வடசென்னை அனல்மின் நிலையத்தால் வெளியேற்றப்பட்ட சாம்பலால் பாதிக்கப்பட்டட எண்ணூர் கழிமுகம் கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய உயிர்ச்சூழல் மிக்க பகுதிகளை மீட்டெடுக்க சூழல் நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. வடசென்னை அனல்மின் நிலையம் 1984ல் அமைக்கப்பட்டதிலிருந்து அங்கு மின்சாரத் திற்காக எரிக்கப்படும் சாம்பல் கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள எண்ணூர் கழிமுகத்தில் 300ஏக்கர் பரப்பளவில் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கொட்டப் படுகின்றன. இந்தக் குழாய்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதாலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தினரின் பொறுப்பற்றத் தனத்தாலும் அனல்மின் நிலையத்திற்கு அருகிலுள்ள கொசஸ் தலையாற்றுப் படுகையிலும், பக்கிங்காம் கால்வாயிலும் கொட்டப்படுகின்றன. எண்ணூர் கழிமுகம், பக்கிங்காம் கால்வாய், கொசஸ் தலையாறு ஆகிய இயற்கைக் கொடையினால் இன்கு முன்பு மீன்வளம் செழிப்பாக இருந்து வந்தது. அதிகப்படியான அளவு சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டதால் அந்தப் பகுதிகளில் மீன்வளம் தற்போது முழுவதுமாக குறைந்துவிட்டது. மேலும் கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் சென்னை பெருநகரின் வெள்ள வடிவதற்கான இடமாகவும் செயல்படுகிறது. கடந்த டிசம்பர் 2015ல் பெருமழை ஏற்பட்டபோது சென்னை மூழ்கியதற்கு முக்கியக் காரணம் இந்த கொசஸ்தலையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் தூர்வரப்படாமல் இருந்ததுதான்.
பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு
வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து உருவாகும் நிலக்கரி சாம்பலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகம் அனல்மின் நிலையத்திற்கு அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாற்றில் கொட்டிவந்தனர். இதனைத் தடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி ரவிமாறன் என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் முன்னிலையில் ஜூலை 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வடசென்னை முழுவதும் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையாற்றில் சாம்பல் கொட்டப்பட்ட இடங்களை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்
யோகேஷ்வரன் திரையிட்டுக் காண்பித்தார். அதைப் பார்த்த நீதிபதிகள் மிகவும் கோப மடைந்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சாம்பல் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு எழுதப்பட்ட கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் நீதியரசர் பி.ஜோதிமணி தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகிய தரப்பினருக்கு அளித்த உத்தரவில்
1. ஒரு வாரத்திற்குள் கொட்டப்பட்ட கழிவுகள் நீக்கப்பட வேண்டும். தவறினால் ஒரு வாரத்திற்கு பின்னர் 2அலகுகளையும் மூடுவதற்கு தீர்ப்பாயம் உத்தரவிடும்.
2. குழாயில் ஏற்பட்ட கசிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
3. பழைய குழாய்கள் அனைத்தையும் மாற்று வதற்கான செயல் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
4. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தவறிழைக்கும் tangedco அதிகாரிகள் மீது நீர் மற்றும் காற்று பாதுகாப்பு சட்டத்தின்கீழ்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் லஷ்மி நரசிம்மன் கழிவுகள் அகற்றப்படும் பணியை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்
6. ஆறு, மாங்குரோவ், கால்வாய், உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உடனடியாக குழு அமைக்க வேண்டும்
7. குழுவில் சூழல் வல்லுநர்கள், மண் ஆராய்ச் சியாளர்கள், நீரியல் வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவ மக்களுக்கு மிகவும் நமிக்கை தரும் ஒரு தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பின்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு தற்போது நடந்து வரும் இயற்கை அழிவு நிறுத்தப்பட்டால் முற்றிலுமாக இறக்கக் காத்திருக்கும் பல்லுயிர்ச் சூழல் மிக்க எண்ணூர் கழிமுகம் மீண்டும் உயிர் பெற வாய்ப்புள்ளது.
நிலன்