தனியுடைமையாகும் மரபணுக்களும் அந்நியமாகும் உணவும்

ஒரு முழுச் சமுதாயத்தை, ஒரு தேசத்தை எடுத்துக் கொண்டாலும் கூட ஏன், ஒருங்கே இருந்து வரும் எல்லாச் சமுதாயங்களையும் ஒரு சேர எடுத்துக் கொண்டாலும் கூட, இந்த பூவுலகு இவற்றின் கைப்பொறுப்பில் அனுபோகத்தில் வருவதுதானே தவிர, இவற்றுக்கே சொந்தமான உடைமை அல்ல. நல்ல குடும்பத் தலைவர்களைப் போல் இவை அடுத்துவரும் தலைமுறைகளிடம் இந்தப் பூவுலகை இன்னுங்கூட மேம்பட்ட நிலையில் ஒப்படைத்துச் சென்றாக வேண்டும்

  • கார்ல் மார்க்ஸ்

மூலதனம், மூன்றாம் பாகம், அத்தியாயம்: 46

 பி.டி.பருத்தியை தொடர்ந்து மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Bacillus amyloliquefaciens மற்றும் Streptomyces hygroscopicus  என்கிற இரண்டுவிதமான பாக்டீரியாக்களில் இருந்து Bar, Barnase, மற்றும் Barstar ஆகிய மூன்று மரபணுக்கள் எடுக்கப்பட்டு மரபணுமாற்று தொழில்நுட்பம் மூலம் கடுகின் மரபணுவோடு இணைக்கப்படுகின்றன. இந்த மரபணுக்கள் கடுகின் ஆண் தன்மையை நீக்கம் செய்து பெண் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

 

 

இதற்கு முன்பாக பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் (சுருக்கமாக பி.டி) என்னும் பாக்டீரியாவில் இருந்து பெறப்பட்ட CRY 1A என்னும் நச்சுத்தன்மை வாய்ந்த மரபணுவை கொண்டு பி.டி.பருத்தி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதல் முதலாக அனுமதிக்கப்பட்ட மரபணுமாற்றப்பட்ட விதை இதுவே.  இதனைத் தொடர்ந்து பி.டி.கத்திரிக்கான அனுமதி 2010ம் ஆண்டு கோரப்பட்டது.  இதுவும் கூட மேற்கூறிய நச்சுத்தன்மை உடைய பி.டி. மரபணுவால் உருவாக்கப்பட்டது. மக்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக இதன் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் 2016ம் ஆண்டு மரபணுமாற்றப்பட்ட கடுகிற்க்கான அனுமதி கோரப்பட்டது. மீண்டும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது இந்த கடுகிற்கான அனுமதியை ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் மரபணுமாற்று பொறியியல் மதிப்பீட்டு குழு அளித்துள்ளது.

 

மூலதனமாகும் மரபணுக்கள்

மரபணுமாற்று பொறியியல், செயற்கை உயிரியல் போன்ற தொழில்நுட்பங்கள் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக உணவு மற்றும் மருத்துவத் துறையில் இதன் பங்கு அதிகரித்து வருகிறது.

 

 

நுண்ணுயிரான கிருமி முதல் மனிதன் வரை ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுண்டான அறிய குணத்துடன் இருப்பதற்கான காரணம் மரபணுக்களே. மரபணுக்கள் தான் ஒரு உயிரின் குணாதிசியங்களை தீர்மானிக்கின்றன என்பதைக் கண்டறிந்த பின் மரபணுக்களைக் கையாளும் தொழில்நுட்பமான மரபணு பொறியியல் உருவானது. மரபணுமாற்று தொழில்நுட்பங்கள் மூலம் சிறுதும் தொடர்பில்லாத இரண்டு மூன்று உயிரினங்களின் மரபணுக்களை இணைத்துப் புதிய உயிரினங்களை உருவாக்கத் துவங்கினர். இத்தகைய செய்முறைகள் மூலம் இயற்கை பண்புகள் மாற்றி அமைக்கப்பட்ட தாவரம் உள்ளிட்ட பல உயிரினங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை மரபணுமாற்று உயிரினங்கள் (Genetically Modified Organism) என்று அழைக்கப்படுகின்றன.

2020ம் ஆண்டு கீரிஸ்பர் (CRISPR –  Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) என்னும் செயற்கை உயிரியல் (Synthetic Biology) தொழில்நுட்பத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

 

2010ம் ஆண்டே சுயமாக இனப்பெருக்கம் செய்யத்தக்க ஆற்றல் படைத்த செல் (Self Replicating Synthetic Bacterial Cell) ‘உயிருள்ள செயற்கை செல்களை’ ஜே. கிரைக் வென்டர் ரிசெர்ச் இன்ஸ்டியூட் உருவாக்கிவிட்டது. உலகிற்கு ‘சிந்தியா’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உயரினம் மைக்கோபிளாஸ்மா ஜெனிடாலியம் என்றழைக்கப்படும் மைக்கோபிளாஸ்மா இனத்தைச் சேர்ந்த ஒரு பாக்டீரியா. கணினியில் உருவாக்கப்பட்ட மரபணு பட்டியலைப் பயன்படுத்தி இந்த செயற்கை செல்களை உருவாக்கியுள்ளனர். சுமார் 382 மரபணுக்கள் கொண்ட ஒரு முழுமையான செயற்கை மரபணுத்தொகையை இதற்காக உருவாக்கினர். இந்த செல்கள் உயிர்வாழும் தன்மை கொண்டது. மற்றொரு செல்லை உருவாக்க வல்லது.

செயற்கை முறையில் மனிதனை உருவாக்க இது முதல்படியாக அமையலாம் என்று அப்போது கூறப்பட்டது. அந்த நிலையை இன்று கீர்ஸ்பர் தொழில்நுட்பம் சாத்தியமாகியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவில் இரண்டு பெண் குழந்தைகளை உருவாக்கியுள்ளார் ஹி ஜியான்குய் (He Jiankui).

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் உயிரியல் மருந்துகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்தகைய மருந்துகளில் ஒன்றுதான் செயற்கை இன்சுலின். இத்தகைய மரபணுமாற்று உயிரினங்கள் காப்புரிமை பெறத்தக்கவை. இந்த அம்சம் தான் பன்னாட்டு   நிறுவனங்கள்  மரபணுமாற்று  தொழில்நுட்பத்தின் பல கோடி டாலர்களை  முதலீடு செய்வதற்கான  காரணம்.

1980ம் ஆண்டு உயிருள்ள பொருட்களுக்கான காப்புரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவை சார்ந்த இந்திய வம்சாவளியான ஆனந்த மோகன் சக்கரவர்த்தி கண்டுபிடித்த நுண்ணுயிருக்கு இந்த காப்புரிமை வழங்கப்பட்டது. உயிரியல் தொழில்நுட்ப அடிப்படையில் உருவான நுண்ணுயிருக்கு கொடுக்கப்பட்ட முதல் காப்புரிமையும் இதுவே.

1988ம் ஆண்டு உலகின் முதல் மரபணுமாற்றபப்ட்ட உயரினமான ஆங்கோ என்னும் மரபணுமாற்று எலிக்கு காப்புரிமை வழங்கப்பட்டது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் இதுபோன்ற சட்டங்களை இயற்றத் துவங்கின. இதன் மூலம் மேற்கு நாடுகளில் மரபணு போன்ற இயற்கை வளங்களை வெறும் கச்சாப் பொருட்களாக காணும் போக்கு அதிகமானது.

1995 உருவான உலக வர்த்தக கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒப்பந்தம் (TRIPS – Trade Related Intellectual Property Rights Agreement) மரபணுவிற்கு காப்புரிமை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. இதன்படி தற்போது இந்தியாவில் மரபணுமாற்றப்பட்ட விதைகளுக்கு காப்புரிமை கொடுக்கப்படுகிறது. பி.டி. பருத்தி துவங்கி மரபணு மாற்றுப்பட்ட கடுகு வரை அனைத்துமே இந்தியாவில் காப்புரிமை பெறத்தக்கவையே.

 

மனித மரபணுக்களுக்கு காப்புரிமை

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிய Human Genome Diversity Project என்கிற ஆய்வு திட்டம் 1995ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஆய்வுக்காக பல நாடுகளில் உள்ள பூர்வகுடிகளிடம் இருந்து இரத்த அணுக்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் மரபணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. சில நேரங்களில் கட்டாயப்படுத்தியும் இவை சேகரிக்கப்பட்டன. இத்தகைய ஆய்வில் மருத்துவ குணமிக்க மரபணுக்களும் கண்டுப்பிடிக்கப்பட, அவற்றுக்கு பல நிறுவனங்கள் காப்புரிமையும் பெறத் துவங்கின.  இதனை எதிர்த்து இத்திட்டத்தில் இருந்து வெளியேறினார் நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் வாட்சன். (இவர் மரபணு வரைப்படத்தை கண்டறிந்தவர்களில் ஒருவர்)

இத்தகைய கொள்ளைகள் ஒருவித சட்ட பாதுகாப்போடு தான் நடந்தன,  நடக்கின்றன. ஒர் நபரிடம் இருந்து திருடப்படும் மரபணுக்களுக்கு அந்த நபர் உரிமை கோர முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பே வழங்கியுள்ளது.  லுக்கோமியா நோய்க்கான சிகிச்சை பெற UCLA-மருந்துவமனைக்கு சென்ற ஜான் மோரின் ரத்தம், விந்தணுக்கள், தோல் மற்றும் திசு போன்றவை மருத்துவ சோதனைக்காக பெறப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த டேவிட் கோல்டே  என்கிற மருத்துவர் மோரின் செல்களில் உள்ள அபூர்வ மருத்தவ குணாதிசயம் சில நோய்களுக்கு தீர்வாக இருக்கும் எனக் கண்டறிந்தார். அதற்கு உடனே காப்புரிமை கோரி மனுவும் செய்தார். அவ்வாறு காப்புரிமையும் பெற்று அதனை Genetics Institute,  என்னும் நிறுவனத்திற்கு 330,000 டாலருக்கு விற்றுவிட்டார். இதனை அறிந்த மோர் வழக்கு தொடுக்கையில்தான் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்டது.

இப்படி உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மையங்கள் நிறுவனங்கள் தங்களுடைய கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கிவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்துவிடுகின்றன. அமெரிக்க சட்டப்படி அரசு உதவி பெறும் ஆராய்ச்சி மையமாக இருந்தாலும் அந்த மையம் தன்னுடைய காப்புரிமையை விற்க உரிமை பெறுகிறது.

இந்தியாவில் உள்ள மருத்துவ, வேளாண்மை ஆராய்ச்சி மையங்கள் தங்களுடைய கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை நிறுவனங்களின் பெயரிலேயே பெருகின்றன. இவை அரசுடமையாகவே இருக்கும். இவற்றை மாற்றி அமெரிக்க சட்டங்களை போல அரசின் காப்புரிமையை விற்கும் சட்ட வரைவு நிலுவையில் உள்ளது.

Universities for Research and Innovation Act, 2012 என்கிற அந்த சட்டம் இந்திய பல்கலைகழங்கள் மற்றும் ஆய்வு மையங்கள் பெறுகின்ற காப்புரிமைகளை அரசு உரிமையாக இருந்ததை மாற்றி தனியாருக்கு விற்கும் அதிகாரம் கொடுக்கின்றது. அதாவது வேளாண்மை பல்கலைக்கழகம் தாம் கண்டுபிடித்த விதைக்கான காப்புரிமையை வேறுயாருக்கும் விற்கலாம் என்பது இதன் பொருள். அமெரிக்காவில் இத்தகைய வழிகளை பின்பற்றி மாண்சான்டோ பல காப்புரிமைகளை பெற்றுள்ளது. இவை இங்கும் தொடரலாம். அதற்கு ஏற்ப நமது பல்கலைக்கழங்களில்  அறிவுச் சொத்துரிமை மேலாண்மை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதேபோல மருத்துவ ஆராய்ச்சி மையங்களும், பிற தொழில்நுட்ப ஆய்வு மையங்களும் தங்களுடைய காப்புரிமையை அரசுடைமையாக வைத்துக்கொள்ளாமல் தனியாருக்கு விற்கலாம்.

காப்புரிமை மூலம் தொழில்நுட்பங்களை தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்த பின்பு ஏகபோக வர்த்தகத்தை துவங்குகின்றன நிறுவனங்கள். ‘உடா’(UTAH University) என்கிற அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு 1994ம் ஆண்டு மார்பு மற்றும் கருப்பையில் புற்றுநோயை உருவாக்கும் BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்களுக்கான காப்புரிமை வழங்கப்பட்டது. பின்பு அதனை மிரியாட் ஜெனடிக்ஸ்  என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.  இதன் பலனாக பெண்களின் உடலில் மார்பக புற்றுநோயை உருவாக்கும் இந்த மரபணுக்கள் இருக்கிறதா என்பதை கண்டறியும் சோதனை செய்வதற்கான உரிமை, அந்த மரபணுக்களை பயன்படுத்தும் உரிமை, அந்த மரபணுக்களை கொண்டு மார்பக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது உட்பட அனைத்து ஆய்வுகளையும் செய்யும் உரிமை ஆகியவை மிரியாட் ஜெனடிக்ஸ் அங்கீகாரம் பெற்ற ஆய்வு மையங்களில் மட்டுமே சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும் லாபம் ஈட்டியது அந்த நிறுவனம். பின்பு அமெரிக்க மனித உரிமை அமைப்பு தொடுத்த வழக்கின் மூலமாக இந்த காப்புரிமை திரும்பப் பெறப்பட்டது.

அமெரிக்காவில் மட்டும் மரபணுக்கள் மற்றும் மரபணுக்கள் தொடர்பான சிகிச்சை முறைகளுக்கு சுமார் 30 லட்ச காப்புரிமைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.  20% மனித மரபணுக்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் பல நோய்க்கான சிகிச்சை தொடர்பான மரபணுக்களும் அடக்கம். இப்படி நோய் உண்டாக காரணமாக உள்ள மரபணுக்களுக்கு காப்புரிமை கொடுக்கப்படுவதன் காரணமாக நோய் குறித்தான ஆய்வுகள் பரவலாவது தடுக்கப்படுகிறது. மேலும் மருத்துவத் துறையை காப்புரிமை பெற்ற தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்தத் துவங்கியுள்ளன. இதனால் மருத்துவம் செலவுமிக்கதாக மாறிவருகிறது.

அறிவியல் தொழில்நுட்பம் என்பது ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு நடவடிக்கையை உள்ளடக்கியது. அறிவியல் தொழில்நுட்பம் சமூக இயக்கத்தில் வர்த்தக மற்றும் உற்பத்தித் துறையோடு மிகவும் தொடர்புடையதாக இன்று திகழ்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் காரணமாக இன்று எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியும் அதன் வளர்ச்சியும் அறிவியல் மட்டுமே தெரிந்த சாதாரண ஒரு நபரால் மேற்கொள்ள முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆய்வு என எல்லாவற்றுக்கும் மூதலீடு செய்ய நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை இன்று உள்ளது.

 

அந்நியமாகும் உணவு

மருத்துவத் துறையை போல உணவு உற்பத்திலும் மரபணுமாற்றப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் முதலாக அனுமதிக்கப்பட்ட மரபணுமாற்றப்பட்ட பருத்தி பூர்விக பருத்தி வகைகளை முற்றிலுமாக அழித்துவிட்டது.

 

 

கடந்த செப்டம்பர் மாதம், நேநோ யூரியாவிற்கான அனுமதியை இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழு வழங்கியுள்ளது. செறிவூட்டப்பட்ட அல்லது வலுவூட்டப்பட்ட அரிசியை மட்டுமே இனி விற்பனை செய்ய வேண்டும் என்னும் கொள்கை திட்டத்தை அறிவிக்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. இயற்கையின் சூழல் அமைப்போடு உணவு உற்பத்தி என்பது மாறி, செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த உணவு உற்பத்தி முறையை நோக்கி நகர்ந்து வருகிறோம். இந்த நிலை, உணவு உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுவனங்களின் சொத்துரிமையாக மாற்றி வருகிறது. உணவு என்பது நமக்கு அந்நியமாகி வருகிறது.

நிலம், நீரைத் தொடர்ந்து உணவும் வேகமாக நம்மிடம் இருந்து அந்நியமாகி வருகிறது. பல்லாண்டுகளாக பரிணாமத்திலும், வேளாண்மை மரபிலும் நாம் உணவோடு உறவு கொண்டுள்ளோம். எல்லா உயிரினங்களின் அடிப்படையான பன்புகளான ஊன்ம ஆக்க மாறுபாடு (metabolism), மற்றும் செல்லின் வகைமாற்றத்திற்கும் (mutation) உணவிற்கும் வேதியியல் தொடர்பு உள்ளது. இயற்கையின் நில தொடர்போடு உணவு உற்பத்தி செய்யப்பட்டன. வேளாண்மை வளர்தெடுக்கப்பட்டது. மனித இனம் இந்த பரிணாமத்திற்கு ஏற்ற வகையில் மாறியுள்ளது. இந்த நெடும் தொடரை நவீன தொழில்நுட்பங்கள் குறுகிய காலகட்டங்களில் உடைக்கின்றன. மாற்றுகின்றன.

குறிப்பாக மரபணுமாற்று பொறியியல் மூலமாக புதிய வகை விதைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றுக்கு காப்புரிமை பெற முடியும். இப்படி காப்புரிமை உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் மூலம் உணவு தனியுடைமையாகி வருகிறது. இதன் காரணமாக மனித இனம் தன் உணவு முறையிலும், வேளாண் முறையிலும், நிலைபெற்று இருந்த இயற்கையின் உறவில் இருந்தும் அந்நியமாகிறது. தனியுடைமை சமூகத்தின் ஒரு பகுதியாக இது நிகழ்கிறது.

தனியுடைமை சமூகம் இயற்கை அமைப்புகளிடம் இருந்து மனிதனை எப்படி அந்நியமாக்குகிறது என்பதை முதலில் விளக்கியவர்  காரல் மார்கஸ்.

பூமியில் வாழும் உரிமைக்காவே சமுதாயத்தின் ஒரு பிரிவு இன்னொரு பிரிவிடமிருந்து கப்பம் வசூலிக்கிறு. ஏனென்றால் பொதுவாக நிலச் சொத்து என்பது புவிக்கோளையும், பூமியின் அடிபாகத்தையும் காற்றையும், உயிர்வாழ்வையும் உயிர்வளர்ச்சியையும் பயன்படுத்திக் கொள்ள நிலவுடைமையாளருக்கு சிறப்புரிமை வழங்குவதாகும் என்கிறார் மார்கஸ். (மூலதனம், மூன்றாம் பாகம், அத்தியாயம் 46)

வேறு எந்த உயிரினத்திற்கு இல்லாத இந்த அவலம், மனித இனத்திற்கு மட்டுமே உள்ளது. மனித இனத்தில் மட்டும் தான் இயற்கையின் உரிமைகளான, நீர், நிலம், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளை பெற சக மனிதனிடம் வாடகை, வரி, பணம் கொடுக்க வேண்டி உள்ளது.

இயற்கையின் அங்கங்களான நீர், நிலம், உணவிற்கு ஏகபோக உரிமை கோரும் வகையில் தனியுடைமை சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்கள் இதில் அடிமைப்பட்டவர்களான உள்ளனர். நவீன தொழில்நுட்பங்களும், சட்டங்களும் இந்த ஏகபோக தன்மையை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதி தான் மரபணுமாற்றப்பட்ட உணவுகள் கூட. இவற்றுக்கு காப்புரிமை பெற முடியும். அதன் மூலம் நிறுவனங்கள் தன் தனி சொத்துரிமையாக விதைகளைக் கட்டுப்படுத்த முடியும். விவசாயிகளின் விதை உரிமையை மறுக்க முடியும். நமது உணவு உரிமையை கட்டுப்படுத்த முடியும். நிறுவனங்கள் உத்தரவிடுகின்ற உணவுகளை மட்டுமே நாம் உற்பத்தி செய்யும் நிலை உருவாகலாம். அவர்கள் சொல்லும் உணவை மட்டுமே நாம் உட்கொள்ளும் நிலையும் உருவாகலாம் சுருக்கமாக, நாம் உணவிடம் இருந்து அந்நியமாகிவிடுவோம்.

சமூகப் பொருளாதார அமைப்பின் கண்ணோட்டத்தில், பூவுலகு குறிப்பிட்ட தனியாட்களின் தனியுடைமையாக இருப்பதென்பது ஒரு மனிதன் பிறிதொரு மனிதனின் தனியுடைமையாக இருப்பது போலவே பேரபத்தமாய் தெரியும்என்று மார்க்ஸ் மேற்கூறிய நிலையை தான் கூறுகிறார். அதாவது, இயற்கை அமைப்புகளின் மீதான மனித உரிமையை மறுப்பதென்பது ஒர் அடிமைமுறை என கூறுகிறார்.

  • மு.வெற்றிச்செல்வன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments