மௌனமாக்கப்பட்ட கேள்விகள்

செல்லாக் காசு விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசைத் திருப்பி அவர்களை வீதிகளில் அலையவிட்டதன் மூலம் பேசப்பட வேண்டிய பல பிரச்னைகளின் மீதான கவனத்தை வழக்கம் போல திசைத் திருப்பியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் மிக முக்கியமான ஒரு பிரச்னை, சமீபத்தில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் கையெழுத்தான அணு ஒப்பந்தம் பற்றியது. சுமார் ஆறு ஆண்டுகள் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு நவம்பர் மாதம் 11ந் தேதி ஜப்பானுக்குச் சென்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் மோடி. ஆறு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை என்கிற அளவிலேயே நின்றிருந்த இந்த ஒப்பந்தம் ஜப்பானில் ஷின்சோ அபே தலைமையிலான வலது சாரி அரசு பொறுப்பேற்றவுடனேயே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய-அமெரிக்க-ஜப்பான் கூட்டணியை வலுப்படுத்தி அதன் மூலம் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் நோக்கம். அணு ஆயுத பரவலாக்கத் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமலேயே ஜப்பானுடன் அணு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்ட முதல் நாடு என்பதை தனது பெரிய சாதனையாக சொல்லிக் கொள்கிறது இந்தியா. இந்த ஒப்பந்தத்தின்மூலம் அணுசக்தியை மக்களின் தேவைகளுக்காக பயன்படுத்தும் நோக்கத்துடன் இரு நாடுகளைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது இந்தியா. ஆனால் உண்மையிலேயே இதனால் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும்தான் நேரடியாகவே நிறைய பலன்கள் உள்ளன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்காவின் வெஸ்டிங்ஹெளஸ் நிறுவனத்திடமிருந்து பல அணுவுலைகளை வாங்கத் திட்டமிட்டிருக்கிறது இந்தியா. வெஸ்டிங்ஹெளஸ் நிறுவனத்தை 2006ல் விலைக்கு வாங்கிவிட்டது ஜப்பானிலுள்ள டோஷிபா நிறுவனம். அப்போதிலிருந்து அந்த நிறுவனம் நஷ்டத்திலேயே இயங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் விரைவில் அணுவுலைகளை இந்தியாவில் கட்ட ஆரம்பித்துவிடலாம் என்று வெஸ்டிங்ஹெளஸ் உறுதியாக நம்புகிறது. அமெரிக்காவிலேயே கூட வெஸ்டிங்ஹெளஸ் அணுவுலைகளை விற்க முடியாத நிலையில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக அமையும். அது போலவே ஜப்பானுக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மிகப்பெரிய பொருளாதார பலன் கிடைக்கும். சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் ஃபுகுஷிமா விபத்து காரணமாகவும் ஜப்பானைச் சேர்ந்த பல அணுசக்தி நிறுவனங்கள் கடுமையான நஷ்டங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியா போன்ற ஒரு சந்தையை இழக்க ஜப்பான் தயாராக இல்லை. அதனால் தான் ஜப்பானில் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து அணு ஆயுதங்கள் பயன்பாட்டை எதிர்த்து வரும் நிலையில் கூட ஜப்பான் இந்த முயற்சியை முன்னெடுக்கிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்கிற உறுதி புனித மானது அல்ல என்று சொல்லி பீதியைக் கிளப் பினார் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர். ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது அந்த உறுதியை கைவிட மாட்டோம் என்று இந்தியா சொல்ல வேண்டியிருந்தது. ஒப்பந்தத்தின் 14வது பிரிவின் படி இந்தியாவின் அணு கொள்கையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் ஜப்பான் தன்னிச்சையாக செயல்பட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம். ஜப்பான் பாராளுமன்றத்தில் அணுசக்தி எதிர்ப்புக் குரல்களை மனதில் வைத்தே இந்த பிரிவு சேர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் எந்தவொரு நிறுவனமும் எப்படிப் பட்ட கொள்கைக்காகவும் தனது முதலீட்டையும் லாபத்தையும் இழக்க விரும்பாது என்பதாலேயே இந்த பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இப்போது ‘இந்தக் குறிப்பு’ எந்த சட்ட நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தாது என்று இந்தியா சொல்லத் தொடங்கியிருக்கிறது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்வது பற்றி ஜப்பான் அரசை கடுமையாக விமர்சித்து அந்த தேசத்தின் ஊடகங்கள் எழுதியிருக்கின்றன ஆனால் இன்னொரு அணு ஆயுத சோதனையை இந்தியா மேற்கொண்டால் இந்த ஒப்பந்தம் கைவிடப்படும் என்று சொல்லி மக்களை சமாதானப்படுத்தியிருக்கிறார் அபே. சமா தானத்திற்கு அணு சக்தியைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் அதன் பொருட்டு இந்தியா பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடும் ஒப்பந்தம் கையெழுத் தானதாக அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இதெல்லாம் ஜப்பான் மக்களின் பெரும் பான்மை கருத்தை மாற்ற போதுமானதாக இல்லை. ஃபுகுஷிமாவைச் சேர்ந்த பெண்கள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மோடிக்கு எழுதிய கடிதம் ஒரு வலிமையான சாட்சி (பின்னிணைப்பு). ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இந்த ஒப்பந்தத்தில் ஏதோ ஒரு வகையில் லாபம் இருக்கிறது. ஆனால் உலகெங்கும் அணுசக்திக்கு எதிரான விழிப்புணர்வு அதிகமாகி வரும் வேளையில் இந்தியா வருந்தி வருந்தி ஜப்பானிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் அணுவுலைகளை வாங்கத் துடிப்பதன் நோக்கம் தான் சந்தேகத்திற்குரியது. பொருளாதாரம் தொடங்கி பாதுகாப்பு வரையில் பல காரணங் களுக்காக உலகில் பல நாடுகள் அணுசக்தி பயன் பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு ஜப்பானில் அமைக்கப் படவிருந்த 12க்கும் மேற்பட்ட அணு வுலைகள் அமைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. அணுவுலை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நாடுகளில் குறிப்பிடத்தகுந்தவை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம். ஆனால் எட்டு அணுவுலைகள் கட்டுவதற்காக ஜப்பானுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது வியட்நாம். பொருளாதார காரணங்கள் தவிர அணுசக்தி பாதுகாப்புக்கான முறையான அமைப்புகள் இல்லை என்றும் அந்த நாடு சொல்லியிருக்கிறது. மிகச் சமீபத்தில் சில்லே, இந்தொனேஷியாவைத் தொடர்ந்து அணுசக்தியை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக கைவிட்ட நாடுகளில் பட்டியலில் வியட்நாமும் இணைந்திருக்கிறது என்கிறார் பிரான்சைச் சேர்ந்த அணுசக்தி நிபுணரான மைக்கேல் ஷெண்டியர். ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு ஜெர்மனி போன்ற நாடுகளும் அணுசக்தி பயன்பாட்டை கைவிடுவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா ஜப்பான் ஒப்பந்தத் திற்கு முக்கிய காரணம், அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இடம் பெற வேண்டும் என்கிற இந்தியாவின் நோக்கம்தான் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதன்மூலம் தன்னை ஒரு சூப்பர் பவராக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால் அது எப்படி அடிப்படையற்றது, சாத்திய மில்லாதது என்பது பற்றி ஜூலை மாத இதழில் விரிவாக பேசியிருக்கிறோம். மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யதான் இந்த நடவடிக்கைகள் என்று இந்தியா சொன்னாலும் உண்மையில் அணுசக்தியின் மூலம் மிக குறைந்த அளவேயான ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை தொடர்ச்சியாக எம்.வி.ரமணா, சுவரத் ராஜு போன்ற நிபுணர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த குறைந்த அளவிலான அணுசக்தியை பெறவும் மிக அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் அவர்கள் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள். அடுத்த பத்து வருடங்களில் 20 அணு உலைகளை அமைக்க ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்தியா. ஆனால் விபத்து நடந்தால் பொறுப்பேற்பு பற்றிய சட்டத்தால் இதில் பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. ஆனால் எந்த விலை கொடுத்தாவது சூப்பர் பவர் அந்தஸ்தை அடையத் துடிக்கும் மோடியின் தலைமையிலான இந்தியா விரைவில் எல்லா தடைகளையும் தகர்த்து அணு ஆயுத நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் எல்லா வேலைகளையும் பார்க்கும். அதற்கான முன்னோட்டம்தான் இந்திய ஜப்பான் அணு சக்தி ஒப்பந்தம். உண்மையான வளர்ச்சி என்பது அணு ஆயுதங்களிலோ அணு சக்தியிலோ இல்லை, சொந்த மக்களை கௌரவமாக நடத்துவதில் தான் இருக்கிறது என்பதை இந்த அரசு உணர வேண்டும். உழைத்து வாழும் மக்களை ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் வீதிகளில் அலையவிட்டு அவர்களது விரல்களில் மைதீட்டி அவமானப் படுத்தி, அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இடம் பெற நாடு நாடாக சென்று ஒப்பந்தம் போட்டு இந்திய பொருளாதார வளர்ச்சியை சமரசம் செய்வது தான் உண்மையான வளர்ச்சியா என்கிற கேள்வியை உண்மையிலேயே தேச பக்தி உள்ள ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய கால கட்டம் இது.

 

இந்திய-ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம்!

கோ.சுந்தர்ராஜன்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments