உலகின் சுகாதாரத்தை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் – Lancet ஆய்வறிக்கை சொல்வது என்ன ?

உலகெங்கும் காலநிலை மாற்றம் முதன்மை பிரச்சனையாக மாறிவருகிறது. இந்தப் பூமியில் மனிதர்களின் இருத்தியலை தீர்மநிக்கபோகும் மிக முக்கியக் காலக்கட்டம் வருகின்ற பத்து ஆண்டுகள் தான் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜூலை 2021ல் வட மேற்கு ஐரோப்பாவில் 200 பேரை பலி கொண்ட வெள்ளம், ஜூன் 2021ல் வட அமெரிக்காவில் சுமார் 800 பேரை பலி கொண்ட வெப்ப அலை, , 2020ம் ஆண்டு 450பேரின் இறப்பிற்கும் 47,000 மக்கள் இடம்பெயரவும் காரணமாக இருந்த ஆஸ்திரேலிய காட்டுத்தீ, 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் வறட்சி, கடந்த ஜூலை மாதம் சீனாவில் இருவேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வறட்சி, சமீபத்தில் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்த பெரும் வெள்ளம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடக பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், உத்தராகாண்ட் காட்டுத்தீ போன்ற நிகழ்வுகள் காலநிலை மாற்றதின் தீவிரத்தை உணர்த்தும் நேரடி சாட்சியங்களாக உள்ளன.

காலநிலை மாற்றத்தால் கடந்த 50 முதல் 60 ஆண்டுகளில் அதிகரித்திருக்கும் வெப்பநிலை, காலநிலை நிகழ்வுகளின் தீவிரத்தன்மை, நில அமைப்பு மட்டும் சூழலியல் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இவற்றால் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டிற்கும் பாதிப்பு, பொருளாதார இழப்பீடுகள், இடம்பெயர்வுகள், உயிரிழப்புகள் ஆகியவை குறித்த விரிவான தரவுகள் அண்மையில் வெளியான ‘Lancet Countdown on health and climate change: health at the mercy of fossil fuels’ என்னும் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 51 ஆராய்ச்சி நிறுவனங்களின் 99 ஆராய்சியாளர்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ஆய்வறிக்கையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கும் இழப்புகள், பாதிப்புக்குள்ளாகப் போகும் மக்கள், வருங்கால ஆபத்துக்கள், காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் எதிர்கொள்ளவும் அரசுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், கொள்கை மாற்றங்கள், திட்டமிடல் மற்றும் அதில் இருக்கும் போதாமைகள், இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அதற்கான கால அவகாசம் ஆகியவை இந்த ஆய்வறிக்கையில் ஐந்து பகுதிகளாக 43 பிரிவுகளில் ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கையின் சில முக்கியத் தரவுகள் பின்வருமாறு:

ஆற்றல் துறையின் கார்பன் உமிழ்வு:

காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக இருக்கும் கார்பனை உமிழ்வதில் ஆற்றல் துறையே முதன்மை வகிக்கிறது. காலநிலை மாற்றத்திற்கான ஐநாவின் ஒப்பந்தம் (UNFCCC-United Nations Framework Convention on Climate Change) கையெழுத்தாகி 30 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆற்றல் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த கார்பன் உமிழ்வுகளைக் காட்டிலும் வெறும் 1% மட்டுமே தற்பொழுது குறைந்துள்ளது.

உலகளவில் வெறும் 8.2% மின்சாரம் மட்டுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து கிடைக்கிறது. இன்றும் மின்சார உற்பத்தி புதைப்படிம எரிபொருளையே நம்பியுள்ளது. இதனால் காலநிலை மாற்றம் அதிகரிப்பதோடு நிலக்கரி எரிப்பதனால் வெளியேறும் நச்சுப்புகையினால் மக்களின் ஆரோக்கியமும் பெரிதளவில் சீர்குலைகிறது. ஆற்றல் துறையின் கார்பன் உமிழ்வை முற்றிலுமாகக் குறைக்க இன்னும் 150 ஆண்டுகள் எடுக்கும் என Lancet ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

 

அதிகரிக்கும் வெப்பநிலை:

 

தொழில் புரட்சிக்கு (1850) பிந்தைய காலகட்டத்தில் இருந்து தற்போது வரை புவியின் சராசரி வெப்பம் 1.1டிகிரி வரை உயர்ந்துள்ளது. 2005ம் ஆண்டு இருந்த கோடைகால வெப்பநிலையை விடத் தற்போதைய கோடைக்கால வெப்பநிலை 0.6டிகிரி செல்சியஸ்  அதிகரித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் அதிகரித்திருக்கும் 0.3டிகிரி சராசரி உலக வெப்பநிலையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இப்போதிருக்கும் உற்பத்தி முறை அப்படியே தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவிற்குள் உலகின் சராசரி வெப்பநிலை 3.5டிகிரி செல்சியஸ் வரை எட்டும் அபாயம் உள்ளதாகவும், அடுத்த எட்டு ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வு ஏற்பட 48% சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் Lancet ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலக வெப்பநிலையை 1.5டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் பாரிஸ் ஒப்பந்தம் 2016ம் ஆண்டுக் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்ப அலைகள்:

காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் வெப்பமானது, வெப்ப அலைகளின் எண்ணிக்கையையும் தீவிரத்தன்மையையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகளின் காரணமாகச் சிறுநீரகப் பாதிப்பு, மாரடைப்பு, கர்ப்பகாலப் பிரச்சனைகள், தூக்க முறைகள் மாறுதலால் ஏற்படும் மனரீதியான பாதிப்புகள், இருதய மற்றும் சுவாச நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. விபத்து அல்லாத இறப்புகள் அதிகம் ஏற்பட வெப்ப அலைகள் காரணமாக உள்ளது. 2021 -2022 காலக்கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், மத்திய திரைகடல் நாடுகளிலும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வரலாறு காணாத வெப்ப அலை வீசியது குறிப்பிடத்தக்கது.

2000-04 மற்றும் 2017-21 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வெப்பத்தினால் உயிரிழந்த 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 68% அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டுகளில் வெப்பத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 37% இறப்புகளுக்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்று lancet ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வறட்சி:

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வறட்சி உலகெங்கும் உணவு மற்றும் நீர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது, தொற்று நோய் பரவும் அபாயத்தை அதிகரித்துச் சுகாதாரக் கட்டமைப்புகளை வீழ்ச்சியடையச் செய்கிறது. எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது.

2012-2021 காலகட்டத்தில் 47% உலக நிலப்பரப்பு வறட்சியால் பாதிப்படைந்துள்ளதாகவும் இது 1960களை ஒப்பிடுகையில் 27% அதிகம் என்று Lancet ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் சுமார் 41 கோடி மக்கள் பாதுகாப்பான குடிநீர் இல்லாமலும், 6.6 கோடி மக்கள் சுகாதார சீர்கேட்டாலும் அவதிக்காளாகின்றனர்.

உணவு பாதுகாப்பின்மை & ஊட்டச்சத்து குறைபாடு:

உலகமுழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ள மக்களின் எண்ணிக்கை கொரோனா தொற்று மற்றும் பொதுமுடக்கத்தின் காரணமாக 16.1 கோடியிலிருந்து பலமடங்கு உயர்ந்து 81.1 கோடியாக ஆக அதிகரித்துள்ளது. இதைக் காலநிலை மாற்றத்தின் தாக்கம் வரும் காலங்களில் மேலும் மோசமாக்கக் கூடும் என்றும் குறிப்பாகக் கடல் நீர் வெப்பம் உயர்வதாலும் கடல் நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பதாலும் மீன்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றும், அதிகரிக்கும் வெப்பம், வறட்சி, புயல், கனமழை, வெள்ளம் போன்ற காலநிலை நிகழ்வுகள் மற்றும் கடல்நீர் மட்ட உயர்வின் பாதிப்புகளால் விவசாயம் பெரிதும் பாதிப்படையக் கூடும் என்று Lancet அறிக்கை எச்சரித்துள்ளது.

1981-2010க்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் பயிர்களின் பருவக்காலம் குறைந்துள்ளது, குறிப்பாகச் சோளத்திற்கான பருவ காலம் 9.3 நாட்களும், நெற்பயிர்கள் 1.7 நாட்களும், கோதுமை நாட்களும் குறைந்துள்ளது. 2020ம் ஆண்டு வெப்பநிலை உயர்வால் மட்டும் 9.8 கோடி மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் தொற்று நோய்கள்:

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளாக உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும், கொசு போன்ற பூச்சிகள் மூலம் பரவும் டெங்கு மலேரியா போன்ற நோய்களும் பெருகியுள்ளது. 1951–60 காலகட்டத்தினை ஒப்பிடுகையில் தற்பொழுது டெங்குவின் பரவல் 12% அதிகரித்துள்ளதாகவும். அமெரிக்காவில் மலேரியா பரவும் நாட்களின் காலம் 31% அதிகரித்துள்ளதாகவும், உலகில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு நோய் பரவும் அபாயத்தில் வசிப்பதாகவும் Lancet ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடல் நீர் மட்டம் & கடல் வெப்பம் உயர்வு:

வெப்பநிலை உயர்வால் உருகும் ஆர்டிக், அண்டார்டிக் பனிப்பாறைகளின் விளைவால் உலகெங்கும் கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பல கடற்கரை நகரங்கள், தீவு நாடுகள் மூழ்கும்  நிலையிலும் கடற்கரை அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு முதல் உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு 3.7 மிமீ அதிகரித்து வருகிறது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவிற்குள் 1மீட்டருக்கும் மேல் கடல் மட்ட உயர்வு ஏற்படும் என Lancet ஆய்வுகள் தெரிவிகின்றன. உலகில் உள்ள 14.96 கோடி மக்கள் கடல் மட்டத்திலிருந்து 1 மீட்டருக்கும் தாழ்வான பகுதிகளில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

142 நாடுகளில், 1980களை ஒப்பிடுகையில் தற்பொழுது கடல் நீர் வெப்பநிலையானது 0.7டிகிரி வரை உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மீன் உற்பத்தி பெரிதும் பாதிப்படையும் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 

 

அதிகரிக்கும் காலநிலை நிகழ்வுகள் & பேரிடர்கள்:

கடந்த 50 ஆண்டுகளில் காலநிலை மாற்றம் தொடர்பான பேரிடர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதென lancet அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 2021ம் ஆண்டு மட்டும் 253 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 84% இழப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்புகள்:

2020ம் ஆண்டு மட்டும் PM2.5 நுண்துகள் பெருக்கத்தினால் 42 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டினால் வெளியேறும் நுண்துகளைச் சுவாசித்ததனால் மட்டும் 12 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்சாதன பயன்பாட்டினால் ஏற்படும் நுண்துகள் மாசால் மட்டும் சுமார் 24,000 பேர் இறந்துள்ளனர். 2000ம் ஆண்டில் இருந்ததை விடக் குளிர் சாதனக் கருவிகளின் எண்ணிக்கை 66% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

பொருளாதார இழப்புகள்:

144 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரப் பாதிப்புகள் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளினால் 2021ம் ஆண்டு மட்டும் ஏற்பட்டுள்ளது.அதே போல் 2021ம் ஆண்டு 669 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்புகள் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் தொழில் முடக்கத்தினால் மட்டும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் 82% இழப்புகள் வளரும் நாடுகளில் ஏற்பட்டவை என்றும் பெரும்பான்மையான இழப்புகள் விவசாயத் துறையில் ஏற்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

அரசுகளின் கொள்கைகள் மற்றும் துறைசார்ந்த நடவடிக்கைகள்:

தற்பொழுது இருக்கும் உற்பத்திமுறையும் கொள்கைகளும் அப்படியே தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் வெப்பம் 2.7 டிகிரி செல்சியஸ் எட்டுவதை நம்மால் தடுக்க முடியாது என்கிறது ஆய்வறிக்கை. பாரிஸ் ஒப்பந்தத்தில் கூறியவாறு உலக வெப்பநிலையை 1.5டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த 2030ம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வினை 45% குறைத்தாக வேண்டும். சமீபத்தில் நடந்த காலநிலை மாநாடுகளில் உலக நாடுகளின் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்து நாடுகளும் சரியாகப் பின்பற்றினால் கூட இது சாத்தியம் இல்லை என்கிறது Lancet அறிக்கை.

நிலவரம் இப்படி இருக்கையில் எத்தனை நாடுகள் தங்களின் துறை சார்ந்த கொள்கைகளில் காலநிலை மாற்றத்தினை உள்ளடக்கி செயல்படுகிறார்கள் என்கிற விவரத்தினையும் Lancet குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சுகாதாரப் பதிப்புகள் தொடர்பான ஆய்வுகளை 48 நாடுகள் மட்டுமே மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

49 நாடுகள் மட்டுமே தேசிய அளவிலான காலநிலை செயல்திட்டம் வைத்திருப்பதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. அதே போல் நகரங்களுக்கான காலநிலை செயல்பாடுகளுக்கான ஆய்வை மேற்கொண்டு வரும் CDP (Carbon Disclosure Project) அமைப்பின் ஆய்வுகளுக்கான தகவல்களை 930 நகரங்களில் 725 நகரங்கள் மட்டுமே கொடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தினையும் இடம்பெயர்வையும் தொடர்புப்படுத்தும் கொள்கைகள் 37நாடுகளில் நடைமுறையில் உள்ளது எனவும் வெறும் 28 நாடுகள் மட்டுமே வெப்பம் தொடர்பான பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து மக்களுக்கு அறிவிக்கும் (early warning system) தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது .

 

முக்கியத்துவம் பெரும் காலநிலை தொடர்பான சுகாதாரப் பிரச்சனைகள்:

அரசுகளுக்கான பன்னாட்டு காலநிலை மாநாடுகளில் காலநிலையையும் சுகாதாரத்தையும் தொடர்புபடுத்திப் பேசும் தன்மை அண்மையில் அதிகரித்துள்ளது. 2021 ஐ.நா. சபையில் 60% நாடுகளும் , தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDC) பற்றிப் பேசுகையில் 86% நாடுகளும் காலநிலை மாற்றதையும் பொதுச் சுகாதாரத்தையும் தொடர்புபடுத்திப் பேசியுள்ளது.

அதே போல் கடந்த 2020ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டுக் காலநிலை மாற்றத்தையும் சுகாதாரத்தையும் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் எண்ணிக்கை 22% அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு மட்டும் 3200 ஆய்வறிக்கைகள் வெளிவந்துள்ளன.

காலநிலை தொடர்பான சுகாதாரப் பிரச்சனைகள் முக்கியத்துவம் பெறுவது ஆரோக்கியமானதாக இருந்தாலும், காலநிலை மற்றத்தினால் ஏற்படப் போகும் சுகாதாரப் பாதிப்புகளைத் தடுக்கும் மற்றும் தகவமைக்கும் நடவடிக்கைகளுள், அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் பெரிய அளவிலான போதாமைகள் உள்ளதாக இந்த LANCET ஆய்வறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

  • பிரபாகரன் வீரஅரசு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments