புத்தக மதிப்புரை

எழுத்தாளர் எர்னெஸ்ட் எமிங்வே எழுதிய இரண்டு நாவல்களின் பேசுபொருள் ‘யுத்தம்’தான். அவருடைய நாவலான ‘எ ஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்’ நாவலில், (A FAREWELL TO ARMS) ஃப்ரெட்ரிக் ஹென்றி, கேத்தரின் பார்க்லியை முதல் உலக யுத்தத்தின் போதுதான் காதலிப்பார். அவருடைய மற்றொரு நாவலான ‘ஃபார் ஹ¨ம் த பெல் டால்ஸ்’ (FOR WHOM THE BELL TOLLS) நாவலில், ராபர்ட் ஜோர்டான் கொரில்லாப் படைகளுக்கு ஸ்பானிய யுத்தத்தின் போதுதான் உதவுவான். நாடுகளுக்குள் நடக்கும் போராக இருக்கட்டும், அல்லது ஒரு நாட்டுக்குள் இருக்கக்கூடிய பல்வேறு சமூகங்களுக்குள் நடக்கும் போராக இருக்கட்டும், போர் என்பது எப்போதும் எழுத்தாளர்களின் கற்பனையை கவர்ந்திழுக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. அப்படியான எழுத்தாளர்களில் ஒருவர்தான் எர்னெஸ்ட் ஹெமிங்வே. அவர் போரின் வாயிலாகத்தான் வளர்ந்தார். மற்றவர்களெல்லாம் போரின் பலியாட்கள். போரினால் தங்களின் குடும்பங்கள் கரைந்ததையும், கலாச்சாரம் அடியோடு மறைந்ததையும், வன்முறைக்கு இரையானதையும், இறப்பையும் கண்கூடாகக் கண்டவர்கள். இதையெல்லாம் விளக்கக்கூடிய ஒரு கதை மிக தெளிவாகவும் வலுவானதாகவும் இருக்கிறது.

போர் எப்படி உண்மையானதாக இருக்கிறதோ, அதுபோலத்தான் பருவநிலை மாற்றமும். அதனுடைய தாக்கங்களை நாம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து உணர்கிறோம். கடந்த 2015-ஆம் வருடம், மிக அதிகமான வெப்பமான வருடம் என இருக்கின்ற தரவுகள் சொல்கின்றன. அதைவிட அதிகமாக, ஆழமான மற்றும் அடிக்கடி நிகழ்ந்த புயல்கள், புயல் அலைகள், மழை வெள்ளம், வறட்சி, பஞ்சம் இவையெல்லாமும் கடந்த வருடம் நிகழ்ந்தன. நம்முடைய தொலைக்காட்சித் திரை அதீதமான பருவநிலை நிகழ்வுகளைத் தந்தன. சில மாதங்களுக்கு முன் வறட்சியில் தவித்துக் கொண்டிருந்த மகராஷ்டிராவும் மத்திய பிரதேசமும் தற்பொழுது அதிகப்படியான மழையை பெறுகின்றன. வங்காளத்தில் இருக்கக்கூடிய சுந்தரவனக் காடுகளில் உள்ள தீவுகள் பல வருடங்களாக மறைகின்றன, பின்னர் தோன்றுகின்றன. 2015-ஆம் வருடம் டிசம்பரில் சென்னையில் பெய்த மழையால் சென்னையே பாழாகியது. 10 வருடங்களுக்கு முன்னர் 2005-ஆம் வருடம் ஜூலை மாதம், மும்பையில் ஒரே நாளில் 100 சென்டிமீட்டர் மழை பதிவானது. எனினும், பருவநிலை மாற்றம் இன்னும் எழுத்தாளர்களின் கற்பனையோடு கலக்க வில்லை என அமிதவ் கோஷ் தன் The Great Derangement: Climate Change and the Unthinkable என்ற நூலில் எழுதியுள்ளார். இருந்தாலும், எல்லா நாடுகளுக்கும் பருவநிலை மாற்றத்தின் உருவமைப்பு என்பது ஒரு அறிவியல் கற்பனைக் கதை களமாகத்தான் இருக்கிறது. “இந்த விசித்திரமான வளையத்திற்குள் என்னவோ ஒரு குழப்பம் இருக்கிறது”, என கோஷ் குறிப்பிடுகிறார். “வாழ்க்கையை முழுமையாக மாற்றக்கூடிய அளவுக்கு நம்மை பயமுறுத்தும் பருவநிலை மாற்றம் குறித்து நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது. இந்த பூமியில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை நாம் எண்ணிப்பார்த்தால், அது இந்த உலகம் முழுவதிலும் உள்ள எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வெகு தூரத்தில்தான் இருக்கும் என நினைக்கிறேன்”, என கோஷ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்கள் படைப்புகளோடு பருவநிலை மாற்றத்தை இணைத்துக்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம் குறித்த தளத்தினை கற்பனை என்கிற இடத்திலிருந்து நகர்ந்து புதுமை விரும்பிகளுக்கு ஏற்றாற்போல் விரிவாக்கம் செய்ய வேண்டும். எங்களை எந்தத் தவறும் இழைக்க விடாதீர்கள். பருவநிலை நெருக்கடி என்பது நம்முடைய கலாச்சாரத்திற்கும் கற்பனைக்கும் ஏற்பட்ட நெருக்கடி. “பருவநிலை மாற்றம் நம்முடைய கலாச் சாரத்துக்கும், மனித நேயத்திற்கும் மட்டுமின்றி நம்முடைய சமயோசித அறிவு, சமகால கலாச்சாரம் இவற்றுக்கெல்லாம் சவாலாக இருக்கிறது”, என ஒரு இடத்தில் கோஷ் குறிப்பிட்டுள்ளார்.

பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் அதிகமாக தொழில்நுட்ப வார்த்தைகள் இடம்பெறுவதும், நம்முடைய கலையையும், மனித நேயத்தையும் வழிநடத்தும் சில பழக்கவழக்கங்கள் மற்றும் கற்பனைகளாலேயே நாம் இத்தகைய சவால்களை தற்போது சந்தித்து கொண்டிருக்கிறோம். எழுத்தாளர்கள் உருவகப்படுத்தும் கலாச்சாரம் பெரும்பாலும் முதலாளித்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலுமே வழிநடத்தப்படுகிறது. உதாரணமாக, “காட்டின் வழியே கார் சென்றது”, “புல்வெளி, உப்பு அகற்றப்படாத நீரால் பாய்ச்சப்பட்டது”, இது போன்ற உருவகங்கள், முதலாளித்துவத்துக்கு ஆதராவகவே இருக்கின்றன. கோஷ் ஒருகட்டத்தில் வருங்காலத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார், “கணிசமான அளவில் நமது உலகம் மாற்றப்பட்டு, கடல் நீர்மட்டம் உயர்ந்து, சுந்தரவனக்காடுகள் அழிக்கப்பட்டு, கொல்கத்தா, நியூயார்க், பாங்காக் போன்ற நகரங்கள் வாழவே தகுதியற்றதாக மாறும்போது, நூலகங்களுக்கும் அருங்காட்சியகத்திற்கும் செல்லும் நம்முடைய வருங்கால சந்ததியினர் முதலில் எதை தேடுவார்கள்? அவர்களுடைய இருப்பிடத்தின் தடயங்களை முதலில் தேட மாட்டார்களா? அப்பொழுது நாம் நம் கலையையும் இலக்கியத்தையும் மதிக்க தெரியாமல் தொலைத்தவர்கள் என அவர்கள் முடிவெடுத்து விடுவார்கள். கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இரு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று, பாகிஸ்தானிலுள்ள இந்து பள்ளத்தாக்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு அதிக இறப்புகள் மற்றும் சேதம் ஆகியவை ஏற்பட்டன. மற்றொன்று ரஷ்யாவில் காட்டுத்தீ ஏற்பட்டு பலரது வாழ்விடங்கள், பயிர் நிலங்கள் சேதமாகின. இவை இரண்டையும் ஊடகங்கள் தனித்தனியாக அலசின. ஊட்கவியலாளர்கள் இரண்டிலும் பருவநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு சில தொடர்பை ஏற்படுத்தினர். இதன்பின், சில மாதங்கள் கழித்து, கோபன் கேகனில் பருவநிலை மாற்றத்துக்கான ஒப்பந்தம் இயற்றப்பட்டது. அப்போது, ஊட்கங்கள் கருத்துகளை கேட்க அறிவியலாளர்களை அணுகியபோது, “இருக்கலாம்”, ”இருக்க முடியும்”, “வாய்ப்புள்ளது” இதுபோன்ற கருத்துகளையே அவர்கள் கூறினார்கள்.

பருவநிலை மாற்றத்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள அறிவியலுக்கு நீண்ட நெடிய காலம் தேவைப்படும். சொல்லப்போனால், பருவநிலை மாற்றமே தன்னைத்தானே சரியாக இன்னும் தெளிவுப்படுத்திக் கொள்ளவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள (INTERGOVERNMENTAL PANEL) பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கை, பருவநிலை மாற்றம், மனித செயல்பாடுகள், அதீதமான பருவநிலை மாற்ற விளைவுகள் இவற்றுக்கான தொடர்பை தெளிவாக வெளியிட்டுள்ளது. அறிவியலுக்கான மொழி என்பது எல்லைகளை கொண்டது. அது தன் முடிவுகளை எடுக்க நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளும். சில சமயம், சில அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முடிவுகள் எட்டப்படாமல் கூட இருக்கலாம். ஆனால், இதழியலின் மொழி என்பது அறிவியலின் மொழியை விட சற்றே விரிந்தது. பத்திரிக்கையாளர்கள் களத்திலிருந்து செய்திகளை சேகரிக்கிறார்கள். வறட்சியின் காரணமாக, தன் பயிர்களை இழந்த விவசாயியைக் குறித்து சொல்வதற்கு பத்திரிக்கையாளருக்கு எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அதேபோல, சென்னை வெள்ளத்தில் வீட்டில் தண்ணீர் மட்டும் நுழையவில்லை, வீட்டின் சுவர்களில் தண்ணீர் தன் அடையாளத்தையும் விட்டுச் சென்றுள்ளது என்பதைச் சொல்வதற்கும் பத்திரிக்கையாளர்களுக்குத் தயக்கம் இருக்க முடியாது. வெள்ளம், வறட்சி ஆகியவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறதா அல்லது அவை ஏதேனும் அதிசயச் சம்பவங்களா என்பதை பத்திரிக்கையாளர்கள், அறிவியலாளர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். இதனால், பத்திரிக்கைகளில் சில எல்லைகள் உருவாகலாம்.

ஆனால் எழுத்தாளர்களின் கற்பனை இந்த எல்லையைத் தாண்டியதாக இருக்க வேண்டும். எழுத்தாளர் சந்திக்கும் அனுபவங்கள் அனைத்தையும், உண்மைச் சம்பவங்களாக வெளிப்படுத்த முடியும். சென்னையில் வாழும் எழுத்தாளர்களோ, மும்பையில் வாழும் எழுத்தாளர்களோ அங்கு நிகழ்ந்த வெள்ளத்தை உணராமல் எப்படி இருந்திருக்க முடியும்? மகாராஷ்டிரா மாநிலம், லத்தோரில் வாழும் எழுத்தாளர் கோடையின் வெப்பத்தை உணராமல் எப்படி இருந்திருக்க முடியும்? பிறகு ஏன், பருவநிலை மாற்றம் என்றவுடன் கற்பனை வளம் மண்ணில் தலையை புதைத்துக் கொள்கிறது? இதைத்தான் தனது புத்தகத்தில் கோஷ் நமக்கு சொல்ல முனைகிறார். வழக்கமான இலக்கிய கட்டத்துக்குள் அடங்காமல் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் உள்ளன. காதல் கவிஞர்கள் வெளிப்படுத்தும் நடையில், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் இருக்கப்போவதில்லை. அது, வலிமைமிக்கது, கோரமானது, ஆபத்தானது. கோஷ் இரு பிரபலமான எழுத்துப் பிரதிகளை இந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒன்று, மே மாதம் போப் பிரான்சிஸ் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து வெளியிட்ட கடிதம். மற்றொன்று, பருவநிலை மாற்றத்துக்கான பாரிஸ் ஒப்பந்தம். முதலாவது, நேரடியாகவும், இதயத்திலிருந்தும் வெளிப்பட்டுள்ளது. மற்றது, அதிகாரப்பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உள்ளது. இலக்கியத்துக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கும் தற்போதைய சூழலில், பருவநிலை மாற்றத்தை இலக்கியத்தோடு இணைத்து சிரத்தையோடு எழுதியதற்கு கோஷ் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். அவருடைய குரல் உள்ளிருந்து வருகிறது. சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு அவருடைய வார்த்தைகள் இல்லை. எழுத்தாளர்கள் தங்களது கைகளில்,சக்தி வாய்ந்த டார்ச் லைட்களை தாங்கியுள்ளனர். அதனைக்கொண்டு பருவநிலை மாற்றத்தின் மீது ஒளியை வீசினால், அதன் விளைவுகளை அனைவரும் சேர்ந்து சற்றே குறைக்கலாம். ஆனால், அதைவிடுத்து பருவநிலை மாற்றத்தின் மீது ஒளியை வீசவில்லை என்றால், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு அவர்களே சாட்சியங்களாக மாறக்கூடும்.

எஸ்.கோபி கிருஷ்ணவாரியர், சூழலியல் இதழியலாளர் தமிழில்: நந்தினி மகேஷ் நன்றி: தி ஃப்ரண்ட்லைன்

கற்பனைக்கான நெருக்கடி…!

அலமாரி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments