மொழி நிலத்தின் உயிர்

அன்று காலை, சுட்டெரிக்கும் வெயில் சென்னை வாகன நெரிசலை சமாளித்து, வியர்வையுடன் என்னை உரையாற்ற அழைத்த இடத்திற்குச் சென்றடைந்தேன். என்னையும், மற்ற அனைவரையும் வரவேற்று பேசிய அந்த நபர், “once again we warmly welcome you to the event” என்று அவருடைய வரவேற்புரையை முடித்தார். வெப்ப மண்டல நாட்டில் வாழும் நம்மை, எல்லா நிகழ்வுகளிலும் “warm welcome” என்று வரவேற்கும் முறையைப் பார்க்கும் போது, “சுற்றுச்சூழலுக்கும் மொழிக்கும்” உள்ள தொடர்பை புரிந்துக் கொள்ளாத சமூகமாக, இயற்கையிடம் இருந்து எவ்வளவு அந்நியப்பட்டு நிற்கிறோம் என்று புரிகிறது.

குளிர் பிரதேச நாட்டில் வாழும் மக்கள் ஒரு வெதுவெதுப்பான சூட்டை எதிர்பார்த்து “warm welcome” என்று குறிப்பிடுவது இயல்பு. வெப்ப மண்டல பகுதியில் வாழும் நம்மை அகம் குளிர, முகம் குளிர வரவேற்காமல் ‘warm welcome’ என்று வரவேற்பது நிச்சயம் இயல்பானது இல்லை. மொழிக்கும், பண்பாட்டிற்கும், சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளாமல் இருப்பதை விளக்கும் ஒரு சான்று தான் இது. இன்னும் பல்வேறு சான்றுகளைத் தர முடியும் என்றாலும் அவற்றுள் இரண்டை இங்குக் காண்போம்.

1) குளிர் பிரதேச நாட்டில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்த “Rain Rain Go Away” பாடலை, வான் சிறப்பு என்று மழைக்காகத் தனி ஒரு அதிகாரமே இருக்கும் திருக்குறளை படித்த நமக்கும் அதே பாடலை சொல்லிக் கொடுப்பதில் எவ்வளவு முரண் இருக்கிறது. வெப்ப மண்டல பகுதியில் வாழும் நாம் “மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்” என்று பாடுவது தானே இயல்பு.

2) குளிர் பிரதேச நாடுகளில் தேநீரும், குளம்பியும் (காபி) குடிப்பது இயல்பு. வெப்ப மண்டல நாடான நம் நாட்டில் குளிர்ச்சிக்காகக் கூழ் குடிப்பது தானே இயல்பு.

இந்த வரிசையில் தான் இன்னொன்றும் நாம் பார்க்க முடியும். குளிர் பிரதேச பகுதியில் வாழும் மக்கள் குளிரின் நடுக்கத்தின் காரணமாகவே குறைந்த சப்தத்துடன் பேசிக் கொள்கிறார்கள். கடும் வெயிலில் உழைக்கும் மக்களாகிய நாம் சப்தம் அதிகம் போட்டுப் பேசுகிறோம்.

 

மொழிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

மொழிகள், ஒரு செய்தியை புலப்படுத்துவதற்காகவும், புரிந்துக் கொள்வதற்காகவும் மனித இனம் தன் பரிணாமப் பாதையில் கண்டறிந்த அற்புதமான சாதனம். மொழி பண்பாட்டினுடைய மிகப்பெரும் கருவூலம். உணவுப் பழக்கவழக்கங்கள், வேளாண் முறைகள், ஆடை அணிகலன்கள், திருமண – மரணச் சடங்குகள் மற்றும் பல பண்பாட்டு வாழ்க்கை முறைகளுக்கு ஆதாரமாக விளங்கும் தாவரங்கள், விலங்குகள், காலநிலை போன்ற உயிர்ச்சூழல் பற்றிய அறிதல்களையும் சொற்களாகத் தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது மொழி. இவை பல ஆயிரம் ஆண்டுக் காலச் சேமிப்புகள். இந்தக் காரணத்திற்காகத் தான், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் ஐயா ஒரு நேர்காணலில், “தமிழ்மொழி இடைக்கால மொழியாகத் தோன்றி அழிந்திருந்தால் கூடக் கவலைப்பட வேண்டாத சூழ்நிலை உண்டாகும்; இது தொன்மை மிக்க மொழி என்பதால் இதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிடுகிறார். ஆக, மொழிகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் வெறுமனே தகவல் தொடர்புகளுக்குத் தேவையான சாத்தியங்களை மட்டும் அடைத்து விடவில்லை. இது பண்பாட்டுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சுறுத்தலும் ஆகும்.

 

மொழியும் – உயிர் பல்வகைமையும் :

நாம் பேசும் மொழி தான் உயிர்பல்வகைமையைப் பாதுகாத்து வருகிறது. தமிழின் சங்க இலக்கியங்கள் நம் சூழலை ஐந்து வகைத் திணைகளாகப் பிரித்து மிக நுட்பமான தரவுகளைப் பதிவு செய்து வைத்துள்ளன. குறிஞ்சிப்பாடல் 99 வகையான மலர்களின் பெயர்களை அடுக்கிப் பாடியுள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல் ஒன்றில் 120 வகையான நெல் வகைகள் குறிப்பிடப்படுகின்றன. ஹவாய் மொழியில் மீன்களுக்கு அவற்றைப் பிடிக்கும் முறைகள், மருத்துவப் பயன்கள், இனப்பெருக்கக் காலம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதே போல் தான், தமிழ் மொழியில் யானைக்கு 100-க்கும் மேற்பட்ட பெயர்கள் இருப்பதை நாம் அறிவோம். பசுபிக்தீவு மீனவர்கள் 300க்கும் அதிகமான மீன்கள் பற்றிய தகவல்களை, விஞ்ஞான இலக்கியங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதை விடப் பன்மடங்கு மேலாக அறிந்து வைத்திருப்பதாக ஆர்.இ. ஜோகன்னஸ் என்னும் கடல் உயிரியலாளர் குறிப்பிடுகிறார்.

 

மொழியும் உயிர் பரம்பலும் :

டெராலிங்குவா (Terralinqua) என்னும் மொழிகளைக் காப்பதற்கான பன்னாட்டு அரசு சாரா நிறுவனமும், உலகக் கானுயிர் நிதியமும் (World Wildlife Fund) இணைந்து உலகின் மொழிப் பல்வகைமையும், உயிர் பல்வகைமையும் ஒரு சேர சுட்டுகின்ற உலக வரைபடமொன்றை வெளியிட்டுள்ளன. இதில் உலகில் அதிக மொழிகளைப் பேசுகின்ற முதல் எட்டு நாடுகளில் (இந்தியா உட்பட) அதிக எண்ணிக்கையான உயிரினங்களைக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. இதற்கு மாறாக உலக மொழிகளில் வெறும் மூன்று விழுக்காடு மொழிகளுக்கு மாத்திரமே சொந்தமான ஐரோப்பிய நாடுகளில் உயிர்ப்பல்வகைமையும் குறைவாகவே காணப்படுகிறது.

மொழிகளுக்கும், உயிரினங்களின் பரம்பலுக்கும் இருக்கும் இன்னொரு பந்தமும் குறிப்பிடத்தக்கது. உலகில் பேசப்படுகின்ற பெரும்பாலான மொழிகள் அவை தோன்றிய நாடுகளைத் தவிர வேறு எங்கும் பேசப்படுவதில்லை. அவை உள்நாட்டு மொழிகளாகவே (endemic languages) ஒலிக்கின்றன. அது போலவே இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற உயிரினங்களிலும் பெரும்பாலானவை அந்நாடுகளுக்கு மட்டுமே உரித்தானவையாக (endemic species) பெருமை சேர்க்கின்றன. உதாரணமாக, சுமார் 275 வரையான உள்நாட்டுப் பூர்வக்குடி மொழிகளைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்ற முதுகெலும்பு பிராணிகளில் 11,346 இனங்கள் ஆஸ்திரேலியாவிற்கு மாத்திரமே சொந்தமானவை. அங்குப் பூத்துக் குலுங்கும் தாவரங்களிலும் பெரும்பாலானவை அந்த மண்ணுக்கே உரித்தானவை.

உயிரினங்களும் தமிழ்ப் பெயர்களும் :

உயிரினங்களுக்கான பாரம்பரியத் தமிழ்ப் பெயர்கள் பொருள் பொதிந்த காரணப் பெயர்கள். ஒரு உயிரினத்தின் தமிழ்ப்பெயர் அதன் இயல்பைப் பற்றி நமக்குத் தகவல் தரக்கூடும் ; ஒரு உயிரினத்தின் நடத்தையை விவரிக்கக்கூடும்.

சோலைப்பாடி – அடர்ந்த சோலைக்காடுகளில், கீழான மரக் கிளையில் அமர்ந்து இப்பறவை எழுப்பும் குரலை கேட்பது மறக்க முடியாத அனுபவம்

ஒப்புப்போலி பண்பு (mimicry) கொண்ட மைனா இனத்தைச் சார்ந்த ஒரு பறவை. மற்ற பறவைகள் எழுப்பும் ஒலி போலவே, சில சமயங்களில் விலங்குகளைப் போலக்கூட ஒலியெழுப்பும். இதன் பெயர் நையாண்டி குருவி.

Grizzled Squirrel என்றறியப்படும் மலை அணிலைப் பெரியணத்தான் என்று குறிப்பிடுகிறார்கள். இவ்விலங்கிற்கென ஒரு தனிச் சரணாலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது.

சில பறவைகளுக்கு வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு பெயர்கள் இருக்கலாம். உதாரணமாக, செம்போத்து அல்லது செண்பகம் என்று நாம் அழைக்கும் பறவையை, நாகர்கோவில் பகுதிகளில் வாழும் மக்கள் அந்தப் பறவை எழுப்பும் ‘உக்.. உக்..’ என்ற சப்தத்தை வைத்து ‘உக்குலு’ என்று அழைப்பதாக நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

தும்பிக்கை என்ற சொல்லில் இருக்கும் தூம்பு என்றால் ஓட்டை என்று பொருள். தூம்பு கை என்பதே மருவி காலப்போக்கில் தும்பிக்கை ஆனதென்றும் குறிப்பிடுகிறார்கள்.

அதே போலத் தான், காடுகளை விரித்துக் கொண்டு வரும் நதிக்கு காவிரி என்ற பெயர் வந்தது. ஆனால் நாமோ, இன்று அதைக் ‘காவேரி’ என்றே பயன்படுத்தி வருகிறோம்.

மரங்களும் ஊர்ப் பெயர்களும் :

வேளச்சேரி, நெமிலிச்சேரி, பழவந்தாங்கல், பீர்க்கன்கரணை, அடையாறு என்று நீர்நிலைகளைப் பெயராகக் கொண்டுள்ள ஊர்களின் பெயர்களைப் படிக்கும்போது தான் எத்தனை நீர்நிலைகளை அழித்து நாம் சென்னை மாநகரத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றும், வெள்ளம் வந்தால் ஏன் இவ்வளவு நீர் நம் வீட்டை சுற்றி நிற்கிறது என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளத் துவங்கி இருக்கிறோம். சுற்றுச்சூழல் புரிதலோடு ஒரு நகரத்தை கட்டமைக்க இந்தப் புரிதல்கள் மிகவும் உதவும்.

அது போலவே, மாங்காடு, நுங்கம்பாக்கம், ஆலந்தூர், பனங்காடு, திருப்பனங்காடு, புரசைவாக்கம் (புரசை மரம்), புளியந்தோப்பு போன்று மரங்களைத் தன் பெயர்களில் கொண்டுள்ள ஊர்களும் பல நூறு வருடங்களுக்குப் பிறகு ஆய்வு செய்பவர்களுக்கும் பல்வேறு செய்திகளை உணரத்தக்கூடும்.

ஒரு பனை மரத்தை தன்னகத்தே கொண்டுள்ள திருப்பனங்காடு – எந்த மாதிரியான நிலப்பகுதி அங்கு இருந்திருக்கும், எந்த மாதிரியான தட்பவெட்ப நிலை அங்கு இருந்திருக்கும், அதைச் சார்ந்து எந்தெந்த உயிரினங்கள் இருந்திருக்கும் போன்ற பல செய்திகளை எதிர்காலத்தில் வரலாற்று குறிப்புகளை வைத்து ஊகிக்க உதவும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் போகும் நம் அடுத்தத் தலைமுறைகளுக்கு இது பேருதவியாக இருக்கும்.

மனிதர்களாகிய நாம் கட்டிக்கொண்ட கட்டிடங்களுக்கும், மைதானத்திற்கும் வேண்டுமானால் தலைவர்களின் பெயர்களைச் சூட்டிக் கொள்ளலாமே ஒழிய, ஊர்களுக்கும் சாலைகளுக்கும் அண்ணா சாலை, எம்.ஜி.ஆர் நகர், தியாகராய நகர் என்று தலைவர்கள் பெயரை வைப்பது, நம் அடுத்தத் தலைமுறை, சூழலுக்கு இசைவாக வாழ உதவுமா என்று கொஞ்சம் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, நம்மிடையே வாழும், நாம் அடிக்கடி காணும் பறவைகளுக்கும், பாலூட்டிகளுக்கும் நிச்சயம் தமிழில் பெயர்கள் இருந்திருக்கும் இல்லையா? அவற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும். காட்டுயிர் பராமரிப்பு வளர இப்ப்பெயர்களை மறுபடியும் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் roller-ஐ அப்படியே மொழிப்பெயர்த்து ‘உருள்வான்’ என்று எழுதிவிடுவார்கள், நாம் பனங்காடையை மறந்து விடுவோம். அருவி போய் நீர்வீழ்ச்சி (waterfalls) வந்தது போலவும், lion-tailed monkey அப்படியே சிங்கவால் குரங்கு ஆனது போலவும்.

ஆக, மொழிக்கும் சுற்றுச்சூழலுக்கும் பண்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மக்களிடையே சுற்றுச்சூழல், பல்லுயிரியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆழ்ந்த அக்கறையை உருவாக்க, இந்த மொழிவளம் மீண்டும் உயிரூட்டப்பட வேண்டும். Sustainability, Carrying Capacity, Climate Mitigation போன்ற பல சுற்றுச்சூழல் சார்ந்த நவீன சொல்லாடல்களுக்கும் தமிழில் கலைச் சொற்கள் உருவாக்கினால் மட்டுமே, அது சாமானிய மக்களின் புழக்கத்திற்கு வரும். சூழல் குறித்த அக்கறையும் செயல்பாடுகளும் பெருகும்.

சுற்றுச்சூழலை பற்றி அக்கறை கொள்ளும் பல்வேறு சூழலியல் செயல்பாட்டாளர்கள் மொழி, பண்பாடு குறித்து அதிகம் கரிசனப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கிறது. பண்பாட்டு மீட்சியிலும், மொழி உரிமை போராட்டத்திலும், சூழலியலாளர்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய காலம் இது.

– சரவணன், விசை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments