மேகதாது அணை; சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடகா மீண்டும் விண்ணப்பம்

மேகதாது அணை
மேகதாது அணை

காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பம்.

கர்நாடக அரசின் விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்பட வாய்ப்பு

விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தமிழ்நாடு அரசின் ஒப்புதல் அவசியமில்லை என கர்நாடகா அரசு வலியுறுத்தல்

 

மேகதாது அணை கட்டுமானத்தின் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை வழங்கக்கோரி ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கர்நாடக அரசின் நீர்வளத்துறை (காவிரி நீராவாரி நிகம நியமித) மே 30ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பம் மீதான கூடுதல் தகவல்களை ஒன்றிய அரசு கோரியிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்து ஜூலை 9ஆம் தேதி ஒன்றிய அரசுக்கு கர்நாடக நீர்வளத்துறை கடிதம் எழுதியிருந்தது.

அக்கடிதத்தில்

“மேகதாது அணை கட்டுமானத்திற்கு உச்சநீதிமன்றம் எவ்விதத் தடையும் இதுவரை வழங்கவில்லை.

மாநிலங்களுக்கிடையேயான விவகாரத்தை மத்திய நீர் ஆணையம் பரிசீலிக்கிறது. ஆகவே சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்க தடை கிடையாது.

உச்சநீதிமன்ற தடை இல்லாத நிலையில் 6 ஆண்டுகளாக மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது.” எனக் கூறப்பட்டிருந்தது.

Cover letter 1
Cover letter 2

இவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் எனக் கர்நாடக  அரசு கோரியுள்ளது.

கர்நாடக அரசின் இக்கோரிக்கை நிறைவேறு பட்சத்தில் விரைவில் மேகதாது அணையின் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு விரைவில் பட்டியலிட வாய்ப்புள்ளது.

பின்னணி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி விண்ணப்பம் செய்திருந்தது. கர்நாடகாவில் வறட்சியை சமாளிக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்காகவும் இந்த அணை அவசியம் என கர்நாடக அரசு தனது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தது.

இதற்கு தி.மு.க. உள்ளிட்ட அப்போதைய எதிர்கட்சிகள், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 2019, ஜூன் 24ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் கர்நாடக அரசின் இந்த முயற்சி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி நடக்கும் இந்த முயற்சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அறிவுறுத்துமாறும், கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்தின் சமர்ப்பித்திருந்த அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க அறிவுறுத்துமாறும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அதையும் மீறி காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதிகோரிய விண்ணப்பத்தை ஜூலை 19ஆம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிசீலித்தது. ஆனால், பரீசீலனையின் முடிவில் அணை கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுதி செய்தது.

ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் இம்முடிவின் காரணமாகத்தான் காவேரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு இத்திட்டத்திற்கு மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

 

புதிய அணையின் தேவை, அமைவிடம் மற்றும் வடிவமைப்பு

 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான 177.25 TMC மற்றும் இயற்கைத் தேவையான 10 TMC நீரை வழங்குவதற்காகவும் அதிகரித்து வரும் பெங்களூருவின் 1 கோடிக்கும் மேலான மக்கள்தொகையின் நீர்த்தேவைக்காகவும் இந்த அணை கட்டுவது அவசியம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Pre-feasibility-1

ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 400மெகாவட் நீர்மின்சார உற்பத்தித் திறனுடன் கூடிய இந்த அணையை 440 மீட்டர் உயரம் மற்றும் 67.16 நீர்த்தேக்க கொள்ளளவுடன் கட்டுயெழுப்ப கர் நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அணைக்காக 5267.59 எக்டர் நிலம் தேவைப்படும். இதில் 5160.71 எக்டர் நிலம் நீருக்குள் மூழ்கும். இதில் காப்புக்காடு, சூழல் கூருணர்வு மிக்க காடுகள், வருவாய் நிலங்களும் அடக்கம். குறிப்பாக 4821.66 எக்டர் நிலம் காவிரி காட்டுயிர் அணை கட்டுவதற்காக மொத்தம் மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டதில் தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தில் கட்டினால்தான் குறைவான காட்டுப்பகுதி நீரில் மூழ்கும் என்பதால் இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த அணை கட்டப்படுவதால் முழுமையாக நீரில் மூழ்கும் 5 கிராம மக்களுக்கு வேறு வாழ்விடம் அளிக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, உச்சநீதிமன்றம் என பல்வேறு சட்ட அமைப்புகளின் உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நீரை சரியான நேஅரத்தில் வழங்க மறுக்கிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் பெருமழை பெய்து அணைகளில் நீர்த்தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும்போது மட்டுமே தமிழ்நாட்டிற்கு நீரைத் திறந்து விடுகிறது கர்நாடக அரசு. அப்படியான காலத்தில் தமிழ்நாடு எல்லைக்குள் நீர் வந்துசேரும் எல்லையிலிருந்து 4.48கிமீ தொலைவில் இந்த அணை கட்டப்படுவது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இயல்பாக வழிந்தோடி வரும் நீர்கூட தடுக்கப்பட்டுவிடும் என்பதால் இத்திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.

– சதீஷ் லெட்சுமணன்

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments