சமீபத்தில் வெளியான ‘The Dravidian Model’ என்னும் புத்தகத்தில் தமிழ்நாட்டின் தனித்துவமான தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் பற்றி பேசப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி ஒரு குறிப்பிட்ட நகரத்தில் குவிக்கப்படாமல் பரவலாக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் இந்நூலின் ஆசிரியர்கள். அதை விளக்க Herfindahl-Hirschman Index என்ற அளவீடு பற்றி கூறுகின்றனர். இது ஒரு பிராந்தியத்தில் தொழில்மயமாக்கல் எந்த அளவு பரவலாக உள்ளது (Spatial Concentration of Industrialization) என்பதை 1 முதல் 10000 வரை கொண்ட அளவீடுகள் மூலம் தீர்மானிக்கிறது. இந்த அளவீடு அதிகம் ஆக ஆக தொழில் உற்பத்தி ஒரு இடத்தில் குவிகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இதில் தமிழ்நாட்டின் அளவு எண் 796. குஜராத்தில் இதே அளவு 1076 ஆக உள்ளது. அதாவது குஜராத்தில் தொழிற்சாலை மற்றும் உற்பத்தி ஓர் இடத்தில் குவிக்கப்படுகிறது. இப்படி தொழிற்சாலை மற்றும் உற்பத்தியை பரவலாக்குவது அது சார்ந்த நகரங்களையும் பரவலாக்கும். அப்படி பரவலாக்கப்பட்ட நகரங்களைக் கொண்டது தமிழ்நாடு என்பது இந்த புத்தக ஆசிரியர்களின் வாதம்.
இது ஒப்பீட்டளவில் உண்மை எனினும், தமிழ்நாட்டிலும் சில குறிப்பிட்ட நகரங்களை கவனிக்க வேண்டியுள்ளது. சென்னையிலும் அதன் புறநகரிலும் அதிகரித்து வரும் நகரமய அழுத்தம் பற்றி பேச வேண்டியது உள்ளது. இதை காட்சிப்படுத்த ‘Nighttime Light Data’ (NLD) வை பயன்படுத்தி இந்த வாதத்தை முன்வைக்கிறேன்.
செயற்கைக் கோள்கள் மூலம் பெறப்படும் ‘இரவுநேர விளக்கொளித் தரவு’ (Nighttime Light Data) இன்று பல்வேறு வித பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இரவு நேர விளக்கொளி அந்த பகுதிகளில் நடைபெறும் இரவு நேர பொருளாதார நடவடிக்கைகளை; அதாவது இரவு நேர வாகனப் போக்குவரத்து, சந்தைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பிற பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுவதைக் குறிக்கிறது. இதனைக் குறிப்பாக தொழிற்சாலை மற்றும் சேவைப் பொருளாதாரம் நிறைந்த நகரங்களுடன் தொடர்பு படுத்துகின்றனர் அறிஞர்கள். இதன் காரணமாக இரவுநேர விளக்கொளியின் அளவினை நகரமயமாதல் என்னும் போக்கினை ஆராயப் பயன்படுத்தலாம். மேலுள்ள படம் தென்னிந்திய மாநிலங்களின் இரவு நேர விளக்கொளி தரவினைக் காட்சிப்படுத்துகிறது. இதில் தென்னிந்திய நகரங்களான சென்னை, பெங்களூரு, கோவை, கொச்சி போன்ற நகரங்களில் இரவுநேர விளக்கொளி அதிகம் இருப்பதைக் காணலாம்.
அடுத்த வரைபடத்தில் தமிழ்நாட்டின் இரவு நேர விளக்கொளி காட்டப்பட்டுள்ளது. இந்த படங்களில் இருந்து சில குறிப்பிட்ட அனுமானங்களை புரிந்து கொள்ள முடிகிறது.
முதலாவது கவனிக்க வேண்டியது மிக அதிகமாக நகரமயமாக்களை சந்திக்கும் சென்னையும் அதன் புறநகர் பகுதிகளும் தான். ஒரு மாநிலத்தின் தலைநகர் இது போன்ற அதீத நகரமயமாதலை சந்திப்பது இயல்பு தான். இன்னும் கூறப்போனால் தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் இதன் விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும். படத்தில் பெங்களூரினை கவனியுங்கள். கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு அதனை அடுத்த பெரிய நகரத்தை விட 8 மடங்கு பெரியது. ஆனால் தமிழ்நாட்டில் சென்னை அதனை அடுத்து வரும் கோவையை விட 4 மடங்கு பெரியது. ஒப்பீட்டளவில் தமிழ்நாடு மோசமாக இல்லை எனினும், 4 மடங்கு என்பது அதீத அழுத்தத்தை சென்னையின் மீதும் அதன் சூழல் மற்றும் வளங்களின் மீதும் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகர குடிநீர் தேவையை நிர்வகிக்க முடியாமல் அரசுகள் போராடுவதை நாம் காண்கிறோம். குடிநீர் மட்டுமின்றி, இது போன்ற குவிக்கப்பட்ட நகர்மயமாதலால் நிலம், நீர், மின்சாரம் போன்ற தேவைகளில் மிகப்பெரிய அழுத்தம் உருவாகும். இதனை ‘Urban Stress’ என்பார்கள்.
இது தவிர தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் அல்லது தொழிற்பேட்டைகளை இதில் குறிப்பிட்டு காண முடியும். ஒப்பீட்டளவில் வட தமிழகமும், மேற்கு மண்டலமும் (கோவையில் இருந்து சேலம் வரை உள்ள சங்கிலி போன்ற நகரங்களைக் கவனியுங்கள்) அதீத நகர்மயமாதலையும் தொழில்மயமாதலையும் சந்திப்பதைக் காண முடிகிறது. தமிழ் நாட்டின் பிற பகுதிகள் இந்த தொழில் மயமாதலில் புறக்கணிக்கப் படுகிறதா என்பதையும் கேட்க வேண்டியுள்ளது. அதே நேரம் இந்த புறக்கணிப்பைத் தாண்டி அதீத தொழிற்சாலைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குவியும் போக்கு, அந்த பகுதியினை பெரிய அளவில் மாசுபடுத்தும்.
தமிழகத்தின் தனித்துவமான நகர்மயமாதல், மாநிலத்தின் எல்லா பகுதியிலும் ஒரு பெருநகரை உருவாக்குவதும், நகர்மயமாதலை பரவலாக்குவதும் தான் என ‘The Dravidian Model’ புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு தொழில்மயம் மற்றும் நகர்மயலில் அரசின் பங்கு மிக முக்கியமானது. 90களின் முன்பு வரை தொழில் முதலீட்டை தலைநகரில் மட்டுமே குவிக்காமல், பிற வளர்ச்சி குன்றிய மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தது தமிழக அரசு. உதாரணமாக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தின் ஓசூரில் அரசின் தொழிற்கொள்கையின் படி துவங்கப்பட்ட தொழிற்சாலைகளைக் கூறலாம். உலகமயமாதலின் பின் இந்த போக்கு மாறுகிறது.
அதிக லாபம் சாத்தியமாகக் கூடிய சில இடங்களில் மீண்டும் மீண்டும் முதலீடுகள் குவியும் போக்கு நிகழ்கிறது. இந்த போக்கு பரவலாக்கப்பட்ட நகரமயமாதலில் இருந்து விலகி வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் அளவுக்கு அதிகமான தொழிற்பேட்டைகளும், நகரங்களும் உருவாக்குகிறது. இதற்கு ஒரு சாதிய முகமும், அரசியல் முகமும் இருக்கிறது. இது மாநிலத்தின் உள்ளேயே பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கும்.
இதனை Nighttime Light Dataவின் உதவியால் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஒரு பகுதியில் குவியும் தொழில் மூலதனத்தை, தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கும் வண்ணம் தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயக் கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும். இது தற்போது இருக்கும் பெருநகரங்களின் மீதான அழுத்தங்களை குறைக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த அழுத்தத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு நகர்த்த வேண்டும். அதையும் அந்தந்த இடங்களின் சூழலியல் தன்மைகளைப் பொருத்து முடிவு செய்யவேண்டும். இல்லையெனில் சென்னை போன்ற ‘Ecologically sensitive’ பகுதிகள் மிகப்பெரிய சூழல் சீர்கேடுகளை சந்திக்க வேண்டி வரும்.
Herfindahl-Hirschman Index அளவீட்டில் 796 என்ற எண் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருப்பினும் அது போதாது. இன்னும் பரவலாக்கப்பட்ட தொழிற்மயமும் நகரமயமும் தமிழ்நாட்டிற்கு தேவை. அதுவே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் சூழலுக்கும் சிறந்தது.
கட்டுரை – த ஹரி பாரதி
வரைபடங்கள் – மேகா சதீஷ் & அஜய் வெங்கட்
மிக முக்கியமான கட்டுரை !
//ஒரு பகுதியில் குவியும் தொழில் மூலதனத்தை, தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கும் வண்ணம் தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயக் கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும்.//
சென்னை போன்ற பெரு நகரங்களை அழிவிலிருந்து தடுக்க இதுவே சிறந்த தீர்வு.
Excellent explanation with illustration. கோவையின் அசுர வளர்ச்சி அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் வீழ்ச்சிக்கு அடிகோலுகிறது. உதாரணங்கள்: கனிம வளங்களின் அதீத பயன்பாடு. மனித விலங்குகள் முரண். தண்ணீர் மாசு. காற்று மாசு. வேகமாகப் பரவும் தொற்று நோய்கள். அதிகரிக்கும் மனித மலட்டுத்தன்மை…