இந்திய நகரங்களில் அதிகரிக்கும் நுண்துகள் காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு உலகெங்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. குறிப்பாகப் பெரும் நகரங்கள் காற்று மாசை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் காற்று மாசினால் மட்டும் ஏறத்தாழ 22 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு இந்தியாவில் நுண்துகள் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவது ஒரு முக்கியக் காரணம்.

இந்நிலையில், Respirer Living Sciences என்ற அமைப்பு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள காற்றின் PM10 நுண்துகளின் போக்குகளை ஆய்வு செய்து “INDIA’S AIR QUALITY IN FOCUS – An in-depth analysis of PM10 Trends from 2021 to 2024” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கை 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் டெல்லி, பாட்னா, சண்டிகர், லக்னோ, அகமதாபாத், கொல்கொத்தா, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னை  ஆகிய 11 முக்கிய நகரங்களில் PM10 நுண்துகளின் போக்குகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் அனைத்து நகரங்களும் தேசிய சுற்றுப்புற காற்று தர நிலைகளை (NAAQS) அதாவது 60 µg/m³ என்கிற அளவைத் தொடர்ந்து மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி தொடர்ந்து மிக அதிக PM10 நுண்துகள் அளவினைப் பதிவு செய்துள்ளது. இது அனைத்து ஆண்டுகளிலும் சராசரியாக 200 µg/m³-க்கும் அதிகமாக இருந்துள்ளது. பாட்னா, சண்டிகர் மற்றும் லக்னோ ஆகியவை மற்ற அதிக மாசுபட்ட நகரங்களின் வரிசையில் முன்னிலையில் உள்ளன. காசியாபாத் உள்ளிட்ட பல வட இந்திய நகரங்களில் நுண்துகள் மாசின் ஆண்டு சராசரி 150 µg/m³-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 2021ம் ஆண்டு 283.7 µg/m³ ஆக இருந்த PM2.5 நுண்துகள் 2024ம் ஆண்டு சற்று குறைந்து  272.0 µg/m³ ஆகப் பதிவாகியுள்ளது. மிக மிக மோசமான நிலையிலிருந்து மோசமான நிலைக்கு முன்னேறியுள்ளது என்றுதான் இதைச் சொல்ல முடியும்.

பாட்னாவில் 2021ம் ஆண்டு 166.6 µg/m³ ஆக இருந்த PM2.5 நுண்துகள் 2024ம் ஆண்டு 237.7 µg/m³ ஆக அதிகரித்துள்ளது.  அதேபோல் பஞ்சாபில் உள்ள சண்டிகர் நகரில் 2021ம் ஆண்டு 93.5 µg/m³  . ஆக இருந்த PM2.5 நுண்துகள் 2024ம் ஆண்டு 129.5 µg/m³ ஆக உயர்ந்துள்ளது. இது நுண்துகளின் தொடர் பெருக்கத்தினையே காட்டுகிறது.

அதே சமயம் இதற்கு மாறாக, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற தென்னிந்திய நகரங்கள் ஒப்பீட்டளவில் குறைவான PM10 நுண்துகள் அளவினைக் கொண்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களுரு, சென்னை போன்ற நகரங்களில் PM10 நுண்துகள் அளவு   பொதுவாக 70-90 µg/m³ வரையிலான அளவில் காணப்படுகின்றன, ஆனாலும் இவை தேசிய சுற்றுப்புற காற்றுத் தர நிலையான 60 µg/m³ என்ற அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியே உள்ளன. இதுவே உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பான அளவான 15 µg/m³ உடன்  ஒப்பிட்டுப் பார்த்தால் சென்னை, பெங்களுரு கூட 4-5 மடங்கு அதிக மாசடைந்துள்ளது.

உதாரணத்திற்க்கு சென்னையில் உள்ள ஆலந்தூர் பேருந்து நிலையம் பகுதியில் PM10 நுண்துகள் அளவு 2021ம் ஆண்டு  56.3 µg/m³ ஆக இருந்தது இது 2024ம் ஆண்டு 81.8 µg/m³ ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், கொல்கத்தா, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் PM10 அளவுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. இதற்கு மேம்படுத்தப்பட்ட காற்றுத் தரக் கண்காணிப்பு முயற்சிகள் மற்றும் உமிழ்வு ஒழுங்குமுறைகள், பொதுப் போக்குவரத்து மேம்பாடுகள்  மற்றும் பசுமை முன்னெடுப்புகள் போன்ற மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அமலாக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆய்வின் தரவுகள் தெளிவான பிராந்திய ஏற்றத்தாழ்வுகளையும், குறிப்பாக வடக்கு இந்தியாவில் குளிர்கால மாதங்களில் PM10 அளவுகள் உச்சத்தை அடைவதையும் வலுவான பருவகால மாறுபாடுகளையும் எடுத்துக்காட்டுகின்றன.

முக்கியமாக, தேசிய மற்றும் நகர அளவிலான பல்வேறு காற்றுத் தர தலையீடுகள் இருந்தபோதிலும், 2021 முதல் 2024ம் ஆண்டுகளுக்கு இடையில் PM10 அளவுகளில் நிலையான கீழ்நோக்கிய போக்கு எதுவும் இல்லை என்று இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. இது தற்போதுள்ள தணிப்பு உத்திகளின் செயல்திறன் மற்றும் அமலாக்கம் குறித்த கவலைகளை எழுப்புவதாக உள்ளது.

பா.ஜ.க. 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 131 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2019 ஆம் ஆண்டில் தேசிய தூய காற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஆனால், ஆய்வின் தரவுகளைப் பார்க்கும்போது இந்திய நகரங்களின் காற்றின் தரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் பயனளிக்கவில்லை என்பது உறுதிபடத் தெரிகிறது.

சிறந்த கண்காணிப்பு, கடுமையான அமலாக்கம் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவை தூய்மையான காற்றிற்கான போராட்டத்தில் முக்கிய அம்சங்களாகும். தொழில்நுட்பப் புதுமைகள் மற்றும் சமூக பங்களிப்புடன் இணைந்து, நாம் வரும் ஆண்டுகளில் இந்நெருக்கடியை சமாளிக்கும் வழியில் முன்னேற முடியும் என்பதனை இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

அதேபோல் ஆய்வறிக்கையில் சில போதாமைகளும் உள்ளன. வாகன உமிழ்வுகள், கப்பல் துறைமுகம் தொடர்பான மாசுபாடு, தொழிற்சாலை உமிழ்வுகள், PM10 அளவினை அதிகரிக்கும் கடல் உப்பு ஏரோசோல்கள், விரிவடையும் நகர்ப்புற மண்டலங்களில் அதிக கட்டுமான நடவடிக்கைகளால் ஏற்படும் காற்று மாசு, திறந்தவெளியில் கழிவுகளை எரித்தல். தூசி தேங்குதலை மோசமாக்கும் உலர் வானிலை நிலைமைகள், தூசிப் புயல்கள், காற்றின் தரத்தை பாதிக்கும் பருவகால மாற்றங்கள், பாலைவன தூசி பங்களிப்பு, வேளாண் எச்சங்கள் எரிப்பு, செங்கல் சூளைகள் துகள் மாசுபாடு என இந்த நகரங்களின் காற்று மாசுக்கான காரணங்கள் குறித்து ஆய்வறிக்கையில் தனித்தனியே கூறப்பட்டிருந்தாலும், அத்தனை நகரங்களிலும் நுண் தகள் பெருக்கத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கும் அனல் மின் நிலையங்களைப் பற்றி எங்கும் பேசப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

நுண்துகள் பெருகத்தினை நாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிச்சயம் முதலில் நாம் கட்டுப்படுத்த வேண்டியது அனல் மின் நிலையங்கள்தான்.

  • பிரபாகரன் வீரஅரசு

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted