இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு, பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் பொதுவாகவே இந்திய துணைக்கண்டம் வெப்பமான வானிலையைக் கொண்டிருக்கும். அதிலும் முக்கியமாக கோடைகாலமான மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். இப்படியான நிலையில் புவி வெப்பமாதலால் ஒவ்வொரு ஆண்டும் இயல்பு வெப்பநிலை அதிகரித்து வருவது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பதிவான வெப்பநிலை புதிய உச்சங்களை அடைந்துள்ளது. இந்த சாதனையும் குறைவான இடைவெளியில் மீண்டும் மீண்டும் முறியடிக்கப்பட்டு வருகிறது.
வெப்ப அலை என்றால் என்ன?
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி இயல்பு வெப்பநிலையைவிட கூடுதலாக 3°C உயர்வு தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்குமேல் பதிவானால் அது வெப்ப அலை நிகழ்வாகக் கருதப்படும். உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி தொடர்ச்சியாக 5 நாட்கள் அல்லது அதற்குமேல் இயல்பு வெப்பநிலையைவிட 5°C அதிகமாக பதிவானால் அது வெப்ப அலை நிகழ்வாகக் கருதப்படும். |
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் வெப்ப அலைகளின் எண்ணிக்கையும் அதன் தாக்கமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அலைகள் இந்தியாவில் வாழும் எளிய மக்களின் வாழ்க்கையைக் கொடுமையானதாக மாற்றி வருகிறது.
வெப்ப அலை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் அதன் தாக்கத்தால் உயிரிழப்புகள் நேராத வண்ணம் தடுக்கும் பொருட்டு உரிய காலத்திற்குள் முன்னறிவிப்பு / எச்சரிக்கை செய்ய வெப்ப அலை முன்னறிவிப்புக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சமவெளிகளில் 40°C அளவிற்கும் மலைப்பகுதிகளில் 30°C அளவிற்கும் வெப்பநிலை பதிவாகும்போதும் வெப்ப அலை தாக்க எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 5 நாட்களுக்கு ஒரு முறை வெப்ப அலை தாக்கம் குறித்த முன்கணிப்புத் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.
வெப்பஅலையானது ஒரு அமைதியான பேரிடராக அடையாளப்படுத்தபடுகிறது. இது அமைதியாய் வந்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகிறது. மனித செயல்பாட்டின் காரணமாக உருவான காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகளானது இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் இருந்து இங்கிலாந்து போன்ற குளிர்ப்பிரதேச நாடுகள்வரை அனைத்து நாடுகளின் இயல்பையும் திக்குமுக்காடச் செய்து வருகிறது.
வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கை 2020-22
மாநிலம்/யூனியன் | 2020 | 2021 | 2022 |
ஆந்திரபிரதேசம் | 3 | 4 | 5 |
பீகார் | 1 | 1 | 6 |
சத்தீஸ்கர் | 0 | 1 | 6 |
டெல்லி | 4 | 3 | 17 |
குஜராத் | 2 | 0 | 5 |
அரியானா | 3 | 2 | 24 |
ஜார்கண்ட் | 1 | 0 | 18 |
கர்நாடகா | 4 | 0 | 0 |
மத்திய பிரதேசம் | 2 | 1 | 13 |
மகராஷ்டிரா | 5 | 0 | 4 |
ஒடிசா | 2 | 4 | 5 |
பஞ்சாப் | 1 | 2 | 24 |
ராஜஸ்தான் | 6 | 4 | 26 |
தமிழ்நாடு | 4 | 3 | 3 |
தெலுங்கானா | 2 | 0 | 2 |
உத்திர பிரதேஷ் | 2 | 1 | 15 |
உத்ரகாண்ட் | 0 | 7 | 28 |
மேற்கு வங்காளம் | 0 | 3 | 2 |
நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் கடந்த நூற்றாண்டில் பதிவானதிலேயே அதிக வெப்பமான மாதமாக பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய வானிலை மையமானது அடுத்த மூன்று மாதங்களில்(மார்ச் – மே) இயல்பைவிட அதிக எண்ணிக்கையிலான வெப்ப அலைகள் இந்தியாவைத் தாக்கும் என எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை
03.03.2023 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;-
- இக்கோடை காலமானது வழக்கத்தைவிட வெப்பமிகுந்ததாக இருக்கும். குறிப்பாக வடகிழக்கு, மத்திய, கிழக்கு இந்தியப் பகுதிகள் முழுமையாகவும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.
- தென்தீபகற்ப இந்தியாவைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வெப்பநிலையை இயல்பைவிட அதிகரித்தேக் காணப்படும்.
- இந்தியா முழுவதும் மார்ச் மாத வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவேப் பதிவாகும்.
- மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் மார்ச் முதல் மே வரை வெப்பஅலை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- மார்ச் மாத மழைப்பொழிவு பொதுவாக எப்பொழுதும் போலவே இருக்கும். வடமேற்கு, மத்திய மேற்கு இந்தியாவிலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் மட்டும் மழைப்பொழிவு குறைவாக இருக்கும்.
- 2023 பிப்ரவரி மாதம் இதுவரை பதிவானதிலேயே மிகவும் வெப்பமான பிப்ரவரி மாதமாகும். நடப்பு பிப்ரவரியின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.54°C. 1901க்குப் பிறகு 2006 பிப்ரவரியில் 29.31°C, 2016 பிப்ரவரியில் 29.48°C பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்தது.
ஆண்டு | அதிகபட்ச வெப்பநிலை | இயல்பு வெப்பநிலை | வித்தியாசம் | தரவரிசை |
2023 | 29.54 | 27.80 | 1.739 | 1 |
2016 | 29.48 | 1.679 | 2 | |
2006 | 29.31 | 1.512 | 3 | |
2017 | 29.24 | 1.434 | 4 | |
2009 | 29.23 | 1.433 | 5 |
வெப்ப அலைகளால் அதிகம் பாதிப்படைபவர்கள்:
- குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள்
- கட்டுமான பணி / வெளிப்புற பணி / விவசாயப் பணி / மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள்.
- காவலர்கள் / தனியார் பாதுகாவலர்கள்
- அதிக வெப்பநிலை கொண்ட சூழலில் பணிபுரியும் தொழிற்சாலைப் பணியாளர்கள்
- சாலையோர வியாபாரிகள் / விற்பனைப் பணியாளர்கள்
- ரிக்சா ஓட்டுநர்கள் / ஆட்டோ ஓட்டுநர்கள் / பேருந்து ஓட்டுநர்கள் / சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்.
1992 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 22,562 மக்கள் வெப்ப அலை தாக்கத்தால் இறந்துள்ளனர்.
ஆண்டு | இறந்தவர்களின் எண்ணிக்கை |
1992 | 612 |
1993 | 631 |
1994 | 773 |
1995 | 1677 |
1996 | 434 |
1997 | 393 |
1998 | 1016 |
1999 | 628 |
2000 | 534 |
2001 | 505 |
2002 | 720 |
2003 | 807 |
2004 | 756 |
2005 | 1075 |
2006 | 754 |
2007 | 932 |
2008 | 616 |
2009 | 1071 |
2010 | 1274 |
2011 | 793 |
2012 | 1247 |
2013 | 1216 |
2014 | 1677 |
2015 | 2422 |
வெப்ப அலை என்பது ஒரு தீவிர வானிலை நிகழ்வு. அதைத் தடுக்கவோ, நிறுத்தவோ பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், அப்பாதை மிகவும் தூரமானது. ஆனால், அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய முடியும். அரசுகள் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வெப்பஅலையினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கமுடியும்.
- பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி அளிப்பதை உறுதி செய்தல்.
- வெப்ப அலை அபாய எச்சரிக்கை காலங்களில் மக்களுக்குத் தேவையான அளவு நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய ஏதுவாக பேருந்து பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டறிய வேண்டும்.
- மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் போன்ற இடங்களில் மின்சார வசதி தடையின்றி வழங்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தல் வேண்டும்.
- மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் போன்ற இடங்களில் குளிர்சாதன வசதிகள் அல்லது உறைப் பனிக்கட்டி, உப்பு-சர்க்கரை கரைசல் ஆகியவை இருப்பு வைத்தல் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றில் தேவையான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வெப்ப அலைத் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
- வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளம்பரப் பலகைகள் வைத்தல்.
- பேருந்துப் பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைத்தல்.
- பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களை நீண்ட நேரம் திறந்து வைத்திருத்தல்.
- பணியாளர் சட்டங்களின் படி பணிச்சூழலில் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் குளியலறை வசதி போன்றவற்றை பணியாளர்களுக்கு அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- அவசர நிலையை எதிர்கொள்ளும் விதமாக எந்நேரமும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தயாராக இருத்தல் வேண்டும்.
- திறந்த வெளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- போக்குவரத்துக் காவலர்களுக்கு தேவையான அளவு நிழல் தரக்கூடிய தங்குமிடங்களை அமைத்துத் தர வேண்டும்.
- அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
- கோடைக்காலங்களில் பேரிடர் தணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நடைபெறும் பகுதிகள் குறித்த தகவல்களை சேகரித்தல்.
- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட விதிகளில் தெரிவித்துள்ளபடி இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும் மேலும் அவர்களுக்குத் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மேலும், இப்பணியாளர்களின் குழந்தைகளுக்கும் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
– ச.பூ.கார்முகில்