இயற்கை பேரிடர் என எங்காவது படிக்க நேர்ந்தாலோ அல்ல யார் சொல்ல கேட்டாலோ, நமக்கு புயல், வெள்ளம் தாண்டி நினைவிற்கு வருவது நிலநடுக்கம், எரிமலை, சுனாமி ஆகும். நிலநடுக்கங்களை பற்றி சிறு வயதில் பாட்டி கூறிய கதையில் தெரிந்து கொண்டதுண்டு. ஆனால் எரிமலை பற்றி தொலைக்கட்சியில் ஒரு திரைப்படத்தின் மூலமாக தான் அறிந்துக்கொண்டேன். அத்திரைப்படத்தில் ஒரு எரிமலை வெடித்து சிதறி நதி போல் நகரத்திற்குள் வருவது போல காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
பூமியின் ஆழ்பகுதி பாறைகளாக இருக்க, எப்படி மலைகள் வெடித்து அரைதிடவ வடிவத்தில் நிலப்பகுதிக்கு வருகிறது என்பது பெரும் கேள்வியாக இருக்கலாம். நிலப்பகுதி தோன்றிய பின் தான், எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டால், எரிமலை வெடிப்பால்தான் பல நிலப்பரப்பே தோன்றியது என்றே கூறலாம். எரிமலை வெடிப்பு பூமியில் மட்டும் நிகழக்கூடியது அல்ல. சூரிய குடும்பத்தின் பிற கோள்களிலும், துணை கோள்களிலும் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பிரபஞ்சத்தில் எல்லாமும் வெடிப்பில் இருந்து பிறந்தது தானே.
பூமியானது ஆழத்தின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. புவி ஓடு (crust), புவி மூடகம் (mantle), புவி கருவம் (அ) புவி கரு (core). இந்த புவி கரு அதிகளவான தட்பவெப்பநிலை கொண்டது. சுமார் 4500 ͦC முதல் 5500 ͦC வரை தட்பவெப்பநிலை இருக்கும். புவியின் கருவில் நிலவும் அதிகளவு வெப்பநிலையின் காரணமாக, புவி மூடகத்தில் உள்ள திடமான பாறைகள் உருகி அரைதிரவ நிலைக்கு மாறும். இதனை ‘மேக்மா’ (Magma) என்றழைப்பர். பின், அங்கு சுற்றியுள்ள பிற பாறைகளின் தன்மையைக் காட்டிலும் மேக்மாவின் அடர்த்தி குறைவாக உள்ளாதாலும், அழுத்தத்தின் காரணத்தாலும் அது புவி ஓட்டிற்கு மேலெழும்பி வரும்.
பின்னர், மேக்மாவானது பாறைகளின் துளைகளிலும், இடுக்கின் வழிகளிலும் மேலே செல்லும். துளைகளில் நெருப்பு குழம்புகளாக வெடித்து சிதறும். இரு கடல்தட்டுக்கள் பிரிந்து செல்லும் போதும், அல்லது கடல் தட்டு கண்டத்தட்டின் மீது மோதும் போதும் எரிமலை வெடிப்பு ஏற்படும். இந்த எரிமலை நெருப்புக்குழம்புடன் பாறைகள், சாம்பல் மற்றும் வாயு ஆகியன வெளியேறும்.
பெரும்பாலான எரிமலைகள் கண்டத்தட்டுகளின் முனைகளில் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 1,575 எரிமலைகள் நிலப்பகுதியில் உள்ளன. கடலில் உள்ள மொத்த எரிமலைகளில் 75% பசுபிக் கடல் தட்டின் முனைகளில் உள்ளன. இப்பகுதியை ‘பசுபிக் எரிவளையம் (Pacific Ring of Fire)’ என்றழைப்பர்.
எரிமலை அதன் தன்மைக்கேற்ப 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
- செயற்பாட்டில் உள்ள எரிமலை (active volcanoes): இவ்வகையான எரிமலை இப்போதும் வெடிக்கக்கூடிய வரும் காலத்தில் எப்போதும் வெடிக்கக்கூடிய நிலையில் இருப்பது.
- இறந்த எரிமலை (extinct volcanoes): ஒரு காலத்தில் வெடிப்புகள் நிகழ்ந்த எரிமலையில் தற்போது எந்த வெடிப்பும், வரும் காலத்தில் எரிமலை வெடிப்பு நிகழாத எரிமலைகள் ஆகும்.
- செயற்பாட்டில் இல்லா எரிமலைகள் (dormant volcanoes): சமீப காலங்களில் எந்தவொரு எரிமலை வெடிப்பு நிகழ்வும் ஏற்படாத எரிமலைகள் மற்றும் வரும் காலத்தில் வெடிக்கும் நிலையில் இருக்கும் எரிமலைகள் ஆகும்.
பூமி உருவானதிலிருந்தே எரிமலை வெடிப்பு நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. பல நிலப்பரப்புகள் உருவாவதற்கு எரிமலை வெடிப்பு காரணமாக இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக ஹவாய் தீவைக் கூறலாம். ஆனால், எரிமலை நமக்கு பேரிடராகவோ அல்லது அழிவின் சின்னமாகவோதான் நம் நினைவிற்கு வருகிறது. நிலப்பரப்பு உருவாக காரணமாக இருந்தாலும், பெரிய அழிவுகளை எரிமலை வெடிப்பு ஏற்படுத்தி வந்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாவது முற்றொழிப்புகளுக்கு (mass extinction) ஒருவகை காரணமாக எரிமலை வெடிப்பு இருந்துள்ளது. மனித சமூகம் தோன்றியதிலிருந்து ஏற்பட்ட பெரியளவிலான எரிமலை வெடிப்புகள் பின்வருமாறு;
- டம்பரோ எரிமலை, இந்தோனேசியா,1815
ஏறத்தாழ, பத்தாயிரம் மக்கள் எரிமலை வெடிப்பின் நேரடி பாதிப்பால் இறந்துள்ளனர். 50 கன கிலோமீட்டர் அளவிற்கான சாம்பல் படிந்தும் அவற்றில் 5 லட்ச சதுர கிலோ மீட்டருக்கு 1 செ.மீ அளவுள்ள சாம்பல் இந்தோனேசியா மற்றும் ஜாவா கடலில் படிந்தது. இந்த சாம்பல் பாதிப்பால் உணவு உற்பத்தி குறைந்து 82,000 பேர் இறந்தனர்.
- கரக்கட்டோவா, சுமத்திரா தீவு 1883
இந்தோனேசியாவின் கரக்கட்டோவா எரிமலை டம்போரா எரிமலையை விட சிறிய மலையாகும். இது வெடித்தபோது 18 கன கிலோமீட்டர் அளவிற்கு துகள்களும், நெருப்புக் குழம்பும், சாம்பலும் படர்ந்தது. கிட்டத்தட்ட 36,000 பேர் கரக்கட்டோவா எரிமலை வெடிப்பின் காரணமாக இறந்தனர்.
- பிலே எரிமலை, கரிபியன் கடல்,1902
மார்டினிக் எனும் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் பாதிப்பு 1 கன கிலோமீட்டருக்கு குறைவாககவே இருந்தது. இருப்பினும் 29,000 மக்கள் இறந்தனர்.
- ரூயிஸ் எரிமலை, ஆண்டஸ் மலைத்தொடர்,1985
மனித சமூகம் தன் வரலாற்றில் கண்ட இரண்டாவது பெரிய எரிமலை வெடிப்பு, கொலம்பியா பகுதியில் 1985 ஆம் ஆண்டு ஆண்டஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாகும். சுமார் 25000 மக்கள் இறந்தனர்.
கடந்த 200 ஆண்டுகளில் எரிமலை வெடிப்புகளால் உயிரிழந்தவர்களில் இந்த 4 எரிமலை வெடிப்பில் மட்டும் 70% மக்கள் இறந்தனர். எரிமலை வெடிப்பு என்பது இயற்கையாக நிகழக்கூடியது. மனிதனால் எரிமலை வெடிப்புகளை தடுக்க முடியாது. பூமி தோன்றிய 450 கோடி ஆண்டுகளில் எரிமலை வெடிப்பு பெருமளவில் நிகந்துள்ளது. இரண்டு முற்றொழிப்புகள் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. அந்த அளவிற்கு எரிமலையின் பாதிப்பு இருந்துள்ளது. ஆனால் மனிதன் தோன்றியதற்கு பின், எரிமலை வெடிப்புகள் பெரிய அளவில் இல்லை. ஆங்காங்கே எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டாலும் அவை பெரிதும் பாதிக்காததாக இருந்துள்ளது.
இப்போது நாம் சந்தித்துக்கொண்டு இருக்கின்ற காலநிலை மாற்ற பிரச்சனைகள் எரிமலை வெடிப்பின் பாதிப்பை விட அதிக அளவான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. இப்போது இருக்கின்ற எரிமலைகள் முற்றோழிப்புகளுக்கு காரணமாய் அமையாமல் இருந்தாலும், காலநிலை மாற்ற பிரச்சனைகள் முற்றொழிப்புக்கு காரணமாய் அமைந்திடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலை வெடிப்புகளை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், காலநிலை மாற்ற பிரச்சனைகளை நம்மால் மட்டுப்படுத்தவோ, அதிலிருந்து தகவமைத்துக்கொள்ளவோ முடியும்.
Reference:
- https://www.australiangeographic.com.au/topics/science-environment/2017/01/the-worlds-10-most-devastating-volcanic-eruptions/
- https://time.com/5300683/volcanoes-most-dangerous-active/
- The text book of Geology by Stephen Blake
- லோகேஷ் பார்த்திபன்
- [email protected]