மகாராஷ்டிராவின் சுற்றுச்சூழலை அழிக்கும் மெகா திட்டங்கள்

 வளர்ச்சியின் பெயரில் உலகமுழுதும் கண்மூடித்தனமான சூழல் விரோதத் திட்டங்கள் தொடர்ந்து கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றும் சந்தைப் பொருளாதார மையமுமான மும்பையைத் தலைநகரமாகக்கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் இதற்கு விலக்க்காக இருக்குமா என்ன? மகாராஷ்டிர மாநிலத்தின் சூழல் விரோதத் திட்டங்களையும் அவற்றை முன்னிட்டு நடக்கும் முக்கியப் போராட்டங்களைப் பார்ப்போமா?

‘சேவ் ஆரே போராட்டம் ‘(தி சேவ் ஆரே மோவ்மென்ட்) – மகாராஷ்டிர மாநிலத்திலேயே சுற்றுச்சூழலுக்காக நடந்துகொண்டிருக்கும்  மிகப்பெரிய போராட்டமாகத் இது. இப்போராட்டமானது, காட்டுப்பகுதியைச் சார்ந்த நிலத்தை சூழ்ந்து நடக்கிறது. இது வளர்ச்சித்திட்டங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்ட, 2015 ஆம் ஆண்டு (கோதவர்மன் தீர்ப்பின்படி) ஒன்றிய அரசின் சூழல் மற்றும் வன அமைச்சகத்தால்  ‘சூழல் உணர்திறன் மிகுந்த  மண்டலம்’ (Eco sensitive zone) என அறிவிக்கப்பட்ட வனப்பகுதியாகும். இதைப் பின்னர் வந்த அரசுகள், காடு என்றே ஒப்புக்கொள்ளவில்லை என்பது வேறுகதை. இந்த காட்டுப்பகுதியை மேற்கூறப்பட்ட சூழல் சார்ந்த சட்ட விதிமுறைகளிலிருந்து விலக்கு அளித்து தேவேந்திர பட்னாவிஸின் பாஜக அரசு மும்பை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டது. அந்நிலத்தை மெட்ரோ நிறுவனம்  மெட்ரோவின் மூன்றாவது வழித்தடத்திற்கு தேவையான வாகனங்கள் நிறுத்துமிடமாக (கார் ஷெட்) மாற்றப்படவுள்ளது.

குர்காவூனைச் சார்ந்த இந்த நிலம் ஒரு சதுரடிக்கு  ரூ.20-30,000  மதிப்புடையது. இதை ஒரு ரியல் எஸ்டேட் ஊழல் என்று சேவ் ஆரே அமைப்பு குற்றம் சாட்டுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியால் அந்நிலம் ‘வளர்ச்சி மண்டலம் இல்லை’ என்ற தடையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ‘FSI’ வரம்பு (குறிப்பிட்ட நிலப்பரப்பில் எவ்வளவுக்கு கட்டிடப் பரப்பு இருக்கலாம் என்று நிர்ணயிக்கும் எண்) 3 வரை அனுமதிக்கப்ட்ட வணிக மண்டலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதும், அது தொடர்பாக ஏறத்தாழ 165 ஹெக்டேர் நிலப்பரப்பு  ஆக்கிரமிப்பு செய்யப்பட உள்ளதாக ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மும்பை உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம்  வரை அணுகிய பின்பும் சேவ் ஆரே போராட்டக்காரர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை, அதற்கான வணிகப் பின்னணி இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டு  விரிந்து கிடக்கின்றது.

2019 தேர்தலுக்கு பின், வந்த உத்தவ் தாக்ரேவின் அரசானது இந்த மெட்ரோ வாகன நிறுத்துமிடத்தை ஆரே காட்டுப்பகுதியிலிருந்து, மாநில அரசுக்கு சொந்தமான ‘கஞ்சுமார்க்’ என்னும் பயன்பாட்டில் இல்லாத உப்பளத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்த உப்பளத்துக்கு சமீபகாலத்தில் போதுமான கடல்நீர் ஓதம் (Tide) இல்லாததால் இது கைவிடப்பட்டிருக்கிறது. எனினும், ஆளுங்கட்சியான மகா விகாஸ் அகாதிக்கும்  (MVA) (காங்கிரஸ்,சிவ சேனாமற்றும் NCP யின் கூட்டாட்சி)  பாஜகவுக்கும் நடுவில் நடக்கும் அரசியல் யுத்தமாக இத்திட்டம் மாறிவிட்டதால்  கஞ்சுமார்க்கு மாற்றும்  அம்முயற்சி தோல்வியடைந்துவிட்டது.

உத்தவ் தாக்ரே அரசின் முயற்சியால் அந்நிலத்தின் ஒரு சிறு பகுதியை ‘காட்டுப்பகுதி’ என  அறிக்கை வெளியிட முடிந்தாலும் வாகன நிறுத்தத்திற்கென அபகரிக்கப்பட்ட நிலத்தை அந்த காட்டுப்பகுதியின்கீழ் அறிக்கையில் சேர்க்கமுடியவில்லை. அதேசமயம் உத்தவ் தாக்ரேவின் அரசு நிலைகுலைந்து ஆட்சி கவிழ்ந்ததால்  வழக்கு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில் வாகன நிறுத்தம் அமைப்பதற்கான வேலைகள் துவங்கிவிட்டன. பெரிய பிரபலங்கள் மற்றும் உயர்வகுப்பினரின் பின்புலம் இருப்பதால் சேவ் அரே இயக்கமானது மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப் பிரபலமான போராட்டமாக இருக்கிறது. அதோடு, அனைத்து ஊடகங்களிலும்கூட  பரபரப்பாகப் பேசப்படும் ஒரு முக்கிய விவாதப் பொருளாகிவிட்டது. எனினும் பல முக்கிய சூழல் சார்ந்த  போராட்டங்கள் ஊடகங்களின் பார்வையில் தென்படுவதில்லை.

நவி மும்பை விமான நிலையத்தின் கடலோர மண்டல ஒழுங்குமுறை மீறல்கள்:

கடலோரப் பகுதிகள் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டி ‘கடலோர மண்டல ஒழுங்குமுறை’ அறிவிக்கை இயற்றப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தைச் சிதைக்கும்படியாக ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் வசதிக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களுக்காக   கடலோர மண்டல ஒழுங்குமுறை சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கின்றன.

கடலோர சாலைத் திட்டமானது  மும்பையின் மேற்கு கடற்கரைபகுதியில் நிலத்தை சீரமைத்து, அரபிக் கடலுக்கு அடியில் சுரங்கங்கள் அமைத்து விரைவுச் சாலை அமைப்பதாகும். இத்திட்டம் சிவசேனாவாலும் பால்தாக்கரேயின் மகனான ஆதித்தியா தாக்கரேவாலும் அதிகம் முடுக்கிவிடப்பட்டது. அரசின் ஆலோசகர்களே கடல் உயிரினங்கள் இனப்பெருக்கத்தைத் தடுப்பதோடு கடல் மட்ட உயர்வினால் மாநகரம் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்க்கப்பட்ட போதிலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆதித்திய தாக்கரே முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. நந்தராஜ்யோக் என்னும் நீதிபதியின் தலைமையில்  மும்பை உயர் நீந்திமன்றம் இத்திட்டத்தை செயல்படுத்த  சுற்றுசூழல் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட அனுமதிக்கு  தடை வழங்கியது. இருப்பினும் திட்டமானது உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு நிறைவேற்றப்பட்டது.

இத்திட்டங்களினால் மீன் வளம் குறைந்ததோடு  ‘கோலி’ எனப்படு மீனவ சமுதாயம் மிகவும் பாதிப்படைந்தது. தொடர்ந்து பல தசாப்தங்களாக நடைபெற்றுவரும் கட்டுமானங்களால் மீன்வளம் குறைந்து இந்த சமூகம் ஏற்கனெவே நெருக்கடியில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட  ‘பாந்த்ரா ஒர்லி கடல் இணைப்புத்திட்டம்’ போன்ற பல கடற்கரையோர சாலை வளர்ச்சித்த்திட்டங்கள் எதுவும் நெரிசலை குறைக்க உதவவில்லை.

இதனால்  அதிகம் பாதிப்படைவது அச்சூழலும்  சூழல் சார்ந்த உயிரினங்களுமே. மேலும் இதனால் கடற்கரையோர கிராமங்களைச்  (ஏறத்தாழ 23 கிராமங்கள்) சேர்ந்த 35,000 மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரம் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது. எண்ணிலடங்கா மேம்பாலங்களும் , மேற்கு மற்றும் கிழக்கு அதிவேக சாலைகளும்  காற்றை நஞ்சாக்கி கழுத்தை நெரிக்கும் நகரத்தின்  போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உதவவே இல்லை.

மிகவும் அதிக சூழல் உணர்திறன் சூழலைக்கொண்ட ஈரநிலம் மற்றும் சதுப்புநிலங்கள் அடர்ந்திருக்கும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ராய்கட் மாவட்டத்தில் நவி மும்பை விமான நிலையம் அமைக்கப்படுகிறது. ‘கடலோர மண்டல ஒழுங்குமுறை’ சட்டத்தைக் கருத்திகொண்டால் இது முழுமையான சட்ட விதிமீறலாகும். சத்ரபதி சிவாஜி சர்வேதேச விமானநிலையத்தின் நெரிசலைக் குறைப்பதற்காக  கட்டப்படுவதாக தீர்மானிக்கப்பட்டு இந்நிலையம் அதானியிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இந்த விமானநிலையம் அமையும்பகுதி மிகத்தீவிரமான பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள சூழல் உணர்திறன் பகுதியாகும். இவ்விடத்தில் வாழும்  ‘உரன்’ என்னும் ஒடுக்கப்பட்ட மீனவ சமுதாயம் 1980களிலிருந்து தொடர் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுகம், ONGC, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), நவி மும்பை சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற அரசு சார்ந்த பெரும் நிறுவனங்கள் இவ்விடத்தின் சூழலை முற்றிலுமாக பாழாக்கிவிட்டன. அந்நிறுவனங்களை இந்த நாசங்களுக்குப் பொறுப்பாக்க எதுவும் செய்யப்படவில்லை.

மெகா திட்டங்கள் :மெட்ரோ மற்றும் புல்லட் ரயில்கள்

மெட்ரோ ரயில் திட்டமும்  புல்லெட் ரயில் திட்டமும் ‘ஜப்பான் சர்வேதச ஒத்துழைப்பு நிறுவனத்தின்’ (Japan International Cooperation Agency) முதலீட்டைப் பெற்று நடக்கும் மும்பையின் மாபெரும் இரு திட்டங்கள். அவற்றில் அஹமதாபாத் (குஜராத்) மற்றும் மும்பையை (மகாராஷ்ட்ரா) இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் நரேந்திர மோடிக்கு நெருக்கமானத் திட்டங்களில் ஒன்று. ஏற்கனவே இருக்கும் போக்குவரத்து கட்டமைப்புகளால் இவ்விரு நகரங்களும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையற்ற, பல விவசாயிகளின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து நடந்த வீறுகொண்ட போராட்டத்தையும் மீறி குஜராத்திலிருந்து கட்டுமான பணிகள்  துவங்கி விட்டன.

மும்பை, புனே மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் மும்பையில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முறையான திட்டமிடல்  இன்றி கட்டப்பட்டதால் நகரத்தின் முழு கட்டமைப்பையும் சீர்குலைத்து போக்குவரத்தையே அபாயகரமானதாக மாற்றியுள்ளது. மேலும் இது ரிலையன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்களுக்கும் பயனற்று வருமான இழப்பினால் நஷ்டத்தில் ஓடுகின்றது.

மும்பையிலிருந்து 120 கி.மீ  தொலைவில்  பால்கர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தகானு 1991 ல் அரசால் சூழல் உணர்திறன் கொண்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அபாயகரமான தொழிற்சாலைகள் கொண்டுவர தடைசெய்யப்பட்ட பகுதி. இது  பலவகையான கடல் உணவுகள், பழங்கள் மற்றும் விவசாய பொருட்களின் விளைநிலமாகும். மகாராஷ்டிராவின் ‘உணவுக் கிண்ணம்’ என்றழைக்கப்படும் இவ்விடத்தை பாதுகாக்க ‘தகானு  தாலுகா பாதுகாப்பு அமைப்பு’ ஏறப்டுத்தப்பட்டது. இவ்விடத்தையும் புல்லட் ரயில், வாத்வன் துறைமுகம், DMIC எனப்படும் டெல்லி மும்பை தொழில் வளாகம் (Delhi Mumbai Industrial Corridor)   போன்ற வளர்ச்சித்திட்டங்கள் விட்டுவைக்கவில்லை.

ஜவஹர்லால்  நேரு துறைமுக அமைப்பு மற்றும் மகாராஷ்டிரா கடல் வாரியதின் கூட்டணியில் துவங்கப்பட இருக்கும் வாத்வன் துறைமுகம் சாகர்மலா முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும். அவ்விடத்தை வாழ்வாதாரமாகக்கொண்ட மீனவ மற்றும் விசுவாசய குடும்பங்களின் போராட்டத்தை மீறி இத்திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

2009ல்  காங்கிரஸ் ஆட்சியில் துவங்கப்பட்ட  உலகின் பெரிய உட்கட்டமைப்பு திட்டமான DMIC பா..ஜ.க அரசாலும் தொடரப்படுகிறது. அப்பகுதியில் துறைமுகம், சரக்கு போக்குவரத்து, விமானநிலையம், உற்பத்திநி லையங்கள் போன்றவற்றை கொண்டுவந்து   நவீன நகரமயமாக்குவதே அத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் ஜப்பானும் இந்தியாவும் சேர்ந்து 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கின்றது. இதனால் சூழலுக்கும் அவ்விடத்த்ல் வாழும் மக்களுக்கும் ஏற்ப்படும் பாதிப்புகளை முறையாக ஆய்வு செய்ய  வேண்டும்.

சிந்துதுர்க் மாவட்டம் கொங்கன் கரையில் மைந்திருக்கும் ‘நானார்’ பகுதி அல்போன்ஸா மாம்பழத்திற்கும், முந்திரி, அரிசி மற்றும் கடல் உணவுகளுக்கும் பெயர் போனது. இவ்விடத்தில் சவுதி அராம்கோவின் உதவியுடன் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மகாராஷ்டிர அரசினால் நிறுவப்படவுள்ளது. ஒவ்வொருமுறையும் அரசு இத்திட்டத்தை முன்னெடுக்கும்போது அவ்விடத்தில் வாழும் மீனவ மற்றும் விவசாயக்  குடிகளால் அது போராடி தடுக்கப்பட்டது. 2019 தேர்தலின்போது இவ்விடத்தில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் வர அனுமதிக்கமாட்டோம் என்பதையே தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த உத்தவ் தாக்கரே வெற்றிக்குப்பின் கைவிரித்துவிட்டார். இந்நிலையில் தற்போது நடக்கும் நில அளவை மற்றும் கணக்கெடுப்பு வேலைகளைக் கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்படும் இத்திட்டங்கள் சூழலைச் சிதைப்பதோடு அப்பகுதியில் காலம்காலமாக வாழும் மக்களையும் அவர்கள் வாழ்வையும் சிதைப்பவையாக இருக்கின்றன. இப்படித் திணிக்கப்படும் திட்டங்கள் யாருக்கு வளர்ச்சியைக் கொண்டுவருகின்றன என்பதே கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

  • ராதிகா ஜவேரி
  • தமிழில்: ஹம்மது ருக்கியா
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments