தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
Cauvery South WLS_Govt Orderதமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 25.04.2022 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்குட்பட்ட ஒசூர் வனக்கோட்டத்தில் அஞ்செட்டி, உரிகம், மற்றும் ஜவளகிரி சரகங்களில் 478 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை “காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்” ஆக அறிவிக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது.
இதனை செயல்படுத்தும் வகையில் தமிழ் நாடு வனத்துறையின் முதன்மை தலைமை பாதுகாவலர்(வனம்) 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் விதி 26A (1) (b)ன் கீழ் “காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்” எனும் பெயரில் சரணாலயமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு ஒரு திட்ட வரைவை சமர்ப்பித்திருந்தார்.
இச்சரணாலயம் காவிரி வடக்கு காட்டுயிர் சரணாலயத்தை ஒட்டி அமைய உள்ளது. தெற்கு சரணாலயத்தை ஏற்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் தொடர்ச்சியான மற்றும் பெரிய பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் வாழ்விடத்தை உருவாக்க முடியும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இப்பகுதி யானைகளின் முக்கியமான வாழ்விடமாகும். 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவையினங்கள், மென்மையான ஓடுகள் கொண்ட ஆமைகள், சாம்பல் நிற அணில்கள், நீர் நாய்கள், சதுப்பு முதலைகள், மான்கள், கழுகுகள், புலிகள் போன்ற காட்டுயிர்களுக்கு உகந்த வாழ்விடமாக அமைந்துள்ளது.
இந்த சரணாலயம் Nandimangalam – Ulibanda மற்றும் Kovaipallam-Anebiddahalla ஆகிய இரண்டு முக்கியமான யானை வழித்தடங்களை உள்ளடக்கியது. மேலும் இப்பகுதியை சரணாலயமாக அறிவிப்பதனால 50 கிலோமீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் இரு கரைகளும் காவிரி ஆறு சார்ந்த சூழலியலும் பாதுகாக்கப்படும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
முதன்மை தலைமை வனப் பாதுகாவலரின் வரைவு திட்டத்தை பரிசீலித்த வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தற்போது காவிரி தெற்கு சரணாலயத்தை அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளார்.
இச்செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
I'm happy to announce that the GoTN has notified 'Cauvery South Wildlife Sanctuary' as the 17th Wildlife Sanctuary in TN. This significant step along with the TN Green Climate Company's missions will go a long way in conserving the rich biodiversity of our State. pic.twitter.com/oaMiGLw6bh
— M.K.Stalin (@mkstalin) November 8, 2022