”ஏற்றத்தாழ்வுகள் இங்கு அனைத்தையும் கொல்கின்றன” நவோமி க்ளைன் நேர்காணல்

கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரும், காலநிலை நீதி பேராசிரியருமான  நவோமி க்ளைன் COP 27-ன் இழப்பு மற்றும் சேதம் தொடர்பான உடன்படிக்கையை எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளார். தி கார்டியன் செய்தித் தளத்தில் வெளியான அவரது நேர்காணலின் தமிழாக்கம்.

‘This Changes Everything’ எனும் காலநிலை நெருக்கடி குறித்த புத்தகத்தை பத்தாண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டவர் நவோமி க்ளைன். புதைபடிம எரிபொருட்களுக்கான மாற்றுவழிகளை வேகமானதாகவும், அனைவருக்கும் சமத்துவமாகவும் இருக்கும் வழியில் அடையும் வழிகாட்டியான கனடாவின் லீப் அறிக்கையின் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியவர் இவர். கடந்த 2021ம் ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் காலநிலை நீதி பேராசிரியராகவும், கனடாவின் முதல் காலநிலை நீதி மையத்தின் இணை இயக்குநராகவும் பணியில் சேர்ந்தார்.

காலநிலை நீதி என்றால் என்ன?

காலநிலை நீதி என்பது பல கூறுகளை உள்ளடக்கியது என நான் கருதுகிறேன். தொடர்ச்சியான பல்வேறு அடுக்கடுக்கான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். நாம் சுகாதார நெருக்கடியையும், வசிப்பிட நெருக்கடியையும், ஏற்றத்தாழ்வுகளடங்கிய சமூக நெருக்கடியையும், இனரீதியான அநீதிகளடங்கிய நெருக்கடியையும்  ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருகிறோம். இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு மட்டும் தீர்வுகாண முனைவது நமக்கு எந்தப் பலனையும் தராது. இவையனைத்தையும் ஒருகிணைத்தே நாம் தீர்வு காண வேண்டும். கார்பன் உமிழ்வைக் குறைத்து, மாசு குறைந்த உலகை உருவாக்குவதோடு, பல்வேறு விஷயங்களிலும் இன்னும் சிறந்த சமூகத்தை உருவாக்குவது எப்படியிருக்கும்?

இதைக் கேட்கும் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கார்பன் வரிவிதிப்பு மற்றும் பசுமையான ஆற்றலைத் தாண்டி இது மிகவும் கடினமாக தோன்றுவதாக நினைக்கிறார்கள். காலநிலை நீதி இயக்கங்களில் நாங்கள் முன்வைக்கும் வாதங்களின் மூலம், நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்றால், காலநிலை மாற்றம் குறித்த நடிவடிக்கைகளுக்கு உறுதியான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில், நீங்கள் கார்பன் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் தினசரி காவல்துறை வன்முறை, பாலின வன்முறை, பாதுகாப்பற்ற வாழ்விடப் பிரச்சனை போன்றவற்றை சந்திக்கும் மக்கள் “நீங்கள் சொல்வது பணக்காரர்களின் பிரச்சனை, நான் தினசரி தேவைகளை பூர்த்தி செய்து உயிரோடிருப்பதில் தான் கவனம் செலுத்துகிறேன்” என்று சொல்லக்கூடும். நீங்கள் எல்லாப் பிரச்சனைகளையும் ஒருங்கிணைத்து, காலநிலை நடிவடிக்கைகள் எப்படி சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும், சமூக அநீதிகளை அகற்றும், மன அழுத்தங்களைக் குறைக்கும் என விளக்கத் தொடங்கினால், மக்களின் கவனத்தை பெற்று அதன் மூலம் காலநிலை கொள்கைகளை வெற்றிபெறச் செய்யும் பரந்த அமைப்பை உருவாக்கலாம்.

காலநிலை அவசரம் தொடர்பான பணிகளில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறீர்கள். இந்த காலத்தில் உங்களுடைய யுக்திகள் எவ்வாறெல்லாம் மாற்றமடைந்துள்ளன?

2005ம் ஆண்டு ஏற்பட்ட கத்ரீனா சூறாவளி காலநிலை மாற்றத்தின் பக்கம் எனது பார்வையைத் திருப்பியது. பெருந்தொற்றும், பிற காலநிலை பேரழிவுகளும் எப்படி சமூக ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்தியதோ, அதேபோல்தான் கத்ரினாவும் இந்த சமூகத்தில் ஏற்கெனவே இருந்த ஏற்றத்தாழ்வுகளையும், அநீதிகளையும் அம்பலத்தியதோடு அவை அதிகரிக்க காரணமாகவும் இருந்தது. தங்களுக்கத் தேவையான வளங்களையும், கார்களையும் வைத்திருந்த மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி விடுதிகளில் தங்கினார்கள். அதேசமயம், பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் கருப்பினத்தவர் தங்கள் வீடுகளின் கூரையின் மீதேறி உதவி கோரினர். அதன்பின், மக்களின் அவலநிலைக்குக் காரணமாக இருந்த புறக்கணிக்கப்பட்ட பொது சேவைத் துறைகளில் கவனம் செலுத்துவதை விடுத்துப் பள்ளிகளையும், பொதுவான வசிப்பிடங்களையும் விற்று நவதாரளவாதிகளின் விருப்பத்திற்கேற்ற இடமாக நகரத்தினை மாற்றியது அரசாங்கம். எனவே, நான் சொல்லத் தொடங்கிய கதை துயர்மிகுந்த அநீதிகளை உள்ளடக்கியது. அதுதான்  Shock Doctrine-ன் கதை. அது என்னவெனில், நாம் இப்போது போகும் பாதையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருந்தால், அது கத்ரீனாக்களின் உலகிற்குதான் நம்மை கூட்டிச் செல்லும். ஒவ்வொரு பேரிடரும், ஏற்கெனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தும். இத்தகைய வலி மிகுந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி தங்களை மேலும் உயர்த்திகொண்டு ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தும் வல்லூறுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். இது ஒரு மகிழ்ச்சியான கதை இல்லை. மேலும், இதுவொரு ஊக்கமூட்டும் கதையா என்பதனையும் நான் உறுதியாக கூற முடியாது.

This Changes Everything கதையின் மூலம் நான் சொல்ல வந்தது : அடுக்கடுக்கான பிரச்சனைகளை உருவாக்கும் இந்த அமைப்பினை மாற்ற நாம் அனைவரும் ஒருங்கிணைந்த தீர்வுடன் கூடிய எதிர்வினையாற்றினால் என்னவாகும்? என்பதேயாகும். இதுதான் நான் கடந்த பத்தாண்டுகளாக பலருடன் இணைந்து சொல்ல முயற்சிக்கும் கதை. அலெக்சாண்டிரியா ஒகாசியோ கோர்டெஸ், மோல்லி க்ரெப்பாப்பில் மற்றும் ஏவி லெவிசுடன் இணைந்து நாங்கள் தயாரித்த “Message from the Future films” மூலமாகவும், பிற வழிகளின் மூலமாகவும் நாங்கள் அதைச் சொல்வதில் முன்னேறியுள்ளோம் என்றே நினைக்கிறேன். நாம் ஒருங்கிணைந்து செயலாற்றுவதன் மூலம் நாம் வாழக்கூடிய அழகான சமூகத்தை எப்படி உருவாக்க முடியும் என்று சொல்ல, கதை மற்றும் கற்பனையின் சக்தியினை பயன்படுத்துவதே எங்கள் குறிக்கோளாகும்.

இதன்மூலம் மக்களின் நம்பிக்கையைத் தூண்டுவது அவர்கள் காலநிலை சார்ந்த செயல்படுகளில் திறம்பட ஈடுபட ஊக்குவிக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

இந்நாட்களில் நம்பிக்கை என்ற வார்த்தையின் மீது எனக்கு தெளிவற்ற சிந்தனையே உள்ளது. பெரும்பான்மையான மக்களின் எதிர்காலம் மிக ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளது என்ற உண்மையி்ன் அடிப்படையில் நாம் நடைமுறைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். நாம் நிலைமைகளை மிக மோசமாக்கியுள்ளோம்.  நாம் இப்போதிருந்து சரியாக இருக்க எண்ணினாலும், எதிர்காலத்தில் காலநிலை பேரிடர்களில் இருந்து விலகியிருக்கும் வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

அதேசமயம், நம்மால் ஏதும் செய்ய முடியாது, நடப்பது நடக்கட்டும் என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு செல்லக்கூடிய நிலையிலும் நாம் இல்லை என நம்புகிறேன். அத்தகைய அதிர்ச்சிகளை எதிர்கொள்ள வழிகள் உள்ளன என்றே நான் நினைக்கின்றேன். அந்த வழிகள் நாம் மற்றவர்களுடன் மோசமான உறவுகளை கொண்டுள்ள இந்த வாழ்க்கையைவிட ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான பாதையை அமைத்துக் கொடுக்கும் எனவும் நம்புகிறேன். அதற்கு சமுதாயத்தின் அனைத்து படிநிலைகளிலும் கூர்மையான கவனம் தேவைப்படுவதுடன், வாழ்விட உரிமை, உணவு மற்றும் தூய்மையான நீர் போன்ற அடிப்படை பொருளாதார உரிமைகளுக்கான உத்திரவாதமும் தேவைப்படுகிறது. அத்தகைய கட்டமைப்பை மட்டும் நாம் உருவாக்கிவிட்டால் எத்தகைய அதிர்ச்சிகளையும் திறம்பட எதிர்கொள்ளலாம். அந்த நம்பிக்கையைதான் நான் கொண்டிருக்கின்றேன்.

மிகப்பெரிய அளவிலான நெருக்கடிகள் சமூகத்தை எப்படி பின்னோக்கி தள்ளும் அல்லது நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி நீங்கள் நிறைய எழுதியும், பேசியும் உள்ளீர்கள். காலநிலை மாற்றத்தினை நாம் எதிர்கொள்வதில் பெருந்தொற்றானது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

இதுபற்றி இப்போதே சொல்வது மிகவும் முன்கூட்டியே சொல்வதாகும். கோவிட் பெருந்தொற்று காலத்தில் பெருவாரியான மரணங்களைத் தவிர்க்க தேவைப்பட்ட மக்களை தனிமைப்படுத்திய நிகழ்வானது சமூக உறவுகளில் மிக ஆழமான சேதத்தை ஏற்படுத்தியது என நான் கருதுகிறேன். மேலும், உடைந்த அந்த தொடர்புகளை நாம் இன்னமும் மீட்கவில்லை என்றே கருதுகிறேன். சமூகத்தில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு மிகப்பெரியத் தடையாக இருப்பது, நாம் குழுவாக இணைந்து செயல்படமால் தனியாக செயல்பட நினைப்பதேயாகும். கடந்த 2019ம் ஆண்டு வான்கூவரின் வீதிகளில் ஆயிரக்கணக்கானோரை இறங்கி போராட செய்த மாணவர்களின் காலநிலை வேலைநிறுத்தப் போராட்டங்களில் இருந்த உத்வேகத்தை காலநிலை நீதி இயக்கங்கள் மறுபடியும் பெறவில்லை என நினைக்கிறேன். ஆனால், அதனை நம்மால் செய்ய இயலும், பெருந்தொற்றானது நமக்கு உதவுக்கூடிய பல்வேறு வழிகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

உதாரணமாக, அவசரகால எதிர்வினைகள் தொடர்பான சமீபத்திய பதிவுகள் நம்மிடம் உள்ளன. இது காலநிலை எதிர்வினைகளில் இருந்து மாறுபட்டது. பல்கலைக்கழகங்கள், நகரங்கள் மற்றும் நாடுகள் என அனைவரும் காலநிலை அவசரத்தினை அறிவித்துவிட்டோம். ஆனால், கோவிட் சமயத்தில் முதல் ஒன்றரை ஆண்டுகளில் கொடுத்த முக்கியத்துவத்திற்கு இணையான முக்கியத்துவத்தை இதற்காக நாம் கொடுக்கவில்லை. காலநிலை நெருக்கடிக்கு மிக அவசரத் தேவையாகவுள்ள முக்கியத்துவத்துனை இன்னும் எவரும் கொடுக்கவில்லை.

முன்னதாக, புதிய ஒப்பந்தம் அல்லது இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஏற்பட்ட அணிதிரட்டலைப் போன்ற ஒன்றிற்கு நான் திரும்ப வேண்டும். முன்பு கருப்பு-வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு சமூக அளவிலான எதிர்வினைகளைப் பாருங்கள். இப்போது, நான் சொல்லத் தேவையில்லை நமது அமைப்புகள் உண்மையான அவசரகால நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கோவிட் உணர்த்தியுள்ளது. காலநிலையானது அத்தகைய அவசரத்துடன் பல்வேறு எதிர்வினைகளை வேண்டுகிறது.

பணக்கார நாடுகள் அவர்களின் காலநிலை கடன்களை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்பது பற்றி காலநிலை நீதி அடிக்கடி விவாதிக்கிறது.  பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலநிலை நீதி எப்படி உள்ளது?

பூர்வகுடிகள் தங்கள் நிலங்களைத் திரும்ப கேட்பதும், அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்கக் கோருவதும் பிரிக்கமுடியாத ஒன்று. முதன்முதலில் புதைப்படிமங்களை எடுப்பது போன்ற பல்வேறு பணிகளுக்காக நிலங்கள் பறிக்கப்பட்டது. அத்தகையப் பணிகளும், திருட்டுக்களும் இன்றளவும் தொடர்கின்றன.

காலநிலை நீதி என்பது பணக்காரர்கள் வளங்களை மிக அதிகளவில் நுகர்வதையும், ஏழைகள் தேவைக்குக் குறைவான அளவில் நுகர்வதையும் மிக அடிமட்டத்தில் இருந்தே அணுகுகிறது. சமத்துவமின்மையும், அநீதியும் தொடர்ச்சியாக நம்மை கொல்வதை காலநிலை மாற்றம் நமக்கு காண்பித்து, நாம் உயிர்பிழைத்திருக்க இதனை சரிசெய்ய வேண்டுகிறது.

கத்ரீனா மட்டுமல்ல, கடந்த 2021ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட வெப்ப குவிமானத்தை (இது வெப்ப அலைகளை ஏற்படுத்தவல்லது) எடுத்துக்கொள்ளுங்கள். வெப்பநிலை அதிகரிக்கும்போது அது அனைவரையும் சம அளவில் பாதிக்கவில்லை, சுமார் 600 மக்கள் வெப்ப குவிமானத்தால் இறந்தார்கள். போதுமானதாகவும், எல்லோருக்கும் ஏற்ற விலையிலும் வீடுகள் இல்லாததற்கும் இந்த மரணங்களுக்கும் உறுதியான இணைப்பு இருப்பதை நம்மால் இப்போது உணர முடிகிறது. ஏறக்குறைய இந்த அனைத்து மரணங்களும் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளை உள்ளடக்கியது. பாதுகாப்பான குளிர்மையங்கள் இல்லாத மிகவும் சிறிய, குறைந்த காற்றோட்டமுடைய வாடகை வீடுகளில் இத்தகையோரில் பெரும்பாலனோர் சிக்கிக்கொண்டனர். 600 பேரை கொல்லக்கூடிய வெப்ப குவிமானங்களோ அல்லது நச்சுத்தன்மையுடைய போதை மருந்து பறிமாற்றமோ, பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல உயிர்களை பலிகொண்ட பல்வேறு அவசரகால நெருக்கடிகளை நாம் இங்கு கொண்டிருக்கிறோம். இத்தகைய காலங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும், தங்களுக்கான உணவைப் பெறுவதிலும் எத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பதை அறிய நாம் என்ன முயற்சி செய்கிறோம்?

கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற COP27 காலநிலை மாநாட்டின்போது மனித உரிமைகளின் நிலை குறித்து விளக்கியவர்களுள் நீங்களும் இருந்தீர்கள். காலநிலை நீதிக்கும், மனித உரிமைகளுக்குமான தொடர்பு என்ன?

நான் அதை எப்படிச் சொல்வேன் என்றால், காலநிலை நீதிக்காக நாம் போராட அனுமதிக்காவிட்டால், அதனை ஆராய அனுமதிக்காவிட்டால், அதனைப்பற்றி பேச அனுமதிக்காவிட்டால், அதற்கு எதிராக செயல்பட அனுமதிக்காவிட்டால் நிச்சயமாக நமக்கு காலநிலை நீதி கிடைக்காது. இத்தகைய சுதந்திரமான அனுமதிகள் தற்போதுள்ள எகிப்திய மக்களுக்கு இல்லை.

Cop27 க்கான முன்னோட்டத்தில், எங்கள் சர்வதேசியவாதிகள் காலநிலை நீதிக்கான அணுகுமுறைகளை துரிதப்படுத்தினர். ஏனெனில், காலநிலை நீதி அமைப்புகளுக்குள்ளாகவே, எகிப்து போன்ற அடக்குமுறைகள் மிகுந்த நாட்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மாநாட்டை நடத்துவதால் ஏற்படும் தாக்கத்தினைப்பற்றி போதுமான உரையாடல்கள் நிகழவில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். எகிப்தில் மனித உரிமைகள் நெருக்கடியில் உள்ளன. எகிப்து சுமார் 60 ஆயிரம் அரசியல் கைதிகளைக் கொண்டுள்ளது. எகிப்தின் மக்கள் சமூகத்துடன் தொடர்புள்ள எவரும்,  நாடுகள் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள பவர்பாயிண்ட் விளக்கங்களை காட்சிப்படுத்தும் இடமாக ஏதேனுமொரு நாட்டை பயன்படுத்திக்கொள்ளும் மற்ற நிகழ்ச்சிகளை போன்று காலநிலை மாநாட்டை எதிர்கொள்வது சரியானதாக இருக்காது என்றே கருதுகின்றனர்.

Cop27 -ல் பகிரப்பட்ட பல்வேறு தகவல்களில் மிக முக்கியமானதாக செய்திகளில் இடம்பிடித்தது பணக்கார நாடுகளின் மாசுக்களால் குறைந்த வருமானம் உடைய ஏழை நாடுகளி்ல் ஏற்பட்ட காலநிலை சேதத்திற்கு ஈடுகட்டும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யக்கூறும் “இழப்பீடு மற்றும் சேத ஒப்பந்தம்”. இதன்மூலம் காலநிலை நீதிக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

காலநிலை சார்ந்த கடன் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டதே ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். 2009ம் ஆண்டு நடந்த முதல் காலநிலை மாநாட்டில் காலநிலை கடன் சார்ந்த விவாதங்கள் எழுந்த போது அமெரிக்க பிரதிநிகளால் அது நிராகரிக்கப்பட்டதை நான் நினைவு கூறுகிறேன். காலநிலை சார்ந்த கடன்கள் இருப்பதை ஒத்துகொள்ளச் செய்தது பத்தாண்டு கால உழைப்பாகும்.

ஆனால், இந்த நிதி உண்மையிலேயே கிடைக்குமா, அப்படியே கிடைத்தாலும் அது எவ்வாறு செலவிடப்படும் என்பதை உற்று நோக்கும் போதுதான் அதிலுள்ள பிரச்சனைகள் வெளிப்படும். எனது கவலை என்னவென்றால், இத்தகைய நிதியுதவிகள், பல நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த மக்களின் மீதே போர்த்தொடுக்கும் சமயத்தில் வழங்கப்பட்டால், அது உண்மையில் ஒரு அரசியல் முன்னேற்றமாக இருக்காது. இதைத்தான் காலநிலை மாநாட்டின்போது எகிப்து நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். ராணுவ ஆட்சிகளுக்கு உதவிகள் வழங்க செய்யும் நமது திட்டடங்கள் ஒருபோதும் நமக்கு உதவாது.

இது வரலாற்றில் பெரிய உமிழ்வாளர்களாக இருக்கும் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை நமது கடமைகளிலிருந்து விடுவிக்காது. நமக்கு தெற்கத்திய உலகில் இருக்கும் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த கடன்களை செலுத்த முடியாது. நிச்சயமாக வடகத்திய உலகிலும் நமக்கு சர்வாதிகாரம் உள்ளது, அதன் காரணமாகவே, பூர்வகுடிகள் தங்கள் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுவதுடன், மீள் காலனியாதிக்கத்தை விட அவற்றை பூர்வகுடிகளின் அரசாங்கங்களின் மூலமாகவே மறுசீரமைக்க வேண்டுகின்றனர். சர்வாதிகார அரசாங்கங்களைத் தவிர்த்து, பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க அமைப்புகள் போன்ற திட்டங்களுக்கு செலவிடுவதற்கான நிதி ஆதாரங்களை அடிமட்ட மக்களுக்கு கிடைக்கச் செய்யக்கூடிய கட்டமைப்புகளே நமது தேவை.

2023ல் காலநிலை நீதியை பாதிக்கக்கூடியதாக நீங்கள் எதை பார்க்கிறீர்கள்?

கனடாவில், அல்பெர்டாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து,  புதைப்படிம எரிபொருள் பணியாளர்களுக்கான புதிய மற்றும் தாமதமான மாற்றுதிட்டங்களை ஒட்டாவா கைவிடுமா என்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். இதேபோல உக்ரைனில் நடந்து கொண்டிருக்கும் போரானது புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதை வேகப்படுத்துவன் மூலம் எஞ்சியுள்ள புதைப்படிம எரிபொருட்களை தோண்டியெடுத்து அதிக லாபம் (விலை உயர்வின் காரணமாக) ஈட்ட செய்வதையும், அது பூர்வகுடிகளின் நிலம் மற்றும் வாழ்க்கை முறையின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துவதையும் பார்க்கிறேன். கோவிட் மறுப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மறுப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஒன்றையொன்று வலுப்படுத்துவதை பார்த்து கவலை கொள்கிறேன். ஒரு காலநிலை அமைப்பாக அடக்குமுறைகள் மிகுந்த ஐக்கிய அரபு நாடுகளில் அடுத்து நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் மனித உரிமைகளை காலநிலை செயல்பாடுகளுடன் இணைப்பதை எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்கான வழிகளை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் காலநிலை அவசரம் குறித்த ஒரு இளநிலை படிப்பை இந்த ஆண்டு கற்றுக்கொடுக்கிறீர்கள். தங்கள் சொந்த வாழ்விலும், வேலையிலும் காலநிலை நீதியில் முன்னேற்றமடைய விரும்பும் மாணவர்கள் மற்றும் இளையோருக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?

 நீங்கள் இந்த முயற்சிகளில் தனியாக ஈடுபடும்போது அது உங்களுக்குத் தோல்வி உணர்வை ஏற்படுத்தி மிக விரைவில் உற்சாகமிழக்கச் செய்துவிடும். எனவே உங்களைப் போன்ற மற்றோரையும் தேடுவது மிக முக்கியமானதாகும். ஒரு பெரிய அமைப்பில் இணைந்து ஒருவர் ஒரு சில பணிகளைச் செய்வதும், மற்றவர்கள் பிற பணிகளைச் செய்வதும் சிறந்த ஒன்றாகும். இதன் மூலம் ஒருவரே அனைத்தையும் செய்யத் தேவையில்லை.

நீங்கள் உங்களுக்கு ஏற்ற அமைப்புகளைத்ச் தேடுங்கள், அவை மற்ற அமைப்புகளுடன் தொடர்புள்ளவையா என்பதை அறிந்து உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பரந்த கூட்டணியகச் செயல்படுங்கள் என்பதையே நான் என் மாணவர்களிடம் எப்போதும் கூறுவேன்.

பின்பு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விருப்பமான பணியை தழுவுங்கள். நீங்கள் என்ன செய்ய விரும்பினாலும், அது காலநிலை நெருக்கடியுடன் தொடர்புடையதாக இருக்கும் வழிகளை கண்டறியுங்கள். அது கலையாகவோ, பொறியியலாகவோ, திட்டமிடுதலாகவோ இருக்கலாம், அவையனத்துமே தேவையானதுதான். காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள மக்கள் விருப்பமான பணியினைக் கைவிட தேவையில்லை. உங்களுக்கு விருப்பமான பணியை காலநிலை நெருக்கடியுடன் எவ்வாறு தொடர்புபடுத்துவது என கண்டறியுங்கள். ஏனெனில், இது நம் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலை.

தமிழில்: விக்னேஷ் குமார். கோ

Source Article : https://www.theguardian.com/books/2023/feb/13/its-inequality-that-kills-naomi-klein-on-the-future-of-climate-justice?CMP=Share_AndroidApp_Other

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments