நல்ல விளைச்சலைப் பெறுவதற்குத் தரமான விதைகள் அத்தியாவசியமானவை. விதைகள் தரமற்றவையாய் இருந்தால் அவற்றின் முளைப்புத் திறன் குன்றுவதோடு விளைச்சலும் குறையும். தொடர்ந்து உயர்ந்துவரும் வெப்பமும், அதிகரிக்கும் வெப்ப நாட்களின் எண்ணிக்கையும் தீவிர மழைப்பொழிவு போன்றவைகளும் விதைகளின் தரத்தைத் வெகுவாகக் குறைத்துக்கொண்டிருக்கின்றன.
தீவிர மழைப்பொழிவு மண்ணின் நுண்ணூட்டச்சத்துக்களை உட்கிரகிக்கும் தன்மையைக் குறைப்பதோடு முளைப்புத்திறனுக்கு அத்தியாவசியமான ‘எண்டோஸ்பெர்ம்’ உருவாக்கத்தைத் தடுப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். இந்த தானியங்கள் விதைகளாக பயன்படுத்தப்படும் தகுதியை இழந்துவிடுகின்றன.
பொதுவாக, கோதுமையில் வலுக்குன்றிய விதைகள் 5-7 விழுக்காடு இருக்கும். ஆனால், கடந்த ஆண்டில் 20 விழுக்காட்டுக்குமேல் தானியங்கள் மோசமான தரத்தில் இருந்ததோடு அவை விதைகளுக்குத் தகுதியற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
கோதுமை மட்டுமின்றி நெற்பயிரிலும் வெப்பநிலை உயர்வும் காலநிலை மாற்றமும் கடும் விளைவுகளை உருவாக்குகின்றன. கோடைகாலத்தின் வெப்ப உயர்வு நோய்ப்பரவலுக்கு வழிவகுப்பதோடு, நெல்மணிகள் உருவாகும்போது ஏற்படும் வறட்சியானது அவற்றின் தரத்தையும் முதிர்ச்சியையும் வெகுவாகப் பாதிக்கிறது. அதேபோன்று நெற்பயிர் பூக்கும்போது ஏற்படும் தீவிர மழைப்பொழிவானது நெல்மணிகளின் பளபளப்புத் தன்மையையும் மகரந்தச் சேர்க்கையையும் பாதிக்கிறது. மகரந்தச் சேர்க்கை இல்லையேல் விதைகள் இல்லை.
அதிகரிக்கும் வெப்பம், பயிரின் வளர்ச்சியையும், விதை ஊட்டம்பெற்று முதிர்வதற்கான கால அவகாசத்தையும் குறைக்கிறது. இவை அவசரகதியில் நடைபெறும்போது விதையின் அளவு குறைகிறது. வெப்ப அழுத்தமானது (Heat stress) பயிர்களில் பூ பூத்தலைத் தூண்டவோ அல்லது தள்ளிப்போடவோ செய்கிறது. ‘Agriculture’ இதழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஆய்வானது கார்பன் டை ஆக்சைடு மற்றும் வெப்பத்தின் அதிகரிப்பு, பயிர்களின் இனப்பெருக்கத் திறனையும், மரபியல் வளத்தையும் எப்படிப் பாதிக்கின்றது என்று விளக்குகிறது. இவை ஆண்மலட்டுத் தன்மைக்கும், தன்மகரந்தச் சேர்க்கைக்கும் வழிவகுப்பதோடு வளமற்ற தலைமுறையை உருவாக்குகின்றன.
“என்னதான் நாம் வறட்சி தாங்கும் இரகங்களைக் கண்டறிந்தாலும்கூட எவையும் 40 டிகிரி வெப்பத்திற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்கிறார்” ICAR யின் முதன்மை விஞ்ஞானியான ராஜ்பிர் யாதவ். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பமானது விதைகளின் தரத்தில் ஏற்படும் பாதிப்பு, விவசாயிகளை தனியார் நிறுவனங்களில் விதைக்காகக் கையேந்தச் செய்வதோடு ஒட்டுமொத்த உணவு உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும்.
‘Down to Earth’ இதழில் வெளியான ‘Seed Trouble’ என்ற கட்டுரையின் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.
தமிழில்: ஜீயோ டாமின்
https://www.downtoearth.org.in/news/agriculture/food-security-climate-change-is-affecting-the-seeds-that-india-depends-on-88625