“அப்பா, மழை எப்படிப் பெய்யுது? காலையில் மட்டும் எப்படிச் சூரியன் வருது? காத்து ஏன் இவ்வளவு வேகமா அடிக்குது? அம்மா, எனக்கு ஏன் சுச்சூ மஞ்ச கலரா வருது? டீச்சர் வெயிலுக்கு ஏன் வெயில்னு பேரு வந்தது? அண்ணா கடல் ஏன் இவ்வளவு பெருசா இருக்கு? யானைக்கு ஏன் தும்பிக்கை இருக்கு? இப்படி எத்தனையோ கணக்கிலடங்காத கேள்விகளைத் தினமும் குழந்தைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்குப் பொறுமையும் ஆற்றலும் இருக்குமாயின் ஒரு சிலர் பதில் சொல்வார்கள். மற்றவரகள் “கொஞ்ச நேரம் கேள்வி கேட்காமல் இருக்க மாட்டியா?” என்றோ “இதெல்லாம் ஒரு கேள்வினு வந்து கேக்கற” என்றோ அல்லது “சொன்னாலும் உனக்குப் புரியப்போறது இல்ல” என்றோ சொல்லி வாய்ப்பூட்டுப் போட்டுவிடுவார்கள். இங்கே முடக்கப்படுவது கேள்விகள் மட்டுமல்ல பறக்கவிருக்கும் சிறகுகளின் தேடல்களும்தான்.
கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய அனைத்து வீரர்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன் உடைய குழந்தைகளுக்கு வேப்ப மரம் எது என்று தெரியாதது கசப்பானதுதான்! மாடு என்ன சாப்பிடும் என்ற கேள்விக்கு “பேப்பர் சாப்பிடும்” என்று யோசிக்காமலே குழந்தைகள் பதில் கூறுவதற்கு என்ன காரணம்? புத்தகத்தில் என்ன இருந்தாலும், அவர்கள் எதை அன்றாட வாழ்வில் பார்த்து உணர்கிறார்களோ அதிலிருந்துதான் அவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.
பூனையையும் நாயையும் நேசிப்பதைத் தாண்டி இந்த இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கான சூழ்நிலையைக் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறோமா? ஒற்றை எழுதுகோலைக் கொடுத்துவிட்டு ஏன் நீ வரைந்த ஓவியத்தில் வண்ணங்களே இல்லை என்று கேட்பது போலல்லவா உள்ளது!
எரிந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தீயின்மீது நம்மைப் போன்று மடமையால் அவர்களும் எண்ணெயை ஊற்ற வேண்டுமா? போதிய விழிப்புணர்வு இல்லாமல் நாம் இந்தப் பூவுலகிற்குச் செய்த அதே சீர்கேடுகளைத்தான் அவர்களும் பின்பற்ற வேண்டுமா? சூழலைப் புறிந்து கொள்வதை அறிவியலாகவோ, பொழுது போக்காகவோ, அல்லது வாழ்க்கைக் கலையாகவோ இங்குச் சுருக்க விரும்பவில்லை. சூழலைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான் சூழலை நாம் பாதுகாக்க முடியும். பூவுலகிற்கு ஏற்றவாறு குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதைச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இயற்கையைப் பற்றிச் சரியான புரிதல் உள்ள நபர்கள் கூடக் குழந்தைகளிடம் இயற்கையைப் பற்றி உரையாட, அதைப் பற்றிக் கேள்வி எழுப்பக் குழந்தைகளை ஊக்குவிப்பது போன்ற செயல்களைச் செய்வதற்கு நேரம் ஒதுக்குவதில் போதாமையும் குழந்தைகளுடன் உரையாடுவதற்கான திறன் பற்றாக்குறையும் இங்கு இருக்கிறது.
குழந்தைகளுடன் உரையாடுவதற்கான திறன் என்றால் என்ன என்கிறீர்களா? பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு என்ன தெரியுமா? “பெரியவர்கள் எங்களை மதிப்பதே இல்லை” என்பதுதான். “நான் சொல்வதை நீ கேள்” என்ற மனப்பான்மை இருக்கும்போது மதிப்பு எப்படி உருவாகும்? குழந்தைகளோடு உரையாடும்போது மட்டும் செவிகளுக்கு வேலை தர மறந்து விடுகிறோம். இன்னும் சிலர் குழந்தைகளுடன் உரையாடும் போது அவர்கள் கேட்கிறார்களா இல்லையா என்று கூடப் பாராமல் தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லி அவர்களை மூச்சடைக்க வைப்பதையும் பார்த்திருக்கிறேன்.
சரி பூவுலகிற்கான குழந்தைகளை வளர்த்து எடுப்பது எப்படி?
தான் சாப்பிடும் உணவு என்னவென்றே தெரியாமல் சாப்பிடும் குழந்தைகள் பல உண்டு. எனவே முதலில் அவர்கள் சாப்பிடும் உணவில் என்னென்ன காய்கறி, பழங்கள், தானியங்கள் உள்ளன, அவை எப்படி நமக்குக் கிடைக்கிறது மற்றும் விவசாயிகளின் பங்கு என்ன போன்ற அடிப்படை விஷயங்களைச் சொல்லித் தரவேண்டியது முதன்மையானது. அதிலும் குடிக்கும் தண்ணீரைச் சேமித்துக்கொள்வது மிக முக்கியம். நாம் வாழ்வதற்கான அடிப்படை தேவைகள் என்னென்ன அது எங்கிருந்து கிடைக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாலே அதைப் பொறுப்புடன் பயன்படுத்தும் பழக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
பொருட்களின் மீதான மோகம் அவர்களைப் பற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அப்படியென்றால் அவர்கள் வேண்டும் என்று கேட்பதை நிராகரிப்பது என்று அர்த்தம் அல்ல. அவர்கள் எந்தப் பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்களே அவைகளை முன்னரே ஒரு புத்தகத்தில் பட்டியலிடச் சொல்லவேண்டும். குறைந்தது தேவைக்கான மூன்று காரணங்களைப் பட்டியலிடச் சொல்வது, பின்பு அந்தப் பொருளின் ஆயுட் காலம் தோராயமாக எவ்வளவு நாள் வரும்? (இதன் மூலம் அவர்கள் அந்தப் பொருளைப் பத்திரமாக வைத்துக் கொள்ள உதவும்) அந்தப் பொருளைப் போன்ற வேறு ஏதாவது பொருள் நம்மிடம் ஏற்கனவே உள்ளதா? அப்படி எதாவது இருந்து அது பழுதடைந்து இருந்தால் அதைப்பழுது பார்க்க முடியுமா? முடியும் என்றால் முடிந்தளவு குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டே பழுது பார்க்கும் வேலையைச் செய்யவேண்டும். இதன் மூலம் அந்தப் பொருளின் மதிப்பை அவர்கள் அறிவதோடு, தீர்வுகளை நோக்கி நகரவும் (problem solving skill) கற்றுக்கொள்வார்கள்.
அவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே சூழலைக் காக்கும் மந்திரமான 9R’s பற்றிச் சொல்லிக் கொடுப்பது மிக அவசியம். குழந்தைகள் தங்களிடம் எதாவது கோரிக்கைகளை வைக்கும் போது நாம் மட்டுமே முடிவு எடுக்காமல் அவர்களுடன் சேர்ந்து கேள்விகளை எழுப்பி, சிந்திக்க வைத்து அவர்களையே முடிவு எடுக்கப் பழக்கப்படுத்த வேண்டும். அவர்கள் வளர வளர கரிம வழித்தடம் (carbon footprint), மறைநீர் (Virtual water) போன்றவற்றைப் பற்றிச் சொல்லித் தரலாம். அவர்கள் பயன்படுத்தும் பொருள்களின் கரிம வழித்தடம் மற்றும் மறைநீர் அளவுகளைக் கணக்கு போட சொல்லலாம். அதன்மூலம் அவர்கள் பிழையின்றி எழுதவும் மற்றும் அறிவியல், கணக்கு, சிக்கனம் போன்றவற்றையும்கூடக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளைக் காலையிலோ மாலையிலோ இயற்கை நடை கூட்டிச் செல்லலாம்! காட்டிற்கோ வனத்திற்கோ கூட்டிச் செல்ல வேண்டும் என்று கூட அவசியம் இல்லை, வீட்டிற்கு அருகிலிருக்கும் சுற்றியுள்ள செடி கொடி மரங்களின் பெயர்கள் மற்றும் அதனுடைய பயன்பாடுகளைப் பற்றி உரையாடலாம். வீட்டுத்தோட்டம் இருப்பின் ஏதேனும் சில செடிகளை அவர்களே பராமரிக்கச் சொல்லலாம்.
வீட்டைச் சுற்றி இருக்கும் பறவைகள் எத்தனை, அதனின் பெயர்கள் என்ன, அவற்றின் பெயர்க் காரணங்களைச் சொல்வது மற்றும் அவர்கள் பார்க்கும் மரங்கள், பறவைகள், விலங்குகளை வரையச் சொல்வது அவர்கள் இயற்கையை உற்றுநோக்கவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் மிகவும் உதவும். இவை அனைத்திலும் மிக முக்கியமான ஒன்று உயிர்களுக்கு இடையே உள்ள பிணைப்பைச் சிறிது சிறிதாக விளக்குவது. இது நாம் வாழும் சூழல் அமைப்பை அவர்கள் புரிந்து கொள்ள உதவும்.
எடுத்துக்காட்டாக உணவுச்சங்கிலியை விளக்க இந்தியாவில் 120 சிற்றினங்களைக் கொண்ட பறக்கும் பாலூட்டியான வவ்வால்களின் முக்கியத்துவத்தைக் கூறலாம். மிகச்சிறிய ஒரு வவ்வால் ஒரு நாளைக்கு 500 பூச்சிகளை உண்ணும் எனில் 10 வவ்வால்கள் எத்தனை பூச்சிகளை உண்ணும் என்று கணிதத்தோடு சேர்த்து அல்லது படமாக வரைந்து இவ்வாறு பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மிகவும் பயன்படுகிறது என்பதைச் சுவாரசியமாகச் சொல்லலாம். அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்றால் முதலில் எனக்குத் தெரிய வேண்டுமே என்று கூடச் சிலர் நினைக்கலாம். கற்பித்தல் என்பது ஒருவர் ஒருவருக்குச் சொல்லிக்கொடுப்பதோடு நின்று விடுவது அல்ல. அவர்களோடு சேர்ந்து கற்பிப்பவரும் சேர்ந்து கற்றுக் கொள்வது இங்குக் கற்பித்தலை முழுமையாக்கிவிடும்.
பூக்களை, மரங்களை, பூச்சிகளை, பறவைகளை அடையாளம் கண்டுபிடிக்கப் புத்தகங்கள், அட்டைப் படங்கள் சூழல் சார்ந்த புத்தகக் கடைகளில் விற்கப்படுகின்றன. அதை வாங்கி உபயோகப்படுத்தலாம். இன்னும் எளிதாக அதைப் படம்பிடித்து அல்லது நேரடியாக ‘Google lens’ ஐ பயன்படுத்தி அடையாளம் கண்டு கொள்ளலாம். பல செயலிகள் (Apps) கூட மிகவும் உதவியாக இருக்கும். எடுத்துக் காட்டாக ‘carnel lab of ornithology’ உருவாக்கிய ‘Merlin’ செயலியில் உங்கள் இடம் மற்றும் நீங்கள் பார்த்த பறவையின் நிறம் போன்ற தகவல்களைக் கொடுத்தால் அந்தச் செயலி நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு ஒத்துப்போன பறவைகளின் பட்டியலைக் காட்டும். அதில் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் மூலம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியில் நாளைய தலைமுறை தனக்கும் இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கும் பயனுள்ளதாகப் பயன்படுத்த கற்றுக் கொள்ளட்டும்.
இன்று நாம் குழந்தைகளைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று கட்டிப்போடுவது எந்தவிதத்திலும் பயன் தராது. இன்றைய சூழலில் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத ஒன்று எனினும் அறிவியலை அறம் சார்ந்த வழியில் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்துமாறு குழந்தைகளை நல்வழிப்படுத்துவது சிறந்த செயல் ஆகும்.
இயற்கையோடு இயைந்த கற்றலை இன்னும் மேம்படுத்த உங்கள் ஊரில் உள்ள சூழல் சார்ந்த அமைப்புகள் நடத்தும் மரம் நடுதல், இயற்கை நடை, பறவை நோக்கல் போன்ற நிகழ்ச்சிகளில் உங்கள் குழந்தைகளோடு கலந்து கொள்ளலாம். நீங்கள் ஊர்சுற்றி எனில் உங்கள் ஊரில் அல்லது அருகில் உள்ள குளம், நதி, அருவி, கடல், மலை, காடு, வறண்ட பூமி இன்னும் இயற்கை வளங்கள் எங்கெல்லாம் கொட்டிக் கிடக்கிறதோ அவைகளைச் சுற்றிக் காட்டியவாறு இயற்கையின் ஆச்சரியத்தையும் முக்கியத்துவத்தையும் கதைகளாகச் சொல்லலாம். எடுத்துக்காட்டாக ஒரு நதியை நம்பி எத்தனை மக்கள் இருக்கிறார்கள், எப்படியெல்லாம் அந்தத் தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம் எத்தனை உயிரணுக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்பதைப் பார்த்து அறிந்து கொண்டால் யாராயினும் இயற்கையின் மேல் பேரன்பு வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
கூடுதலாக அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் சூழல் சார்ந்த சிறார் நூல்களை வாங்கி அவர்களுக்குப் பரிசளிப்பது அவர்களை ஊக்குவிக்கும்.
குழந்தைகள் மிகவும் முட்டாள்தனமான கேள்விகள் கேட்கிறார்கள் என்று கூடப் பலர் சொல்வதுண்டு. உங்களிடம் கேள்விகள் கேட்பார்கள் எனில் செவி கொடுத்துக் கேளுங்கள். தெரிந்தால் விடை அளியுங்கள் தெரியாவிட்டால் அறிந்து விட்டுச் சொல்கிறேன் என்று சொல்லுங்கள். தயவுசெய்து போலியான விடைகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வேண்டாம்.
இன்னும் சிலர் மூட நம்பிக்கையான விடைகளைச் சொல்லி மூளையை மழுங்கடிக்கச் செய்வார்கள். அவர்களின் கேள்விகளை ஒரு புத்தகத்தில் எழுதி வையுங்கள் அல்லது அவர்களையே எழுதச் சொல்லுங்கள். பதில்களைத் தேடி ஆராய்ந்து உரையாடி பதில்களுக்கான விடையை அறிந்து கொள்ளச் செய்யுங்கள். கேள்விகள் கேட்பதற்கு ஊக்கப்படுத்துங்கள் முடிந்தளவு பதில்களை அவர்களே கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள். குழந்தைகள் அறிவை நாம் தரும் தகவல்களிலிருந்து கற்றுக்கொள்வார்கள், அன்பை நாம் அவர்களை நடத்தும் விதத்திலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகள் விருப்பப்பட்டால்
மழையில் நனைய விடுங்கள் !
சகதியில் ஆட விடுங்கள் !
வெயிலில் கரையவிடுங்கள் !
புற்களைத் தொடவிடுங்கள் !
தவளைகளோடு குதிக்க விடுங்கள் !
காற்றில் மிதக்க விடுங்கள்!
பூக்களை முகர விடுங்கள் !
பட்டாம்பூச்சிகளோடு பறக்க விடுங்கள் !
வானத்தை வேடிக்கை பார்க்க விடுங்கள் !
மொட்டை மாடியில் உறங்க விடுங்கள் !
புத்தகங்களில் புரள விடுங்கள் !
காய்கறிகளை நறுக்க விடுங்கள் !
பழங்களைப் பறிக்க விடுங்கள் !
ஆசைதீரச் சிரிக்க விடுங்கள் !
கோணல் மாணலாகக் கிறுக்க விடுங்கள் !
கேள்விகளைக் கேட்க விடுங்கள் !
அந்தப் பிஞ்சுக் கைகள் தான் மண்ணைத் தொடட்டுமே !
பயத்தோடு இருக்கும் பறவை கூண்டை விட்டுப் பறப்பதே இல்லை. வாருங்கள் இப்போது நமது சூழலைக் காக்க நாளைய தலைமுறையைப் பலப்படுத்திச் சிறகுவிரித்துப் பறக்கச் செய்வோம்.
– அருண் தட்சண்