நெகிழி ஒழிப்பு எனும் மோசடி

Bloomberg என்ற பன்னாட்டு செய்தி நிறுவனமானது அண்மையில் நெகிழி வணிகம் குறித்த ஒரு முக்கிய புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

கடற்கரை சுத்தப்படுத்தல் போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் மூலம் நெகிழி மாசை கட்டுப்படுத்தவதாகச் சொல்லும் உலகளாவிய அமைப்பான ‘Alliance to End Plastic Waste’ (AEPW) கடந்த நான்கு ஆண்டுகளில் 34,000 மெட்ரிக் டன் நெகிழியை சூழலிலிருந்து அகற்றியிருப்பதாகச் சொல்கிறது. இது அதன் உண்மையான இலக்கான 15 லட்சம் மெட்ரிக் டன்னில் வெறும் 0.2 விழுக்காடு மட்டுமே என்கிறது Bloomberg.

உலகளவில் நெகிழி உற்பத்தியை தடையின்றித் தொடர மிகப்பெரிய வேலைகளைச் செய்யும் அமைப்பான அமெரிக்கன் கெமிக்கல் கவுன்சிலின் ஆதரவும் நல்கையும் பெறும் AEPW நிறுவனமானது எக்ஸான் மொபில், டவ் கெமிக்கல் உள்ளிட்ட பல பெருநிறுவனங்களால் நிதியுதவி செய்யப்படுவது என்பதும் இதன் 77 உறுப்பினர்களில் ஒன்றாக பெப்சி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கன் கெமிக்கல் கவுன்சிலானது ஐநாவின் நெகிழித் தடைக்கான ஒப்பந்தத்தை பலவீனப்படுத்தி உடைக்க பெரும் முயற்சிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 12,500 கோடி பணத்தை உலகமுழுதும் நெகிழி மாசை அகற்றும் திட்டங்களுக்கு செலவு செய்திருப்பதாக AEPW கூறிவரும் நிலையில் இங்கு நெகிழி மாசு பலமடங்காக அதிகரித்திருக்கிறதே அன்றி எதுவும் குறையவில்லை என்று Bloomberg Green புலனாய்வுக் குழுவின் செய்திக் குறிப்பு குறிப்பிடுகிறது.

பெட்ரோலிய நிறுவனங்களும் நுகர்பொருள் நிறுவனங்களும் மக்களையும் அரசுகளையும் உண்மையான பிரச்சினையான நெகிழி உற்பத்தியிலிருந்து திசைதிருப்ப இத்தகைய மறுசுழற்சி, சுத்தப்படுத்தல் போன்ற கண்துடைப்பு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன என்றும் இதற்கு தமது AEPW நிறுவனத்தின், அற்புதமாக உருவாக்கப்படும் உயர்தரக் காணொளிகளையும், கண்துடைப்பு அறிக்கைகளையும் பயன்படுத்திக்கொள்கின்றன என்று  Bloomberg குற்றம்சாட்டுகிறது. தனது விளம்பரங்களுக்காக கடந்த ஓராண்டில் மட்டும் 30 லட்சம் டாலர்களை APEW செலவளித்திருப்பதாக Bloomberg குறிப்பிடுகிறது.

AEPW இன் உறுப்பினர்களான பெருநிறுவனங்கள் எவ்வளவு நெகிழியை சூழலிலிருந்து அகற்றுகிறார்களோ, அதைவிட பலமடங்கு அதிகமாக, கற்பனைக்கு எட்டாத அளவில், கையாளமுடியாத அளவுக்கு அதிகமாக, நெகிழியை சூழலில் கலக்கிறார்கள் என்று Bloomberg தெரிவிக்கிறது.

பல இலட்சம் ஊதியத்தில் ஐநாவின் முன்னாள் ஊழியரை தனது தலைமை செயல் அலுவலராக நியமித்திருக்கும் AEPW, செய்திருப்பதாக சொல்லும் பல்வேறு செயல்பாடுகள்கூட உண்மைக்குப் புறம்பானவை என்று குறிப்பிடுகிறது Bloomberg. உதாரணமாக, தாய்லாந்தில் APEW ஒரு சமூகத் தலைவருக்கு உதவியிருப்பதாக குறிப்பிடுகிறது; ஆனால், அத்தலைவருக்கு APEW ஐ யாரென்றே தெரியவில்லை என்றும் இப்படி பிலிப்பைன்ஸ், கானா போன்ற நாடுகளில் அது நிதியுதவி செய்வதாகச் சொல்லும் செயல்பாடுகள் எத்தனை மோசடியானவை என்றும் அம்பலப்படுத்துகிறது Bloomberg கட்டுரை.

கட்டுரையை விரிவாக வாசிக்க:

https://www.bloomberg.com/features/2022-exxon-mobil-plastic-waste-cleanup-greenwashing/?leadSource=uverify%20wall

நெகிழியின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதைத்தவிர அதை ஒழிப்பதற்கான திட்டங்களோ அல்லது தொழில்நுட்பங்களோ உலகில் எங்குமே இல்லை என்பதே கசப்பான உண்மை.

– ஜீயோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments