மனிதரின் தோழன் – காட்டுயிருக்கு எமன்?

 

நாட்டிலுள்ள காட்டுயிர்களுக்கு பல கோணங்களிலிருந்து ஆபத்துகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. வாழிட அழிப்பு அதில் முதலிடம் பெறுகின்றது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நம் கண் முன்னே வாழிட அழிப்பு நடைபெறுகின்றது.. திருட்டு வேட்டையும் இதில் ஒன்று. பல சரணாலயங்களில் இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதை அவ்வவ்போது வரும் செய்திகள் கூறுகின்றன. பூச்சி மருந்துகளால் பல பறவை இனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அதிலும் நீர்நிலைகளில் இந்த வேதியல் நச்சு கலந்திருப்பதால் வலசை வரும் பறவைகள் சீரழிகின்றன இந்தப் பின்புலத்தில் காட்டுயிரியலாளர்கள் சிலரின் அண்மை ஆய்வுகள் தெருநாய்களிலிருந்து காட்டில் வாழும் உயிரினங்களுக்கு பல இடங்களில் ஆபத்து என்று சுட்டிக்காட்டுகின்றன. சென்னை கிண்டியிலுள்ள இந்திரா காந்தி தேசிய பூங்காவில் உள்ள வெளிமான்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து ஏறக்குறைய அவை அற்றுப்போயிருப்பதற்கு தெருநாய்கள் தான் காரணம். அங்கு திரியும் நாய்கள். மான் குட்டிகளை விரட்டி எளிதாக இரை யாக்குகின்றன வெளிமான்கள் அரிதான இனம் என்றும் இங்குள்ள புதர்க்காடுகள்தான் அவற்றின் தாய் வீடு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இதே போல் ஒடிஷாவிலுள்ள வெட்னாய் சரணாலயத்திலும் வெளிமான்களின் குட்டிகள் நாய்களுக்கு இரையாகின்றன என்று காட்டுயிரியலாளர் பிதம் சட்டோபாதியாயா conservation India எனும் சஞ்சிகையில் பதிவு செய்திருக்கின்றார். தேசிய காட்டுயிர் அமைப்பின் (National Board of Wildlife) உறுப்பினர் எச்.எஸ்.சிங் ஒரு ஆய்வுக் கட்டுரையில் குஜராத்திலுள்ள வெளிமான்களுக்கு தெருநாய்களிலிருந்து பெரும் ஆபத்து என்கின்றார். மெசானா மாவாட்டத்தில் வெளிமான்களின் எண்ணிக்கை ஐய்யாயிரத்திலிருது ஆயிரத்திற்கு குறைந்தற்கு தன்னிச்சையாகத் திரியும் நாய்கள்தான் காரணம் என்கின்றார் சிங். இந்த பகுதியில் நான் பயணம் செய்திருக்கின்றேன். காப்புக்காடுளிலும் பொது வெளிகளிலும் இங்கு வெளிமான்கள் இருக்கும் அரிதான காட்சியை காணலாம் ஏனென்றால் அந்த ஊர்களிலுள்ள மக்கள் அவைகளை தொந்திரவு செய்வதில்லை. அதே போல் கட்ச் பகுதியில் உள்ள காட்டுக் கழுதை சரணாலயத்தில் நாய்கள் பாலைவன நரி, காட்டுகழுதையின் குட்டி இவைகளை இரையாக்குவதற்கு கொல்கின்றன என்பதை சுட்டுக்காட்டுகின்றார். இதை காட்டுயிர் ஒளிப்பட விற்பன்னர் கல்யாண் வர்மா படமாக பதிவுசெய்துள்ளார். பெங்களூரிலுள்ள காட்டுயிர் கள ஆய் வாளர்கள் இருவர், சுமன் ஜமானி, அர்ஜுன் ஸ்ரீவஸ்தா முதுமலையில் ஐந்து நாய்கள் கூட்டாக சேர்ந்து மான் ஒன்றை கொன்று தின்றதை பதிவு செய்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளனர். இது போன்று மற்ற பல இடங்களிலும் நடக்கின்றது என்கின்றார்கள்.

நம் நாட்டின் கிழக்கு கடற்கரையில், சிறப்பாக ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு பகுதிகளில் குளிர் காலத்தில் கடலோர மணலில் குழி பறித்து முட்டையிட அரிதாகிவரும் பங்குனி ஆமைகள்(Olive Ridley turtle-Lepisochelys olivacea) ஆயிரக்கணக்கில் வருகின்றன. முட்டைகளை இட்டு விட்டு அவை கடலுக்குள் சென்று விடுகின்றன. காப்பார் இல்லாதிருக்கும் இந்த மணலடி கூடுகளை இங்கு சுற்றித் திரியும் நாய்கள் மோப்பம் பிடித்து, குழி பறித்து அந்த முட்டைகளை தின்று விடுகின்றன. இதனால் இந்த ஆமைகள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப் படுகின்றன. இந்த ஆமைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற கார்த்திக் ஷங்கர்தான் எழுதிய From Soup to Superstar (2015) என்ற நூலில் இந்தப் பிரச்னை பற்றி குறிப் பிடுகின்றார். அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளுக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் தோணி ஆமை (Leatherback turtle- Dermochelys coriacea) கள் இடும் முட்டைகளில் 90 விழுக்காடு நாய்களால் இரையாகக் கொள்ளப்படுகின்றன என்கின்றனர் அந்த தீவுகளில் கள ஆய்வு செய்த காட்டுயிரி யலாளர்கள். உலகிலேயே உருவில் பெரியது இந்தக் கடல் ஆமை. அதனால் தான் அதன் பெயர் தோணி ஆமை. இதன் எதிர்காலம் கேள்விக்குறியதாக இருக்கின்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மனிதனின் உற்ற தோழன் காட்டுயிருக்கு பல இடங்களில் எமனாக மாறி விட்டான் பல சரணாலயனங்களின் உள்ளே, ஒரப் பகுதிகளில், நாய்கள் திரிவதைப் பார்க்கலாம் இதனால் நாய்களிடமிருந்து சிலநோய்கள் காட்டுயிர்களுக்கு தொற்றுவது பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. மஹாராஷ்டிராவில் ஷோலாப்பூர் அருகே கிராம மக்கள் சிலரை ஓநாய்கள் தாக்கின. மருத்துவ சோதனையில் ஒரு ஓநாய்க்கு நாய்வெறிக்கடி நோய் (Rabies) இருந்தது தெரிய வந்தது.

இது போலவே ஒரு புலிகள் சரணா லயத்தில் இறந்து கிடந்த வேங்கையை, சவப் பரிசோதனை செய்தபோது அது நாய்களுக்கு வரும் நொடிப்பு நோயால் (canine distemper) உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. கோத்தகிரி, வால்பாறை போன்ற காடுகளுக்கு அருகில் இருக்கும் குடியிருப்புகளிலுள்ள நாய்களைச் சிறுத்தைகள் இரையாகக் கொள்வது சகஜம். கோடியக்கரை போன்ற மக்கள் வாழும் பகுதிக் கருகிலுள்ள சரணாலயனங்களில் இந்தப் பிர்ச்னை அதிகம். பல நோய்களின் மூலக்கூறுகளான தெரு நாய்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் ஒரு குறியீடு. இது ஒரு பெரும் சுகாதாரப் பிரச்னை என்பது மட்டுமல்ல. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகின்றது. நிச்சயமாக இது நாய்களின் தவறல்ல போகாத ஊருக்கு வழிகாட்டும். நாய் கருத்தடை (Animal Birth control) போன்ற திட்டங்களால் எந்த வித பயனும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பதினெட்டு ஆண்டுகளாக இத்திட்டம் செயல் பாட்டில் இருந்திருந்தாலும், தெரு நாய்கள் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அதிகமாகியிருக்கின்றது

இதில் இன்னொரு பிரச்னை. தெரு நாய்கள் மட்டும் பலுகிப் பெருகுவதில்லை. பொறுப்பற்ற நாய் வளர்போரும் பலரும், தங்கள் வீட்டு நாய் போட்ட குட்டிகளை என்ன செய்வதென்று அறியாமல் பொது இடத்தில் போட்டு விட்டு போய் விடுகின்றார்கள். அவைகளில் உயிர் பிழைப்பவை தெரு நாய் கூட்டத்தில் சேர்ந்து விடுகின்றன. இது எல்லா ஊர்களிலும் காணக் கூடியது. இன்னும் சிலர் ஊரை விட்டுப்போகும் போது தங்கள் நாய்களை தெருவில் விட்டுவிட்டு போய்விடுகின்றனர். ஆகவே வெகு சிலவற்றை மட்டும் காயடிப்பது அல்லது கருத்தடை செய்வது எந்த விதத்தில் பயனளிக்கும்.? ஆகவே நாம் இந்தப் பிரச்னையை அதன் கடுமையை உணர்ந்து அறிவியல் ரீதியில் அணுக வேண்டும். ஆனால் இது சிரமமான காரியம். சில நாட்களுக்கு முன் ஏலகிரி தமிழ் பறவையாளர் கூடுகையில் நான் சந்தித்த ஒரு கால்நடை வைத்தியர் சொன்னார் “புலியையாவது சுட்டு விடலாம். ஆனால் தெரு நாயை ஒன்றும் செய்ய முடியாது” என்கின்றார். அங்கே பெரிய அரசியல் சுழல் இருக்கின்றது.

தியடோர் பாஸ்கரன்

மனிதர்களுக்கு உற்ற தோழராக இருக்கும் தெருநாய்களால் காட்டுயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதையும் படிங்க.!