சூழலைக் கெடுக்காமல் வாழப் பழகவேண்டும்!

சமூகத்தில் தாங்களும் ஒரு முக்கிய அங்கம் என்று திருநங்கைகள் பல்வேறு வழிகளிலும் நிரூபித்து வருகின்றனர். இவர்களிடையே சூழலுக்கு இசைந்த தொழிலை சொந்தமாக நடத்தி வருகிறார் வேலூர் அருகே உள்ள காட்பாடியைச் சேர்ந்த பிரீத்தி. பிரீத்தி இன்று பெண்ணாக வாழ்ந்தாலும், ஆணாகப் பிறந்தவர். பதின்ம வயதில் பாலினத் திரிபு நிலையை உணர்ந்தபோது இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் இருந்துள்ளார். இவர் உடலிலும், குரலிலும் தென்பட்ட மாற்றங்களை உணர்ந்து கொண்ட மற்ற மாணவர்களின் கேலியும், கிண்டலும் இவரது படிப்பை முடிக்க முடியாமல் கல்லூரியைவிட்டு வெளியேற முடிவு செய்தார். மும்பை சென்று பாலின மாற்று சிகிச்சை மேற்கொண்டவர். இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த இவரை, இவரது வீட்டினர் துவக்கத்தில் ஏற்க மறுத்தனர். பெரும் போராட்டத்திற்குப் பின்பே தன்னைப் புரிந்துகொள்ளுமாறு குடும்பத் தினரை மாற்றினார். மும்பை விடுதிகளில் நடனக் கலைஞராகப் பணியாற்றி இருக்கிறார். நல்ல
வருமானம் இருந்தபோதும் இந்த வருமானம் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்தார். எனவே நிரந்தரமாகவும், நாகரீக வழியிலும் வருமானம் ஈட்டுவதற்காக “தென்றல் மகளிர் சுய உதவிக்குழு” அமைத்து ஆடை வியாபாரத்தில் இறங்கியுள்ளார். அதற்கான முதலீட்டை முழுமையாக ஏற்பாடு செய்ய இயலாத நிலையில் மாற்றுத் தொழில் குறித்த யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாக்கு மர இலையில் தட்டுகள் செய்வதுகுறித்து பார்த்திருக்கிறார். ஏற்கனவே சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்துடன் இருந்த ப்ரீத்திக்கு, சூழலைக் கெடுக்காதவகையில் பாக்குமர இலையில் தட்டு செய்வது உகந்த தொழிலாகப் பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் இந்தத் தொழிலுக்கான பயிற்சி பெற்றிருக்கிறார்.

இதற்கான இயந்திரங்களின் விலை சில லட்சங்களில் இருந்திருக்கிறது. உடனே மாவட்ட தொழில் மையத்தை அணுகிய ப்ரீத்திக்கு ஆதரவான குரல் கிடைத்திருக்கிறது. மாவட்ட தொழில்மைய அதிகாரிகள் ப்ரீத்திக்கு தேவையான தொழில்முனைவு தொடர்பான பயிற்சியைக் கொடுத்து கடன் உதவிக்காக இந்தியன் வங்கிக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்கள். வங்கியில் உடனே கடன் கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாத காலம் அலையவிட்டு மூன்று லட்ச ரூபாய் கடனுக்கான காசோலை வழங்கி இருக்கிறார்கள்.

மின்சார வாரியத்தில் அவர்கள் பங்குக்கு ஒரு மாதகாலம் அலையவிட்டு மும்முனை மின் இணைப்பு வழங்கி இருக்கிறார்கள். ஆனால் இதிலெல்லாம் மனம் உறுதியாகி பக்குவம் பெற்றதாக ப்ரீத்தி கூறுகிறார். பாக்குமர மட்டைகளை கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வாங்குவதாக கூறும் ப்ரீத்தி, தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கும் பாக்குமட்டைத் தட்டுகளை விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக கூறுகிறார். பிளாஸ்டிக் போன்ற பல காலத்திற்கு மக்காமல் இருந்து சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களைப்
பயன்படுத்துவதை தவிர்த்து, பாக்குமர இலைகளால ஆன தட்டுகளையும், பிற பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்று ப்ரீத்தி வலியுறுத்துகிறார். தற்போது உள்ளூர் மக்கள் மட்டுமே தனது வாடிக்கையாளர்களாக இருப்பதாகக் கூறும் இவர், விரைவில் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாளர்களை ஏற்பாடுசெய்ய இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை மட்டுமே வணிகம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும், சூழல் மீது ஆர்வம் கொண்டவர்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவரது வணிக நிறுவனத்தின் பெயர் ‘ஏஜெஎம் பாக்குத் தட்டு.’ ஏஜெஎம் என்றால் என்ன கேட்டதற்கு, “அல்லா, ஜீசஸ், மாரியம்மா” என்று புன்னகைக்கிறார். ப்ரீத்தியின் தொடர்பு எண்: 96555 37593

ஆற்றல் பிரவீன்குமார்

இதையும் படிங்க.!