பிரேசிலின் பூர்வகுடிகள் மற்றும் அவர்களின் நிலங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து மீளவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அந்நாட்டின் அதிபர் லூலா டா சில்வா, நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக பூர்வகுடிகளுக்கான அமைச்சகம் ஒன்றை அமைத்துள்ளார். மேலும், பூர்வகுடிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் செயற்பாட்டாளர் சோனியா குவாஜாஜாரா பூர்வகுடிகளுக்கான அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகின் நுரையீரல் எனக் கருதப்படும் அமேசான் மழைக்காடுகள் லட்சக்கணக்கான உயிரினங்களுக்கும், பூர்வகுடிகளுக்கும் தாய்நிலமாக உள்ளது. தோராயமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர வகைகளும், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகளும், 1300க்கும் மேற்பட்ட பறவையினங்களும் லட்சக்கணக்கான பூச்சியினங்களும் அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன. மேலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பூர்வகுடி மனிதர்களும் அமேசானில் வாழ்கின்றனர். இத்தகைய அமேசான் காடுகளின் மிகப்பெரும் பகுதியை தன்னுள் கொண்டுள்ளது பிரேசில்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் பிரேசிலின் அமேசான் காடுகளில் 18 சதவீதத்திற்கும் மேல் முற்றிலும் அழிந்துவிட்டன. உலகின் கார்பன் உமிழ்வில் பெரும்பங்கை தன்னுள் எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிடும் அமேசான் மழைக்காடுகள் புவியின் பருவநிலையை சீராக வைத்துக்கொள்வதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. எனவே, அமேசான் காடுகளின் மீதான சுரண்டல் என்பது பிரேசிலுக்கோ அல்லது தென்னமெரிக்க கண்டத்திற்கோ மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவல்லது.
கடந்த சில ஆண்டுகளாகவே அமேசான் மற்றும் பிரேசிலின் பூர்வகுடிகள் மீதான தாக்குதல் மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக 2019ம் ஆண்டு முதல் 2022 வரை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்த ஜெர் பொல்சனாரோவின் ஆட்சிக்காலம் மிகவும் மோசமானது. பூர்வகுடி மக்களை மிருகக் காட்சி சாலையிலுள்ள விலங்குகளுடன் ஒப்பிட்டுப் பேசியது, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தான் மனிதர்களாக மாறி வருகிறார்கள் என்பது போன்ற பொல்சனரோவின் கருத்துகள் பூர்வகுடி மக்களின் மீதான அவரின் வெறுப்புணர்வுக்கு உதாரணம், இத்தகைய இனவெறியும், தனியாரின் லாபத்தில் அக்கறை கொண்டவருமான பொல்சனாரோவின் ஆட்சிக்காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பூர்வகுடிகளுக்கான சட்டங்களை நீர்த்துப் போகச்செய்தல், சூழலுக்கான FUNAI போன்ற அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் செயல்பாடுகள் மீதான கட்டுபாடுகள் மற்றும் அடக்குமுறைகள், பூர்வகுடித் தலைவர்கள் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் மீதான வன்முறைகள் போன்ற பல்வேறு வகையிலான சூழலுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. கால்நடை வளர்ப்பு மற்றும் சோயா பயிரிடுதலுக்காக காடுகளை எரித்தல், சுரங்க நிறுவனங்கள், காடுகளை சார்ந்து இயங்கும் வணிக நிறுவனங்கள், வேட்டைக்காரர்கள் உள்பட பலருக்கும் உதவும் வகையில் காடுகள் மற்றும் பூர்வகுடிகள் நலன்களுக்கு எதிரான அவரின் பல்வேறு கொள்கை முடிவுகள் சுற்றுச்சூழலின் மீதான பெரும் தாக்குதலாக அமைந்தது.
குறிப்பாக, கடந்த ஆண்டு வெளியான Global Witness அமைப்பின் Decade of Defiance என்ற அறிக்கையின்படி, 2012 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில் உலகளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிகமாக கொல்லப்பட்ட நாடுகளில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பிட்ட அந்த பத்தாண்டுகளில் பிரேசிலில் மட்டும் சுமார் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடிய 342பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது உலகளவில் கொல்லப்பட்டவர்களின்(1733) எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதமாகும். இதில் சுமார் 85 சதவீத கொலைகள் பிரேசிலின் அமேசான் காடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
பிரேசிலில் உள்ள பரா மாகாணம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மிக ஆபத்தான பகுதியாக விளங்குகிறது. இத்தகைய தாக்குதல்கள் பொல்சனாரோவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் அதிகரித்தன. கடந்த 2021ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் டெனேதெகரா (Tenetehara) பூர்வகுடி தலைவர்களுள் ஒருவரான ஐசக் டெம்பே அவரது சொந்த நிலத்திலேயே பிரேசில் ராணுவ போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். லாபத்தை பெருக்கும் நோக்கில் டெம்பே பூர்வகுடி மக்களின் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த தனியார் விவசாயப் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக, ஒரு தனியார் ராணுவம் போல பிரேசிலின் ராணுவத்தினர் செயல்படுவதாக அப்பகுதியிலுள்ள டெம்பே- டெனேதெகாரா பூர்வகுடி மக்கள் குற்றம்சாட்டினர். இது பூர்வகுடி மக்களின் நில உரிமைகளை பறிக்கும் நோக்கில் அரசு பயங்கரவாதத்தை ஏவிவிடுவதை சுட்டிகாட்டுவதாக Global Witness அறிக்கை கூறுகிறது.
பொல்சனாரோவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பிரேசில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் அமைப்புகளில் இருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகள் வந்துகொண்டேயிருந்தன.
இந்நிலையில் பிரேசிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரித் தலைவரான லூலா டா சில்வா தான் தேர்தலில் வெற்றிபெற்றால் அமேசானின் சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்தல், சட்டத்திற்கு புறம்பான சுரங்கங்கள், பிற வணிக நிறுவனங்கள் மற்றும் குற்றங்கள் மீதான கடுமையான நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் பிரேசிலின் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பூர்வகுடிகளின் நலனை பாதுகாக்கும் வகையிலான தனி அமைச்சகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவரான லூலா சிறுவயதில் ஷூ பாலிஸ் போடுபவராகவும், தெருவோர வியாபாரியாகவும் இருந்து பின்னர் தொழிற்சாலை பணியாளரானார். 1970களில் தொடர்ச்சியாக பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்ற அவர், குறிப்பிடத்தக்க தொழிற்சங்கத் தலைவராக உயர்ந்தார். பின்னர் 1980ம் ஆண்டு பிற தொழிற்சங்கத் தலைவர்களுடன் இணைந்து இடதுசாரி சிந்தனையுள்ள தொழிலாளர் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். 1982ம் ஆண்டு தனது முதல் தேர்தலில் தோல்வியுற்ற அவர், அரசியலில் இருந்து விலக நினைத்தபோது. கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் அறிவுறுத்தலை ஏற்று அம்முடிவைக் கைவிட்டார். 1986 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 1989,1994 மற்றும் 1998ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார். எனினும் மனம் தளராமல் மீண்டும் 2002ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதோடு 2002 முதல் 2010ம் வரை அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். அந்த காலக்கட்டத்தில் லூலாவின் சிறப்பான சமூக நலத்திட்டங்கள், ஊழல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய நடவடிக்கைகளால், பிரேசிலில் பொருளாதரம் தொடர்ந்து முன்னேறியது. பிரேசில் நாட்டின் சட்டங்களின்படி தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஒருவர் அதிபராக இருக்கு முடியாத காரணத்தால், அவர் கட்சியைச் சார்ந்த டில்மா ரூசெப்பை அதிபராக்கினார். 2018ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லூலாவை, பின்னர் 2019ம் ஆண்டு பிரேசிலின் உச்சநீதிமன்றம் அவரின் மீதான குற்றச்சாட்டுகள் போலியானது என்பதை உறுதிசெய்து விடுதலை செய்தது.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரேசிலின் அதிபரான லூலா தற்போது அந்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பூர்வகுடிகளுக்கான தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த அமைச்சகத்தின் அமைச்சராக பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய சோனியா குவாஜாஜாரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பிரேசிலின் பூர்வகுடி இனங்களுள் ஒன்றான குவாஜாஜாரா இனத்தைச் சேர்ந்த சோனியா குவாஜாஜாரா, ‘பிரேசில் பூர்வகுடி மக்களின் குரல்’ (Brazil: Indigenous People Articulation – APIB) என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பொல்சனாரோ அரசின் சூழலிலியல் குற்றங்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அதனை மற்ற உலக நாடுகளின் பார்வைக்கும் எடுத்துச்சென்று பூர்வகுடிகளுக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்.
அமைச்சராக பதவியேற்றது குறித்து அவர் கூறுகையில், இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெருமை அளிப்பதாகவும், இது தனக்கு மட்டுமல்லாது பூர்வகுடிகளின் ஒட்டுமொத்த முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகவும், பிரேசிலை மறுசீரமைப்பதில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Images
Images are from @GuajajaraSonia/Twitter
References
https://www.greenpeace.org/usa/issues/brazil-and-the-amazon-forest/
https://www.dw.com/en/brazils-lula-makes-green-promises-in-election-bid/a-62213829
https://www.theguardian.com/world/2022/dec/18/brazil-indigenous-ministry-sonia-guajajara-activist
https://mobile.twitter.com/GuajajaraSonia/status/1608477591354081280
https://www.britannica.com/biography/Luiz-Inacio-Lula-da-Silva
- விக்னேஷ் குமார் கோ
- [email protected]