செய்வது அந்த அரசியலைவிட மோசமானது. காரணம் அது உண்மையான தீர்வை நோக்கி நகர விடாமல் எல்லோரையும் தடுத்துவிடும். பூமி படம் அதைத்தான் செய்தது.
அதைவிட மோசமான விஷயம் விவாசாயத்திற்கும் விவசாயிக்கும் கண்ணெதிரே ஆயிரம் பிரச்சினைகளும் எதிரிகளும் இருக்கையில், கண்ணுக்கே தெரியாத இல்லுமினாட்டிகளை எதிரிகளாகச் சித்தரிப்பதைப் போன்ற பெரிய துரோகம் இருக்க முடியாது. நிஜமான பிரச்சினையிலிருந்து பல காதங்கள் பின்னால் இழுத்துச் செல்லும் வேலைதான் இது. இதை வேண்டுமானால் இல்லுமினாட்டிகள் செய்வார்கள் என்று தோன்றுகிறது. படத்தின் திரைக்கதையின் பெரும்பங்கு வாட்ஸப்பில் வந்த செய்திகள்தான் என்பதால், இந்தப் படத்தைக் ‘குறுஞ்செய்திகள் வைத்து குருமா செய்த முதல் படம்’ என்றும் பெருமையாகக் கூறலாம். அறிவியலை நாம் நம்பலாம். உணர்வுகளை நாம் அனுபவிக்கலாம். ஆனால் இதில் சொல்லப்படும் அறிவியல், இதுவரை வந்த எல்லா அறிவியலுக்கும் எதிராக இருக்கிறது. உணர்வுகளோ மிகைப்படுத்தப்பட்ட மெகா சீரியல்களைவிடக் கொடுமையாக இருக்கின்றன.
படைப்பாளிகள் எதை எடுக்கலாம், எதை எடுக்கக்கூடாது என்றெல்லாம் இங்கே யாரும் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் கலைஞனுக்கு என்று ஒரு சமூகப் பொறுப்பு எப்போதுமே உண்டு. ஒரு தவறான தகவலை அல்லது தவறான முன்னுதாரணத்தை அவன் என்றைக்கும் முன்வைக்கக் கூடாது. தங்கள் சோகங்களை மறக்கத் திரையரங்கை நாடி வருபவர்களுக்கு நிம்மதியையும் மனத் திருப்தியையும் தர வேண்டிய கலை, எப்போதும் அவனைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கக்கூடாது. அப்படிக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கினாலும் அதற்கான தீர்வையும் அவனுக்கு அளிப்பதே சிறந்தது. அவனது உணர்ச்சியைக் காசாக்குவது கீழ்மையான செயல். சுதந்திர உணர்ச்சியைத் தூண்டிய சினிமா நன்மையை விதைத்துவிட்டுச் செல்ல, தீர்வுகளை விட்டு எங்கேயோ தள்ளி நிற்கிற சினிமாதான் இன்றைய பிரச்சினையாக இருக்கிறது.
உலகம் எல்லாருக்கும் சொந்தமானது என்கிற கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2.0 திரைப்படம், அந்த பக்ஷிராஜாவை வில்லனாகச் சித்தரித்துதான் முன்வைக்கப்பட்டது. உண்மையில் படத்தின் நாயகன் பக்ஷிராஜாவாகத்தானே இருக்க வேண்டும்? செல்போன் கதிர்கள் மூலம் பறவைகள் அழிகிறது என்கிற வாதமே இன்னும் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு ஃபேன்டசி கதையில் அதற்கான நியாயம் இருக்கும். ஆனால் முன்வைக்கும் திரைக்கதை இங்கே தவறாக அல்லவா இருக்கிறது? இங்கே ஃபேன்டசி கதை ஒரு பேய்க்கதையாகத்தான் மாறி நிற்கிறது. பூமிகா என்று ஒரு படம் சமீபத்தில் வந்தது. அந்தப் படத்தில் இதே பிரச்சினைதான். மனிதன் செய்யும் கொடுமைகள் தாளாமல் பூமியே பழிவாங்கப் புறப்படுகிறது என்ற கருத்து சரிதான். ஆனால் இன்னும் எத்தனை நாள் பூமியே தன் இயற்கைச் சீற்றங்கள் மூலம் அதைக் காட்டிக்கொண்டிருக்கும்? மனிதனுக்கும் அதில் பொறுப்பிருக்கிறது, இல்லையா? இயற்கை அழிய அழியக் குற்ற உணர்ச்சி வருவது எல்லாம் சரி. சகமனிதனும் சேர்ந்து அழிகிறானே, அதை பார்த்துக் குற்ற உணர்ச்சி வரவில்லையா?
கேள்விகள் மட்டுமே இங்கே நிற்கின்றன. பதில் நம் பக்கத்திலேயேதான் இருக்கும். தேடிக் கண்டுபிடிப்போம்.
- பால கணேசன்