ரொம்ப ‘கெத்தான’ ஆளாங்க நீங்க?

முகநூல் வழியே அறிமுகமாகிய நண்பர் ஒருவரை ஒரு வருடத்திற்கு முன்பு புத்தகத் திருவிழாவில் நேரில் சந்தித்தேன். நெரிசலில் சில நிமிடங்களுக்குமேல் நேரில் பேசிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். பேசும்போது எங்கள் முந்தைய சந்திப்பு தொடர்புடைய ஏதோ ஒன்றை நினைவுபடுத்துவதற்காக “அண்ணைக்கு நீங்க ரெட் கலர் ‘லூயிஸ் பிலிப்’ ஷர்ட் போட்டிருந்தீங்களே” என்று குறிப்பிட்டார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. சில நிமிடங்களே நீடித்த அதுவும் புத்தகத்திருவிழா நெருக்கடிக்கிடையே நடந்த முதல் சந்திப்பில் நான் எவ்வாறு அந்நபரால் மதிப்பிடப்பட்டிருக்கிறேன் என்று எண்ணிப்பார்த்தபோது உள்ளுக்குள் ஏற்பட்ட தீடீர் அசவுகரிய உணர்வை ஒருவாறு சமாளித்துப் பேசி முடித்தேன்.

இன்று நாம் நம்முடைய குணநலன்களாலன்றி நாம் அணியும் ஆடை ஆபரணங்களாலேயே அடையாளம் காணப்படுகிறோம் என்பது எத்தனை வெட்கப்படவேண்டியது? மற்றவர்கள் நம்மை எந்த அளவீடுகளால் அளவிடுவதாக உணர்கிறோமோ அதே அளவீடுகளாலேயே நாம் அவர்களையும் அளவிடுகிறோம். நம்முடன் பழகும் நபர் என்ன விலை பெறுமானமுள்ள காலணி அணிந்திருக்கிறார் (அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதோ அல்லது அவருடைய உடைக்குப் பொருத்தமாக இருக்கிறதோ என்பதுகூட விலை மற்றும் பிராண்டுக்கு இரண்டாம் பட்சம்தான்) என்பது முதல் அவர் என்ன விலைமதிப்புள்ள வாகனத்தில் வந்திருக்கிறார் என்பதுவரை அளவிட்டே அதன்பின் அந்நபரைப்பற்றிய ஒரு சித்திரம் நம் மனதில் கட்டமைக்கப்படுகிறது. அடுத்தக் கட்டமாக நாம் கட்டமைத்த அந்தச் சித்திரத்தை அதே போன்ற அளவீடுகளுடன் நமக்கு நாமே சுயமதிப்பீடு செய்து உருவாக்கிய நம் சொந்த சித்திரத்துடன் ஒப்பிட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒப்பீடு நம்மைத் தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்வதாயிருந்தாலும் சரி இல்லை பெருமையோ பொறாமையோ கொள்ளச் செய்வதாயிருந்தாலும் சரி. ஆனால் இந்த மதிப்பீடுகளும் ஒப்பீடுகளும் சிறிதளவிலேனும் நமக்குள் ஊறிப்போயிருக்கிறது என்பதே உண்மை. நானும் எனக்குள் இதைப் பலமுறை செய்திருக்கிறேன். வெளியே மற்ற பிள்ளைகளோடு விழையாடிக்கொண்டிருக்கும் என் பிள்ளைகள் ஏளனப் பார்வைக்கு உட்பட்டுவிடுவார்களோ என்ற எண்ணத்தில் நான் அவர்களின் ஆடைகளை மற்றவர்களுடையதோடு ஒப்பிட்டிருக்கிறேன். இந்த மதிப்பீடுகளை என் பிள்ளைகளுக்கும் எந்தக் கூச்சமுமின்றி வெகு சாதாரணமாக நான் பலநேரங்களில் கடத்தியிருக்கிறேன் என்பதையும் உணர்கிறேன்.

பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒருவரைத் தன் ஆண்ட சாதி அலப்பறைகளால் கூனிக்குறுகச் செய்யும் ஒருவன்கூடத் தனது சொந்த சாதி மக்கள் மட்டும் கூடும் ஒரு திருமண விழாவில் தன்னைவிட ‘கெத்தான’ ஆடை ஆபரணங்களோடு திரியும் மற்றவர்களிடையே தன்னை ஒரு புழுவாக உணர்கின்றான். இல்லை உணர வைக்கப்படுகின்றான். சாதிக் கறைபடிந்த இந்தியச் சமூகங்களில் ஆண்டையாக இருந்தாலும் சரி அடிமையாக இருந்தாலும் சரி அவர்கள் தங்களுக்குள்ளேயே பெருமைப்பட்டுக் கொள்வதற்கோ இல்லை சிறுமைப் பட்டுக்கொள்வதற்கோ அவர்கள் தம் உடைமைகளின்மூலம் வெளிக் காட்டிக்கொள்ளும் வர்க்க வேறுபாடும் காரணமாக அமைகிறது என்பது உண்மை.

உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்று வரப்போகிறது என்றால் பலருக்கும் அது மகிழ்ச்சியை விட அதிகப் பதட்டத்தையே கொடுக்கிறது. அங்கே உறவினர்கள் கூடும் விழாவில் தான் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்றால் ஒரு குண்டுமணித் தங்கமாவது தன்னிடம் இருந்தாக வேண்டுமென்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். பெரிதாய் கவரிங் நகைகள் புழக்கத்தில் இல்லாத என்னுடைய சிறுவயதில் வீட்டுத் திருமணங்களின்போது பெண்கள் பொன்நகைகளை இரவல் வாங்கி அணிந்துகொள்வது சாதாரண நிகழ்வு. எனினும் குறைவாகவே நகைகள் அணிந்திருந்தாலும் அந்தத் திருமணத்துக்குக் காரில் வந்திறங்கும் பெண்ணின் மதிப்பு இரவல் நகைகளோடு பேருந்தில் போய் இறங்கும் பெண்ணின் மதிப்பை விட அதிகம் என்பதானது இங்கு ‘மதிப்பு’ எதைவைத்து அளவிடப்படுகிறது என்பதை நன்கு உணர்த்தும். இந்தச் சிக்கல் பெண்களுக்கானது மட்டுமல்ல. ஒரு ஆணுக்கான மதிப்பு அவனணியும் காலணி முதல் அவனுடைய வாகனம் வரை அளவிட்டே இங்குப் பெரும்பாலும் கட்டமைக்கப்படுகிறது.

‘ஆள்பாதி ஆடைபாதி’ என்பார்கள். ஆடைகள் ஒரு நபரின் இரசனையையும் தன்னம்பிக்கையையும் அவர் தன்னைத்தானே பாராமரித்துக்கொள்ளும் விதத்தையும் பறைசாற்றுகின்றன என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஆனால் உண்மையில் இங்கு ஆடையின்றி அதை அணிபவரின் பொருளாதாரப் பின்புலமே அவருக்கு மரியாதையைப் பெற்றுத்தருகிறது என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஒரே விதமான ஆடையே அணிந்திருந்தாலும் ஆப்பிள் மொபைல் வைத்திருப்பவரும் மைக்ரோமேக்ஸ் மொபைல் வைத்திருப்பவரும் இங்கு ஒரே விதமாகப் பார்க்கப்படுவதில்லை என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

இன்னொரு தரப்பும் இங்கே உண்டு. பொருளாதாரத்தில் உச்சத்திலேயே இருந்தாலும் தான் எளிமையாக வாழ்வதுபோன்ற ஒரு பிம்பத்தைத் தன் அரசியல் இலாபங்களுக்காகவோ இல்லை வேறு ஆதாயங்களுக்காகவோ உருவாக்கும் மனிதர்கள். பிரிவிலேஜ் சாதியினர் “நான் பிராமணன்தான், ஆனால் என் பிள்ளைக்குச் சாதி சான்றிதழ் வாங்கவில்லை” என்று பிரஸ்மீட் வைத்துச் சொல்வதைப் போன்று வேடிக்கையானதுதான் இது. ஆடிக் காரில் பயணம் செய்யும் எம் ஆர் காந்திகள் செருப்பணியாமல் தங்கள் எளிமையை உலகுக்குப் பறைசாற்றிக் கொள்வதை இதற்கு உதாரணமாகக் கொள்ளமுடியும்.

விசித்திரமான மதிப்பீடுகள் இவை. இவை எப்போதும் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறங்கிக்கிடப்பவை. எனினும் இவை எப்போதும் யாரிடமும் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுவதில்லை. நம் சமூகத்தில் கொஞ்சம்கூட உறுத்தலின்றிச் சாதிப் பெருமை பேசுபவர்கள்கூடப் பொருளாதாரப் பெருமையைத் தன் வாயால் பேசக் கூச்சப்படுவார்கள். அதேநேரத்தில் குரூரமாய் அதைத் தன் மனதிற்குள்ளே இரசித்துக்கொள்வார்கள். இந்த மதிப்பீடுகள்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒருவனை அவன் தன் நெஞ்சுச்கு நெருக்கமானவனாகவே இருந்தாலும் என் நண்பன் என்று பிறர் முன்னிலையில் சொல்ல இன்னொருவனைத் தயக்கம் கொள்ளச்செய்து சங்கடத்தை உருவாக்குகிறது.

இது தனி மனிதர்களை மட்டுமல்ல அருவெறுக்கத்தக்க விதத்தில் தனிமனிதர்களால் கட்டப்பட்ட சமூகத்தையும் நாட்டையும்கூட நோயாய்ப் பீடித்திருக்கிறது. அடுத்தவர்கள் முன்னிலையில் தன் கவுரவத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவே வெற்று ஆடம்பரங்கள் பிரம்மாண்டங்களுடன் நிழக்த்தப்படும் குடும்ப – சமூக விழாக்களை இதற்கு உதாரணமாகக்கொள்ள முடியும். கட்டிட வடிவமைப்பாளனான என்னை நண்பர் ஒருவர் தொடர்புகொண்டு தன் ஊருக்கு ஒரு சர்ச் வடிவமைக்கக் கேட்டுக்கொண்டார். இரண்டு உயர்ந்த கோபுரங்களுடன் வடிவமைப்பு முடிவு செய்யப்பட்டு வேலை தொடங்கியபின்னர் அவசரமாய் ஒரு இரவில் தொடர்புகொண்டு “பக்கத்து ஊரிலும் சர்ச் கட்டுகிறார்களாம். அவர்களுடைய சர்ச்சின் உயரத்தைவிட நம்முடையது குறைந்துபோனால் நமக்கு அசிங்கமாகிவிடும், எனவே நமது வடிவமைப்பின் கோபுர உயரத்தை இன்னும் 10 அடிகள் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்”. இத்தனைக்கும் ஏற்கெனவே இருந்த வடிவமைக்கான பணத்தைத் திரட்டவே அவர்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தனர். குடும்ப விழாக்களான நம்மூர்த் திருமணங்கள்கூட நமக்காகவன்றி ஊரில் நாலுபேர்முன் நம் கவுரவத்தை நிலை நிறுத்துவதற்காகவே யோசித்துத் திட்டமிடப்படுகின்றன. சிறுவயதில் திருமணவீடுகளில் எத்தனை கார்கள் வந்திருக்கின்றன, வாழை இலையில் எத்தனை கூட்டுகளும் பொரியலும் இருக்கிறது என்பதை நண்பர்களுடன் சேர்ந்து எண்ணிப்பார்த்து உச்சுகொட்டியது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

இந்தச் சமூக மதிப்பீடுகளின் நீட்சியாகத்தான் நாட்டின் கவுரவத்தையும் கெத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ‘பட்டேல் சிலை’ போன்ற வெத்துப் பிரம்மாண்டங்களைப் பார்க்க முடிகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் தன் குடிகள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் ஒருபுறம் செத்துக்கொண்டிருக்க அவர்களுக்கு மூச்சுவிட ஆக்சிஜனைக்கூடக் கொடுக்க முடியாத நிலையிலும் விதிகளை வளைத்து அசுரவேகத்தில் ‘சென்ட்ரல் விஸ்டாவை’ உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை என்னெவென்று சொல்வது?

இதன் வெளியரங்கமான பெருமிதங்களின் பின்னிருக்கும் உளவியலையும் விலங்குலகத்தில் இதன் பரிணாமத்தையும் கொஞ்சம் ஊகிக்க முடிகிறது. சக விலங்குகளைவிட நன்கு கிளைத்த பெரிய கொம்புகள், சேதாரமற்ற அழகிய தோகை, பிசிறற்ற அடர்ந்தப் பிடரி மயிர் போன்ற வெளிக் காட்டிக்கொள்ளும்படியான பெருமிதங்களே விலங்குலகில் ‘ஆண்மை’க்கான அடையாளமாகவும் கெத்தாகவும் பார்க்கப்படுவதோடு எதிர்பாலுயிரியை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பழங்குடிச் சமூகங்களில்கூட இருவாச்சியின் இறகுகளைத் தலையில் சூடிக்கொள்ளும் தகுதி பெற்றிருப்பதும் குறிப்பிட்ட ஆபரணங்களை அணிந்துகொள்வதும் தலைமைத்துவத்தின் ஆண்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதன் நீட்சியாகத்தான் பொருட்களின்மூலம் ஈட்டப்படும் வெளியரங்கமான கெத்தைக் கட்டமைக்கும் குணம் மனிதருக்குள் குடிகொண்டிருக்குமோ என்று தோன்றுகிறது. எனினும் முந்தையது மரபு ரீதியாகவோ அல்லது (உடல்வலு அல்லது ஆழுமையால் ஈட்டப்பட்டத்) தகுதியின் மூலமோ பெறப்படுகிறது என்றால் இன்றைய நவீன கெத்து வெறும் பொருளாதாரப் பலத்தால் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய உலகில் பிழைத்திருக்க உடல்வலுவையும் ஆளுமைத்திறனையும்விட ஒருவருடைய பொருளாதார வலு அத்தியாவசியமாய்ப் பார்க்கப்படுவதுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும் கெத்துக்காகவும் கவுரவத்துக்காகவும் வாங்கப்படும் – வடிவமைக்கப்படும் பொருட்களோ – அடையாளங்களோ இல்லை செயல்பாடுகளோ வெறும் பொருளாதாரச் சுமையாய் மட்டும் இருந்துவிட்டால் போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் உலகம் கடும் சூழல் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் இந்நாட்களில் இந்த வெற்றுப் பிரம்மாண்டங்களை நாம் கடுமையான மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

எவ்வளவு கெத்தானப் பொருட்கள் இருக்கின்றனவோ அவ்வளவு அதிகமாகச் சூழல் சீர்கேடும் என்பது நாம் இங்குக் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண இருசக்கர மோட்டார் வாகனத்தைவிட விலை அதிகமுள்ள – தேவைக்கும் அதிகத் திறன்கொண்ட – அதிகப் புகை உமிழும் – அதிக இரைச்சலை உருவாக்கும் – அதிக மரபு எரிபொருள் உறுஞ்சும் ராயல் எல்பீல்டுகளின் மீது பவனிவரும்போதுதான் நம் இளைஞர்கள் தம்மை ஒரு குட்டி இளவரசன் போலக் கெத்தாக உணர்கிறார்கள். இதுவே ஒரு கெத்தானத் திருமணத்தை எடுத்துக்கொண்டால் திரும்பும் திசையெல்லாம் ஜொலிக்கும் வண்ண விளக்குகள் – வீணாக்கப்படும் உணவு – குடிநீர் – பரிசுப்பொருட்கள் – ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் வீண் அலங்காரங்கள் – தண்ணீர்ப் புட்டிகள் முதல் உணவுத் தட்டுகள் வரையிலான நெகிழிப் பொருட்கள் – எங்கும் குளுகுழுவென உணரவைக்கும் குளிரூட்டிகள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தச் சூழல் நெருக்கடியில் நாம் இந்த வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. நம் திருமண விழாக்களை நெஞ்சுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டும் சேர்ந்து கொண்டாடும் -எளிமையான அதே நேரத்தின் இன்னும் அதிக அன்பையும் நெருக்கத்தையும் உணரவைக்கும் குடும்பவிழாக்களாக மாற்றுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நிண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த திருமணங்களைக் கொரோனா பொதுமுடக்கத்தில் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் அவசர அவசரமாக முடித்தவர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். இதன் பின்னிருக்கும் வலியைக் கொஞ்சம் உணர்ந்தாலே நமது இந்த வெத்து ஆடம்பர மதிப்பீடுகளுக்காக விலைகொடுக்கும் மனிதர்களுக்கு இந்தச் சமூகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடியைப் புரிந்துகொள்ள முடியும்.

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார்கள். பொருட்களின் உற்பத்தி சூழலைப் பாதிக்கிறது என்பதற்காக நாம் அம்மணமாக அலைய வேண்டியதில்லை. பொருட்களையும் அவற்றின் மீதான ஆசையையும் துறந்து புத்தனாகத் திரியவேண்டியதுமில்லை. ஆனால் குறைந்தபட்ச வசதிகளுடன் உயிர்வாழ்வதற்கான தேவைகளைத் தாண்டிய பொருட்களை அவற்றின் அவசியத்தை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.

வேதனைதரும் அருவெறுக்கத்தக்க பொருள்சார்ந்த மதிப்பீடுகளுக்குப் பின்னிருக்கும் உளவியலை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய சக மனிதனைப் பொதுவெளியில் நிர்வாணியாய் உணரச் செய்யும் இந்த மதிப்பீடுகள் உடைக்கப்பட்ட வேண்டுமானால் அந்த நிர்வாணத்தை நாம் ஒவ்வொருவரும் வலிந்து தேர்ந்தெடுப்பது ஒன்றே வழி.

வெளியே தெரிவதற்காகவே கழுத்தை இறுக்கியபடி நாம் அணியும் தங்கச் சங்கிலிகளோ, நாம் அணியும் விலையுயர்ந்த பிராண்டட் ஆடைகள், அணிகலன்கள், காலணிகள், கைக்கடிகாரங்களோ இல்லை நாம் ஜம்மென்று ஏறியமர்ந்து பவனிவரும் ஸ்டைலான வாகனங்கள், உடலில் புஸ்… புஸ்சென்று அடித்துக்கொள்ளும் வேதி நறுமணங்களோ, பாக்கெட்டில் சொருகியிருக்கும் விலையுயர்ந்த பேனாக்களோ, பணப்பையை நிறைத்திருக்கும் பல வண்ண கிரெடிட் கார்டுகளோ அணுவளவிலேனும் நமக்குச் சமூக மதிப்பைப் பெற்றுத் தர முடியாது.

பொருட்களால் நம் மரியாதையும் கவுரவத்தையும் உயர்த்திக்கொள்ள முடியாது.

இரவில் ஒளியை நாடி வட்டமிடும் பூச்சிகள் போன்ற சில மனிதர்கள் அந்த ‘கெத்தானப் பொருட்களால்’ உங்களை நோக்கி ஈர்க்கப்படக்கூடும். உங்கள் அருகே வந்து உங்களை மேலிருந்து கீழ்வரை அளவிட்டபடி புருவங்களை உயர்த்தித் தம் கீழ் உதட்டால் மேல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டே ‘கெத்தான ஆளுதான் நீங்க’ என்பார்கள் அவர்கள். நீங்களும் வானத்தில் சிறகடிப்பதற்குள் விடிந்துவிடும். இருள் விலகி ஆதவன் ஒளிபடர்ந்தபின் ‘வெத்து’ விளக்கைச் சுற்றும் பூச்சிகள் எங்கேனும் உண்டா என்ன?

பெரும் மக்கட் திரளைத் தம்வசம் காந்தம்போல ஈர்த்து வைத்திருந்த மகத்தான வரலாற்று நாயகர்கள் எவரும் கவர்ச்சியும் ஆடம்பரமும் நிறைந்த விலையுயர்ந்தப் பொருட்கள் மூலம் தம் மகத்துவத்தையும் மனித அன்பையும் ஈட்டியவர்கள் அல்லர். ‘உள்ளே எதுவுமற்ற’ வெத்துகளே பல இலட்சம் மதிப்புள்ள கோட்டுச் சூட்டுகளில் தம் உடலைப் புதைத்துக்கொண்டு வெண்தாடியுடன் தம்மை மகத்தானவர்களாக நிறுவ முயல்கின்றனர்.

உங்கள் கைவசமிருக்கும் ஒரு விலை மதிப்புமிக்கப் பொருள் உங்களை நோக்கி ஒரு ‘உறவை’ ஈர்க்கும் என்று நீங்கள் நம்பினால் தூக்கியெறிய வேண்டியது அந்தப் பொருளை மட்டுமல்ல உறவையும்தான். பூப்போன்று மலர்ந்த முகமும் அதிலிருந்து வெளிப்படும் புன்முறுவலும், கனிவானப் பார்வையும், பாசாங்கற்ற வார்த்தைகளும் கேட்கும் திறன்பெற்ற காதுகளும், இதமான தொடுதம், மானிடக் காதலுமின்றி மனிதரை எதுதான் ஈர்க்க முடியும்? தூய அன்பைத் தவிர எதுதான் ஒரு உறவை நாம் தக்க வைத்துக்கொள்ள உதவும்?

நம்மைப் பெருமைகொள்ளச் செய்யும் பொருட்கள் அவற்றை உடைமையாக்க வாய்ப்புகளற்ற நம் நண்பர்களையும் உறவுகளையும் காயப்படுத்தி ஏளனம் செய்பவை. சிறுமைப்படுத்துபவை. பொதுவெளியில் அவர்களைக் கூனிக்குறுகச் செய்பவை.

பொருட்கள் பணத்தை வீணாக்குகின்றன; பொருட்கள் உறவுகளை விலக்குகின்றன. பொருட்கள் உடல் நலனைக் கெடுக்கின்றன. பொருட்கள் தம் உற்பத்தியிலும், பயன்பாட்டிலும், கழிவுநீக்கத்திலும் சூழலைப் பாழ்படுத்துகின்றன.

பொருட்களால் பெறப்படும் கெத்து ஒரு சமூக அநீதி

பொருட்களால் பெறப்படும் கெத்து ஒரு சூழல் அநீதி

பொருட்களால் பெறப்படும் கெத்து ‘விளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சம்’ போன்றது. அது மதிப்பை அன்றி ஏளனத்தையும் புறக்கணிப்பையுமே பெற்றுத்தரும்.மனிதர் உள்ளடக்கிய நம் சூழலின் மீதானக் காதல்தான் உண்மையாக நம்மைத் தலைநிமிரச்செய்யும் ‘கெத்து’. அந்தக் கெத்தை சொந்தமாக்கிக்கொள்ள உழைப்போம்.

  • ஜீயோ டாமின்.ம

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments