சூழல் சட்டவியலை வளர்த்தெடுப்போம்! வாரீர்!!

சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படையாக இரு கோட்பாடுகள் உள்ளன. 1. முன்னெச்சரிக்கை கோட்பாடு, 2. சூழலை சீரழிப்பவரே அதனை சீர் செய்ய வேண்டும். ஆனால் இதை செயல் படுத்துவதில் அரசுகளும், பெரும் வணிக நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இந்த சட்டக்கூறுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் சூழல் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என்று அரசு அமைப்புகள் கருதுகின்றன. அதேபோல சூழலை சீரழிப்பவருக்கு தண்டனை வழங்காமல் பாதுகாப்பது குறித்தும் அரசு அமைப்புகள் கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக அணுஉலை விபத்துகளுக்கான இழப்பீட்டை தருவதில் அணுஉலை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான பொறுப்பில் இருந்து விடுவிப்பதில் இந்திய அரசு அரசு காட்டும் ஆர்வத்தை பார்க்கலாம். இந்தியாவில் உள்ள சுற்றுச் சூழலியலாளர்கள் பலருக்கும் நீதிமன்றங்கள் என்றால் ஒரு விதமான ஒவ்வாமை உள்ளது. சூழல் பிரச்சினை குறித்து நீதிமன்றத்துக்கு சென்று, நீதிமன்றம் நாம் விரும்பாத ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை ஏறத்தாழ அனைத்து சூழல் ஆர்வலர்களும் எழுப்புவர்.

ஆனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங் களை நிறுவுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் நாள்தோறும் வலுவடையும் நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீதி சார்ந்த சட்டங்களை உருவாக்கி வளர்த்தெடுக்கா விட்டால் அதற்கான இழப்பை நாம்தான் சந்திக்க நேரிடும். மனித உரிமை சட்டங்கள் இன்று ஓரளவிற்காவது மக்களுக்கு பயன்படும் அளவில் விரிவடைந்ததற்கு, அத்துறை சார்ந்த ஆர்வலர்களின் தொடர்ந்த சட்ட செயல்பாடுகளே காரணம். மக்களை ஒடுக்கும் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் அரசும், ஆதிக்க சக்திகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதற்கு போட்டியாக, இந்த தளைகளிலிருந்து மக்களை விடுவிக்கும் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் மனித உரிமை ஆர்வலர்களும் அயர்வின்றி செயல்பட்டு வருகின்றனர். இதன் விளைவாகவே மனித உரிமை சட்டவியல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. சுற்றுச்சூழல் சட்டவியல் என்பதும் ஒரு வளரும் அறிவியல் துறைதான். சூழல் சட்ட வியலும் மக்களுக்கு பயன்படும் அளவில் மாற வேண்டுமானால், சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களையும் போராட்டக் களமாக கருதி களமாடினால் மட்டுமே சாத்திய மாகும்.

இத்தகைய சம்பவம் ஒன்றை பார்ப்போம்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் என்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேடும் வழக்கு தொடரப்பட்டது அமெரிக்க நீதிமன்றத்தில் என்பதும் முக்கியமான மற்றும் சுவையான அம்சமாகும். இந்தியாவிலுள்ள டாடா நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டம் முந்த்ரா துறைமுகப் பகுதியில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. டாடா முந்த்ரா திட்டம் என்று அழைக்கப்படும் கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (Coastal Gujarat Power Limited) என்ற இந்த நிறுவனத்திற்கு உலக வங்கியின் மற்றொரு அமைப்பான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (International Finance Corporation) கடந்த 2008ம் ஆண்டில் 450 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) கடனாக வழங்கியுள்ளது.

உலக வங்கி பல்வேறு அரசு அமைப்புகளுக்கு கடன் கொடுப்பது அனைவரும் அறிந்ததே. உலக வங்கியின் மற்றொரு முகமான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வளரும் நாடுகளில் உள்ள தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. 1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இன்டர் நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் தற்போது 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தனியார் பெருந்தொழில் கழகங்களுக்கு கடனுதவி அளிப்பதன்மூலமாக 2030ம் ஆண்டில் உலகில் வறுமையை ஒழிக்க இந்த இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உறுதி பூண்டுள்ளதாக அந்த அமைப்பின் இணைய தளம் தெரிவிக்கிறது. மேலும் சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதில்லை என்பது இந்த நிறுவனத்தின் முக்கிய கொள்கை களில் ஒன்றாகும். இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்ப ரேஷனில் கடன் பெற்றுள்ள டாடா முந்த்ரா திட்டம் தொடங்கப்பட்டுள்ள நாவினல் கிராம பஞ்சாயத்தில் சுமார் 800 வீடுகள் உள்ளன. சுமார் 3000 பேர் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்த்தல், மீன் பிடிப்பு, உப்பு சேகரித்தல் ஆகியவை இப்பகுதி மக்களின் தொழில்களாகும். இந்த மின் நிலையம் கடந்த 2012ம் ஆண்டில் உற்பத்தியை துவக்கியபோதே கணிசமானோர் அவர்கள் காலம்காலமாக வசிக்கும் பகுதி களிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டனர். தற்போது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் அப்பகுதியின் சுற்றுச்சூழலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர். இந்த மின் உற்பத்தி மையத்தில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 12-13 மில்லியன் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இந்த நிலக்கரி இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டு கிட்டங்கிகளில் சேகரிக்கப்பட்டு பின் மின் உற்பத்தி மையத்திற்கு கன்வேயர் பெல்ட்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு நிலக்கரியை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சரியாக மூடப்படாத கன்வேயர் பெல்ட்கள் மூலம் கொண்டுவருவதாலும், மின் உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரியின் சாம்பலாலும் காற்று, நிலம், நீர் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீடுகள், விளை நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கரித்துகள்களும், சாம்பல் துகள்களும் நிரம்பி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி வாழ் மக்களின் முக்கிய தொழில்களான விவசாயமும், மீன்பிடிப்பும் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். மேலும் அப்பகுதி வாழ் மக்கள் ஆஸ்துமா, தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. அண்மைக் காலமாக இறப்பு வீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மின் உற்பத்தி மையத்தில் குளிர்விப்பானாக பயன்படும் கடல்நீரை, அவ்வாறு பயன்படுத்திய பின்னர் ஒரு விநாடிக்கு சுமார் 6175 கன அடி நீரை கொதிநிலையில் கடலில் கலக்கும்போது கடலில் வசிக்கும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இதனாலும் அப்பகுதி மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் கடல்நீர் நாவினல் கிராமத்தின் நிலத்தடி நீர்வளத்தை அழித்துவிட்டதாகவும், தற்போது குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பது இந்த மின் திட்டம் அமைவதற்கு முன்பே டாடா நிறுவனத்திற்கும், இந்த திட்டத்திற்கு சுற்றுச் சூழல் உள்ளிட்ட அனுமதிகளை வழங்கிய அனைத்து அரசுத்துறைகளுக்கும் நன்கு தெரியும். அதேபோல இந்த திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கும் இந்தப் பிரச்சினைகள் நன்கு தெரியும். கடந்த 2007ம் ஆண்டுமுதலே நிதிநிறுவனத்தின் அதிகாரிகள் இந்தப்பகுதியில் பலமுறை ஆய்வு செய்து சமூகப் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிக்கை அளித்துள்ளனர். டாடா முந்த்ரா அனல் மின் திட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உரிய முறையில் கையாண்டு அப்பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காமல் பாதுகாப்பு அளிப்பதாக டாடா நிறுவனம் உறுதி அளித்ததன் பேரில்தான் இந்த கடன் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் டாடா நிறுவனம் மேற்கொள்ள வில்லை. கடன் வழங்கிய இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இதை கண்டுகொள்ளவில்லை. மேலும் இந்தோனேஷியாவிலிருந்து மிகக் குறைவான சாம்பலை வெளியிடும் உயர்தர நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் மலிவான விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்று டாடா நிறுவனம் கூறி வந்தது. ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரிக்கான விலையை இந்தோனேஷியா அரசு அதிகரித்துள்ளது. எனவே அதிகளவில் சாம்பலை வெளியிடும் தரக்குறைவான நிலக்கரியை டாடா நிறுவனம் பயன்படுத்துகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள “எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல்”  (Earth Rights International)  என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இப்பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற் காக புதுமையான சட்ட முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியின் உள்ளாட்சி நிர்வாகமான நவினல் பஞ்சாயத்து மற்றும் மீனவர்கள் தொழிற்சங்கமான மச்சிமார் அதிகார் சங்கார்ஷ் சங்காதன் ஆகியவற்றின் உதவியுடன் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சார்பாக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கான இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள்தான் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த நிதிநிறுவனம் கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளை முறையாக பின்பற்றி இருந்தால், முந்த்ரா பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இந்த திட்டத்திற்கு கடன் அளித்ததன் மூலம் இத்திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு, அறிவுரை கூறுவதற்கு, அந்த அறிவுரைகள் பின்பற்றப் படுவதை கண்காணிப்பதற்கு நிதி நிறுவனத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களை நிதிநிறுவனம் உரியமுறையில் பயன்படுத்தி இருந்தால் அப்பகுதி மக்களுக்கு இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே நெறிமுறைகளை உரியமுறையில் கடைபிடிக்காமல் டாடா நிறுவனத்திற்கு கடனுதவி வழங்கியதன் மூலம் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்த இன்டர்நேஷனல் ஃபைனானஸ் கார்ப்பரேஷன், பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் 75,000 அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. இத்துடன் இப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கான மருத்துவ உதவிக்கான செலவுத்தொகையை இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஏற்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. மேலும் டாடா முந்த்ரா மின் உற்பத்தி நிலையம் தொடர்ந்து இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2016 மார்ச் மாதம், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு அரசுகளுக்கு எதிராக அமெரிக் காவின் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாது. இத்தகைய “வழக்கு தொடுப்பதற்கு எதிரான பாதுகாப்பு”  (Absolute Immunity), பன்னாட்டு நிதியுதவி அமைப் பான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்ப ரேஷனுக்கும் உள்ளது. எனவே இந்த வழக்கை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க இயலாது என்ற உலக வங்கியின் வாதத்தை ஏற்று இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவிருப்பதாக இந்த வழக்கின் மனுதாரர்களும், எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் என்ற சுற்றுச்சூழல் அமைப்பும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முதல் சுற்றிலேயே வெற்றி கிடைக்காது என்று தெரிந்தே இந்த வழக்கு தொடர்ந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே Atkinson Vs. Inter-American Development Bank  என்ற வழக்கில் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்ப ரேஷன் போன்ற நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்ற வாதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு வெளிநாட்டு அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கை எடுக்கும்போது அந்த அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது என்பதுதான் உண்மை. வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடும் உலக வங்கியின் துணை அமைப்புகளுக்கு இந்த “வழக்கு தொடுப்பதற்கு எதிரான பாதுகாப்பு” செயல்படாது என்றும் மனுதாரர்களும், அவர்களது சட்ட நிபுணர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, சமூக வளர்ச்சியை பலியிட முடியாது. மேலும் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், வளரா நாடுகளில் வறுமையை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இயற்கை வளங்களை சீரழிக்கும் திட்டங்களுக்கு உதவி செய்வதை ஏற்க முடியாது. எனவே கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறை யீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர இறுதிவரை முயற்சி செய்வோம் என்று எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் நீதி தொடர்பான வழக்குகளின் முதற்கட்ட தோல்வியில் துவண்டு, செயலற்று இருந்துவிட்டால் சுற்றுச்சூழல் சட்டவியல் வளர்ச்சி அடையாமல் தேங்கி நின்று விடக் கூடும். சட்டரீதியான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் சட்டவியலை வளர்த்தெடுக்க முடியும்.

வழக்கறிஞர்.பி.சுந்தரராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments