மனித குலத்தின் கடைசிப் படி

காலநிலை மாற்றம் குறித்து நாம் தொடர்ச்சியாகப் படித்தோ, கேட்டோ தெரிந்து கொண்டு வருகிறோம். காலநிலை மாற்றத்திற்கு மனித செயற்பாடுகள் தான் காரணம் என்று கூறி வரும் நாம், பூமியின் 450 கோடி ஆண்டுகள் நீளமான வரலாற்றில் ‘காலநிலையில் மாற்றம்’ என்பது இப்போது தான் ஏற்படுகிறதா? என்று கேட்டால் நம் தலை இடப்புறமிருந்து வலப்புறமாகத் திரும்பும். பூமியின் வரலாற்றில் முதல் 200 கோடி ஆண்டுகளில் எந்தவொரு உயிரினமும் தோன்றவில்லை. அடுத்த 250 கோடி ஆண்டுகளில் ஐந்து முறை முற்றொழிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோல ஐந்து முறை பனியுகமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாகப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன. பூமியின் இத்தனை கோடி ஆண்டுகால பயணத்தில் தட்பவெப்பநிலை என்பது ஒருபோதும் சீரானதாக இருந்தது இல்லை. இந்தச் சமநிலையற்ற தட்பவெப்பநிலைகள் தாம் முற்றொழிப்புகளுக்குக் காரணமானதாகவும் இருந்துள்ளது. கடந்த 11,000 ஆண்டுகளுக்கு முன் முடிந்த குறுகிய காலக் கடைசிப் பனிக்காலத்திற்குப் பின், அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட வெப்ப மாறுதல் வட பருவகாலத்தை வலுவடைவதற்கு வழிசெய்தது. இந்த மாற்றம் மனிதக்  கூட்டம் ஓரிடத்தில் தங்கி உணவுகளை உற்பத்தி செய்ய ஏற்ற சூழலை உருவாக்கியது.

இன்று வரை காலநிலையில் எந்தவொரு மாற்றமும் (மனித செயற்பாட்டின் விளைவுகளைத் தவிர்த்து) இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் அதாவது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாகச் சீரான காலநிலை நிலவி வந்துள்ளது.  இந்தக் காலநிலை உருவாகப் பல காரணிகள் இருந்தன. மலைகளின் இருப்பிடம் மற்றும் அமைப்பு, கடல் நீரோட்டம் (ocean current),தட்பவெப்பநிலை, மழைக்காடுகள் எனப் பல இவற்றில் அடங்கும். இவை அனைத்தும் சேர்ந்து சீரான காலநிலை உருவாகவும், இத்தனை ஆண்டு காலமாக அது நிலைத்து இருக்கவும், மனித சமுகம் பரிணமிக்கவும் உதவியாய் இருந்தன. ஆனால், தற்போது இந்தக் காரணிகள் அவற்றினுடைய நிலைகளில் இருந்து மாறுதல் அடைய ஆரம்பித்துள்ளன. இந்தக் காரணிகளில் மாற்றம் நிகழும் போது, காலநிலையில் பெரும் அளவிலான மாற்றத்தை அவை ஏற்படுத்துகின்றன. இந்த உயிர்ச் சூழலும், பல்லுயிர்த்தன்மையும் உருவாகக் காரணமாய் இருந்தது தற்போது நிலவுகிற காலநிலையே ஆகும். அந்தக் காலநிலையில் மாற்றம் ஏற்படும் போது, இவ்வுயிர்ச் சூழலில் பெருமளவு மாற்றம் ஏற்படும்.

பன்னாட்டு ஆய்வாளர்கள் தற்போது 9 முக்கிய காரணிகளைப் பட்டியலிட்டுத் ,தட்பவெப்பநிலை உயர்வினால் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், நாம் சந்திக்கும் காலநிலை மாற்றத்தை மிகத்தீவிரமானதாக மாற்றும் என்று எச்சரித்துள்ளனர். இந்த 9 காரணிகளும் முழுமையாக தன் நிலைகளில் இருந்து இன்னும் மாறவில்லை. எனினும், அவை அனைத்தும் தன் நிலைகளில் இருந்து மாறும் கட்டத்தின் கடைசி படியில் இருக்கின்றன. இந்த நிலையை ‘உச்சப் புள்ளி’ (TippingPoints) என்று அவர்கள் வரையறுத்துள்ளனர். பனிப்பாறைகள் உருகுதல், ஆஸ்திரேலியா பவளப்பாறைகள் அழிதல்,அமேசான் காடுகள் அழிதல், பருவகாலத் தன்மை மாறுதல் போன்றவை உச்சப் புள்ளிகளில் அடங்கும். இவை சங்கிலித் தொடர் போல் செயல்படக் கூடியவை. இவற்றில் ஏதேனும் ஒன்று அழிந்தால் அது மற்றொன்று அழிய வழிவகுக்கும். எந்தெந்தக் காரணிகள் அதன் இயல்புத் தன்மையில் இருந்து முரண்படும் நிலையில் உள்ளது எனச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 1. ஆர்க்டிக் பனிமலை

ஆர்க்டிக் பகுதி பூமியின் பிற பகுதிகளைக் காட்டிலும் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக வெப்பமாகி வருகிறது. புவி வெப்பமயமாதலால் இந்தப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி,  கடலில் கரைந்து வருகின்றன. கடல் பகுதியானது அதிக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. உலகத் தட்பவெப்பநிலை 1.5ͦ C உயர்ந்தால் ஆர்க்டிக் பகுதி அதன் இயல்புத்தன்மையை இழந்துவிடுமென்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

 1. கிரீன்லாந்து பனிக்கட்டி உருகுதல்

பூமியில் இரண்டாவது அதிக அளவு பனிப்பாறைகளைக் கொண்டது கிரீன்லாந்து பகுதி. இங்குள்ள பனிப்பாறைகள் மொத்தம் உருகினால் உலக அளவில் கடல்நீர் மட்டம் 7.2மீ  வரை உயரும். ஆர்க்டிக் பகுதியில் வெப்பம் அதிகரிப்பதால் கிரீன்லாந்து பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. மேலும் கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி நிலப்பகுதிகள் வெப்பம் அடைவதால், மீதமுள்ள  பனிப்பாறைகள் 60% வேகத்தில் உருகத் தொடங்கியிருக்கின்றன. கிரீன்லாந்து பனிக்கட்டிகள் எல்லாம் உருகி நீராய் மாறுவதானால் அட்லாண்டிக் பெருங்கடலின் நீரோட்டமே பாதிக்கும்.

 1. அட்லாண்டிக் மெரிடோனியல் சுழல் (Atlantic Meridional Out turning Circulation)

AMOC என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படும் இந்த நீரோட்டம் தெற்குப் பகுதியில் இருந்து வெப்பத்தை கிரீன்லாந்து வரை கொண்டு செல்கிறது. இந்த நீரோட்டத்தினால் தான் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளில் மழை பொழிகிறது. இந்த வெப்பமிகுந்த நீரோட்டம் வடக்கு நோக்கிச் செல்ல, செல்லக் குளிர்ந்து, அடர்த்தி அதிகம் பெற்று ஆழமாய்ச் சென்று பின் தெற்கு நோக்கிப் பயணிக்கிறது. கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகி நன்னீராய்க் கலப்பதனால் அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டம் வலுவிழக்கிறது. இது கடந்த 50 ஆண்டுகளில் 15%வலுவடைந்து விட்டது. மேலும் இவை பருவமழைக் காலத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்குவதோடு, உலகம் முழுக்க காலநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வடஅமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி மற்றும் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளில் முழுவதும் பனிப் படர்ந்த பகுதிகளாக மாறிவிடும். மேலும் இப்பகுதிகளில் மழைப்பொழிவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 1. பருவமழைக் காலம்

பருவமழைக் காலம் என்பது மனித சமூகம் இத்தனை ஆண்டுகளாக நிலைபெற்று வாழ மிக முக்கியமானதாக இருக்கின்றது. உலகத்தின் பெரும்பாலான உணவு உற்பத்தி பருவமழைக் காலங்களை நம்பியே உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் ஆப்ரிக்கப் பருவ மழையும், இந்தியப் பருவமழையும் மிக முக்கியப் பருவ மழைக் காலங்களாகும்.

மேற்கு ஆப்ரிக்கப் பருவமழை மாற்றம்

ஆப்ரிக்க நிலவியல் அமைப்பும் காலநிலை அமைப்பும் மிகவும் சிக்கல் வாய்ந்தவை. ஏனெனில், ஆப்ரிக்கா வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு ஒரே நேரத்தில் கோடைக் காலமும் நிலவும், பனிக் காலமும் நிலவும்.மேற்கு ஆப்ரிக்கப் பருவமழை, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் சாஹேல் பகுதிக்கு மழைப்பொழிவைக் கொண்டு வரும். அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் நன்னீர் அதிகமாகக் கலப்பதால் மேற்கு ஆப்ரிக்கப் பருவமழை மாற்றம் அடைகிறது. கடைசி பனியுகக் காலத்தின் மாதிரியைக் (sample) கொண்டு ஆய்வு செய்ததில், அட்லாண்டிக் பெருங்கடலில் நன்னீர் அதிகரித்தால் மேற்குப் பருவமழையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. இது ‘Younger Dryas’ என்று குறிப்பிடப்படும் சிறிய பனியுகக் காலத்தின் மாதிரியிலும் புலப்படுகிறது.

இந்திய பருவமழை மாற்றம்

இந்திய பருவமழைக் காலம் இமயமலை தோன்றியதற்குப் பின் உருவானதே. இந்தியா, பருவ மழை மூலம் 70% மழையைப் பெறுகிறது. இன்னும் சில பகுதிகளில் 90% மழையைப் பெறுகிறது. இந்திய விவசாயம் முழுக்க முழுக்கப் பருவ மழையை நம்பியே இருக்கின்றது. வடக்கு அரைக்கோளப் பகுதியில் குளிர் காலமாக இருக்கும் போது , தெற்கு அரைக்கோளப் பகுதியில் கோடைக்காலம் இருக்கும். அப்போது, இந்தியப்பரப்பின் மேல் உள்ள காற்று, வடகிழக்குப் பகுதியில் இருந்து உலர்காற்றைக் கொண்டு வரும். தெற்கு அரைக்கோளப் பகுதியில் குளிர்காலம் நிலவும் போது, வடஇந்தியப் பகுதி, திபெத்தியப் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் விரைவில் வெப்பமடைந்து, அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தத்தின் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து குளிர்ந்த காற்று தென்மேற்குத் திசையில் வடஇந்தியப் பகுதிக்குச் செல்லும். இவ்வாறு தான் இந்தியப் பருவமழை செயல்பட்டு வருகிறது. ஆசிய நிலப்பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலின் அழுத்தம்தான், பருவமழைக்கு அடிப்படையாக விளங்குகிறது. மேலும் தட்பவெப்பநிலையில் மாற்றமும் அல்லது இந்தியப் பெருங்கடலில் நீராவியாதலில் ஏற்படும் மாற்றமும், பருவ மழையின் அளவை மாற்றிவிடும். உலக வெப்பமயமாதலால் நிலப்பகுதியில் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க ஆசிய நிலப்பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலின் அழுத்தம் வலுவடையும்[2]. இது தீவிர மழைப் பொழிவுக்கு வழிகுக்கும்.

 1. அமேசான் மழைக்காடுகள்

தென் அமெரிக்காவின் 9 நாடுகளில் விரிந்துள்ளது அமேசான் மழைக்காடு. அமேசான் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய வறட்சி மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அமேசான் பகுதிகளில் அதிகரித்த தட்பவெப்பநிலை, அப்பகுதியின் மழையின் அளவைப் பாதித்ததோடு, மரங்களில் இருந்தும் நீர் ஆவியாதல் முறை அழித்து வருகிறது. இது அமேசான் பகுதியின் மழையைப் பெருமளவில் பாதிக்கிறது. மேலும், காடழிப்பு போன்ற நிகழ்வுகள் மழையின் அளவு குறைவதில் பெரும் பங்காற்றி வருகிறன. இத்தனை ஆண்டுகளாக கார்பனை உள்வாங்கிக் கொண்டு இருந்த அமேசான் காடுகள், இப்போது கார்பனை வெளியேற்றிக் கொண்டு இருக்கிறன. அதாவது கார்பனை உறிஞ்சுவதை விட அதைத் தாவரங்கள் சிதைவடையும் போதும் எரிக்கப்படும்போதும் வெளியேறும் கார்பனின் அளவு அமேசானில் அதிகரித்திருக்கிறது. உலகத் தட்பவெப்பநிலை 2ͦC மேல் உயரும் போது, அமேசான் காடுகள், ஆங்காங்கே மரங்கள் காணப்படும் புற்கள் கொண்ட ‘சவன்னா’ பகுதிகளாக மாறிவிடும்.

 1. மேற்கு அண்டார்டிகா பனிக்கட்டிகள் உருகுதல்

ட்ரான்ஸ் அண்டார்டிக் மலைத்தொடர், அண்டார்டிகா பகுதியை மேற்கு மற்றும் கிழக்கு அண்டார்டிகா எனப் பிரித்துள்ளது. தட்பவெப்பநிலை உயர்வால் அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ள மேற்கு அண்டார்டிகா, கிழக்கு அண்டார்டிகா பகுதியை விட அளவில் சிறியதாகும். இந்தப் பனிப்பாறைகள் உருகும் போது, அவை உலக அளவில் கடல்நீர் மட்டத்தை 3.3 மீ அளவிற்கு உயரச் செய்யும். மேற்கு அண்டார்டிக்கா பகுதி முழுவதும் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளுக்கு மேல் அமைந்துள்ளது. இந்தப் பனிக்கட்டிகள் அனைத்தும், கடல் வெப்பத்தின் நேரடித் தொடர்பில் உள்ளவை. எனவே இப்பகுதியில் மீள முடியாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அட்லாண்டிக் பெருங்கடலில் நீரோட்டம் வலுவிழக்கும் போது, அவை வடக்கு நோக்கிக் கொண்டு சென்ற வெப்ப நீரோட்ட சங்கிலி உடையும்.  இந்த வெப்ப நீரோட்ட சங்கிலி உடையும் போது பூமத்திய ரேகைப் பகுதியிலும், தென் பகுதியிலும் வெப்பத்தை அதிகரிக்கும். தெற்குப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் போது, அவை அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு  பெரிதும் வழிவகுக்கின்றன.

 1. உறைபனி (Permofrost)அழிதல்

உறைபனி என்பது நிலத்தின் கீழ் உறைந்த பனிப்பாறைகளைக் கொண்ட பகுதிகள் ஆகும். வட அரைக்கோளத்தில் சைபீரியா, அலாஸ்கா, வடக்கு கனடா, திபெத்தியப் பகுதியில் உள்ளது. தென் அரைக்கோளப் பகுதிகளிலும் உறைபனியானது அண்டார்டிகா, நியூசிலாந்து, தெற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடர் போன்ற பகுதிகளில் உள்ளது. இவை பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கிய செடிகள் மற்றும் விலங்குகளில் இருந்து வெளியேறிய கார்பனுடன் உறைந்த பகுதிகளாக உள்ளது. தற்போது வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவை விட இருமடங்கு, இந்த உறைபனி பகுதியில் உள்ளது. உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும் போது, இந்த உறைந்த பகுதிகள் அனைத்தும் கரைகிறது. உறைபனி கரைந்தால் அதிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

 1. போரியல் காடுகள்

வட அரைக்கோளப் பகுதிகளில் குளிர்ந்த சூழலைக் கொண்ட காடுகளைக் காணலாம். இக்காடுகளில் கடும் குளிரைத் தாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட மரங்கள் வளரும். வட அமெரிக்கா, வட ஐரோப்பா மற்றும் வட ஆசியப் பகுதிகளில் இவை விரிந்துள்ளது. உலகக் காடுகளின் மொத்த அளவில் 30% போரியல் காடுகள் ஆகும். இக்காடுகளில் உள்ள செடிகளும், மரங்களும், விலங்குகளும் இயற்கையிலே தோன்றி, இச்சூழலுக்கு ஏற்ற ஒற்றைத் தன்மையுடையதாக இருக்கும்.  நிலப்பகுதியில் உள்ள கார்பனில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேல் உறைபனியில் உள்ளது. உலக சராசரி வெப்பத்தை விட 2 மடங்கு இப்பகுதியில் வெப்பம் வீசி வருவதால் இங்குள்ள மரங்கள் நோய்களுக்கும், இனப்பெருக்கத்திற்கும், காட்டுத்தீக்கும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளன.

 1. பவளத் திட்டுகள் அழிதல்

பவளத் திட்டுகள், உயிர்ப்பன்மையச் சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்கு கூறப்பட்ட பல அமைப்புகளில் உச்சப் புள்ளி அளவை பவளத் திட்டுகள் ஏற்கனவே கடந்து விட்டன. அதிகரிக்கும் வெப்பம், கடல் அமிலமாதல், தீவிரப் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, கடல்மட்ட உயர்வினால் அதிகரிக்கும் படிவுகள் ஆகியவை பவளப்பாறைகள் அழிய முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. பவளப்பாறைகள் அழிவதனால் அதில் உள்ள ‘பைடோபிளங்க்டான்’ அழிகிறது. கடல் உயிர்ச் சூழலுக்கு ஆதாரமாய் விளங்கும் இவை அழிவதால் கடல் உயிர்ச் சூழலில் பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன. 1.5 ͦC அளவிற்கு வெப்ப நிலை உயரும் போது  வெப்பமண்டலப் பகுதியில் உள்ள பவளப்பாறைகள் 90% அளவிற்கு 2050-ல் இருந்து அழியும். அதுவே 2 ͦC அளவிற்கு உயரும் போது 98% அளவிற்கு அழிந்து விடும். இது பெரும் உயிர்ச்சூழல் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

ஐந்தாவது முற்றொழிப்பைத் தவிர்த்து அதற்கு முந்தைய முற்றொழிப்புகளுக்கு தட்பவெப்பநிலை உயர்வு, பனியுகம், பல்லுயிரியம் அழிதல், நிலவியல் அமைப்பு மாற்றம் அடைதல் போன்றவை ஏதொவொன்றோ அல்லது சிலவோ காரணமாக இருந்தது. ஆனால், இன்றோ நமக்கு இவ்வனைத்தின் பாதிப்புகளும் ஒருசேர நிகழத் தொடங்கியிருக்கின்றன. பேரிடர்களின் தீவிரத்தன்மை அதிகரித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் நாம் அனைவரும், நம் இருத்தலுக்காக ஒன்று சேர்ந்து போராட வேண்டியது அத்தியாவசியமாகிறது.

 

 • லோகேஷ் பார்த்திபன்

[email protected]

 

Reference

 1. https://www.carbonbrief.org/explainer-nine-tipping-points-that-could-be-triggered-by-climate-change/
 2. https://www.carbonbrief.org/explainer-nine-tipping-points-that-could-be-triggered-by-climate-change/
 3. https://oceanservice.noaa.gov/education/tutorial_currents/05conveyor2.html
 4. https://www.carbonbrief.org/in-depth-qa-ipccs-special-report-on-climate-change-at-one-point-five-c/
 5. https://e360.yale.edu/features/the_rapid_and_startling_decline_of_worlds_vast_boreal_forests
 6. https://www.nature.com/articles/s41467-020-15029-x
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments