இந்தியாவில் அதிகரிக்கும் குளிர்பதனப் (Air Conditioner) பயன்பாடு மற்றும் அவற்றில் பயன்படுத்தபடுகிற குளிர்பதன வேதிப் பொருட்களைத் தேவையற்ற முறையில் நிரப்புதல் மற்றும் அதன் கசிவால் நுகர்வோர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7000 கோடி செலவாவதாகவும் இது காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், ஐபாரஸ்ட் (iFOREST) எனும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
The International Forum for Environment, Sustainability and Technology (iFOREST) என்பது சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் லாப நோக்கற்ற அமைப்பாகும். இவ்வமைப்பு உலக ஓசோன் நாளை முன்னிட்டு இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்பதனப் பெட்டிகள் (இனி சுருக்கமாக ஏ.சி. எனப் பயன்படுத்தப்படும்) குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் இந்தியாவில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வெப்பமான நாட்களின் எண்ணிக்கையானது கோடை காலத்தைத் தாண்டியும் நீள்கின்றன. இரவு நேர வெப்பநிலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆடம்பரப் பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட குளிர்பதனப் பொருட்கள் இன்று அத்தியாவசியமாக மாறியிருக்கின்றன.
இந்தியர்கள் சராசரியாக தினசரி 4 மணி நேரம் ஏ.சி. பயன்படுத்துகிறார்கள். கோடையில் 7.7 மணி நேரம் நாளொன்றுக்கு சராசரியாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள ஏ.சி.க்கள் 50GW மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இது இந்தியாவின் மொத்த மின்தேவையில் 20% ஆகும். ஏ.சி.யின் வெப்ப நிலையை 1 °C அளவுக்கு உயர்த்திப் பயன்படுத்தினால் 6% மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க முடியும். அதாவது இந்தியர்கள் தங்கள் ஏ.சி.யின் வெப்பநிலையை 1 °C உயர்த்திப் பயன்படுத்தினால் 3GW மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.
iFOREST அமைப்பானது இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, புனே, அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள 3,100 வீடுகளில் ஆய்வு மேற்கொண்டது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி.க்களின் எண்ணிக்கையானது ஆண்டுக்கு 15 – 20% உயர்ந்து வருகிறது. இவ்வுயர்வு 10% ஆக இருந்தாலும்கூட நடப்பாண்டில் 7.6 கோடி ஏ.சி.க்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் 2035ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 24.5 கோடியாக உயரும் என்கிறது iFORESTன் ஆய்வு.
ஏ.சி.க்களில் பயன்படுத்தப்படும் குளிர்பதனூட்டிகளை (refrigerant) மறுநிரப்புவது அவசியமானதாகும். வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே குளிர்பதனூட்டிகளை மறுநிரப்புவது போதுமானது. ஆனால். இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலான வயதுடைய 80% ஏ.சி.க்களில் ஆண்டுக்கு ஒருமுறை குளிர்பதனூட்டிகள் மறு நிரப்பப்படுகின்றன. மூன்றில் ஒரு பங்கு புதிதாக வாங்கப்பட்ட ஏ.சி.க்கள் கூட ஆண்டுக்கு ஒருமுறை மறுநிரப்பப்படுகின்றன.
2024ல் மட்டும் 32,000 டன் அளவுக்கான குளிர்பதனூட்டிகள் மறுநிரப்பப்பட்டுள்ளன. இதற்கான செலவு சராசரியாக ஒரு ஏ.சி.க்கு ரூ.2200 ஆகும். இந்தியாவில் மொத்த வீடுகளும் இதில் ரூ. 7000 கோடி செலவிட்டுள்ளன. இது 2035ஆம் ஆண்டில் ரூ. 27540 கோடியாக அதிகரிக்கும்.
இக்குளிர்பதனூட்டிகள் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் தீவிரமுடைய HFC-32வைக் கொண்டவை. கார்பன் டை ஆக்சைடை விட 675 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவல்லது HFC-32. 2024ஆம் ஆண்டு மட்டும் 52 Mt CO₂e உமிழ்வு ஏ.சி.க்களால் ஏற்பட்டுள்ள நிலையில் 2035ஆம் ஆண்டில் இது 84 Mt CO₂e ஆக அதிகரிக்கும் என எச்சரிக்கிறது இவ்வாய்வு.
குளிர்பதனூட்டிகளின் கசிவு மற்றும் ஏ.சி. இயங்கத் தேவையான மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வானது 2024ல் 156 Mt CO₂e ஐ எட்டியது. இது இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கார்களிலிருந்து வெளியாகும் உமிழ்வுக்குச் சமமானது என்கிறார் iFOREST அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரா பூஷன்.
“ஏ.சி. பயன்பாடு காலநிலை மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதற்காக நாம் கொடுக்கும் விலை அதிகமானது. குளிர்வித்தலுக்கான இந்தியாவின் செயல் திட்டம் (India Cooling Action Plan -ICAP) ஏ.சி. பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் அதற்கான தொழிற்நுட்பங்களோ, உபகரணங்களோ அரசிடம் இல்லை.”
மேலும் இவ்வாய்வில் கருத்து தெரிவித்த பலரும் தங்களது குளிர்பதனங்கள் தேவைக்கு அதிகமாக மறுநிரப்புதல் செய்யப்படுவதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்துப் பேசிய பூஷன்” உலகமுழுவதும் ஏசி பழுது நீக்குபவர்கள் அதற்குத் தகுதியான சான்றிதழ் பெற்றிருப்பார்கள். இந்தியாவில் அப்படியில்லை. நிறுவனங்கள் அனுப்பும் பணியாளர்கள்கூட தகுதிச் சான்றிதழ் பெற்றவர்களாக இருப்பதில்லை. ஏ.சி. பழுதுபார்ப்பவர்களுக்கான ஊதியமும் முறையாக நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏ.சி. பழுது நீக்குபவர்களுக்குச் சம்பளம் குறைவாகவே வழங்கப்படுகிறது ஒரு ஏ.சி.க்கு குளிர்பதனூட்டி நிரப்ப வலியுறுத்துவன் மூலம் அவர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது.” என்றார்.
குளிர்பதனூட்டிகளை மறுநிரப்புவது மற்றும் ஒரு ஏ.சி.யின் மொத்த ஆயுட்காலத்தில் அதிலிருந்து வெளியேறும் குளிர்பதனூட்டிகளைக் குறைப்பது ஆகியவற்றில் உள்ள குறைகளைச் சரிசெய்வதன் மூலம் 2025 முதல் 2035 வரையிலான காலத்தில் 500–650 Mt CO₂e உமிழ்வைத் தடுக்க முடியும் என்கிறது iFORESTன் ஆய்வு. இந்தியாவில் பொதுவாக உத்தரவாத (warranty) காலத்திற்குப் பிறகு நாம் குறிப்பிட்ட கால அளவில் ஏ.சி.யை சரிசெய்வதில்லை. ஏ.சி. வேலை செய்யாமல் போனால்தான் நாம் சரிசெய்ய முயல்கிறோம் இது தவிர்க்க்ப்பட வேண்டும் என்கிறது iFOREST.
இவ்வாய்வின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு:
இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி.க்களின் எண்ணிக்கையாந்து அதிகரிக்கும் வெப்பம், நகரமயமாக்கல், வருமான உயர்வு ஆகிய காரணங்களால் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள 80% வீட்டுப்பயன்பாட்டு ஏ.சி.க்களின் வயது 5 ஆண்டுகளுக்கும் குறைவானது மேலும் 40% ஏ.சி.க்கள் 2 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்டவை. கடந்த 5 ஆண்டுகளில் ஏ.சி. பயன்பாடு வேகமாக அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.
ஏ.சி. பயன்படுத்தப்படும் வீடுகளைப் பொருத்தமட்டில் 87% வீடுகளில் ஒரு ஏ.சி. மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 13% வீடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேலான ஏ.சி.க்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஏ.சி. என்பது மிகவும் பணக்கார வீடுகளில் மட்டுமின்றி நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் வீடுகளில் அதிகமாகப் பயன்படுத்தும் அளவிற்கான தேவை கொண்டதாக மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
1.0 முதல் 1.5 டன் அளவுள்ள ஏ.சி.க்கள்தான் 90% வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 74% ஏ.சி.க்கள் 1.5 டன் ஏ.சி.க்களாக உள்ளன. 98% வீடுகளில் 3 அல்லது 5 நட்சத்திர மதிப்பு கொண்ட ஏ.சி.க்களைப் பயன்படுத்துகின்றன. 60% வீடுகள் 3 நட்சத்திர மதிப்பு ஏ.சி.யையும் 28% வீடுகள் 5 நட்சத்திர மதிப்பு கொண்ட ஏ.சி.யையும் கொண்டிருப்பது நுகர்வோருக்கு மின்சாரச் சிக்கனம் குறித்தப் புரிதலிருப்பதைக் காட்டுகிறது.
மேலும், இந்தியாவில் சரியான வெப்பநிலையில் ஏ.சி.யைப் பயன்படுத்துவதில்லை எனும் பொதுவான நம்பிக்கைக்கு மாறாக 67% வீடுகளில் ஏ.சி.யின் வெப்பநிலையானது 23 °Cக்கும் அதிமான அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஜூன் 2025ல் இந்திய எரிசக்தி அமைச்சர் மனோகர் லால் கட்டார் விரைவில் இந்தியாவில் ஏ.சி.யை 20 °C முதல் 28 °C அளவில் மட்டுமெ பயன்படுத்தக்கூடிய வகையில் ஒழுங்குமுறைகள் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், பெரும்பாலான நகரங்களில் ஏ.சி.யின் வெப்பநிலையை 23-25°C என்கிற அளவிலேயே மக்கள் பயன்படுத்துவது இவ்வாய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை தேசிய அளவிலான முடிவுகளுடன் ஒப்பிடுகையில் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டன. குறிப்பாக சென்னையில் 77% வீடுகளில் ஒரு ஏ.சி.யும் 23% வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏ.சி.க்களும் உள்ளன. 60% வீடுகளில் ஏ.சி.யின் வெப்பநிலை 23-25 °C ஆக உள்ளது. இது தேசிய சராசியான 67% ஐ விடக் குறைவாகும். கிட்டத்தட்ட 99% வீடுகளில் உள்ள ஏ.சி.க்கள் 3 அல்லது 5 நட்சத்திர மதிப்பு கொண்டவையாகும்.
சென்னையில் ஏ.சி. பயன்படுத்தும் நேரம் சராசரியாக நாளொன்றுக்கு 4.4 மணிநேரமாக உள்ளது. தேசிய சராசரியானது 3.9 மணிநேரம்தான். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நகரங்களிலே சென்னையில்தான் ஏ.சி. பயன்படுத்தும் நேரம் அதிகமாக இருக்கிறது. சென்னையில் பாதிக்கு மேற்பட்ட ஏ.சி.க்கள் ஆண்டுக்கு ஒரு முறை குளிர்பதனூட்டிகள் மறு நிரப்பப்படுகின்றன, இதற்கு ஆகும் செலவானது ஏ.சி. ஒன்றுக்கு ரூ. 2300 ஆகும். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நகரங்களில் அதிகமாகும். ஏ.சி. வைத்திருப்பவர்களில் 64% மக்கள் மட்டுமே சூழலுக்குப் பாதிப்பில்லாத குளிர்பதனூட்டிகள் பயன்படுத்துவது குறித்து அறிந்து வைத்துள்ளனர். 16% மக்கள் மட்டுமே காலநிலையைப் பாதிக்காத ஏ.சிக்களுக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தேசிய சராசரியை விடக் குறைவாகும்.
ஒரு ஏ.சி. அதன் ஆயுட்காலம் முழுக்க வெளியேற்றும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் வேண்டும். நெகிழிப் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு இருப்பதுபோல ஏ.சி. உற்பத்தியாளர்களுக்கும் Extended Producers Responsibility வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளையும் iFOREST முன்வைத்துள்ளது.
– சதீஷ் லெட்சுமணன்
Climate Cost of AC
