எட்டுவழிச்சாலை, கூடங்குளம் அணுவுலை, ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது பொதுமக்கள் சூழலியல் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
G.O. (Ms) No.368, dated 03.09.2021தமிழ் நாடு முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பல்வேறு திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப் பெறுவோம் என தேர்தல் பரப்புரையின் போதே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியின் போது பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டம் மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.
மேலும் மீத்தேன், கூடங்குளம், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் தற்போது தமிழ் நாடு அரசின் உள்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 26 வழக்குகள், ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 2831 வழக்குகள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 2282 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் எட்டுவழிச்சாலை, மீத்தேன், நியுட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட 405 வழக்குகளும், கூடங்குளம் அணு உலை போராட்டம் தொடர்பான 26 வழக்குகள் என மொத்தமாக 5570 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக தமிழ் நாட்டில் சூழல் பாதுகாப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை அடக்கி ஒடுக்கும் வகையில் காவல்துறையின் மூலம் போடப்பட்ட பல்வேறு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மிகவும் உதவியாக அமைந்துள்ளது. தமிழ் நாடு அரசின் இந்த நடவடிக்கை அரசின் சூழல் பாதுகாப்புக் கொள்கையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்ட்டோர் மீது போடப்பட்ட 242 வழக்குகள் அப்போதைய அ.தி.மு.க. அரசால் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும் 123 வழக்குகள் திரும்பப் பெறப்படாமல் இருந்த நிலையில் தற்போது வெளியான அரசாணையில் 26 வழக்குகள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்கு விபரங்களையும் காவல் துறையிடமிருந்து பெற்று அவ்வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ் நாடு முதலமைச்சரை பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.