பேதலித்த மனசுகளும் பசுமை அரசியல் நம்பிக்கையும்

நாகப்பட்டினத்தில் உயிரிழந்த விவசாயி களின் குடும்பங்களைச் சந்திக்க இப்போது டாட் காமின் செய்தியாளர் சுகுமாரன் சென்றிருந்தார்; விவசாயிகளை இழந்த குடும்பங்களில் அவர்களைச் சார்ந்திருந்த சொந்தங்களின் துயரங்களைக் கேட்டபோது, அவர்கள் சந்திக்கும் மனச்சோர்வு முன்னெப் போதைவிடவும் இந்த வறட்சியில் மேலோங்கியிருக்கிறது என்பதை உணர முடிந்தது; காவிரிப் படுகை மாவட்டங்களில் சமீபத்தில் மக்களைச் சந்தித்த கல்வியாளரும் ஆராய்ச்சியாளருமான எஸ்.ஜனகராஜனும் இதே கருத்தைச் சொன்னார்; “தன் நிலை மறந்து விடுமளவுக்கு மனச்சோர்வு மேலோங்கிய நிலையில் மக்களைச் சந்திக்க நேர்ந்தது; தன் நிலை மறக்கிற மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது” என்று சொன்னார் ஜனகராஜன். இந்தப் பெருந்துயரைத் தமிழ்நாடு எப்படி எதிர்கொள்கிறது? இந்தியத் தலைநகர் டெல்லியின் வீதிகளில் நிர்வாணமாக ஓடிய விவசாயிகள் இந்த மனநிலையைப் பிரதிபலித்தார்கள்; ஒரு வரலாற்றுத் துயரத்தைச் சமூகம் இப்படி எதிர்கொண்டது என்றால் அதில் ஆயிரமாயிரம் உண்மைகள் ஒளிந்துகிடக்கின்றன. உணவுப் பாதுகாப்பைக் காட்டிலும் எரிசக்திப் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இயங்குகிற திசைவழியற்ற மத்திய அரசு, செயல்படத்தக்க ஊக்கமில்லாமல் விவ சாயிகளின் உயிரிழப்பை மறைக்க விழைகிற மாநில அரசு ஆகியவற்றுக்கிடையே சிக்கி அல்லல்படுகிறார்கள் தமிழ்நாட்டு விவசாயிகள்; விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலை கேட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய அய்யாக்கண்ணுவை இரண்டுமுறை நேரில் சந்தித்தேன்; தமிழ்நாட்டு அரசை வழிநடத்தும் மன்னார்குடிக் குடும்பம் மோடியை மிரட்ட எய்துவிட்ட ஆயுதமென்று அய்யாகண்ணுவுக்குப் பழிச்சொல் வந்தாலும் 42 நாட்களில் “விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும்” என்பதைத் தேசிய பேசுபொருளாக மாற்றியவர் என்ற பெருமையும் சேர்ந்தே கிடைத்தது. இந்த நாட்டில் விவசாயிகளின் சொல்லுக்கு மதிப்பில்லாமல் போகிறது என்ற பிரச்சினைக்குத் தேசிய கவனம் பெற்றுத் தந்தவர் என்கிற மரியாதை அவருக்குத் தமிழ் நாடு முழுவதும் கிடைத்திருக்கிறது. இந்த வறட்சியில் பேதலித்துப்போய் நிற்கும், நிர்க்கதியற்றுப்போய் தவிக்கும் விவசாயிகளைப் பார்த்து அறிவுப்பூர்வமாக யோசிக்கச் சொல்வதே வன்முறையாகப் படுகிறது; இருந்தாலும் நமது விவசாய மேலாண்மையும் நீர் மேலாண்மையும் முன்பைவிட இப்போது அதிகக் கவனமும் அக்கறையும் வேண்டி நிற்கின்றன; “விவசாயம் என்பதே பருவமழையுடனான சூதாட்டம்” என்கிற வாதத்தைச் சற்று தள்ளி வைத்துவிட்டு நீர்ப் பற்றாக்குறையுள்ள சமூகங்கள் எப்படி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வழிவகைகளைக் கையாள்கின்றன என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம் வரைமுறையற்ற, சட்டவிதிகளை மதிக்காத மணல் வியாபாரம், தாது மணல் வியாபாரங்களை வரைமுறைப்படுத்தி நீர்த் தடங்களையும் நீரூற்றுகளையும் பாதுகாக்கும் பணிகளும் இதற்கு இணையாக நடக்க வேண்டும். நீரை மறுசுழற்சி செய்வதைப் பற்றியும் வறட்சியைத் தாங்கும் உணவு தானியங்களைப் பயிரிடும் பாரம்பரிய அறிவைப் பரவலாக்குவதைப் பற்றியும் இந்தச் சமயத்தில் அதிகம் பேசியாக வேண்டும். நம்மாழ்வார் முதலானவர்கள் முன்னெடுத்த பசுமை அரசியலின் அல்லது பசுமைச் சொல்லாடலின் வேர்கள் ஆழமானவை; நமது மனதில், உடலில் கரைந்த சொற்கள் அவை. அவற்றை மேலும் ஜனநாயகப்படுத்த வேண்டும்.

இப்படி உள்நோக்கிய அறிவுப் பயணம் ஒரு புறம் நடக்கட்டும்; இன்னொரு புறம் விவசாயிகளைச் சக மனிதர்களாகப் பாவிக்க மறுக்கிற மத்திய அரசை நோக்கிய எதிர்ப்புக்குரல் ஒன்றுபட்டு உயர்ந்து ஒலிக்க வேண்டும்; அந்தக் குரல் அய்யாகண்ணுவின் பின்னால் திரளலாம்; அல்லது யார் அந்தக் குரலை வலிமையாகவும் உண்மையாகவும் முன்னெடுக்கிறார்களோ அவர்களின் பின்னால் திரளலாம்; இப்போது அந்த இடத்தை அய்யாக்கண்ணுதான் இட்டு நிரப்புகிறார்; விளைநிலத்தைப் பறிக்க நினைக்கும் டெல்லி மேலாதிக்கத்துக்கு எதிரான குரலை நெடுவாசலில் உள்ளுர்ப் பெண்களும் இளையவர்களும் முன்னெடுக்கிறார்கள். இதுதான் சமகால தமிழ்நாட்டின் உண்மை யான குரல்; 100 வருடங்களுக்கும் மேலாக டெல்லியின் மேலாதிக்கத்துக்கு எதிராக தொடர்ந்து வரும் தமிழ்க் குரலின் தொடர்ச்சி இது; மொழியுரிமையும் மண்ணுரிமையும் தான் தன்னுரிமை, சுய மரியாதை என்ற பேரறிவிலிருந்து பிறக்கும் இந்தக் குரல்களை ஒடுக்குவதற்கு கங்காணிகள் சூழ்ந்து நிற்கிறார்கள்; நெய்வேலி யிலிருந்து நெடுவாசல் வரை உணவளிக்கும் நிலங்களைப் பறிக்கும் பேராபத்திலிருந்து தமிழ் நிலத்தைக் காக்க எளிய மக்கள் அரணாக எழுந்து நிற்கிறார்கள்; அதுதான் தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை.

பீர் முகமது

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments