சிப்காட்டின் கும்மிடிப்பூண்டி தொழிற்பூங்காவுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு; NGT தீர்ப்பு.

Image: Nidharshana

திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட சூரப்பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) சார்பில் தொழிற்பூங்கா ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இத்தொழிற்பூங்காவிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியினை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட கிராமங்களை உள்ளடக்கிய 215.834 எக்டர் பரப்பளவில் இத்தொழிற்பூங்காவை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடமிருந்து சிப்காட் நிறுவனம் 22.04.2024 அன்று பெற்றிருந்தது. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ன் 8(b) Townships/ Area Development Projects /Rehabilitation Centres எனும் பிரிவின்கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இத்திட்டத்திற்கு மாநில அளவிலேயே, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதியை சிப்காட் நிறுவனம் பெற்றுவிட்டது.

இந்த சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து சூரப்பூண்டி, வாணியமல்லி பகுதிகளைச் சேர்ந்த பிரவீனா, ஜெகன் குமார், ரஞ்சித் குமார், சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், பாலாஜி டில்லி, ஏழுமலை ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அம்மனுவில், இத்திட்டத்தின் வகைப்பாட்டைத் தவறாகக் குறிப்பிட்டது, திட்ட அமைவிடத்திற்கு அருகில் திட்டமிடப்பட்டுள்ள மற்றும் அமைந்துள்ள பிற திட்டங்கள் குறித்தும் விண்ணப்பத்தில் குறிப்பிடாமல் மறைத்தது, திட்ட அமைவிடத்தைப் பிரித்து மூன்று திட்டங்களாக்கியது, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ளாதது ஆகிய காரணங்களுக்காக இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான இறுதித் தீர்ப்பை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு 28.01.2025 அன்று வழங்கியது. அத்தீர்ப்பில், உரிய ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படாத இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதால் அச்சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

சிப்காட் நிறுவனம் இத்திட்டத்திற்கு இன்னும் சில திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருந்தால், அவற்றை ஒன்றாகச் சேர்த்து சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து உரிய அனுமதியைப் பெறுவதை தமிழ் நாடு அரசின் முடிவுக்கே விடுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தொழிற்பூங்காவிற்கான விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ன் 7(c) Industrial estates/parks/ complexes/areas, exportprocessing Zones (EPZs), SpecialEconomic Zones(SEZs), BiotechParks, Leather Complexes எனும் பிரிவின்கீழ்தான் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஏனெனில் இத்தொழிற்பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்தப்படும் இடங்களை ஒட்டியுள்ள அதே கிராமங்களைச் சேர்ந்த மற்றும் சில கிராமங்களின் இடங்களில் சிப்காட் நிறுவனம் இன்னும் சில தொழிற்பூங்காக்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தனது விண்ணப்பத்தில் சிப்காட் மறைத்திருந்தது.

சிப்காட் நிறுவனமானது மாநெல்லூர், சூரப்பூண்டி கிராமங்களுக்குட்பட்ட 279.99 எக்டர் பகுதியில் அதிக மாசு உமிழும் தொழிற்சாலைகள் அமையும் வகையிலான ஒரு தொழிற்பூங்காவிற்கு (சிப்காட் மாநெல்லூர் கட்டம் I) சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ன் 7(c) பிரிவின் கீழ் விண்ணப்பித்து, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து 10.11.2020 அன்று சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருந்தது.

இத்திட்டத்தின் அமைவிடமானது சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திலிருந்து 10 கி.மீ. எல்லைக்குள் அமைந்திருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒன்றிய சுற்றுச்சூழல் துறை வழங்குகையில் 10கி.மீ சுற்றளவில் உள்ள பறவைகள், விலங்குகள், காடுகளுக்கு இத்திட்டத்தால் ஏற்படும் தாக்கம் குறித்து முழுமையாக ஆராயமால் வழங்கியது. இதனடிப்படையிலான வழக்கு ஒன்றில் 30.09.2022ல் தீர்ப்பு வழங்கிய தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அவ்வனுமதியை நிறுத்தி வைத்து ஒரு உத்தரவை வழங்கியிருந்தது.

மேலும் கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து சிப்காட் நிறுவனமானது சூரப்பூண்டி, மாநெல்லூர், மாதர்பாக்கம், வாணியமல்லி, சானாப்புதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 984.6002 எக்டர் பரப்பளவிலான பகுதிகளைக் கொண்டு சிப்காட் மாநெல்லூர் கட்டம் III அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மேற்கூறிய கிராமங்களில் வசிக்கும் பலரது நிலங்கள் மற்றும் வீடுகளைக் கையகப்படுத்துவது தொடர்பான விளக்கம் கோரும் அழைப்பாணை மற்றும் விசாரணை நடத்துவதற்கான அழைப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கும்மிடிப்பூண்டி தாலுகாவின் மாநெல்லூர், சூரப்பூண்டி, மாதர்பாக்கம், வாணியமல்லி, சாணாப்புதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய அரசு நிலங்கள், தனியார் பட்டா நிலங்களில் 3 சிப்காட் திட்டங்களை சிப்காட் நிறுவனம் அமைக்கத் திட்டமிடுவது தெளிவாகிறது. இந்த மூன்று திட்டங்களையும் ஒரே திட்டமாக்கி சுற்றுச்சூழல் அனுமதி கோரினால் இத்திட்டத்தால் ஏற்படும் Cumulative Impact Assesment அதாவது தொழிற்பூங்காவை இவ்வளவு பெரிய பரப்பளவில் அமைப்பதால் சூழலுக்கும், சமூக அளவிலும் ஏற்படும் மொத்த தாக்கத்தை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உண்டாகும். மேலும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டியது வரும்.

இதனைத் தவிர்க்கவே குறிப்பிட்ட கிராமங்களில், ஒரே தொடச்சியான நிலப்பரப்பில் அமைக்க திட்டமிடப்பட்ட ஒரு சிப்காட் தொழிற்பூங்காவை சிறிய அளவில் 3 அல்லது 4 தொழிற்பூங்கா திட்டங்களாகப் பிரித்து தனித்தனியாக சுற்றுச்சூழல் அனுமதி பெற சிப்காட் நிறுவனம் முயன்று வருகிறது.

இந்த நிலையில்தான் சிப்காட்டின் சட்டவிரோதமான இம்முயற்சிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் குட்டு வைத்துள்ளது.

phase 2 judgment

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments