சூழலியலில் புரையோடிப்போன கருத்துமுதல்வாதம்

forest

பொதுவாக வார விடுமுறைகளில் நானும் சில நண்பர்களும் பறவைகளைப் பார்க்க (birding) செல்வது வழக்கம். சென்னையில் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி மிச்சசொச்சமாகக் காணப்படும் பெரும்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்புநிலங்களுக்குத்தான் பெரும்பாலும் செல்வோம். அவ்வாறு ஒரு நாள் செல்கையில், ஒரு சிறிய பெட்டிக்கடைக்காரர் நாங்கள் செல்வதைப் பார்த்தார். ‘நாங்கள் இவ்வாறு பறவைகளைப் பார்க்க, அதை ஒளிப்பதிவு செய்யச் செல்கிறோம்’ என்று கூறினால் அவரது பதில் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். அவருக்கு அது வேண்டாத வேலையாகத்தான் தெரியும் என்பதில் ஐயமில்லை. இதைச் சூழலியல் ஆர்வலர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன்.

அப்படி விவாதித்தபோது வந்த கருத்துகள் வித்தியாசமாக இருந்தன. சிலர் அவரது தினசரி வாய்க்கும் வயிற்றுக்குமான போராட்டத்தில் இது பெரிய விசயமாகத் தெரியாது என்று கூறினர். சிலர் அவரை அறியாமலேயே அவரும் சதுப்புநிலங்களின் ஆக்கிரமிப்பில் பங்கு பெற்றுள்ளார் என்பதால் அவருக்கு இது பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். இன்னும் சிலர் ‘நாம் நமது வாழ்வைத் தாண்டிப் பறவைகள், விலங்குகள், சூழலியல் போன்றவற்றைக் குறித்தும் யோசிக்கிறோம். அவர்கள் அப்படி யோசிப்பதில்லை. தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள்’ என்று ஒருவர் கூறினார். இந்த மூன்றாவது கருத்து எனக்குக் கொஞ்சம் உறுத்தியது. சில நாட்கள் கழித்துத்தான் சூழலியலில் (விலங்குகள் மற்றும் பறவைகளின் மீது) ஆர்வம் கொண்டுள்ள பலர் இந்த மூன்றாம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது.

இந்த விவாதம் சூழலியலில் இருக்கும் பொருள்முதல்வாத – கருத்துமுதல்வாத மோதலை (materialistic vs idealistic) எனக்குப் புலப்படுத்தியது. இந்தியாவின் சூழலியல் அறிஞர்களில் பெரும்பாலானோர் இதில் கருத்துமுதல்வாதப் பிரிவைச் சேர்ந்தவராகப் படுகின்றனர். இதை எனக்கு உறுதிப்படுத்தியது, இந்த இயற்கை மற்றும் சூழலியல் ஆர்வலர்களில் நான் மீண்டும் மீண்டும் தொடர்ந்து காணும் அத்வைதிகள்தான்! “அனைத்து உயிர்களும் பிரம்மம்” என்ற இடத்திலிருந்துதான் அவர்களின் சூழலியல் ஆர்வம் துவங்குகிறது என்பதை என்னால் உணர முடிந்தது. உலகம் முழுவதும் ஒரே பிரம்மத்திலிருந்து உருவானது அல்லது உருவாக்கப்பட்டது என்னும் அவர்களின் தத்துவ நிலைப்பாடு அவர்களை மிகச் சுலபமாகச் சூழலியல் பக்கம் கொண்டு வந்துவிடுகிறது. அதில் பிழை இல்லை. ஆனால் பறவைகளை, விலங்குகளைக் காணச் செல்லும் அனைவரையும் பொதுச் சமூகம் அப்படித்தான் காண்கிறது என்பதும், அவர்களுக்கு அந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள் / ஏற்படுத்திய ஊடகம் இது போன்ற கண்ணோட்டத்தில் ஏற்படுத்தியிருப்பதும் அம்மக்களுடன் பேசியதில் தெரிய வந்தது.

இன்னும் அடிப்படையாகப் பறவைக் காணலுக்கு செல்லும் அனைவரையும் ‘சைவ உணவு உண்பவர்களாக’ நினைத்துக்கொள்ளும் பார்வை, இங்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது. அத்வைதிகள் மட்டுமின்றி, இயற்கையைக் கடவுளாகக் காணும் போக்கும் அப்படிப்பட்டதாகத்தான் எனக்குத் தெரிகிறது. வேப்பமரத்தைச் சாமியாக்கிய பண்பாடும், பாம்புகளையும் பிற கானுயிர்களையும் கடவுளாக்கிய நாட்டார் தெய்வ முறைகளும் இங்கு சூழலியலில் தஞ்சமடைந்துள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுதும் சூழலியலில் இது போன்ற கருத்துமுதல்வாதச் சார்பு அந்தந்த மண்ணின் தத்துவ நிலைப்பாட்டிலிருந்து எழுகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரை அனைத்தையும் பிரம்மமாகப் பார்க்கும் அத்வைத நிலைப்பாடு நம்மில் நிறைய பேருக்குத் தெரியும். இதைத் தவிர இயற்கையை தெய்வமாகப் பார்க்கும் பார்வை இரண்டு விதத்தில் தோன்றியது. ஒன்று, பழங்குடி வழிபாட்டு முறைகள், மற்றொன்று சில இயற்கைத் தத்துவங்கள் (சாங்கியம், லோகாயதம், இயற்பண்புவாதம் முதலியன இயற்கையைப் போற்றும் இந்தியத் தத்துவங்கள்).

இந்தியாவின் பழமையான தத்துவங்களில் சாங்கியம், இயற்பண்புவாதம் முதலியன அடங்கும். இயற்பண்புவாதம் என்பது ஒவ்வொரு பருப்பொருளுக்குள்ளும் (matter) அதற்கான இயற்கையான பண்பு (character) ஒன்று ஒளிந்திருப்பதாகக் கூறுவது. தீயின் சூடு அதன் உள்ளார்ந்த பண்பு; பாறையின் திடத்தன்மை, நீரின் குளிர்ச்சி, வண்ணம், சுவை முதலிய அனைத்தும் ஒரு பொருளின் இயற்கையான குணம் என்கிறது இயற்பண்புவாதம்.

இந்த இயற்பண்புவாதத்தை ஏற்ற சாங்கியத் தத்துவ நிலைப்பாடு, உலகத்தின் தோற்றத்தை விளக்க இதைப் பயன்படுத்திக்கொண்டது. பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒரு பருப்பொருள் இருந்தது. அவற்றின் உள்ளார்ந்த இயல்பு இந்தப் புவியையும் இந்த உயிர்களையும் தோற்றுவிப்பது. அந்தப் பண்பிற்கு ஏற்றாற்போல் அது பரிணமித்து இன்று இந்தப் புவியையும் மனிதர்களையும் தோற்றுவித்துள்ளது என்று சாங்கியம் விளக்கமளித்தது. நாத்திகத் தத்துவமான சாங்கியம், ‘கடவுள்தான் உலகை உருவாக்கினார்’ என்ற ஆத்திகவாதத்தை எதிர்க்க முனையும்போது இந்த வாதத்தைனை வைக்கிறது. கடவுளின் இருப்பை மறுத்தாலும், இந்த வாதத்தின் அறிவியல்பூர்வமான பிழைகளைச் சரிசெய்யும் அளவிற்கு அந்தக் காலத்து அறிவியல் வளர்ந்திருக்கவில்லை. இது காலத்தால் பௌத்த, சமணத் தத்துவத்திற்கெல்லாம் முற்பட்டது. கடவுளின் உலக உருவாக்கக் கோட்பாட்டை மறுக்க நினைத்த அத்தனைப் பண்பாடுகளும் இந்த சாங்கிய வாதத்தைக் கிரகித்துக்கொண்டன.

இன்றைய காலகட்டத்தில் கடவுள் மறுப்புவாதம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வலுப்பெற்றுவருகையில், அதற்கு பதிலாக இயற்கையைக் கடவுளாய்ப் பார்க்கும் இது போன்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மற்றொரு புறம் இயற்கையைக் கடவுளாய்க் காண்பவர்கள் கைக்கொண்டுள்ள ஒரு பார்வை, கானகத்தில் உள்ள அனைத்தையும் வழிபடும்  பழங்குடி இனப் பார்வை. இது இன்னும் சிக்கலானது. ஏனெனில் இது முழுக்க முழுக்க ஆபத்தானது அல்ல. ஒரு சமயத்தில் அதிகப் பலன் தந்ததுதான். ஆதி மனிதர்கள் பழங்குடியினச் சமூகமாக இருந்தபோது, அவர்களது உணவுத் தேவை, உற்பத்தியை நம்பி இருந்தது இல்லை. காட்டின் அனைத்து உயிர்களையும் போலவே அவனும் வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்தான். அப்போதும் மனிதச் சமூகத்தில் கடவுளர்கள் இருந்தனர், காடு இருந்தது, மனிதர்களும் இருந்தனர். ஆனால் இவை அனைத்தும் ஒரே படிநிலையில் இருந்தன. ஒரு மரம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவுதான் கடவுளும். அதே அளவுதான் தன் கூட்டத்தின் பிற மனிதர்களும். அதனால் தேவை இல்லாமல் எதையும் கொல்வதையோ நுகர்வதையோ இந்தப் பண்பாடு தடுத்துவிட்டது.

ஆனால் இதன் போதாமை, உற்பத்தியைத் தொடங்கிய மனிதச் சமூகங்களிலும் தொக்கி நிற்கும் இந்த நம்பிக்கைகளைப் பார்த்தால் நன்கு புரியும். கடவுளை மனிதனுக்கு மேலாகவும், மனிதனைப் பிற உயிர்களுக்கு மேலாகவும் காணத் தொடவங்கிய பின், ஒரு மரத்தைத் தெய்வமென்று போற்றினால், பக்கத்து மரத்தை வெட்டிவிடலாம். ஒரு யானையைத் தெய்வமென்று கோவிலில் நிறுத்திவிட்டுப் பிற யானைகளைத் தந்தத்திற்காக வேட்டையாடலாம். இப்படிச் சூழலுக்கு சம்பந்தமின்றி இருப்பதால்தான் இந்தப் பழங்குடி இனக் கருத்துமுதல்வாதப் பார்வைகளும் சூழலியலுக்குப் பயனற்றுப்போகின்றன.

 

ஆனால் ஏதோ ஒரு தத்துவார்த்தப் பிடிப்பு நமக்குத் தேவைப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. “நான் கடவுளை நம்பவில்லை, இயற்கையை நம்புகிறேன்” என்று கூறவைப்பதும் இந்த வாதம்தான், இதே கருத்துமுதல்வாதம்தான். இதே வாதம்தான் இயற்கையை அன்னையாக உருவகித்து, அது நம்மை என்றும் அரவணைக்கும் என்ற எண்ணத்தை மையத்திற்குக் கொண்டுவந்துள்ளது. உண்மையில் இயற்கை ‘அன்னை’க்கோ, ‘அன்னை’ பூமிக்கோ மனிதர்களின் இருப்பு அத்தனை முக்கியம் அல்ல. நாம் தவறு செய்தால், இயற்கையை அழித்தால் அது நம்மை திருப்பி அழிக்கும் என்று இயற்கையை மனிதராக அல்லது கடவுளாக உருவகப்படுத்துவதில்தான் பிரச்சினை. நாம் எதுவும் செய்யவில்லை என்றாலும் ஒருநாள் அழிந்துபோவோம் என்பதுதான் அறிவியல் உண்மை. நாம் இன்று போராடுவது நாமே நம்மை அழித்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்.

நம்மை உருவாக்க இயற்கைக்கோ பூமிக்கோ எந்த எண்ணமும் இல்லை. சார்லஸ் டார்வின்கூடத் தமது Origin Of Species நூலில், “எந்த உயிரினம் தன்னைத் தனது சூழலோடு அதிகம் தகவமைத்துக்கொள்கிறதோ அதையே இயற்கை தேர்வுசெய்யும்” என்பது போன்றுதான் கூறினார். அதாவது இருப்பதும் இல்லாததும் அந்த உயிரினத்தைப் பொறுத்தது என்பது போன்ற பிம்பம் அதனால் உண்டாகும். ஆனால் இதனை மறுத்து, அதற்குக் காரணம் அந்த உயிரினத்தின் மரபணுவில் நடக்கும் பிறழ்வுகள்தான் (mutations) என்பதைப் பின்னாட்களில் வந்த அறிவியல் அறிஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இதுவும் எந்தக் காரணத்திற்காகவும் நடப்பதில்லை; முழுக்க முழுக்கத் தற்செயலாக எல்லாப் பக்கங்களிலும் நடக்கிறது. அதில் எந்தப் பக்கம் சூழலோடு ஒத்துப்போகிறதோ, அந்தப் பக்க உயிரினம் பரிணமித்துவிடுகிறது.

உதாரணமாக, சிறு வயதில் ‘தங்கமலர்’ போன்ற புத்தகங்களில் வழி கண்டுபிடித்து விளையாடியிருப்போம். அதில் தொடக்கத்திலிருந்து முடிவுக்குச் செல்கையில் பல முட்டுச் சந்துகள் வரும். அதே நேரம் முடிவிலிருந்து தொடங்கினால் நேராகத் தொடக்கத்திற்கு வந்துவிடலாம். காரணம், அது நேர் வழியாய்த் தொடங்கிய இடத்திற்குப் போய்விடும். ஆனால் தொடங்கிய இடத்திலிருந்து முட்டுச் சந்திற்கு சென்ற பிற வழிகள் கண்ணில் படாது.

இது போலத்தான் நாம் பரிணாமத்தை முடிவிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படிப் பார்க்கையில், நாம் உருவாகப் பிரபஞ்சத்தின் அத்தனை சக்திகளும் உதவியுள்ளது போலத்தான் தெரியும். ஆனால் தொடக்கத்திலிருந்து எல்லா வழிகளிலும் பிறழ்வு ஏற்பட்டுப் பரிணாமம் நிகழ்ந்தது. பல பிறழ்வுகளுக்கு அது முட்டுச் சந்தாகப் போய்விட்டதால் அது நிலைக்கவில்லை. நிலைத்ததிலிருந்து நாம் பரிணமித்து வந்துவிட்டோம். இங்கே கடவுளுக்கோ இயற்கைக்கோ எந்த வேலையும் இல்லை.

“The Universe is under no obligation to make sense to you” (உனக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திற்கு எந்தக் கட்டாயமும் இல்லை) என்பது வானியல் அறிஞர் Neil DeGrasse Tyson கூறிய புகழ்பெற்ற வாசகம். அதைப் போன்று “Nature is under no obligation to create you, it’s just a random occurrence”  (உன்னை உருவாக்க வேண்டும் என்று இயற்கைக்கு எந்தக் கட்டாயமும் இல்லை, அது வெறும் தற்செயல் நிகழ்வுதான்) என்பதே உண்மை. இதில் எந்தக் கருத்துமுதல்வாதத்திற்கும் இடமில்லை. இதைத்தான் இயற்கை மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இனி இந்தக் கருத்துமுதல்வாதப் பார்வைகளால் சூழலைக் காக்க முடியாது.  இருபத்தியோராம் நூற்றாண்டில் சூழலைக் காக்க அறிவியல் ரீதியான அடிப்படையும் நிலைப்பாடும்தான் உதவும் என்பது தெளிவு.

சூழலியலை அறிவியல் முறையில் காண்பவர்கள்கூட, மக்களின் இந்த உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் சூழலியல் பிரச்சாரத்திற்கு உபயோகித்துக்கொள்கின்றனர். எதார்த்தம் புரிந்தாலும், இந்த உணர்வுகளைப் பயன்படுத்துவதால் வரக்கூடிய விளைவுகளை நம்மால் எதிர்கொள்ள முடியுமா என்பதுதான் என்னுடைய கேள்வி. சமீபத்தில் கேரளாவில் இறந்த யானையின் செய்தியைச் சுற்றி எழுந்த அதிர்வலைகளுக்குக் காரணம் பல ஆண்டுகளாகச் சூழல், விலங்குகள் மீது நாம் ஏற்றிவைத்துள்ள இந்தக் கருத்துமுதல்வாத உணர்வு நிலைகள்தான். அது சர்வசாதாரணமாக விளிம்புநிலை மக்களை நோக்கித் திரும்புவதை நம்மால் காண முடிகிறது.

சூழலியல் அறிவு என்பதோ செயல்பாடு என்பதோ உலகைக் காப்பதற்காக அல்ல என்பதை எப்போது நாம் சொல்லப்போகிறோம்? முன்பே கூறியது போல், சூழல் மீது ஆர்வம் கொண்டுள்ள மக்கள், சராசரி மக்களைவிட மேலானவர்களாக, உலகைக் காக்கப்போவதாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் மனித இனத்தின் இந்தச் சூழலியல் செயல்பாடுகள் முழுக்க முழுக்க மனித இனத்தை காப்பதற்கே அன்றி, வேறு எந்த உலகளாவிய லட்சியத்திற்கும் அல்ல. யானைகள், தேனீக்கள், திமிங்கலங்கள் முதலானவற்றைக் காக்க மனித இனம் போராடுவது உலகத்தின் எல்லா உயிர்களினூடும் கடந்து செல்கின்ற உயிர்ப்பரப்பின் ( ஏதோ ஒரு கண்ணி உடைந்து, அதனால் மனித இனம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். இப்போதிருக்கும் இந்த உயிர்ப்பரப்பின் உயிரினங்கள் அழிந்தாலும் மாறுபட்ட சூழலுக்கேற்றவாறு தம்மைத் தகவமைத்துக்கொண்ட உயிரினங்கள் புதிய உயிர்ப்பரப்பை நிச்சயம் சாதிக்கும். மனிதர்கள் அழிந்துவிடுவோம். அவ்வளவே!

ஆக, நாமும் மனித இனத்திற்காகத்தான் போராடுகிறோம் என்ற மனநிலை சூழலியல் ஆர்வலர்களுக்கு வர வேண்டும். யானை இறந்ததால் அதன் இறப்பிற்குக் காரணமான மக்களை சுட்டுக்கொல்ல வேண்டும், தூக்கில் போட வேண்டும் என்றெல்லாம் கதறுவது மனித இனத்தைக் காக்கப் போராடும் நம் குறிக்கோளை விட்டு நழுவுவது. கொரோனாவைக் கொண்டாடி மனித இனத்தை உலகின் வைரஸாகப் பார்க்கும் பார்வையும் அவ்வாறானதே. அப்போது அவர்கள் செய்தது பிழை இல்லையா, அதற்குத் தண்டனை இல்லையா என்று கேட்டால், அதற்கு நாம் சிலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சூழலியல் என்பது இயற்பியல், வேதியல் போன்று முழுக்க முழுக்க இயற்கை அறிவியல் கிடையாது. இயற்கை அறிவியல் மனிதச் சமூகத்தின் மீதான தாக்கத்தைப் பற்றி படிப்பதால் சூழலியல் ஒரு சமூக அறிவியலாக மாறிவிடுகிறது. இயற்கை அறிவியலுக்கும் சமூக அறிவியலுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு, அதில் வரும் ஒருபக்கச் சார்பு (bias). நாம் எந்த மொழியை/மதத்தை/வர்க்கத்தைச் சேர்ந்தவரானாலும் ஈர்ப்புவிசை போன்ற இயற்பியல் விதிகள் மாறப்போவதில்லை. ஆனால், சமூக அறிவியலில் நமது மொழி/மதம்/இனம்/வர்க்கம்/சாதி போன்றவை முன் அனுமானங்களாக (assumption) மாறிவிடும். அனைத்து நிகழ்வுகளையும் ஒரே பார்வையில் பார்க்க இயலாது. சொந்த லாபத்திற்காகத் தந்தத்தைக் குறிவைத்து நடக்கும் யானை வேட்டையின் அதே தார்மீக விதிகளை, தற்காப்பிற்காக வேறு வழியின்றி யானையைக் கொல்லும் பழங்குடி மக்களின் நிலைமைக்குப் பொருத்த முடியாது.

 

ஆனால் அவ்வாறு பார்க்கச் சொல்வது நாம் கொண்ட சார்பு! காடுகளை விட்டு வெகுதூரத்தில், இரவில் எந்த விலங்கு ஊருக்குள் புகும் என்ற அச்சமின்றி நிம்மதியாய்த் தூங்கும் நமது வர்க்கச் சார்பு, அந்த மக்களைத் தூக்கிலிடச் சொல்கிறது.

இதைத்தான் அரசும் செய்கிறது. கோடிக்கணக்கான டன்களுக்கு நச்சுப் புகையை வளிமண்டலத்தில் விடும் தொழிற்சாலைகளை விட்டுவிட்டு மோட்டார் வாகனப் புகையில் தனது கண்டிப்பைக் காட்டும். ஏனென்றால் அரசை நடத்துபவர்கள் அந்தத் தொழிற்சாலைகளின் முதலாளிகள் அல்லவா! சர்வதேசிய நிலைமைகளும் இதேதான். அதிக மாசை வெளியிடும் நாடுகள், மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளைக் குறைகூறிக்கொண்டு திரிகின்றன. அனைத்தையும் பொதுமக்கள் தலையில் கட்டிவிட்டு நிம்மதியாய் இருக்கின்றன அரசும் பிற பெருநிறுவனங்களும். அதே போல் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்தின் மீது பழியைத் தூக்கிப் போட்டால், நடுத்தர வர்க்கம் ஒடுக்கப்பட்ட பழங்குடிகளின் மீது பழியைத் தூக்கிப் போடும்.

இதனால்தான் மக்களின் இடையே சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்று அடியெடுத்து வைக்கும் சூழலியல் ஆர்வலர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் ஒரு கட்டத்தில் மக்களைக் குறைகூற ஆரம்பித்துவிடுகின்றனர், காரணம், இந்த முறை அடிப்படையிலேயே பிழையைக் கொண்டுள்ளது. இங்கு மனிதச் சமூகம் முழுதும் சூழ்ந்துள்ள மதம், சாதி, அரசு, வணிகம் போன்ற நிறுவனங்கள் மக்களால் கட்டமைக்கப்பட்டவை எனினும் அவை மக்களின் செயல்பாடுகளை அதிகமாக ஆட்டுவிக்கின்றன. இதன் பொருள் மக்கள் இந்த நிறுவங்களின் கைப்பாவைகள் என்பது அல்ல, மக்களின் நடவடிக்கையைப் பெரிதும் முடிவு செய்பவை இந்த நிறுவனங்களே என்பதுதான்.

ஒவ்வொரு வருடமும் உற்பத்தியைப் பெருக்கிக்கொண்டே போகும் தொழிற்சாலைகளும், அதையே வளர்ச்சியின் அடிப்படையாகக் கொண்ட அரசுகளும் இருக்கும் வரை தனிநபர் நுகர்வைக் குறைக்க மக்களிடையே பிரச்சாரம் செய்வது நடக்காத காரியம். இன்றைய சூழலியல் ஆர்வலர்கள் முதலில் எதிர்க்க வேண்டியது இந்த நிறுவனங்களைத்தான். அதற்காக இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பயனே தருவதில்லை என்று நான் கூறவில்லை. சூழலியல் குறித்த கருத்துக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பொருளாதார சூழ்நிலையை இவை உருவாக்கும். ஆனால் அவ்வாறு பரப்புரை செய்வோர் இயற்கை, படைப்பு, அத்வைதம், விலங்குகள், காடுகள் முதலானவற்றைக் கடவுளாக்கிப் புனிதப்படுத்தும் கருத்துமுதல்வாதப் பிடியிலிருந்து வெளிவர வேண்டும்.

மேலே விவாதித்த சாங்கியம், வேதாந்தம், பழங்குடி மரபு போன்ற தத்துவ நிலைபாட்டின் சார்பிலிருந்து வெளிவந்தால்தான் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள இயலும். இதை ஏன் மறுக்க வேண்டும் என்று கேட்டால் இவை அறிவியல் பூர்வமானவை அல்ல என்பதுதான் காரணம். ஆனால் அதைவிட முக்கியம், இவை போலி அறிவியலாக (pseudoscience) மாற வாய்ப்புகள் அதிகம் என்பது.

இன்னும் உக்கிரமாக, இது வர்க்கச் சார்பின் துணை கொண்டு ஆதிக்கமாகவும் மாறும். இது நடுத்தர வர்க்கத்திற்குப் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களையும், பணக்காரர்களுக்கு நடுத்தர வர்க்கத்தையும், பணக்கார நாடுகளுக்கு மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளையும் அழித்துவிட்டால் சூழலியல் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற பார்வையைக் கொடுக்கும். சூழலியலில் கருத்துமுதல்வாதச் சார்பு இவ்வளவு ஆபத்தானது. இதே காரணத்தினால்தான் அறிவியல் ரீதியாக இதற்குக் காரணமான பெருநிறுவனங்கள் காடுகளையும் சதுப்பு நிலங்களையும் ஆக்கிரமித்தல், காடுகளினூடே சாலைகள் அமைத்தல், பெரும் அணைகள் கட்டிக் காடுகளை வெள்ளத்திற்குத் தாரைவார்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்த்து இந்த எதிர்ப்புகள் கிளம்புவதில்லை.

இதற்கு மக்களை மட்டும் குறைகூறி ஒன்றும் ஆகப்போவதில்லை. சராசரி மக்களின் சமூக-பொருளாதார நிலைகளைப் புரிந்துகொள்ளாத சூழலியல் விழிப்புணர்வு எந்தக் காலத்திலும் பலன் தராது – வெறுமனே நமது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் போட்டுக்கொள்வதைத் தவிர. சூழலியலைப் பற்றிப் பேசுவதற்கு முன் சமூகவியலையும் மக்களையும் புரிந்திருக்க வேண்டும். கருத்துமுதல்வாதத்தை விடுத்து அறிவியல் பூர்வமான புரிதல் வேண்டும்.

– ஹரி பாரதி

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments