குப்பையின் முகம்

jasmin-sessler-DR2jtLy8Fe4-unsplash
Image Credit: Jasmin Sessler

குப்பைகளைப் பற்றி படிக்கவும் எழுதவும் தொடங்கியதிலிருந்தே சென்னையின் குப்பைக் கிடங்குகளை நேரில் சென்று பார்த்து ஆழமாக அவற்றை அவதானிக்க வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆவல். உடன் அழைத்துச் செல்லப் பொருத்தமான நண்பர் ஒருவரை சந்தித்தபோது அவர் தன் கல்லூரி நாட்களில் தான் அதற்காக எடுத்த முயற்சியை என்னோடு பகிர்ந்துகொண்டார்.

குப்பைக் கிடங்குகளைப் பார்வையிட சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அனுமதி பெறுவது அவசியம். அப்படி அந்த அனுமதிக்காக அலைந்தபோது இறுதியில் அனுமதிக் கடிதத்தில் கையெழுத்திட்ட அதிகாரி சொன்னதாக அவர் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. “நீங்க உங்களோட சொந்த ரிஸ்க்லதான் அதுக்குள்ளே போகப் போறீங்க. உலகில் என்னவெல்லாம் தொற்று வியாதிகளுக்கானக் கிருமிகள் உள்ளனவோ அத்தனையும் அங்கே இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. என்னெவெல்லாம் நச்சு வேதிப்பொருட்கள் உலகில் புழக்கத்தில் உள்ளனவோ அவை எல்லாவற்றுக்கும் நீங்கள் இலக்காக வாய்ப்புகள் உண்டு. சில நிமிடங்கள் அங்கே உலாவுவதுகூட உங்களுக்குக் கடுமையானப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிகாரிகளாகிய நாங்களே அவற்றினுள் நுழைவதில்லை. தனிப்பட்ட முறையில் மாணவர்களாகிய நீங்கள் அங்கே செல்வதை நான் ஏற்கவில்லை. இதற்குமேல் உங்கள் விருப்பம்.” என்றிருக்கிறார்.

இதைக் கேட்ட நண்பர் அனுமதி பெற்ற பிறகும் முடிவை மாற்றிக்கொண்டு தனதுத் திட்டத்தைத் கைவிட்டிருக்கிறார். எனக்கும் இதைக் கேட்ட எனக்கும் பின்னர் குப்பைக் கிடங்குகளினுள் நுழையும் பேராசை அத்தோடு முடிவுக்கு வந்தது. குப்பைகளுக்கு ஒரு மந்திரசக்தி உண்டு. ஒரு நாட்டின் வளர்ச்சி  அதிகரிக்க அதிகரிக்க குப்பைகளும் அதிகரிக்கும். நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு குப்பைகளை உருவாக்குகிறோம் என்பதோடு ஒரு பழங்குடி சமூகம் எவ்வளவு குப்பைகளை உருவாக்கக்கூடும் என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் இந்த உண்மை புரியும்.

நாகரிகமும் வளர்ச்சியும் இணைந்து புணர்ந்து பெறும் பிள்ளைகள்தான் குப்பைகள்போலும்! இவ்விடத்தில் ஒரு காடோடியை நம்மிடமிருந்து பிரித்துக்காட்ட நாம் பயன்படுத்தும் ‘நாகரிகம்’ என்ற வார்த்தையே எத்தனை அருவெறுப்பானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு தனிநபர் சராசரியாக ஒருநாளில் உருவாக்கும் குப்பையின் எடையைக் கணக்கிட்டால் கனடா, மிகக்குறைந்த வித்தியாசத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளை விஞ்சி மிக அதிகக் குப்பை உற்பத்தியுடன் உலகின் முதலிடத்தைப் பெறுகிறது.

இந்தியாவின் தனிநபர் குப்பையைவிட இது 7 மடங்குக்கும் மேல் அதிகமாகும். இந்தியாவையே எடுத்துக்கொண்டால் முன்னேறிய மாநிலங்கள் பின்தங்கிய மாநிலங்களைவிட அதிகமாகக் குப்பையை உருவாக்குகின்றன. முன்னேறிய நகரங்கள் பின்தங்கிய நகரங்களைவிட அதிகமாகக் குப்பையை உருவாக்குகின்றன. நகரங்கள் கிராமங்களைவிட அதிகமாகக் குப்பையை உருவாக்குகின்றன. ஒரு கிராமத்தின் வசதிமிக்க ஒரு குடும்பம் வறுமையில் உழலும் ஒரு குடும்பத்தைவிட மிக அதிகக் குப்பையை உருவாக்குகிறது.

2016 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியா வருடத்துக்கு சுமார் 5.2 கோடி மெட்ரிக் டன் குப்பைகளை உருவாக்குகிறது. இது ஒவ்வொருவருடமும் வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை நகரம் மட்டுமே அரசின் புள்ளிவிபரங்கள்படி சுமார் 18 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை ஒரு வருடத்தில் உருவாக்குகிறது. சராசரியாக இந்திய நகரவாசி ஒருவர் ஒரு நாளைக்கு 400 முதல் 450 கிராம் குப்பையை உருவாக்குகிறார். சிறு நகரங்களில் இது சுமார் 250 கிராமுக்குக் குறைவான அளவிலும் பெரு நகரங்களில் 500 கிராமுக்கு மேலும் உள்ளது (மேற்கண்டப் புள்ளி விபரங்கள் Centre for Science and Environment இன் NOT IN MY BACKYARD புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.)

இந்தியாவில் திடக்கழிவுகளில் மட்காக் குப்பைகளின் அளவு சராசரியாக 40 முதல் 60 விழுக்காடு என்று எடுத்துக்கொண்டால் அதிகபட்ச மட்காக் குப்பைகளை வருமானத்தில் மேல்தட்டு மக்களும் குறைந்தபட்ச மட்கும் குப்பைகளை பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மக்களும் உருவாக்குகின்றனர். அதாவது குப்பையின் அளவிலும் எடையிலும் தரத்திலும் மோசமான , கையாள இயலாதக் கழிவுகளை மேல்தட்டு வர்க்கமே உற்பத்திச் செய்கிறது.

ஒரு உயர்தட்டு மற்றும் ஒரு பின்தங்கிய வர்க்கத்தைச் சார்ந்த பிள்ளைகள் இருவரின் மொத்த விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் அவர்களின் மொத்த உடைகள் – உடைமைகளை கற்பனை செய்து ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். யாருடையது எடை அதிகமாக இருக்கும்? யாருடையது விரைவில் குப்பையில் வீசப்பட்டு மாற்றீடு செய்யப்படும்? என்ற கேள்விகளுக்கான விடையைச் சிந்தித்தால் வர்க்கமும் குப்பையும் எப்படி ஒன்றோடொன்றுப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை நன்கு உணர முடியும்.

ஆனால், அதே நேரத்தில் சுகாதாரக்கேடு பற்றியோ இல்லை குப்பை பற்றியோ ஒரு காட்சி நம் கண்முன் விரிந்தால் எந்த வர்க்கத்தினர் அல்லது எந்த வர்க்கத்தினரின் வாழிடங்கள் நம் மனக்கண்ணில் தோன்றும் என்பதை உணர முற்பட்டால் இங்கு ஒரு விசித்திரம் புலப்படும். ஒரு திரைப்படத்தில் துணி வெளுக்கும் தொழிலாளி பாத்திரத்தில் நடித்த நடிகர் கவுண்டமணி “உலகத்தில் இரண்டே சாதிகள்தான் உண்டு. ஒன்று துணியை அழுக்காக்குகிற சாதி; இன்னொன்று துணியைத் துவைக்கிற சாதி” என்பார். அதேப் போன்று சொல்வதானால் ‘இங்கு இரண்டே சாதிகள்தான். ஒன்று குப்பையை உருவாக்குகிற சாதி. இன்னொன்று அந்தக் குப்பையில் உழல்வதற்காகவும் அதைக் காலமுழுதும் சுமப்பதற்காகவும் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதி’.

பொதுவாகக் குழந்தைகளிடம் பேசும்போது அவர்களுக்குப் புரியும் வித்த்தில் இதை நான் ஒரு எடுத்துக்காட்டுடன் சொல்வதுண்டு. ஒரு குழந்தையின் கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் இன்னொரு குழந்தையின் கையில் 10 ரூபாய் தாளையும் கொடுத்துச் சென்னைக் கடற்கரையில் உங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லியனுப்புவதாகக் கொள்வோம். குறிப்பிட்ட நேரம் கடந்ததும் அவர்கள் திரும்பி வரும்போது அந்த ஐநூறு ரூபாய் பெற்றுக்கொண்ட சிறுவன் அவனுக்குப் பிடித்த விளையாட்டுச் சாதனங்கள், தண்ணீர் புட்டி, குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் போன்ற ஏராளம் பொருட்களை வாங்கிவிட்டு ஏராளம் குப்பைகளைக் குறிப்பாக மட்காக் குப்பைகளை உருவாக்கியிருப்பான். அதுவே பத்து ரூபாய் பெற்றுக்கொண்ட சிறுவனுக்கு காகிதத்தில் பொதியப்பட்டச் சுண்டல் அல்லது வேர்க்கடலையைவிட அவன் விரும்பினாலும் ஏதும் வாங்கும் சாத்தியம் இருக்காது. இல்லையெனில் அதிகபட்சம் அவன் ஒரு நொறுக்குத் தீனிப் பொட்டலத்தை வாங்கியிருப்பான்.

அடுத்த நாள் காலை விடிந்ததும் 500 ரூபாய்க்கு குப்பை உருவாக்கியச் சிறுவனின் அப்பா கடற்கரையில்  நடைபயிற்சி செய்யும்போது 10 ரூபாய்க்காரனின் தகப்பன் ஒரு கையுறையோச் செருப்போகூட இன்றி காற்றில் ஆங்காங்கேப் பறந்துகொண்டிருக்கும் அந்த உயர்தட்டுக் குப்பைகளைத் தன் பிழைப்புக்காகப் பொறுக்கிக் கொண்டிருப்பார்.

வெயிலோ – மழையோ இல்லை இரவோ – பகலோ மூக்கைத் துளைக்கும் துர்நாற்றத்துக்கும் மூச்சுத்திணறச் செய்யும் புகைக்கும் இடையே அருவெறுப்பு கொள்ளச் செய்யும் பயன்படுத்தித் தூக்கி வீசப்பட்ட டயபருக்கும் நாப்கினுக்கும் இடையேக் கையைவிட்டு நெகிழிப்பையைத் துளாவி எடுக்கும் அந்த மனிதர்களைப் பாருங்கள்.

யாரிவர்கள்?

கருத்துப்போனப் கிழிந்தப் புடவையின் மீது தொளதொளத்தச் சட்டையை அணிந்தபடித் அலையும் இந்தப் பெண் யாராக இருக்கும்? உடலெங்கும் ஈ மொய்த்தாலும் கடற்கரையில் விளையாடும் சிறுவனைப்போல உத்வேகத்துடன் அதே நேரத்தில் கூரியக் கண்களுடன் குப்பைகளைத் துளாவியபடிப் பவனிவரும் இந்தச் சட்டையணியாதச் சிறுவன் யார்? இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புடன் நெகிழிப்பையைக் கையுறையாக்கியபடி குப்பையைக் கிழறிக்கொண்டிருக்கும் இந்தப் பெரியவர் யார்? புழுதி பறக்கும் மண்ணில் புரண்டு மிதிபட்டதைப் போலத் தோற்றமளிக்கும் இந்த முகங்கள் எவருடையவை?

இன்னொரு புறமோ இந்த முகங்களின்மீது எச்சில் சோறு முதல் தன் வீட்டின் அத்தனை அழுக்கையும் சேர்த்து வீசியெறிந்த முகங்கள் எவருடையவை? இதுதான் குப்பையின் முகம். கோர முகம். முடை நாற்றமெடுக்கும் முகம். பர்கரும் பீட்சாவும் சாப்பிடும் நவீனர்கள் பலர் பார்க்க விரும்பாத முகம். சமூக அநீதியின் முகம். சூழல் அநீதியின் முகம்.

.

மேட்டுக்குடிகளாலும் ஆளும் வர்க்கத்தாலும் புறக்கணிக்கப்பட்ட மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மீது விழும் குறைந்தபட்சக் கவனம்கூட இந்தக் குப்பைகளைக் கையாளும் முறைசாரா / சார்ந்தத் தொழிலாளர்கள் மீது படிவதில்லை. முன்னவர் விஷவாயு தாக்கி உடனடியாக உயிரிழக்கிறார். பின்னவர் கொஞ்சம் கொஞ்சமாய் நச்சுக்கழிவுகளில் அமிழ்ந்து சாகிறார். ஆங்கிலத்தில் இவர்களை கவுரவப்படுத்துவது போன்ற ‘Garbage warriors’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள் அல்லது தூய்மைப் பணியாளர்கள் என்ற பெயர்களுக்குள் அடக்கிவிட முடியாத நம் குப்பைகளைப் பொறுக்கி வயிற்றைக்கழுவும் இன்னும் தமிழில் பெயர்வைக்கப்படாத இந்த எளிய மனிதர்களைக் குறித்து நாம் எப்போது சிந்திக்கப் போகிறோம்?

‘என்னப்பெத்த ஆத்தா’ என்று அம்மாவின் புகழைப் பாடிக்கொண்டே அவளது இறுதி மூச்சுவரை அவள் உழைப்பை உறிஞ்சி சுக வாழ்வு வாழும் பொதுச் சமூகம் போன்றே Garbage worriors போன்ற அதீதப் புனிதப்படுத்தல்கள்கூடப் பல நேரங்களில் பயனற்றதாகவும் ஆபத்தாகவுமே முடிந்துவிடும்.

குப்பைகளைக் கையாளும் / குப்பைகளில் மறுசுழற்சி செய்யத்தக்கக் கழிவுகளைப் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் சுற்றுச் சூழலின் நலனுக்குப் பெரும் பங்கு வகிக்கிறார்கள். மறுசுழற்சிக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இல்லாத நம் பகுதிகளில் இவர்களுடையப் பங்களிப்பு மிக முக்கியமானது. மூலப் பொருள் விரையத்தைத் தடுத்தல், கழிவின் அளவைக் குறைத்தல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றைச் செய்யும் இவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி அங்கீகரித்தல், நச்சுக் கழிவுகளைக் கையாளத் தேவையானக் கையுறைகள் போன்றப் பாதுகாப்பு உபகரணங்களைத் தொடர்ந்து வழங்குதல், தெருக்களில் குப்பைகளைச் சேகரிக்கும் முறைசாராத் தொழிலாளர்களுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்குதல், அபாயகரமானக் கழிவுகள் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வழங்குதல், முக்கியமாகக் குழந்தைத் தொழிலாளர்களை இத்தொழிலிருந்து அகற்றி அவர்களுக்கு மறுவாழ்வளித்தல் போன்றவற்றை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இந்தத் தொழிலாளர்களின் தேவைகளை முழுமையாக ஆய்வு செய்து இவர்களின் பணிச்சூழலையும் வாழ்வையும் சமூக மதிப்பையும் மேம்படுத்தும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

குப்பைகளை உற்பத்திச் செய்வோருக்கு கட்டணமும் குப்பை மேலாண்மை விதிகளை மீறுவோருக்கும் கடுமையான அபராதங்களும் விதித்து அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையின் ஒரு பகுதியை அரசு இந்தத் தொழிலாளர்கள் நலனுக்குச் செலவிட வேண்டும்.

நம் கழிவுகளை அகற்றிச் சூழலைப் பாதுகாக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு மறுசுழற்சி செய்யத்தக்கக் குப்பைகளைச் சுகாதாரமான முறையில் வழங்கவேண்டியது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. இவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதோடு நாம் வழங்கும் பயன்படுத்தியப் பொருட்களை இலவசமாகவோ இல்லைக் குறைந்தபட்சமாக அதிகம் பேரம் பேசாமலோ கொடுப்பது அவர்களின் வாழ்க்கைத் தரத்தைச் சிறிதளவிலேனும் மேம்படுத்த உதவும்.

குப்பைகள் வெறும் குப்பைகள் அல்ல. அவை சமூகத்தின் மனசாட்சியைக் காட்டும் கண்ணாடிகள். ஒரு நாட்டின் குப்பைகள் அந்த நாட்டின் சாதிய வர்க்க பேதங்களையும் அரசின் நிர்வாகத்திறனையும் குடிமக்களின் பொறுப்புணர்வையும் சமூக நீதியின் நீட்சியையும் திறந்து காட்டுபவை.

நம்முடையக் குப்பைகள் எதைக்காட்டுகின்றன? காய்த்தல் உவர்த்தல் இன்றி கொஞ்சம் அவற்றைக் கிளறிப் பார்ப்போமா?

-ஜீயோ டாமின். ம

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments