வான்வழியே ஒரு நச்சுத் தெளிப்பு

”தமிழகத்திலேயே முதன்முறையாக ஜெயங்கொண்டம் பகுதியில் டிரோன் மூலம் மருந்து தெளித்து சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணி அண்மையில் தொடங்கியது” நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
சீமைக் கருவேல மரங்களும் மற்ற எல்லா மரங்களையும்போன்றே தண்ணீரை உறுஞ்சுகின்றன. சொல்லப்போனால் தண்ணீர் மற்றும் குளிர்பானக் கம்பெனிகளை விடக் குறைவாகவே உறுஞ்சுகின்றன என்கிறார் சூழியலாளர் பாமயன்.
மேலும் பல சூழியலாளர்கள் சீமைக் கருவேல மரங்கள் அயல் தாவரமாகவே இருந்தாலும் நரிகள், பல்வேறு பூச்சிகள், பறவைகள் போன்றப் பல்லுயிரினங்களுக்கு வாழிடமாகவும் புகலிடமாகவும் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
ஒருவேளை இவற்றை அழிக்கவே முடிவு செய்தாலும்கூட ட்ரோன் மூலம் மருந்த’ தெளிப்பது என்பது மூட்டைப் பூச்சியைக் கொல்ல வீட்டைக் கொளுத்துவதுபோல ஆபத்தானது. இங்கு ‘மருந்து” என்ற வார்த்தைப் பிரயோகமே விஷயத்தைத் தவறானத் திசைக்குத் திருப்புகிறது. மருந்து என்றால் குணம்தரக் கூடியது மேலும் வளரச் செய்வது. மாறாக அழிப்பதையும் கொல்வதையும் ‘நச்சு’ என்றுதானே சொல்லவேண்டும். உண்மையில் “டிரோன் மூலம் நச்சு தெளிக்கப்பட்டது” என்று இந்தச் செய்தி இருந்திருந்தால் இதன் வீரியம் புரிந்திருக்கும்.
‘பிரபல’ விஞ்ஞானி மயில்சாமி வழிகாட்டுதலில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ஐஐடியும் இணைந்து நட்த்தியிருக்கும் இந்தத் திட்டம் சூழல் சிக்கல்களை வெறும் தொழில்நுட்பப் பிரச்சினைகளாக அணுகும் குறுகிய சிந்தனையின் வெளிப்பாடு. இத்திட்டம் வெற்றியடைந்தால் தமிழகம் முழுதும் இதை விரிவுபடுத்த அரசை வலியுறுத்துவோம் என்று அவர்கள் சொல்லியிருப்பது நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
அவர்களைப் பொறுத்தவரையில் சீமைக்கருவேலம் ஒழிந்தால் இத்திட்டம் வெற்றி அவ்வளவுதான். ஆனால் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் கலந்து இந்த நச்சு இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லும் மனிதரைக் கொல்லும் என்பது அவர்களுக்குத் தேவையற்றது. ஒருவேளை இந்த வெற்றிகரமானத் திட்டத்தின் கண்டுகொள்ளப்பட வேண்டாத ‘பக்க விளைவுகளாக’ அவைக் கருதப்படலாம்.
நாம் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அந்தத் தொழில்நுட்பம் நம் நீடித்த நலனை உத்திரவாதம் செய்வதாக இருப்பதை உறுதி செய்யவேண்டியிருக்கிறது.
எப்போதுமே எதையோ அழிப்பதும் ஒழிப்பதும் கட்டுவது வளர்ப்பதைவிட நமக்கு எளியதாக இருக்கிறது. விதையைப் போட்டு தண்ணீர் உற்றிப் பத்துவருடம் பாதுகாத்து வளர்ப்பதைவிட நச்சுவைத்து ஒரு மரத்தை அழிப்பது மிக எளியதானச் சூழல் செயல்பாடாக இருக்கிறது. மனிதனுக்கு நேரடியாகப் பயன்படாத எதையும் களையாக அணுகும் மனோபாவமே இங்கு மேலோங்கி நிற்கிறது.
சீமைக் கருவேலங்கள் முற்றிலுமாய் ஒழிக்கப்படவே வேண்டியதாயினும் இங்குக் கைக்கொள்ளப்படும் வழிமுறை சீமைக் கருவேலத்தைவிட ஆபத்தானது என்பதே ஒற்றைவரிச் செய்தி.
– ஜீயோ டாமின்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments