சுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நெகிழியை ஒழிக்க “மீண்டும் மஞ்சப்பை” எனும் இயக்கத்தைத் தமிழக அரசு முன்னெடுத்திருப்பது மனதார வரவேற்கத்தக்கது. இந்த முயற்சியில் உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர், அரசு என அனைவரும் கைகோர்ப்பது அவசியம்.
அந்த வகையில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிக்கானத் தடையை அறிவித்ததோடு நெகிழி ஒழிப்பில் விழிப்புணர்வையும் மாற்றுப் பொருட்களுக்கானச் சந்தையையும் உருவாக்கும் விதமாக மஞ்சப்பை இயக்கத்தை முன்னெடுத்திருப்பது மிகச் சரியான நகர்வு. எனினும் இவையெல்லாம் தொடக்கப் புள்ளிகளே. இந்தத் தொடக்கம் வெற்றிகரமானப் பயணமாக மாற அரசுக்குச் சில கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.
1. மஞ்சப்பை இயக்கத்தின் தொடக்க விழா கண்காட்சி அரங்கில் ‘ஹிந்துஸ்தான் கோக கோலா பிவரேஜஸ் பிரைவேட் லிமிட்டட்’ நிறுவனத்தின் அரங்கில் ‘ரிக்கார்ன் பேனல்ஸ்’ (Ricron Panels) என்ற நிறுவனத்தின் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு வகையான தூக்கி வீசப்பட்ட நெகிழிப் பொருட்களை வெப்பத்தில் அழுத்தி (heat compressed) தயாரிக்கப்பட்ட நெகிழிப் பலகைகளும் அவற்றை பயன்படுத்திச் செய்யப்படும் கூரைகள், பள்ளிக் குழந்தைகளுக்கான மேஜை நாற்காலிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொக்கோகோலா நிறுவனமானது நெகிழி மாசு ஏற்படுத்தும் நிறுவனங்களில் உலகில் முதன்மையானதாகும். இப்படி நெகிழி மாசுக்குக் காரணமான நிறுவனங்கள் அவற்றுக்குத் தீர்வுகள் என்ற பெயரில் உலகெங்கும் தவறான சூழல் விரோதத் திட்டங்களை (False Solutions) அறிமுகப்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் மேற்கண்ட நெகிழிப் பலகைகள். நெகிழியே நச்சுத் தன்மையுடையது என்பதாலேயே அதை நாம் ஒழிக்க நினைக்கிறோம். இப்படியிருக்க அந்த நச்சு நெகிழியைப் பள்ளிக் குழந்தைகள் ஒட்டி உறவாடும் மேஜை நாற்காலிகளாகவோ கட்டிடக் கூரைகளாகவோ பயன்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தமிழக அரசு இம்மாதிரியானப் போலித்தீர்வுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
2. தமிழக அரசு நெகிழிக் குப்பைகளை எரித்து ஆற்றலைப் பெறும் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறது. இந்த ‘பைராலிஸிஸ்’ நிலையங்கள் கடுமையான சூழல் மாசுக்களை ஏற்படுத்துபவை. அத்தோடு இவை தொடர்ந்து இயங்க நெகிழிக்குப்பைகள் தொடர்ந்து தேவைப்படும். நெகிழி ஒழிப்பும் குப்பை எரிவுலைகளும் வெவ்வேறு எதிரெதிரானப் பாதைகள். நெகிழிக் கட்டுப்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மிக அதிகச் செலவுமிக்க பைராலிசிஸ் நிலையங்களை நிறுவுவதற்கானத் தேவை எழாது. வடிவமைபு மட்டுமல்ல அவற்றின் இயக்கமும் மிக அதிக செலவு பிடிக்கக்கூடியது. எனவே குப்பை எரிவுலைகளை அரசு முழுமையாகக் கைவிட்டு அந்தச் செலவை சூழலுக்குப் பாதகமில்லாத நெகிழிக்கான மாற்றுப் பொருட்களை உருவாக்குவதற்காக அரசு செலவிட வேண்டும்.
3. நெகிழி என்றதும் பெரும்பாலும் நெகிழிப் பைகள் மட்டுமே பேசுபொருளாக இருந்தாலும் மற்ற நெகிழிப் பொருட்கள் குறிப்பாக ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்கள் நெகிழிப் பையைவிட அதிகச் சிக்கலை ஏற்படுத்துபவை. மாநகராட்சி நெகிழிக் கழிவுகளில் 40 விழுக்காடுக்குமேல் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியே இடம்பெறுகின்றன. இவற்றைக் கருத்தில்கொண்டு அரசு அறிவித்துள்ள ஒற்றைப் பயன்பாட்டு நெகிழித் தடையை வீரியத்தோடு தமிழகமெங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
4. மேலும் ஒற்றைப் பயன்பாடு நெகிழித் தடையில் சிறு குறு உற்பத்தியாளர்கள் உற்பத்திச் செய்யும் பொருட்கள் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கின்றன. பெருநிறுவனங்களின் பொட்டலங்கள் (உதாரணமாக பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் சேஷேக்கள் போன்றவை) சேர்க்கப்படவில்லை. இவை பெரும்பாலும் பல்லடுக்கு நெகிழியாக இருப்பதால் மறுசுழற்சியும் செய்ய முடியாது என்பது கவலை தருகிறது. இந்த பாரபட்சத்தைக் களைய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) போன்ற சட்டங்கள் மூலம் இந்தப் பெருநிறுவனங்களின் குப்பையைக் கையாளும் பொறுப்பையும் நிதிச் சுமையையும் அந்த நிறுவனங்களே ஏற்க வகைசெய்ய வேண்டும்.
5. நெகிழிப் பைக்கு மஞ்சள் பை மாற்றுபோல பல்வேறுவிதமான நெகிழிப் பொருட்களுக்கும் பல எளிமையான மாற்றுக்கள் நம்மிடம் இருக்கின்றன. உதாரணமாக நெகிழி டீ கப்புக்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தத்தக்க கண்ணாடி அல்லது ஸ்டீல் டம்ளர்களை பயன்படுத்த முடியும். ஆனால், நெகிழிக்கு மாற்று என்று சொல்லி கொண்டுவரப்படும் மட்கும் நெகிழி, பிஸ்கட்போலவே டீ குடித்துவிட்டு சாப்பிடக்கூடிய டீ கப் போன்றவை சூழல் பார்வையில் சரியான மாற்றுகள் அல்ல. மட்கும் நெகிழி என்று சொல்லப்படும் நெகிழி Industrial compost facility இல் மட்டுமே மட்க்கக்கூடியது. அத்தகைய அமைப்புகள் நம் மாநிலத்தில் பெரியளவில் இல்லை என்றே சொல்ல முடியும். இந்த மட்கும் நெகிழி நீர் நிலைகளிலோ அல்லது நிலத்திலோ கொட்டப்பட்டால் சாதாரண நெகிழி போலவே மட்கப் பலவருடங்கள் எடுத்துக்கொள்ளும். (இது குறித்து கண்காட்சி அரங்கில் மட்கும் நெகிழியை விளம்பரப்படுத்திய நபரிடம் வினவியபோது திறந்த வெளியில் மட்க எவ்வளவு நாள் எடுத்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது என்றும் பின்னர் 2 வருடங்கள் வரையாகும் என்றும் மழுப்பினார்). இரண்டுவருடங்கள் என்றே எடுத்துக்கொண்டாலும் இவை சென்னை மழைநீர் வடிகால்களில் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு இப்போது நாம் சந்தித்தப் பெருமழை பாதிப்புகளே சாட்சி.
6. நெகிழிப் பைகள் கடைகளில் இலவசமாகக் கொடுக்கப்பட்டதுபோல பெருமளவில் துணிப்பைகள் கொடுக்கப்பட்டால் இவையும் ஒரு குப்பைப் பிரச்சினையையே உருவாக்கும். இவற்றைக் குறைந்த விலையில் மக்கள் பெற வழிவகுத்து நுகர்வோர் தனக்குத் தேவையானப் பையை வீட்டிலிருந்தே கடைக்குக் கொண்டு செல்ல வழிசெய்வதே சிறப்பானதாக அமையும்.
7. நெகிழிப் பைக்கு மாற்றாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க காகிதப் பைகள் கொடுப்பதை அரசு முடிந்த மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். உறுதியான மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான துணிப்பைகளே சரியானத் தீர்வாக அமையும்.
8. பொட்டலங்கள் இல்லாத பொருட்களின் (Packaging free goods) விற்பனையை அரசு ஊக்குவிக்க கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
9. நெகிழிக்கான மாற்றுப் பொருட்களை உருவாக்கும்போது எளிய மக்களுக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இன்றையக் கண்காட்சி அரங்கிலேயே பெருமளவில் முதலீடற்ற எந்த இயந்திரங்களின் தேவையுமற்ற பலையோலையால் செய்யப்பட்ட பொட்டலங்கள் கட்டப் பயன்படும் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்த்து மிகச்சிறப்பு. இவை விலையில் குறைவானதாகவும் அதே நேரத்தில் விழிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகவும் இருக்கும். இவற்றை அரசு அதிகம் ஊக்குவித்து அதற்கானச் சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இறுதியாக நெகிழி ஒழிப்பு நிச்சயம் எளிமையானதல்ல. அதே நேரத்தில் கழிவில்லா நிலை (zero waste) நோக்கிய கழிவு மேலாண்மை, சுழற்சிப் பொருளாதாரம் (circular economy) போன்றவற்றின் மூலம் இவற்றை சில ஆண்டுகளில் சாத்தியப்படுத்த முடியும். இந்திய நகரங்கள் உட்பட உலக அளவில் பல நகரங்களும் கழிவில்லா நிலை நோக்கித் திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கிவிட்டிருக்கின்றன. இந்தக் கழிவில்லா நிலையை அடைவதுதான் இன்று தொடங்கப்பட்ட மஞ்சள் பை இயக்கத்தின் முழு வெற்றியாக இருக்கும்.
- ஜீயோ டாமின்
ஆக்கப்பூர்வமான யோசனைகள்.
சிறப்பு…. படிப்படியாக அரசு அமல்படுத்தும் என நம்புவோம்